காலியில் (Galle) தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று (03) இரவு ஏற்பட்டுள்ளது.
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று தொடருந்துடன் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி – சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் நேற்றையதினம் (03.12) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து ஊழியர்களுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் புறப்படுகின்ற நேரம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் ஹீரோ முதற்கொண்டு, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
மேலும் நேத்ரன் தன்னோடு இணைந்து நடித்த நடிகை தீபாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேத்ரனின் மகள்கள் இருவருமே தற்போது திரையுலகில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய தந்தை கேன்சரால் போராடி வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கண்டிப்பாக தன்னுடைய தந்தை புற்றுநோயில் இருந்து மீண்டு வருவார் என நப்புகிறோம். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர், வீட்டில் ஓய்வில் இருந்த நேத்ரன் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் சின்ன சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேத்ரன் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பொன்னி’ சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருடைய மனைவி தீபா நேத்ரன், சன் டிவியில் ஒளிபரப்பாகி வேறு சிங்க பெண்ணே சீரியலில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நேத்ரன் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம்(04) தங்கத்தின் விலையானது சற்று உயர்வடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,732 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த வெளிநாட்டவரை விமான பணியாளர்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர் குடிபோதையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விமானத்தின் சீட் பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குறித்த வெளிநாட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறையில் கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் உறவினர் என கூறப்படும் 17 வயதுடைய சிறுவனே தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும் உயிரிழந்தவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் கத்தியால் குத்தியுள்ளார்.
இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த வயல் உரிமையாளர், சந்தேக நபரை தாக்கி, கையில் வைத்திருந்த கத்தியை பறித்துச் சென்றுள்ளார்.
இதேவேளை, படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை பலனின்றி குறித்த தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 38 வயதான வயதான தாயே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் நேற்று இரவு (29.11) உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று திரும்பிய அதிகாரி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளது.
யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நவம்பர் மாதம் முழுதும் நடைமுறைக்கு வரும் வகையில் அந்த திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீட்டர் ஆகியவற்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கான விலைத் திருத்தம் இன்று பின்னிரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிருஷ்டி துலி (25) என்பவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாகப் பணிபுரிய தொடங்கியதில் இருந்து, மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பயிற்சிக்காக டெல்லி சென்றபோது ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 25ம் தேதி வரை ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அன்று ஆதித்யா காரில் டெல்லி சென்றார்.
அப்போது, சிருஷ்டி செல்போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆதித்யா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
நண்பர் ஒருவர் கதவைத் திறந்து பார்த்தபோது, டேட்டா கேபிளில் சிருஷ்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டார்.
உடனடியாக சிருஷ்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிருஷ்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆதித்யா சிருஷ்டியை அடித்து துன்புறுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது காதலியை அசைவ உணவு உண்ணக் கூடாது என்று வற்புறுத்தியதாகவும் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி ஆதித்யாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த 24 -ம் திகதி நடைபெற்ற திருமணம் தற்போது வைரலாகியுள்ளது.
திருமணத்தின் போது, மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு ஆகிய இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். பின்னர், மாலைக்கு பதிலாக இருவரும் ஹெல்மெட்டை மாற்றி கொண்டனர்.
இதையடுத்து, திருமணத்திற்கு வந்த இளைஞர்களிடம், விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்று மணமகன் பிரேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மணமகன் பேசுகையில், “என்னுடைய தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
என் தந்தையின் உயிரிழப்பு என் வாழ்க்கையில் மிகவும் ஆழமாக பாதித்தது. இதனால் இருச்சக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இந்த விழுப்புணர்வை மேற்கொண்டேன்” என்றார்.
உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் ஒவ்வொருத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு ஏற்றாற் போல எமது நாடும் பல துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகின்றது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி எம்மத்தியில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலும் அதிகரித்து காணப்படுகின்றது.
புதிய அறிமுகம்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான், இலங்கையில் இலத்திரனியல் வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது தனியார் நிறுவனமொன்று.
குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த போது இலத்திரனியல் வாகனத்தின் தேவை அதிகமாக உணரப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த இலத்திரனியல் மோட்டார் வாகனம் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த இலத்திரனியல் வாகன அறிமுகமானது இலங்கையில் இலத்திரனியல் வாகனத் துறையின் புரட்சியாக பலராலும் பார்க்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் – தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ தொடக்கம், 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.
இந்த புயலானது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இப்பகுதிகளுக்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், கூறியுள்ளது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கடன் பெற்றும் பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் மேற்கொண்ட நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் இம்முறை கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியதில் பயிர்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.
இதனால் பெருமளவில் நஷ்டமடைந்துள்ளோம். அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
சம்பவத்தில் 54 வயதான எஸ். ஏ. எஸ். ஸ்டான்லி திலகரத்ன மற்றும் 53 வயதான சந்திரிகா மல்காந்தி என்பவர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நபர் முந்தலம பகுதியில் கார் கழுவும் நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் வீட்டில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டருக்கான மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுதை சீர்செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதன்போது கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் மற்றும் மனைவி அயலவர்களால் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதியினரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முந்தல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.