பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது.

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், பல பிள்ளைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள், மேலும் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால், ‘உளவியல் சமூக சூழலை’ இழந்து பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெறும் மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும், பல பிள்ளைகள் தவறான இணையளத் தளப் பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பிள்ளைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது.

திடீரென தீ பற்றி எரிந்த சொகுசுக் கார்!!

கொழும்பு – பத்தரமுல்லையிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து பத்தரமுல்லை நகரத்தில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. எனினும் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை தெரியுமா? உதவி கோரும் பொலிஸார்!!

அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 077 776 6582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என காணாமல் போன சிறுமியின் தாய் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மூன்று நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விடுக்கப்படும் எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!!

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் (20) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் , டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலை CCTV கேமரா மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறை ஆக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு!!

இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என அவர் கூறியுள்ளார். மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் 170இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த கால அரசாங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டதுடன், பெருந்தொகை மக்களின் வரிப்பணம் செலவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்!!

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் ( G.C.E. Advanced Level) போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சை திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளன. வங்களா விரிகுடாவில் எதிர்வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020, 0113 668 100 அல்லது 0113 668 013, 0113 668 010 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2024ஆம் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கடந்த 20ஆம் திகதி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி!!

பொது தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின்(NPP) சார்பில் போட்டியிட்டு தெரிவான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் இதற்கு முன்னர் செயல்பாட்டு அரசியலில் பங்கேற்றது கிடையாது எனவும் பிரதேச சபை ஒன்றை கூட தாம் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக தாம் நாடாளுமன்றம் செல்வதாகவும் இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எப்பொழுதும் எதிர்பார்த்ததே கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொது தேர்தலுக்காக தான் தனிப்பட்ட ரீதியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் மக்களுக்கு சேவைகளை செய்ய தவறினால் கடந்த அரசாங்கங்களை விட வேகமாக மக்கள் தம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் சிறப்புரிமைகளில் சில வேலைகளில் அதிகார பூர்வ இல்லம் ஒன்று தமக்கு தேவைப்படும் எனவும் அதற்காக விசேடமாக கோரிக்கைகள் எதையும் தாம் விடுக்கவில்லை எனவும் சட்டத்தரணி துஷாரி தெரிவித்துள்ளார்.

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரலாம் எண்ணப்படுகின்றது.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர உறுதி!!

10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு – செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி 10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார்.

முடிகளை நிறமூட்டுபவர்களுக்கு எச்சரிக்கைத் தகவல்!!

கொழும்பு, புறக்கோட்டையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கைதான சந்தேக நபர்கள் மூவரும் பிரபல வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த போலி கிரீம் வகைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான போலி கிரீம் வகைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தொடர்பில் முறையிட 1971 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண் வைத்தியரின் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21.11.2024) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி , பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான பெண் வைத்தியர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கைதான வைத்தியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது இன்றையதினம் சமூக செயற்பாட்டாளர் எல்.எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சோறு வடித்த போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் சிறுமி பலியான சோகம்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ரவிதாஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மகள் 16 வயது நந்தினி. இவர் நவம்பர் 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது திடீரென கைதவறி கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடல் முழுவதும் கொட்டிவிட்டது.

இதில் படுகாயமடைந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் எற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைக்குள் புகுந்து இளம் ஆசிரியை குத்திக்கொலை!!

தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் அரசு பாடசாலை ஆசிரியை, கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பாடசாலையில் ஆசிரியையாக ரமணி (26) என்ற இளம்பெண் 4 மாதங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார்.

பாடசாலை தொடங்கிய வேளையில் ஆசிரியை ரமணி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மதன் (28) என்ற நபர் ரமணியை வெளியே அழைத்து பேசியுள்ளார்.

அப்போது திடீரென அவர் ஆசிரியையை கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், படுகாயமடைந்த ஆசிரியை ரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என தெரிய வந்துள்ளது.

மேலும், ரமணியின் குடும்பத்தார் அவரை திருமணம் செய்துகொடுக்க மறுத்ததும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாசன வாய்க்காலில் தவறி விழுந்து வளர்ப்பு மகன் பலி.. கதறும் பெற்றோர்!!

கரூர் மாவட்டம் மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையில் உள்ள நீர்ப்பாலம் அருகே வசித்து வருபவர்கள் கணபதி (28), சித்ரா (26). இவர்களது மகள் நாய் கடித்து இறந்த பிறகு, கிஷாந்த் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இன்று (நவம்பர் 20) ஒன்றரை வயதுக் குழந்தையான கிஷாந்திற்கு காலை உணவை ஊட்டிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்தார் தாய் சித்ரா. அரை மணி நேரம் கழித்து, வீட்டிற்குள் தன் மகன் கிஷாந்தைத் தேடினார்.

பக்கத்து வீடுகளில் தேடியும் சிறுவன் இல்லாததால், பீதியடைந்த கிராம மக்கள், சிறுவன் பாசன வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என, மாயனூர் அணை நிர்வாக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கால்வாயில் சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி சிறுவன் கிஷாந்தின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து, மாயனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.