மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் மனைவி இன்றையதினம் (08.12.2024) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வடமுனை, ஊத்துச்சேனையைச் சேர்ந்த 55 வயதுடைய சிவசுப்பிரமணியம் குருநாதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 05.12.2024 ஆம் திகதி, மட்டக்களப்பு – திரும்பெருந்துறையில் உள்ள வாகனம் திருத்துமிடத்திற்கு தனது முச்சக்கரவண்டியை கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், அவரது தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவரை கண்டவர்கள் தகவல் தருமாறும் பொலிஸில் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளனர்.
வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிசார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் 18 வருடங்களாக சேவையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரத்திற்கு, வைத்தியசாலை தரப்பினர் கண்கலங்கி பிரியாவிடை வழங்கியுள்ளனர். இந்த பிரியாவிடை நிகழ்வு நேற்றையதினம் (06.12.2024) கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, அங்கு குழுமியிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் CT ஸ்கேன் இயந்திரத்தின் மீது மலர்கள் வைத்து பிரியாவிடை வழங்கியதுடன், அங்கு உரையாற்றி வைத்தியர்கள் உள்ளிட்ட சிலர் கண் கலங்கி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
18 வருடங்களாக, இலட்சக்கணக்கான நோயாளர்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய குறித்த CT ஸ்கேன் இயந்திரம், ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் தமது தொழில்சார் அறிவைப் பெறுவதற்கு உதவியுள்ளது.
2006ஆம் ஆண்டு கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஸ்கேன் இயந்திரம், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டி தேசிய வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளது.
பல வருடங்களாக இயங்கிய இந்த இயந்திரத்தை தற்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மரியாதையுடனான பிரியாவிடை வழங்குவதற்கு தாம் தீர்மானித்ததாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு சிறந்த இயந்திரத்தை இங்கிருந்து அகற்றும்போது, தமக்கு மாத்திரம் அல்லாமல் இந்த இயந்திரத்தின் சேவை அறிந்த, இங்கு பணியாற்றிய மற்றும் பணியாற்றும் அனைவருக்கும் வேதனையான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.
இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில், தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும்.
பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.
எனினும் கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிசார் வௌியிட்டுள்ளனர்.
அந்தவகையில் டிசம்பர் 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சிறுமி காணாமல் போனமை தொடர்பில் விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.
அதன்படி முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆம் திகதி அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.
இதன்போது, மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.
எனினும் 5ஆம் திகதிவரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணின் கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
2 ஆம் திகதி கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார்.
போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் , சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றையதினம்(6) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பெண் வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் . சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்று (07.12.2024) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (08) பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று (07) காலை 08.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
இது டிசம்பர் 11 ஆம் திகதி இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலை அடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்படி கடற்பரப்புகளில் தற்காலிகமாக மிக பலத்த காற்றுடன் (மணிக்கு 60 கி.மீ.) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியின் நேஹின்ன பிரதேசத்தில் நேற்று (06.12.2024) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 37 மற்றும் 42 வயதுடைய நேஹின்ன மற்றும் நேபட பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களின் சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேகநபர் யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த போது குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடினார். சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் கைதான பிரதான சந்தேக நபரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06.12.2024) மாலை இடம்பெற்றது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
இன்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் நபர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து குறித்த நபரை தேடும்பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது. நீண்டநேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சிலமணிநேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.
சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
போகஹவாவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹாவில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் 14 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கழிவறை குழியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். அதற்கமைய முறைப்பாடு செய்த பெண்ணின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் சடலத்தை வைத்து கான்கிரீட்டால் மூடியிருப்பதாக, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக இணைஞனின் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போய் ஒரு வாரமாகிய நிலையிலேயே இளைஞனின் உறவினர்கள் கடந்த மாதம் 25ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், இதுவரைக்கும் எவ்வித தகவல்களும் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல்போயுள்ள இளைஞ்ர் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது உறவினர்களது தொலைபேசி இலக்கமான 071 425 8714 அறிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பகுதியில் மூன்றுபிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்றுகாலை (06.12.2024) விபரீதமுடிவால்உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ச – நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி, இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காய வகைகளின் விலை கிலோ ஒன்று 400 முதல் 450 ரூபா வரை உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.