ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.எம.சிப்லி மற்றும் செயலாளர் யு.உபைதுல்லா ஆகியோர் இணைந்து குறித்த கோரிக்கை கடிதத்தை வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடம் இன்று (26.11.2024) கையளித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுளளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதுடன், அவர்களும் மழைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதனால் ஏனைய மாவட்டங்களில் விடுமுறை வழங்கியது போன்று வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிப்பு!!

தொடர் மழை காரணமாக வவுனியாவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக வவுனியாவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும், புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் அதிவேக காற்றின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிப்படைந்ள்ளதுடன், ஒரு வீடும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் முழுக்கொள்ளளவை எட்டிய 100ற்கும் மேற்ப்பட்ட குளங்கள்!!

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்துகாணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் வவுனியா குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று அதிகாலை முதல்மேலதிக நீர் வெளியேறி வருகின்றது.

இதேவேளை நேற்றுமாலை வரை மாவட்டத்தின் 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறிவருவதுடன், அநேகமான குளங்களில் 90சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அவற்றை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள பெங்கால் புயல்!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன் இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும் என யாழ்.

பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இன்னமும் அதிகரிக்கும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மந்தமான வேகத்தில் நகர்வதால் இதன் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கும்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும். திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும்.

நாளை இரவு முதல் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைவடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு.

பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளதோடு, கன மழையும் கிடைத்து வருகின்றது.

ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வீசும் வேகமான காற்று தொடரும்.

சில வேளைகளில் இந்த காற்று மணித்தியாலத்துக்கு 80 கி.மீ. இனை விடவும் வேகமாக வீசக் கூடும்.

வடக்கு மாகாணத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.

இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும் என்பதனால் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் கொள்ளை!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கள்வர்கள் திருடி சென்றுள்ளனர்.

அச்சுவேலி , இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (25) கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புகுந்த திருடர்கள் நகைகள் மற்றும் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களை , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்!!

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்துவரும் அடைமழையல் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக திம்புலாகல, கந்தளாய், கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திரமாக நடமாட முடியவில்லை : பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா!!

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தன்னால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி, யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (26.11.2024) ஆரம்பமான திசையமைப்பின் முதல் நாளின் போதே, அவர் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன அவருக்கு பதிலளித்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

கைத்துப்பாக்கி மற்றும் பாதுகாப்பை வழங்குவது நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சே அதற்கான பொறுப்பை வகிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அமைச்சின் மதிப்பீட்டின் படி, பொலிஸ் பாதுகாப்பு அல்லது கைத்துப்பாக்கியைப் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு உரிமை உண்டு என்றும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வங்களா விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்கக் கடலில் (Bay of Bengal) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் நேற்று (25) இரவு முதல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்கள் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் காற்று வடகிழக்கு திசையில், மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அவ்வப்போது மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலையால் நேர்ந்த விபரீதம் – பெண்ணொருவர் உறக்கத்தில் மரணம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளையில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 61 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் மீது இடிந்து வீழ்ந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் விழுவதால் இந்த வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

நீர்கொழும்பு, முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் நேற்று பிற்பகல் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபகுதியை சேர்ந்த 50 வயதுடைய ரணில் பெர்னாண்டோ எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் அவரது 18 வயதான மூத்த மகள் நிலுஷா நெத்மி பெர்னாண்டோ என்ற யுவதியுமே கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருவுடன் சிறிய மீன்பிடி படகில் 7 குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளனர்.

இதன் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் இருவர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Google Map ஆல் பறிபோன மூன்று உயிர்கள்!!

கூகுள் மெப்பின் உதவியுடன் இந்தியாவின் பரேலியிலிருந்து பதாவுன் பகுதியை நோக்கிப் பயணித்த கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததாக சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், பாலத்தின் சமீபத்திய நிலை GPS-ல் மேம்படுத்தல் (அப்டேட்) செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் கார் பாலத்தின் மீது பயணித்துக்கொண்டிருந்த போது பாலத்தில் கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஐபிஎல் இல் 13 வயது சிறுவனை 1.1 கோடி ரூபாக்கு வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!!

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின.

இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார்.

பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார். வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார்.

இரண்டாம் நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர் இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது.

கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன.

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது.

இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை.

புயல் நகரும் வேகத்தில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறையிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இன்று (26) காலை 8.00 மணியளவில் இலிருந்து 140 கி.மீ. தூரத்தில் காணப்படும்.

நாளை மாலை 3.00 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து அம்பாறையில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் அதன் மையம் காணப்படும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27 ம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கி.மீ. இல் காணப்படும்.

அதன் பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கி.மீ. தூரத்தில் காணப்படும். பின்னர் 27ம் திகதி மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கிழக்காக 109 கி.மீ. தூரத்தில் இந்த புயல் காணப்படும்.

தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த புயலின் இடவமைவு மேற்குறிப்பிட்ட இடங்களில் காணப்படும். நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் என்பதைக் கருத்தில் கொள்க.

கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தீர்மானமாக அறிந்ததும் தெரிவிக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அம்பாறை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி இன்றும் நாளையும் (2024 நவம்பர் 26 மற்றும் 27) மிக முக்கியமான நாட்களாகும். இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

எனவே பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாரு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கில் கொட்டித்தீர்க்கும் மழை : பரீட்சைக்கு செல்லமுடியாது தவித்த மாணவர்கள்!!

மாரிகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வடமாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் அடைமழை நேற்று (25.11) காலை முதல் மழை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்றையதினம் கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆரம்பமான நிலையில் மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதனையடுத்து மாணவர்களின் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்லும் நடவடிக்கையை இராணுவ அதிகாரிகள் மற்றும் வடக்கு பகுதி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வீதிகள் அழிந்தும், பாலங்கள் உடைந்தும் கிடப்பதால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட கடினமான சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உடைந்து வெளியேறும் நீர் , பாலத்தின் மீது பாய ஆரம்பித்ததால் முல்லைத்தீவுக்கான பாதை மூடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாகாணங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தொடர்பு முறிந்துவிட்டது.

வவுனியாவில் உள்ள பேராறு நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் இரண்டு பிரதான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததனால், அக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்க முடியாமல் உள்ளது.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை வரை யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாகாணங்களில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இராணுவம், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேசமயம் பெருமழையினால் விவசாய நிலங்களும், மாடு, ஆடு, கோழி என ஏராளமான பண்ணை விலங்குகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து : பெண் உயிரிழப்பு!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இன்றைய தினம் (26.11.2024) அதிகாலை இந்த விபத்து புனேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியில் வழுக்கும் நிலைமை காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ,உயிரிழந்த பெண்ணின் விபரம் வெளியாகவில்லை.

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிடியானையானது யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பேஸ்லைன் வீதியில், 2021 மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது காருடன் மோதி விபத்துக்குள்ளான மற்றுமொரு காரின் வாகன சாரதியைத் கடுமையாகக் தாக்கி காயப்படுத்தியதாகக் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்த காரணத்தினால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.