மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கடை நடத்தி வரும் சிலம்பரசன், மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், இன்று காலை வெளியே வராத நிலையில்,

அறையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது மகள், ​​தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், தந்தை அருகில் தூக்கில் தொங்கியபடியும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் அகிலாண்டேஸ்வரிக்கும், சிலம்பரசனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், சிலம்பரசனின் குடிப்பழக்கம் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடவேண்டாம்.. உயிருக்கே ஆபத்து என எச்சரிக்கை!!

உருளைக்கிழங்கை சேமித்தால் அது பச்சை நிறமாக மாறி, முளைவிட தொடங்கும். இந்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

சிலர் முளைவிட்ட பகுதியை மட்டும் வெட்டிவிட்டு சமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கை கட்டாயம் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிக அளவு கிளைகோல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இதனை அதிகமாக உண்ணும்போது நமக்கு உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

இதனால் வயிற்றுக் கோளாறு முதல் இதயம் மற்றும் நரம்பு மண்டலப் பிரச்சினைகள் வரை பல பிரச்சனைகள் ஏற்படலாம்.மேலும் சில, கடுமையான சந்தர்ப்பங்களில், மரணம் கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்..

முளைவிட்ட உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதுஉணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில நேரங்களில் இது மரணத்தையும் ஏற்படுத்தும் என்பதால் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கின்றனர். உருளைக்கிழங்கு சோலனைன் மற்றும் சாகோனைனின் இயற்கையான மூலமாகும். சிறிய அளவில் உட்கொள்ளும் போது,

​​கிளைகோஅல்கலாய்டுகள் ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் இரத்த-சர்க்கரை- மற்றும் கொலஸ்ட்ரால்-குறைக்கும் விளைவுகளை உள்ளடக்கிய ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன.

இருப்பினும், அவை அதிகமாக உண்ணும் போது நச்சு மற்றும் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். பச்சை நிறம் குளோரோபில் இருந்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒரு உருளைக்கிழங்கு முளைவிட தொடங்கும் போது, ​​அதன் கிளைகோல்கலாய்டு உள்ளடக்கம் உயரத் தொடங்குகிறது.

இதை சாப்பிடும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அதிக அளவுகளில் நரம்பியல் அறிகுறிகளை கூட ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிற அறிகுறிகள் என்னென்ன?

குறைந்த இரத்த அழுத்தம்
விரைவான துடிப்பு
அதிக காய்ச்சல்
தலைவலி
குழப்பம்
மரணம்

முளைவிட்ட உருளைக்கிழங்கில் இருந்து நச்சுத்தன்மையைக் குறைப்பது எப்படி?

உருளைக்கிழங்கு நச்சுத்தன்மையைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் சிறந்த வழி, அவற்றைத் தூக்கி எறிவதே ஆகும்.

ஆனால் பச்சை மற்றும் துளிர் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே குவிந்திருந்தால், அவற்றை கூர்மையான கத்தியால் அகற்றி, மீதமுள்ள உருளைக்கிழங்குடன் சமைக்கலாம்.

இருப்பினும், சமைக்கப்படும் போது அதில் இருக்கும் நச்சுக்கள் அழியாது என்பதால், முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவது தவிர்ப்பதே நல்லது.

யாழில் மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்றும் (11) ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஐந்து நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் ரஞ்சிதா (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். காய்ச்சல் தொடர்ந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது அவர் அங்கு மயங்கி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேற்படி பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

எனினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான நோய் நிலை காரணமாக 23 வயதான யுவதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் பலி!!!

வவுனியா வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மோகனகாந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று(10) மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளதால் அந்த வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனுக்கு தெரியாமல் கருக்கலைப்பு : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் 7 வார கருவை அழித்ததாகக் கூறப்படும் பெண் உட்பட சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கணவருக்குத் தெரிவிக்காமல் கருவை அழித்த மனைவி உட்பட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு 14, மாதம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தெமட்டகொட பொலிஸில் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நாலக ஜயசிங்க, குறித்த பெண், முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் ஒரு திருமணம் செய்துகொண்டிருந்ததாகவும் அந்தத் திருமணத்தில் அவருக்கு ஒரு குழந்தை இருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்தத் திருமணத்தில் விவாகரத்து பெற்றதாக போலியான தகவல் வெளியிட்டு முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின் பின்னர் குழந்தையுடன் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வசிப்பதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன் போது பெண் கர்ப்பம் தரித்ததாகவும், ஆனால் அது கணவனுக்குத் தெரியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது.

கணவருக்கு தெரிவிக்காமல் 7 வாரங்களும் 4 நாட்களும் நிறைவடைந்த கருவை பெண் அழித்துள்ளார். கணவருக்கு பிறிதொரு நபரின் மூலம் தெரியவந்ததையடுத்து,

அது தொடர்பில் தெமட்டகொட பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் சட்டத்தரணி நாலக ஜயசிங்க நீதிமன்றில் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக முன்கூட்டிய சிசுவை அழிப்பது கொலைக் குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் செயல் என சட்டத்தரணி நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னர் கணவருடன் வசித்த நாரஹேன்பிட்டி வீட்டை விட்டு வெளியேறி கொழும்பு மாதம்பிட்டியில் உள்ள வீடொன்றில் வசித்து வருவதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ்.மாணவி!!

யாழ். இணுவில் கிழக்கு சேர்ந்த கஜீனா தர்ஷன் என்ற மாணவி சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக தாய்லாந்து செல்லவிருக்கும் செல்வி கஜிஷனா தர்ஷன், யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை தரம் 02இல் கல்வி பயின்று வருகின்றார்.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளார்.

இதற்கமைய இம்மாதம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளார்.

மேலும் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக விளையாடவுள்ளார்.

 

இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது!!

இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று முகாம்களில் தங்கியிருந்த நால்வரே இவ்வாறு நேற்று(10.12.2024) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். இந்நிலையில், நால்வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு திருச்சி சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிய பளுதூக்கல் போட்டியில் யாழைச் சேர்ந்த இளைஞன் சாதனை!!

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொழில்நுட்ப உலகில் புரட்சி : கூகுள் உருவாக்கியுள்ள குவாண்டம் சிப்!!

புதிய தலைமுறை சிப் மூலம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு முக்கிய சவாலை சமாளித்துவிட்டதாக கூகுள் திங்களன்று (10) கூறியது.தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம், வில்லோ என்ற குவாண்டம் சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் குவாண்டம் ஆய்வகத்தில் இந்த புதிய சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு சிக்கலான கணக்குகளையும் கூட இந்த சிப் மூலம் வெறும் ஐந்து நிமிடங்களில் தீர்க்க முடியுமாம். அதாவது வழக்கமான கம்ப்யூட்டர் பல கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்குகளைக் கூட இது 5 நிமிடங்களில் முடித்துவிடுமாம்.

இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஒரு சிக்கலான கணக்கை வில்லோ ஐந்து நிமிடங்களில் செய்து காட்டியது.

இப்போது இருக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் கூட இந்த கணக்குகளை முடிக்க 10 செப்டில்லியன் (அதாவது 1025) ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

இது நமது பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வயதை விட அதிகமாகும்” என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கம்ப்யூட்டிங் அமைப்புகளைத் தாண்டி அதிவேகமான கம்ப்யூட்டிங் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் மைக்ரோசாப்ட்,

கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூகுள் இப்போது முதல்முறையாக அப்படியொரு சிப்பை உருவாக்கி இருக்கிறது.

வரும் காலத்தில் இது மருத்துவம், மிக்கல தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பெரியளவில் நமக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவாண்டம் சிப் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சிப் ஆகும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான கணினிகள் “பிட்கள்” (0 அல்லது 1) மூலம் இயங்கும்.

அதாவது ஒரு நேரத்தில் 0 அல்லது 1 என இரண்டில் எதாவது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், குவாண்டம் சிப்கள் “குபிட்கள்” மூலம் இயங்கும்.

அதாவது 0, 1 என இரண்டுமாக ஒரே நேரத்தில் இந்த குபிட்களால் இயங்க முடியும். இதன் காரணமாகவே சிக்கலான கணக்குகளைக் கூட வேகமாகப் போட முடியும். வில்லோ சிப்பில் 105 குபிட்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சின் அறிவிப்பு!!

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.

தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும்.

இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!

இலங்கையின் வடக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள்ம் கூறியுள்ளது.

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

வவுனியாவில் தேர்தல் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா? அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்!!

தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06.12.2024) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான இளஞனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த தமிழ் இளைஞன் இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில் இளைஞன் சுடப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து , உடனடியாக அந்த இடத்துக்குசென்ற அவசரகால சேவை பிரிவு பணியாளர்கள் தரையில் குற்றுயிராக கிடந்த இளைஞனுக்கு முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் மரணடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட இளைஞன் வாடகை வண்டி ஓட்டுநனராக பணியாற்றியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொலைக்கான காணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மகனுக்காக 200 பேரை படுகொலை செய்த நபர்!!

மகனுக்கு ‘பில்லி சூனியம்’ வைத்ததாக 200 பேரை படுகொலை செய்து தெருவில் போட்டு எரித்த Gang leader.

கரீபிய தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஹைதி. இந்த நாட்டின் தலைநகராக – போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளது. போர்ட்-ஓ-பிரின்ஸ் இல் Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதியாகும்.

ஹைதியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  அதில் வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளான்.

பெலிக்ஸ் உடைய மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளான்.

பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் (voodoo practitioners) பில்லி சூனியம் (voodoo) வைத்துள்ளதாகக் கூறி அவர்களைக் கொல்ல பெலிக்ஸுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளான்.

அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.

Cité Soleil இன் Wharf Jérémie பகுதியில் டிசம்பர் 6 – 8 இற்கு இடையில் 127 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படக் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதி அரசும் நேற்று (09) இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

100 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலைக்கு உத்தரவிட்ட வார்ஃப் ஜெர்மி கும்பலுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி : மக்களே அவதானம்!!

நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (09.12) உத்தரவிட்டார்.

நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய விசாரணை அதிகாரிகள், முறைப்பாட்டாளர் காணி விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்ததாகவும்,

அதனைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபர் முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், அவரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து நாற்பது இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதெவேளை சந்தேகநபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடி சம்பவத்தைச் செய்து மோசடியாகப் பணம் பெறப்பட்டு,

சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழப்பு : மக்களே அவதானம்!!

யாழ் . போதனா வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

அதன்படி பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேசமயம் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூவரின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி கூறுகையில்,

இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. எனினும் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும் என்றார்.

அதோடு பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.