வவுனியா சிறைச்சாலையில் இருந்து 8கைதிகள் விடுதலை!!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியாவில் முதியவரின் கழுத்தில் பாய்ந்த கூரிய தடி வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றம்!!

வவுனியாப் பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்றுகுற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

குறித்த சத்திரசிகிச்சை நேற்றயதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

இவ் வெற்றிகரமான சத்தி்சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவநிபுணர் மயக்கமருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கோர விபத்து : குழந்தை பலி : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!!

கிளிநொச்சியில் சம்பவித்த கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றிரவு (25.12.2024) 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனமொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம் பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.

குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளத்தில் வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் – பிரதேச சபை எடுத்த நடவடிக்கை!!

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையினால் மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது

‘இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 1000ரூபா, தண்டம் 1000ரூபா, தண்டப்பணம் ஏற்றியிறக்கல் (மாடு ஒன்றுக்கு – அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்பு கொடுக்கப்பட்டால்) 500 ரூபா , ஒர் நாள் பராமரிப்பு செலவு 250 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 250ரூபா விதிக்கப்படுமென பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பூசி!!

வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி ஏற்றப்பட்டது.

இதன் போது பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு செயலமர்வும் இடம்பெற்றதுடன் அன்றையதினமே எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசியும் ஏற்றப்பட்டது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் நடாத்தி வைத்ததுடன் பொது சுகாதார பரிசோதகரும் இணைந்திருந்தார்.

விடுதியில் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்!!

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமொன்று நேற்றையதினம் (23) மீட்கப்பட்டிருந்தது.

சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நீலாவணை 02 செல்லத்துரை வீதியை சேர்ந்த 54 வயது ந்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின் திங்கட்கிழமை (23) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயை தள்ளி விட்ட மகன் : நேர்ந்த சோகம்!!

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகன், தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தீபா மாலா குமாரி விஜேசிங்க (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அந்த தாயின் மகன் (24) சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு கடந்த (20) ஆம் திகதி கொடுக்கப்பட்ட உணவு கெட்டுப்போனது தொடர்பில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தாயை மகன் தள்ளிவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தள்ளியதால் கீழே விழுந்த காரணமாக ஏற்பட்ட காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

24 மணித்தியாலத்திற்குள் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு!!

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (24) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் இந்த சடுதியான உயர்வு பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியாக 292.25 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியாக 300.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 289.73 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.52 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.03 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 314.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.78 ரூபாவாகவும் , விற்பனை பெறுமதி 210.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.14 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 189.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பயனர்களுக்கு வட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அன்ரொய்ட் கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளில் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மெட்டா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை செயலியின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு வெளியான அன்ரொய்ட் கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப் இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட் தொலைபேசிகளின் பழைய பதிப்புக்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDBlog இன் அறிக்கையின்படி, Samsung : Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini ஸ்மார்ட் தொலைபேசிகளிலும்

Motorola : Moto G (1st Gen), Razr HD, Moto E 2014

HTC : One X, One X+, Desire 500, Desire 601

LG: Optimus G, Nexus 4, G2 Mini, L90

Sony : Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V போன்ற ஸ்மார்ட் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் கைது செய்யப்பட்ட 2 தமிழர்கள் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை!!

கனடாவில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள் தொடர்பில் பொலிஸார் மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் பிக்கரிங் நகரை சேர்ந்த 34 வயதான சுவேஸ்தன் கணேசமூர்த்தி, பிரிம்டன் நகரை சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவினருடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்களின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விபரமறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் புலனாய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவில் பனிப்பொழிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கனடா ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறி்த்த விடயத்தை கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக ரொறன்ரோ(Toronto) உட்பட சில பகுதிகளில் போக்குவரத்துகளை மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்ரிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கொடூரமாக மகனை தாக்கிய தந்தையின் வெறிச்செயல்!!

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.

மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த அப்துல் அஸீஸ் மொஹமட் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக போதைப்பொருள் பாவனை காரணமாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகநபர், உரிய புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் மகன் மாளிகாவத்தை, ஜும்மா வீதி பகுதியில் மரக்கறி விற்பனை செய்யும் வியாபாரி என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான தந்தை கடந்த 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் மரக்கறி வியாபார நிலையத்திற்குச் சென்ற போது, ​​ மகனை கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தில் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த மகன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாது என பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த சிறுவன் : பெற்றோர் பகிரங்க குற்றச்சாட்டு!!

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் மயங்கிய நிலையில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தமது மகனின் மரணத்திற்கு மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அங்குருவத்தோட்ட பெத்திகமுவ ஹல்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த தனுஜா விக்கிரமாராச்சி என்ற 09 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மயக்க நிலையில் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சைக்குப் பின்னரும் சிறுவன் சுயநினைவு பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில், மிரிஹான பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். சம்பவத்தில் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே உயிரிழந்தார்.

நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு நேற்று ( 23) வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்ததை அடுத்து , யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது

யாழில் 18 வயது இளைஞர் மரணம் : நடந்தது என்ன?

யாழில் 18 வயது இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23.12) விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய இளைஞரே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழிலிருந்து சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளம் தாயும் மகளும் பலி!!

அநுராதபுரத்தில் இளம் தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய நகர் பகுதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் ரயிலில் மோதுண்டு அவர்கள்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியில் இருந்து வந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 37 வயதான தாயும் 18 வயதான மகளும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்