கொழும்பு பிரதான வீதியில் விபத்து – 20 பேர் படுகாயம்!!

கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்திசையில் பயணித்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் பேருந்தில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் வரக்காபொல தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தலையிட்டு நிலைமையை சீர்செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை!!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி கார் விபத்து!!

பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனையடுத்து, சந்தேகநபரான காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய (2024.09.11) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 26,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 214,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,550 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 196,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 202,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 186,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

யாழில் முச்சக்கர வண்டியில் இளைஞனை கடத்தி கொள்ளை : இருவருக்கு வலைவீச்சு!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இளைஞனை கடத்தி சென்று , தாக்கி இளைஞனிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி நகை என்பவற்றை கொள்ளையடித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞனை முச்சக்கர வண்டி ஒன்றில் மூவர் கடத்தி சென்று தாக்குதல் நடாத்தி பணம் மற்றும் வெள்ளி நகை என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதை அடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை தலைமறைவாகியுள்ள ஏனைய இருவரையும் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 103வது நினைவுதின நிகழ்வுகள்!!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவுதினம் இன்று (11.09.2024) வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் நடைபெற்றது. இதன்போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தொடர்பான நினைவுப் பேருரைகளை து.டன்சிகா, பி.அனிஸ்ரன், ரொ.றக்ஸன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றினர்.

வவுனியா நகரசபை மற்றும் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் ஜெகதீஸ்வரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா,

நகரசபை உத்தியோகத்தர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டர் குண்டு ஒன்று நேற்று (10.09) மீட்க்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா பொலிசாருக்கு அறிவித்தையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுட்ன், அது மோட்டர் குண்டு என உறுதிப்படுத்தினர். விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அதனை அகற்றுவதந்கான நடவடிக்கையை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் பலி!!

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

யாழில் கோரவிபத்தில் இளைஞனின் கால் பாதம் துண்டிப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10.09) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு மீண்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி!!

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடிகாமத்தில் வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களின் பின் உலக கின்னஸ் மதிப்பீட்டுக் குழுவழனால் (world guiness assesment commity) இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி அன்று இந்நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கின்னஸ் சாதனை படைத்த இந்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த கின்னஸ் சாதனைக்கான விண்ணப்பம் முதல் அனைத்து விடயங்களையும் குறித்த மாணவியே தனது சுய முயற்சியில் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்கத் தயாராக உள்ளோம்.

எமது தேவை மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதுதான். பெறுபேறுகளை இறுதி செய்யும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும். இதனையடுத்து இன்னும் இரு வாரங்களுக்குள் செப்டெம்பர் மாதத்திற்குள்ளாகவே பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 15 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா மகாறம்பைக்குளம் 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த 15இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா (DCDB) மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்தபோதே இவை மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களின் உத்தரவில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு (DCDB) பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்கள் குறித்த நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர்.

இக்குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

விடுமுறைக்கு வந்த புலம்பெயர் தமிழருக்கு யாழில் இடம்பெற்ற சோகம்!!

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக வந்திருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் (08) உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார்.

கடந்த சனிக்கிழமை (07) அன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது மனைவி தொடர்ந்து யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நேர்ந்த துயரம் : வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய கனகசபாபதி றமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை என்பதுடன் மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் உணவினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம் என்ற நிலையில், இவருக்கு வழமையாக உணவினை கொடுக்க பெண் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது நடமாட்டம் இருக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அயல் வீட்டாரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்து சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண புகைப்படத்தினால் சர்ச்சையில் சிக்கிய புதுமண தம்பதிகள் தொடர்பில் வெளியான தகவல்!!

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்தவுடன் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகையில் உள்ள பல முக்கிய இடங்களில் இந்த ஜோடி புகைப்படங்களை எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

ஸ்ரீ தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க ஓவியங்களைக் கொண்ட பௌத்த விகாரைகளில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கப் பயன்படுத்தப்படும் ஒளியினால் ஓவியங்கள் சேதமடைவதாகவும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தொல்லியல் நோக்கங்களுக்காக இவ்வாறான இடங்களில் புகைப்படம் எடுக்கும்போது, ​​ஒளியைக் குறைக்க பிரத்யேக கமெராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இல்லையெனில் இயற்கைப் பொருட்களால் வரையப்பட்ட படங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செயற்பட முடியும் எனவும் அதன் பிரகாரம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மேலதிக நடவடிக்கை எடுப்பார் எனவும் பேராசிரியர் காமினி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு!!

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் அதிகபட்சமாக 50 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.