வவுனியாவில் இருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!!

வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், அவருக்கு காய்ச்சல் குணமடையாததால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (16.12.2024) மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிகாய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அவருக்கு அங்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைஸ், கொத்து உள்ளிட்ட பல உணவுகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை!!

அரசாங்கம், ரைஸ், கொத்து ,பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், குடிநீர் போத்தல்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பருப்பு, வெங்காயம்,

உருளைக்கிழங்கு போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உள்ளிட்ட பல உணவகப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் நுகர்வோரைக் காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விலைகள் விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அந்த தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் சடுதியாக அதிகரித்த புளியின் விலை!!

இலங்கையில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலர் வலயங்களில் புளி விளைச்சல் காணப்படும் நிலையிலும் புளியின் மொத்த விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மொத்த விலை அதிகரிப்பு காரணமாக 100 கிராம் எடையுடைய புளியின் சில்லறை விலை 150 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் புளியின் சில்லறை விலை 1500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நாட்டில் சந்தைக்கு போதியளவு புளி கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகி உள்ளதாக வர்த்தக மத்திய நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இபோச பேருந்தில் மோதி பெண் மரணம் : சாரதி மற்றும் நடத்தினர் நையப்புடைப்பு!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இபோச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு ஹட்டன் இபோச டிப்போவின் கட்டுப்பாட்டு அதிகார சபை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் கோரியுள்ளது.

பெண் ஒருவர் குறித்த பேருந்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் சாரதி மற்றும் நடத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு- ஹட்டன் தடவழி இபோச பேருந்து ஒன்று வெல்லம்பிட்டிய கொட்டிகாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியின் குறுக்கே சறுக்கி விழுந்த போது அதில் பயணித்த பெண் மீது பேருந்து ஏறி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து , பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கோபமடைந்து அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். சாரதி தன்னைத் தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும், மக்கள் அவரைத் தொடர்ந்து தாக்கியதனால், சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்த பேருந்தின் சாரதி வெல்லம்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் வெல்லம்பிட்டி பொலிஸ் அதிகாரிகள், சாரதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

விபத்து தொடர்பான சட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றுவது பொலிஸாரின் பொறுப்பாகும் என டிப்போ கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறியுள்ளது.

அத்துடன், பொலிஸார் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிய போதிலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த சிலர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியுள்ளதை வன்மையாக கண்டித்துள்ளார்.

சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெல்லம்பிட்டி காவற்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹட்டன் இபோச டிப்போ ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியதை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகன பற்றரிகள் திருட்டு : இருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகன தரிப்பிடத்தில் வாகன பற்றரிகள் களவாடப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது நான்கு வாகன பற்றரிகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்ட என சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னினைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது. நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

சரிகமபவில் அசத்தும் கனடா வாழ் யாழ்ப்பாண சிறுமி!!

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஜீதமிழ் சரிகமப லிட்டில் சாம்பியனில் இம்முறை கனடாவாழ் யாழ்ப்பாணத்து சிறுமி கலந்துகொண்டுள்ளார் .

புலம்பெயர் கனடா வாழ் சிறும் யாதவி , யாழ்ப்பாணம் – குப்பிளான் கிராமத்தை பின்புலமாக கொண்டவராவார்.

அதேவேளை புலம்பெய்ந்து வாழும் நம் ஈழத்து சிறுவர்கள் பலரும், தங்கள் திறமைகளை பல்வேறு விடயங்களில் வெளிப்படுத்தி பிரபல்யமாகி உள்ளனர்.

அந்தவகையில் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இடம்பெறும் போட்டி நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை கடந்த வருடம் ஜீதமிழ் சரிகமப இசைப்போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்த கில்மிக்ஷா வெற்றிபெற்ற நிலையில், தற்போது சரிகமப லிட்டில் சாம்பியனில் கனடாவாழ் யாழ்ப்பாண சிறுமி யாதவி கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம் : தவிக்கும் யாழ் நபர்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் போலீசார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காரைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (14) தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர் , தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு,

உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த , அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்டுள்ளார். அதனால் அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார்.

சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் , கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரிய நிலையில் அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.

அதன் பின்னர் , அவரது கணக்கில் இருந்து 05 தடவைகள் 40 ஆயிரம் ரூபாயும் , அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபாய் , 06 ஆயிரம் ரூபாய் என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நபர் , வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது , பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால் , யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது, அதனை உங்கள் பிரிவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறி பாதிக்கப்பட்டவரை பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.

அதன்பின்னர் அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்ற போது, வங்கி மானிப்பாய் பகுதி என்பதால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையம் சென்ற போது , வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் வருகிறது எனவே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்ற போது , முறைப்பாட்டை எழுத தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இல்லை என கூறி பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பாட்டை எந்த பொலிஸ் நிலையமும் ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவர் கவலை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தென்னிலங்கையில் வீட்டுக்குள் புகுந்து தந்தை, மகள் மீது துப்பாக்கிச் சூடு!!

காலியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிட்டியாகொட – பலிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்த நபர் மற்றும் பெண்ணொருவர் மீது நேற்று இரவு ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 49 மற்றும் 29 வயதுடைய மிட்டியகொட, பாலிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் தந்தையும் மகளும் காயமடைந்துள்ளனர்.

தந்தையும் மகளும் வீட்டில் இருந்தபோது, ​​மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஆணும் பெண்ணும் பலபிட்டிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை!!

முல்லைத்தீவு கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (15.12) இரவு இடம்பெற்றுள்ளது.

கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டு கேணிப்பகுதில் வாடியில் தங்கியிருந்துள்ளனர்.

குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில் நேற்று மாலை வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில் நேற்றையதினம் இரவு நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சுந்தரராஜ் எனும் 38 வயதுடைய கண்டியினை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்!!

கொழும்பு – வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தெகிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.

குறித்த இளைஞரிடம் இருந்து பெருந்தொகை பணம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் 19 இலட்சம் ரூபா பணம், மொபைல் போன், பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் ஒரு மின்னணு தராசு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய போதைப்பொருளுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 24 வயதானவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைக்காக வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் காற்றின் காரணமாக முறிந்து விழுந்த மரம் : அரச விடுதி மற்றும் வர்த்தக நிலையம் சேதம்!!

வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழமையான மரம் காற்றின் காரணமாக முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இன்று (16.12) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், காற்றும் வீசி வருகின்றது. மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன்போது மற்றும் ஒரு மரக் கிளை மீது மரம் முறிந்து விழுந்ததால் அம் மரமும் முறிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக, அருகில் இருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன சேதமடைந்துள்ளது. அத்துடன் மின்சார இணைப்பும் அறுவடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நிலையில் இரு முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (16.12) தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வணடி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு குறித்த முச்சக்கர வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

அதுபோன்று, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமாத்திச் சென்று சாரதிக்கு மயக்க மருத்து கொடுத்து முச்சக்கர வண்டி ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.

இது தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேரா வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில்,

உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடாபான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யபபட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வவுனியா நகரப் பகுதியில் கடத்தப்பட்ட முச்சக்கர வணடிக்கு நீல நிற வர்ண்ப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றபபட்டு கெக்கிராவ பகுதியில் மீட்கப்பட்டது.

அத்துடன், வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் சென்ற போது முச்சக்கர வணடி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு கடத்திச் செல்லப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டி 9 இலட்சம் ரூபாய்க்கு இலக்கத்தகடு மாற்றி விற்பனை செய்யபபட்ட நிலையில் சாய்ந்தமருது பகுதியில் மீட்கப்பட்டுள்னது.

குறித்த இரு சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பகுதியில் வசித்து வரும் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதவேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது விழிப்புடன் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

யாழ் பல்பொருள் அங்காடியில் பெண்களின் மோசமான செயல் : காட்டிக்கொடுத்த CCTV!!

யாழ்ப்பாணம், பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் , பெண் உள்ளிட்ட மூவர் திருட்டில் ஈடுபட்டமை ந்க்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி இல் பதிவாகியுள்ளது.

சுன்னாகம் நகர்ப் பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளிலேயே இவ்வாரு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.

இதன்போது பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் திருட்டுக்களில் ஈடுபடுவது பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த திருட்டுக்கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றில் வருவதும் அதனை தூரமாக நிறுத்தி விட்டு இவ்வாறு திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

அதோடு, பல்பொருள் அங்காடியில் பெறுமதியான பொருட்களை திருடி ஆடைகளுக்குள் மறைத்து வைத்து திருடிச் செல்வதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளாக கூறப்படுகின்றது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

 தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும். அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடும் எச்சரிக்கையுன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற அருச்சுனா எம்பி, அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று(16.12.2024) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார். இதன்போது எம்பி இராமநாதன் அர்ச்சுனா , கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.