முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்,
ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன்.
மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன். தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.
இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (25) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகளை ஒப்பிடும் போது கடுமையான உயர்வு பதிவாகியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.
இதன்படி, டொயோட்டா – பிரீமியர் 2017இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், Toyota – Vitz – 2018இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 93 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Toyota – Aqua G 2012இன் முந்தைய விலை 60 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 68 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Honda – Vessel2014இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Nissan – X-Trail 2015 இன் முந்தைய விலை 84 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே இருபத்தேழு லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
சுஸுகி – வேகன் ஆர் 2014இன் முந்தைய விலை 47 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 57 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Suzuki – Alto – 2015இன் முந்தைய விலை 30 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 32 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
நட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.
பரந்தன்- முல்லைத்தீவு A-35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்தது.
இதில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை உடைத்து பணத்தினை கொள்ளையடித்து, போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தட்டாதெரு சந்தி பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் இருக்கை பகுதியை உடைத்து , அதனுள் இருந்த ஒரு தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பணத்தினை கொள்ளையடித்து சென்ற சந்தேக நபர்களின் ஒளிப்படங்கள் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.
சந்தேகநபர்கள் அரசடி பகுதியில் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
இதன்போது இருவரிடம் இருந்தும் 10 போதை மாத்திரைகளும் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் எனவும் , போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திருட்டு , கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
ஹட்டன் – வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அட்டனிலிருந்து கண்டில் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி வந்த இ.போ.ச. பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டாகப் பிரிந்த தனியார் பஸ்
விபத்தின்போது தனியார் பஸ்ஸின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது நால்வர் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தனியார் பஸ்ஸின் பின்புறப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை வட்டவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வியட்நாமில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையின் மேக்கா சூரியராச்சி மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.
இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் “தேசிய ஆடை மக்கள் தெரிவு” விருதையும் அவர் பெற்றார்.
இந்தநிலையில் மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக்கா சூரியராச்சி படைத்துள்ளார்.
கலாசார பிரதிநிதித்துவம்
அவரது கலாசார பிரதிநிதித்துவத்திற்கு ஒரு சான்றாக, மேகாவிற்கு அதற்கான விருது வழங்கப்பட்டது.
இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தை தனது உடையின் மூலம் சூரியராச்சி வெளிப்படுத்தியதாகவும், அவரது ஆடை நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகின.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று (25) காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து இ.போ.ச பேருந்து எதிர்திசையில் வருவதை கண்டு பிரேக் அழுத்தியதில் தனியார் பேருந்தின் பின்பகுதி நழுவி அரச பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பேருந்தின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் அவர்களின் விசித்திரமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள்.
கண் தெரியாத பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா மற்றும் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் 2025 க்கு ஒரே மாதிரியான பயங்கரமான கணிப்புகளை செய்துள்ளனர்.
பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். இந்நிலையில் , 2025 க்கு, இரண்டு பார்ப்பனர்களும் ஒரே விஷயத்தை கணித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ்
இரு தீர்க்கதரிகளின் பெரும்பான்மையான கணிப்புக்களும் இதுவரை ஆண்டுதோறும் உண்மையாகி வருகின்றன. இப்போது, 2025 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிலையில், வரவிருக்கும் ஆண்டை அவர்கள் கணித்தவை மீண்டும் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் பழம்பெரும் தீர்க்கதரிசிகள் இருவரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு அழிவுகரமான வளர்ச்சியை முன்னறிவித்துள்ளனர்.
2025 பரவலான பேரழிவு
அதாவது – 2025 இல் ஐரோப்பாவில் ஒரு மோதல், அதன் மக்கள்தொகையின் அதிக விகிதத்தை அழிக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.
பார்வையற்ற பல்கேரிய பாபா வாங்காவின் சில கணிப்புகள் உண்மையாகிய பிறகு சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வழிபாட்டு நபராக ஆனார்.
பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்றும் அழைக்கப்படும் பாபா வங்கா, 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பண்டைய பிரெஞ்சு ஜோதிடரான Michel de Nostredame பல துல்லியமான கணிப்புகளையும் செய்துள்ளார்.
பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸின் 2025 ஆம் ஆண்டிற்கான அதே கணிப்பு வரவிருக்கும் ஆண்டில், பாபா வங்கா ஐரோப்பாவில் ஒரு பேரழிவு யுத்தத்தை முன்னறிவித்துள்ளார்.
விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை
இது பரவலான பேரழிவு மற்றும் குறிப்பிடத்தக்க மக்கள் தொகை இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மோதல் 2025 ஆம் ஆண்டில் கண்டத்தை “பேரழிக்கும்” என்று அவர் கூறியிருந்தார். 2025 இல் நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று வங்கா கூறியதாக கூறப்படுகிறது.
அவர்களின் கணிப்பின்படி , இரு நாடுகளுக்கு இடையே 2025 இல் ஒரு புதிய போர் வெடிக்கும் என்று அவர் நம்பினார், ஆனால் அதன் விளைவுகள் உலகம் முழுவதும் அலைமோதும்.
நோஸ்ட்ராடாமஸ், ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான எதிர்காலத்தை கற்பனை செய்திருந்தார்.
அவரது பல நூற்றாண்டுகள் பழமையான தீர்க்கதரிசனங்கள் கண்டத்தை மூழ்கடிக்கும் “கொடூரமான போர்கள்” மற்றும் எதிரிகளை விட மோசமான “பண்டைய பிளேக்” மீண்டும் எழுவதைப் பற்றி பேசுகின்றன.
ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வரும்
பரஸ்பர சோர்வு காரணமாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டார்.
இதுதவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வெற்றி குறித்தும் வங்கா வெளிப்படையாகப் பேசினார்.
1979 இல் எழுத்தாளர் வாலண்டின் சிடோரோவ் உடனான சந்திப்பின் போது, வாங்கா கூறியதாகக் கூறப்படுகிறது, “அனைத்தும் பனிக்கட்டியைப் போல கரைந்துவிடும், ஒன்று மட்டுமே தீண்டப்படாமல் இருக்கும் – விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை.”
மேலும் ரஷ்யா அனைத்தும் வழியிலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், உலகின் அதிபதியாகவும் மாறும் என்றும் வங்காவை தி சன் மேற்கோள் காட்டி எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.
காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23.11.2024) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய, புடலுஉயன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி தனது தோழியின் கையைப் பிடித்தவாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிர் பிழைத்த மாணவி தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவி தனது காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதத்தின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அஷோக ரங்வல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா அமர்ந்தமையினால் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்த சபாநாயகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
“தனி ஒரு நபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகத் தெளிவாக உள்ளது.
மக்கள் இன்று நாட்டில் அப்படியொரு விடயத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
ஆனால் ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என நாங்கள் நம்புகின்றோம்.
அது ஒரு தனியொருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு தெரியும். அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து பேஸ்புக் கணக்குகளையும் சரிபார்த்தோம்.
நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம்” என்றார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 35-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடலானது இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சைசெயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.
இம்முறை உயர்தரபரீட்சைக்கு வவுனியாவில் 2420 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும்மழை பெய்து வருகின்றது. இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை இம்முறை உயர்தரபரீட்சையில் நாடளாவிய ரீதியில் மூன்றுஇலட்சத்து 33,185பேர் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.
வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் 2 வடிகால்களும் 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (23.11) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்தவராவார்.
மரணமடைந்தவரின் சடலம் சிறைக்காவலர்களால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் நீதவான் தி.திருவருள் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியிருந்தார். அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை பார்வையிட்டார்.
சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கொல்லப்பட்டரா அல்லது தவறான முடிவெடுத்து மரணித்தாரா என்ற கோணத்தில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கான அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் வெளியிட்டது.
150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மத்திய வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மழையுடன் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, கேகாலை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த முதலாம் திகதி கொழும்பில் இருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், இன்றையதினம் (23-11-2024) அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.