வெளிநாட்டிலுள்ள 15 இலட்சம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!!

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை தீவிரம் அடைந்துள்ளமையால் சர்வதேச ரீதியாக பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் பணிபுரியும் சுமார் 15 லட்சம் இலங்கையர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

போர் பதற்ற நிலைமை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டின் பாதுகாப்பு துறையின் அனைத்து விடுமுறை நாட்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் பாரிய போர் நிலை ஏற்படும். இது பல நாடுகளுக்கு ஆபத்தாக மாறும்.

மேலும் எண்ணைய் களஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இலங்கை மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈபிடிபி வேட்புமனுத்தாக்கல்!!

வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்றையதினம் தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை ஈழமக்கள் ஜனநாயக கட்சிநேற்றயதினம் இறுதிசெய்திருந்தது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (07.10.2024) மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்தது.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மற்றும் ஏனைய வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

உயிரிழந்த மகனின் சாதாரண தர பெறுபேற்றை பார்த்து வேதனையில் மரணித்த தந்தை!!

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறந்த சாதாரண தரப் பெறுபேற்றைப் பார்த்து வேதனையடைந்த தந்தை ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவன் நீர்கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், பரீட்சைகள் முடிவடைந்து இரு நாட்களின் பின்னர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 28ஆம் திகதி வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளின் படி குறித்த மாணவன் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

இதனை அடுத்து மகனின் பெறுபேறுகளை அறிந்து வேதனையடைந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 53 வயதுடையவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்த தந்தையின் மகன் மே மாதம் இரவு, கட்டான, இட்டகொடெல்ல வீதியில், உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், கார் ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் மகனுக்கு அதிசிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதை அறிந்த தந்தை தனது மகன் உயிருடன் இல்லை என்பதை நினைத்து மிகுந்த மன வேதனையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்!!

இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தாக மாறியுள்ள உக்ரேனியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்கேரிய குழுக்களை கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குழுவினை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு உக்ரேனிய சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணையக் குற்றவாளிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், இலங்கையின் வங்கிச் செயற்பாடுகளை இணையத்தில் மிகவும் உன்னிப்பாக கண்காணித்ததாகவும் இரகசியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாடிய 18 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (04) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியுள்ளது. இதனால் அவரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 19 வயது யுவதி பரிதாப மரணம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று முன்தினம் (04.10) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டது.

இதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

யானைகளுக்கு அஞ்சி பிள்ளைகளுடன் மரத்தில் வாழும் குடும்பம்!!

அநுராதபுரம், மஹாவிலாச்சிய பகுதியில் இளம் குடும்பம் ஒன்று யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றனர்.இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

போதுமான வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் நிரந்தர வீடு ஒன்றைக் கட்ட முடியாமல் மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். பணம் இல்லாத காரணத்தினால் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

வீட்டில் நானும் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றோம். எனது மூத்த மகள் 18 வயதுடையவர், இளைய மகன் 5 வயதுடையவர் ஆவார்.

மூத்த மகள் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றாள். நான் கூலி வேலை செய்து எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

நாங்கள் இதற்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள எமது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்தோம். பின்னர் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மஹாவிலாச்சிய பகுதிக்கு சென்றோம்.

இங்கு நபரொருவர் எங்கள் மீது இரக்கப்பட்டு காணி ஒன்றை வழங்கியபோதும், அந்த காணி விவசாய நடவடிக்கைகளுக்கு சொந்தமானது என தெரிவித்து பிரதேச மக்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், மஹாவிலாச்சிய பிரதேச செயலாளரின் தலையீட்டில் அந்த காணி உத்தியோகபூர்வமாக எங்களுக்கு வழங்கப்பட்டது. இதனியடுத்து காணியில் அறை ஒன்றை கட்டுவதற்கு அத்திவாரம் இட்டோம்.

ஆனால் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அறை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றோம் என கூறிய அவர், தாங்கள் வசிப்பதற்கு வீடு அமைக்க உதவி புரியுமாரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விபத்துகளை குறைக்க வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் : கிளிநொச்சி பொலிசார் அதிரடி!!

நாட்டில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனவர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி தேனீர் வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்க விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்த நிலையில், இன்றையதினம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 192,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,050 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

யாழில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை : தவிக்கும் உறவுகள்!!

யாழில் இளம் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை கடந்த 30.09.2024 அன்று தொடக்கம் காணவில்லை என அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா (வயது 35) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்பு இலக்கம் – +94 75 389 6732

ஜோர்தானில் உயிரிழந்த இலங்கை பெண் : பெற்றோர் விடுக்கும் கோரிக்கை!!

ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த போது சுகவீனமடைந்து உயிரிழந்த மகளின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொஸ்கொட வதுரவெல பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர் உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயதான நதிஷானி திஸாநாயக்கவின் சடலத்தையே ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று ஜோர்டானில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் நதிஷானி வேலைக்குச் சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டினை முழுமையாக கட்டி முடிப்பதற்காவும் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் மனைவி : யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த நபர் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணை

இருப்பினும், கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவரை கைப்பேசியில் அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கமைய, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த முல்லைத்தீவுப் பெண்!!

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த குறித்த மாணவி ஒரே நேரத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளை பெற்றதோடு, தைக்வொண்டோ (Taekwondo) விளையாட்டிலும் பதக்கத்தினை பெற்று இரணைப்பாலை கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

படிப்பிற்கு விளையாட்டு சம நேரத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இரண்டிலும் சாதனை படைக்கலாம் எனவும், அதற்கு தான் ஒரு எடுத்துக்காட்டு எனவும் மாணவி கூறியுள்ளார்.

மேலும், தனது வெற்றிக்கு துணைநின்ற பயிற்றுவிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

பெருமை சேர்த்த மாணவி

அத்துடன், குறித்த மாணவி வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், அதனையும் அடைவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

குறித்த மாணவியின் தந்தை இது தொடர்பாக கூறும்போது,

“விளையாட்டில் ஆர்வம் காட்டும் நேரம் படிப்பு பின்தங்கிவிடுமோ என பயமாகவே இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் எனது மகள் விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை படைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது.

அத்துடன், எனது மகளின் எதிர்கால இலக்கினை அடைய எனது முழு ஆதரவு இருக்கும்” என கூறியிருந்தார்.

கடந்த மாதம் 28,29,30 ஆகிய திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதுபிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் குறித்த மாணவி வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி : பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றம்!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவினால் இந்த மாற்றம் ஏற்படும் எனவும், அத்தகைய விலை நிவாரணம் கிடைக்க கணிசமான காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ரூபாயின் பெறுமதி வலுவடையும் போது இறக்குமதி பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பது கட்டாயமாகும். எனினும் அதனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.

பொருட்களின் விலை

அது காலத்துடன் முறையாக இடம்பெற வேண்டும். பொருட்கள் ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்துவதற்கு ஒரு காலப்பகுதி எடுத்துக் கொள்ளும்.

இலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதன் சுமையை மக்கள் மீது வர்த்தகர்கள் திணிக்கும் போதிலும் அதன் பெறுமதி வலுவடையும் போது நன்மையை மக்களுக்கு வழங்கும் ஒரு நடைமுறையை காணமுடிவதில்லை.

பூகோள நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ நடந்து சென்று மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட தந்தை!!

அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார்.

குறித்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசித்து வருகிறார்.

இவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் அங்குள்ள வேறொரு பகுதியில் இருந்தார்.

அந்த 2 பகுதிகளுக்கும் இடையே இருந்த தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டதால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதேவேளை, மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை. மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்வது என்று முடிவு செய்தார்,

இதனையடுத்து கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணித்தியாலத்தில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார்.

அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.