நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்!!

கொழும்பின் புறநகர் பகுதியில் நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்வத்த, மாவத்தகம கைத்தொழில் நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மடுமுல்லை, உடபுஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்தை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!!

வீட்டின் உரிமையாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது மரமொன்று முறிந்து வீட்டின் மேல் வீழ்ந்த சம்பவம் ஒன்று முள்ளியவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றிலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரமே இவ்வாறு முறித்து விழுந்துள்ளது.

மோசமாகியுள்ள வானிலை : அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புத்தளம், பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கை அனர்த்தம் காரணமாக, 98,635 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 330,894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் நாடு முழுவதும் 183 பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

21 மாவட்டங்களில் 267 பிரதேச செயலகப் பிரிவுகளில் பலத்த காற்று, வெள்ளம், மரங்கள் சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 82 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 1,465 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 17,635 குடும்பங்களைச் சேர்ந்த 59,997 பேர் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில்,தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அதிகாலை 2:30 மணி நிலவரப்படி திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டிருந்தது.

இது, வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் கிழக்கு கடற்கரையை நெருங்கி, புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வானிலை அமைப்பின் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கு மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்.

ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய இடங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிய இயற்கை சீற்றத்தை சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு!!

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கைய அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும், வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களுக்கும் மிகக் கனமழை தொடர்ச்சியாக கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தெளிவான வானிலை காணப்பட்டாலும் கூட இடையிடையே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

நாளைமுதல் (28) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடைய கரையோர பகுதிகளில் காற்றினுடைய வேகம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் முப்பதாம் திகதி வரை மலை வீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

தற்போது கிடைத்து வருகின்ற கனமழை நாளை நண்பகல் நிறைவு பெற்றாலும் கூட இடையிடையே கனமழை முதல் மிக கனமழை திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

எதிர்வரும் முப்பதாம் தேதி அளவில் இந்த புயல் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கின்ற போது, வடக்கு மாகாணத்தினுடைய யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சிக்கு சற்று வேகமான காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

ரஹ்மான் என் தந்தை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!!

இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடனான வதந்திகளுக்கு பேஸ் ப்ளேயர் மோகினி டே மெளனம் கலைந்துள்ளார்.

இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர் என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் பேஸ் ப்ளேயர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார்.

இதனைப் பலரும் தவறாக விமர்சித்ததைத் தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தனது உடல்நலம் சரியில்லாமல் மும்பையில் இருப்பதுதான் என்றும், ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்றும் அவர் உலகின் சிறந்த ஆண் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ரஹ்மான் குறித்து மோகினி டே வெளியிட்டுள்ள காணொளியில், “என் வாழ்க்கையில் தந்தை போன்றவர்கள் மற்றும் முன்மாதிரியான நபர்கள் சிலர் உள்ளனர்.

அவர்களில் ரஹ்மானும் ஒருவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். என் தந்தை போன்றவர் அவர். எனது தந்தையைவிட சில வயது மட்டுமே குறைவானவர் ரஹ்மான். அவரின் மகளுக்குச் சரியாக என் வயதுதான் இருக்கும்.

அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளாக உள்ளேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில்தான் அவரை சந்தித்தேன். தயவு செய்து எங்களின் தனியுரிமையை மதிக்கவும். மிகவும் கடுமையான சூழலை வலிகளுடன் கடந்து கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 208 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி : வெள்ளக்காடாகிய சோகம் : 69 வீடுகள், 46குளங்கள்உடைவு : ஒருவர் மாயம்!!

Exif_JPEG_420

வவுனியாவில் நேற்றிலிருந்து பெய்து வரும் கடும்மழையால் 1048 குடும்பங்களை சேர்ந்த 3492பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வங்களாவிரிகுடாவில் ஏற்ப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் நேற்றுகாலை முதல்மழை பெய்துவருகிறது. குறிப்பாக நேற்று மாலை நேரத்தின் பின்னர் இடைவிடாத தொடர்சியான கனமழை பெய்தது. இதனால் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய இடர்நிலமை ஏற்றப்பட்டுள்ளதுடன் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்க்கியது.

3492 பேர் நேரடியாக பாதிப்பு

இதேவேளை வெள்ளப்பாதிப்பினால் வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில் 140 குடும்பங்களை சேர்ந்த 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேசசெயலாளர் பிரிவில் 746 குடும்பங்களை சேர்ந்த 2568 பேரும் செட்டிகுளம் பிரிவில் 148 குடும்பங்களை சேர்ந்த 495 பேரும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசெயலாளர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 39பேரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2709 பேர் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர், 126 குடும்பங்களை சேர்ந்த 363 பேர் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

வவுனியா வடக்கில் புளியங்குளம், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு, ஈச்சங்குளம், பாலமோட்டை, வவுனியா தெற்கு சிங்கள பிரிவில் அக்கோபுர, புதுவிளாங்குளம்,செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவில் கந்தசாமிநகர், குருக்கள் புதுக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களே இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

69 வீடுகள் சேதம்

இதேவேளை வெள்ளப்பாதிப்பு காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 67 வீடுகளும், சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளுமாக 69 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

46குளங்கள் உடைவு

இதேவேளை அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் 46 குளங்களில் பாரிய உடைவு ஏற்ப்பட்டுள்ளது. 226 குளங்கள் சேதமடையக்கூடிய நிலையில் உள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றை சீரமைக்கின்ற பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில் இராணுவத்தினர் மற்றும் விவசாயிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகரித்த மழைவீழ்ச்சியால் 50 வீதமான நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. அவற்றின் முழுமையான பாதிப்பு தொடர்பாக எதிர்வரும் நாட்களின் பின்னரே கூறமுடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

200ஐ தாண்டிய மழைவீழ்ச்சி

இன்றுகாலை (27.11) 8 மணிவரை கடந்த 24 மணித்தியாலங்களில் 208 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுனியா மகாகச்சக்கொடி பகுதியில் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ள 23 வயதான இளைஞர் மாயமாகியுள்ளார். அவரை தேடுவதற்கான நடவடிகைகள் கடந்த பலமணி நேரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எ9 வீதி முடக்கம்

இதேவேளை நேற்றயதினம் இரவு 10 மணியில் இருந்து நொச்சிமோட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தமையால் அந்த வீதியுடனான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை வரையிலும் அந்த நிலமை தொடர்கின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் கனரகவாகனங்களை மாத்திரம் அந்த பாதையினூடாக செல்வதற்கு அனுமதி வழங்கிவருகின்றனர்.

இதேவேளை வவுனியாக்குளம் வான்பாய்ந்து வருவதால் பூந்தோட்டம் பாலத்தினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை பயன்படுத்திவரும் மக்கள் மாற்றுபாதையினூடாக நகருக்கு சென்று வருகின்றனர்.

வவுனியா தாண்டிக்குளம் பாலம்பிட்டி பிரதான வீதி, பம்பைமடு ஈச்சங்குளம் வீதிகளில் நீர் மூடி பாய்வதால் அந்த பாதையூடான போக்குவரத்து இன்று மாலை வரை துண்டிக்கப்பட்டிருந்தது.

ஏற்பாடுகள் தயார் நிலையில்

இதேவேளை இன்றயதினம் காலை முதல் மாவட்டம் தழுவியரீதியில் மிதமானமழை பெய்துவருகின்றது.
மழை வீழ்ச்சி அதிகரித்தால் நிலமை மேலும் மோசமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும்,உலர் உணவுகளும் வழங்கும் செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் அவசர நிலையில் செயற்படுவதற்கு தேவையான அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பாம்பு கடித்து உயிரிழப்பு!!

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று (27.11.2024) காலை பாம்பு கடித்து குடும்பஸ்தர் மரணம் அடைந்துள்ளார்.

சம்பவத்தில் பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான 20 வயதுடைய குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகினார்.

நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதே இளம் குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்!!

வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் இடம்பெற்றதுடன், மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணி இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் அதன் அருகே உள்ள நிலத்தில் நினைவு தின ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் துயிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

போரால் மரணித்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட நூற்றுக்கணக்கானோர் தீபம் ஏற்றி கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

பிரதான சுடர் இரண்டு மாவீரர்களின் தாய் ஒருவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டிருந்தன. கலந்து கொண்ட அனைவருக்கும் மாவீரர் நினைவாக பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

யாழ். செல்லும் பயனிகளுக்கு எச்சரிக்கை : வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஏ9 பிரதான வீதி!!

ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

இதன்படி, யாழ்ப்பாணம் செல்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடான வீதிகளை சாரதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலைபொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக இந்த செயற்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 ,0112 472 757 ,0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்குண்ட இரண்டு மாணவர்களின் சட்டங்கள் மீட்பு : தேடும் பணி தொடர்கிறது!!

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலங்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு : அம்பாறை – மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் காணமல்போயுள்ள ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த ஆறு மாணவர்களை தேடும் பணிகள் இன்று (27.11.2024) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன. கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞன் மாயம்!!

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞனை காணவில்லை மாமடுவ பொலிசார் தெரிவிக்கின்றனர். நேற்று (26.11.2024) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிசாருக்கும் தகவல் வழங்கினர். எனினும் இளைஞன் இது வரை கண்டுபிடிக்கபபடவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்த ஹசன் குணவர்த்தன என்ற இளைஞரே காணாமல் போனவர் ஆவார். குறித்த இளைஞனை தேடும் பணி தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர்.

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் : மக்களே அவதானம்!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இன்றைய தினம் (27.11) சூறாவளியாக மாறக்கூடிய அளவுக்கு விரிவடைந்து கிழக்கு கரையை அண்மித்ததாக பயணிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள சில பகுதிகள் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில், அலைகள் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரை மேலெழக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் சீற்றமாகக் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞன் மாயம் : தவிக்கும் பெற்றோர்!!

களுத்துறை, பண்டாரகமை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் கடந்தஞாயிற்றுக்கிழமை (24.11.2024) இரவு தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் இரவு உணவை உட்கொண்டு பின்னர் தனது அறைக்குள் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இளைஞனின் தாய் மறுநாள் திங்கட்கிழமை (25.11) அதிகாலை 04.30 மணியளவில் காலை உணவை தயாரிப்பதற்காகச் சமையல் அறையை நோக்கிச் செல்ல முயன்ற போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

பின்னர் தாய் வீட்டின் கதவை மூடிவிட்டு இளைஞனின் அறைக்குள் சென்று பார்த்த போது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இளைஞனின் பெற்றோர் பிரதேசவாசிகளின் உதவியுடன் இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் எந்தவித தகவல்களும் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை மில்லனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை : அரச அதிபர்!!

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடரும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன் இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது பெய்து வரும் கனமழை இன்னமும் அதிகரிக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மந்தமான வேகத்தில் நகர்வதால் இதன் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கும். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும். திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும்.

நாளை இரவு முதல் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைவடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு.

பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளதோடு, கன மழையும் கிடைத்து வருகின்றது. ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வீசும் வேகமான காற்று தொடரும். சில வேளைகளில் இந்த காற்று மணித்தியாலத்துக்கு 80 கி.மீ. இனை விடவும் வேகமாக வீசக் கூடும்.

வடக்கு மாகாணத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.

இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும் என்பதனால் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கடும் மழை : நீரில் மூழ்கிய அரச திணைக்களங்கள் : மன்னார் வீதி போக்குவரத்து தடை!!

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலவும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று (26.11) பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி,

அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் எனபன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மாகவித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வவுனியாவின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் வெள்ள நீரில் முழ்கின.

இதனையடுத்து, வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகரசபைச் செயலாளர், மாவட்ட அனத்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.