வவுனியாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் : நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரபல பீசா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம், அனுமதி பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகரசபை கட்டளைச் சட்டங்களின் பிரகாரமும், நகரப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகரசபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும்.

எனினும் குறித்த ஆதனத்தில் நகரசபையால் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக கட்டடம் அமைக்கப்பட்டு வணிக ரீதியிலான நோக்கத்தில் இக் கட்டடம் இயங்குவதனால் அது தொடர்பாக குறிப்பிட்ட சில ஆவணங்களை நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருத்திய வரைபடத்திற்கான கட்டட அனுமதி, அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கான குடிபுகு சான்றிதழ், சுற்றுச் சூழல் உரிமம், வியாபார உரிமம் ஆகியவற்றை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சபையால் கோரப்பட்டிருந்தது.

எனினும் அது சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீளவும் 7 நாட்களுக்குள் அந்த ஆவணங்களை வழங்குமாறு கடந்த 5ஆம் திகதி சபையின் செயலாளரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயற்படத் தவறின் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திருத்தச் சட்டங்களின் பிரிவுகளை மீறி நகரசபையின் அனுமதி பத்திரத்திற்கு முரணாக கட்டடம் அமைத்து செயற்படுவதாக கருதி நீதிமன்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என அறிவித்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : சந்தேகம் வெளியிட்ட மனைவி!!

குவைத்தில் வீடு ஒன்றில் சாரதியாக செயற்பட்ட நிலையில் இளைஞன் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனினும் கணவனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் மொஹமட் நுஸ்ரா கேட்டுக்கொண்டுள்ளர்.

குவைத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்த 26 வயதான முகமது சமீர் சில தினங்களுக்கு முன்னர் தீ விபத்தினால் உயிரிழந்தார். கணவருடன் பணியாற்றிய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மனைவி குறிப்பிடப்பட்டுள்ளார்.

தனது கணவர் முகமது சமீர் மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த மரணம் குறித்து தனது கணவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதில் விமானியான யுவதி : குவியும் பாராட்டுக்கள்!!

இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 18 -வயதில் சமிரா எனும் யுவதி விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சமிரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.

அனைத்து கடுமையான தேர்வுகளிலும் வெற்றி பெற்று தனது வணிகவிமானிஉரிமம் (CPL) ஈட்டி, விமான போக்குவரத்து துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை அவர் அடைந்துள்ளார்.

சமிராவின் பயணம் அவருடைய ஒப்பற்ற அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, போட்டி நிறைந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான உறுதிக்கு சான்றாகும்.

இளம் வயதிலேயே இத்தகைய அசாதாரணமான சாதனையை பெற்று, நாடு முழுவதும் பயிலும் எண்ணற்ற விமானிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவளுடைய வெற்றிக் கதை ஒரு உத்வேகத்தின் தீரம், விடாமுயற்சியின் சக்தியையும் தடைகளை உடைக்கும் தைரியத்தையும் வெளிக்காட்டுகிறது.

அவள் புதிய உயரத்திற்கு உயரும்போது, சமைரா, இளம் மனங்களில் தங்கள் கனவுகளை ஊக்கப்படுத்துகிறாள் என பலரும் உவகை வெளியிட்டுள்ளனர்.

 

வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நபர் : இளம் தம்பதி தப்பியோட்டம்!!

அனுராதபுரம் – கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டை கொலை செய்யப்பட்ட நபர் வேறு பிரதேசத்தை சேர்ந்த தம்பதியருக்கு வாடகைக்கு விட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த தம்பதியினர் நேற்று முன்தினம் முதல் வீட்டை விட்டு வெளியேறி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியராகும் கனவு நிறைவேறவில்லை : மாணவி எடுத்த விபரீத முடிவு!!

டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனை சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து வந்ததாக தெரிகிறது. டாக்டர் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதினார்.

2 முறை தேர்வி எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தார்.  இதனால் இருமுறையும் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காமல் அவரது டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே தனுஜா நேற்று பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான கலபுரகிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்த ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சென்று தான் மீண்டும் கர்நாடக எல்லைக்குள் வரும். அதுபோல் அந்த ரயில் அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் தனுஜா, தனது பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தனுஜா பிணமாக கிடந்ததை பார்த்த அனந்தபூர் ரயில்வே போலீசார், ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து இறந்ததாக கருதி விசாரணை நடத்தினர்.

ஆனால் இது குறித்து தனுஜாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், டாக்டராகும் கனவு நிறைவேறாத அவர் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

டாக்டர் கனவு நிறைவேறாத விரக்தியில் மாணவி ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தம்பதிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை அன்பழகன் நித்யாவிடம் எதுவும் சொல்லாமல் வேலைக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த நித்யா நேற்று மதியம் தனது மகன் அனிஷ் (5), மகள் கோபிகா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்யா, அனிஷ்,

கோபிகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகைரதத்தில் தொங்கியபடி பயணித்த சீன யுவதிக்கு நடந்த சம்பவம்!!

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (07.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நண்பி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

புகையிரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் புகையிரதத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. புதரில் விழுந்ததால் சீன யுவதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு-கிழக்கில் நாளை முதல் நிகழவுள்ள காலநிலை மாற்றம்!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்நிலை டிசம்பர் 11 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாகவே நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை – மக்களுக்கு புதிய தகவல்!!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்!!

யாழ்ப்பாணம்(Jaffna) பருத்தித்துறை கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவரது குடும்பத்தார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் கேட்டுள்ளதனையடுத்து காணாமல் போன பெண்ணின் மகன் அங்கு சென்று பார்த்த வேளை கிணற்றுக்குள் தனது தாயாரின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய குடும்பப் பெண் ஆவார். இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேங்காய் சம்பல் வழங்காத இலங்கை உணவகங்கள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் குழம்பு(பால் சொதி) வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்சான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.

சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்துள்ள விலை

சந்தையில் தற்போது ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி, முட்டை, உப்பு மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப் பொதி தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை1,200 ரூபாவில் இருந்து 1,280 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர் : கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு!!

தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த நான்கு பயணிகள் தாக்கப்பட்டதனால் பதற்ற நிலையில் ஏற்பட்டிருந்தது.

குறித்த இலங்கையர்களிடம் விசாரணை என்ற போர்வையில் சுங்க அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகள் மீது முறைப்பாடு செய்த சுங்க அதிகாரிகள், அவர்களை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விமான நிலைய தகவலுக்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தில் சென்னை வந்த நான்கு பயணிகளை, துணை ஆணையர் சரவணன் தலைமையிலான சுங்கக் குழுவினர் விசாரணைக்காக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பயணிகளில் ஒருவரான சலீம், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் மொத்தமாக ஆடைகள் வாங்க சென்னைக்கு வரும் வர்த்தகர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடனான வாக்குவாதம் அதிகரித்ததால் இரு குழுக்களும் கைகலப்பில் ஈடுபட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நால்வர் அடங்கிய குழுவினர் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி வீடியோ பதிவு செய்தனர்.

“நாங்கள் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம். இங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகளால் நாங்கள் கடுமையாக தாக்கப்பட்டோம். இந்த வீடியோவை இலங்கை தூதரகத்திற்கு அனுப்புங்கள்” என்று இலங்கை பயணி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலைமை மோசமடைந்ததால், அதிகாரிகள் பயணிகளை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பயணிகள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி, பொலிஸாரிடம் சுங்க அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கையர்களிடம் மேலதிக விசாரணைகளை சென்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இன்று (09.12.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த 63 வயதுடைய எம். விஜயரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் பார்வையிட்டதோடு. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு : அகற்றாவிடில் நடவடிக்கை!!

வவுனியா நகரில் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன் அந்த தினத்தில் அகற்றப்படாது விடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், வவுனியா மாவட்டசெயலாளர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு ஆகிய திணைக்களங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபார நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர். குறிப்பாக நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிரதான வீதிகளினூடாக பயணம் செய்கின்றனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன், போக்குவரத்து நெருக்கடிநிலையும் ஏற்ப்படுகின்றது.

இது தொடர்பாக வவுனியா நகரசபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தநிலையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல கொலைகள்… யாழில் ஆவா குழு தலைவராக இருந்த தமிழர் கனடாவில் கைது!!

யாழ்ப்பாண பகுதியில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை : பலருக்கு எதிராக வழக்குப் பதிவு!!

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குப் தாக்கலும் செய்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கமும் வவுனியாவில் அதிகரித்து வருகின்றது.

இதனையடுதது வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள என்பவற்றில் வவுனியா பொலிசார் இன்று (08.12) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, ரயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என பல இடங்களில் காணப்பட்டதுடன், அவற்றில் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.

அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தமது அயல் பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.