எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி… உணவு வகைகளின் விலை குறித்த தகவல்!!

 

தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில், எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

இதன்படி, ஒரு கப் தேநீரின் விலை 10 ரூபாவாலும், கொத்து ரொட்டி மற்றும் முட்டை ரொட்டியின் விலை 20 ரூபாவாலும் குறைக்கப்படவேண்டும்.

அத்துடன், மதிய உணவு பொதியின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும். அரசாங்கத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும், எனவே அனைத்து வர்த்தகர்களும் விலைகளை குறைத்து இந்த சேமிப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பூமியின் உட்புறத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய அமைப்பு!!

பூமியின் வெளிப்புற மையத்திற்குள் ஒரு டோனட் வடிவ பகுதி மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த அமைப்பு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இது பூமியின் திரவ மையத்திற்குள் மனிதர்கள் நடக்கும் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும்.

பூமிக்கு உட்புற கோர் – திட அடுக்கு மற்றும் வெளிப்புற கோர் – திரவ அடுக்கு என இரண்டு முக்கிய அடுக்குகள் உள்ளன.

இதற்கமைய, இந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டோனட் வடிவ பகுதி பூமியின் வெளிப்புற மையத்தின் உச்சியில் உள்ளது.

குறித்த பகுதி தொடர்பில், பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டால் பதிவு செய்யப்படும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்து அடையாளம் காணும் போதே கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தபகுதி, நில அதிர்வு அலைகள் வெளிப்புற அலைகளின் குறுக்கே பயணிக்கும்போது, மெல்லுறையின் எல்லையில் மெதுவாக செல்வதாக ஆய்வு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நாளை போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!!

வவுனியா நகரில் நாளையதினம் ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல்ஆக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாளையதினம் வவுனியா வருகைதரவுள்ளார்.

இதனையடுத்து பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சிவாநந்தன் ஜெனிற்றா,தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார், அந்த சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, மற்றும் காணாமல்போன அமைப்பைசேர்ந்த சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாளையதினம் 01.09.2024 காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைஉத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளைசேர்ந்த பொலிசாரால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் யானை தாக்கியதில் பெண் பலி!!

வவுனியா பிரப்பமடு பகுயில் இன்று (31.08) பிற்பகல் வேலையில் பெண் ஒருவரை யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரப்பமடு பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் இன்று பிற்பகல் தனது மாடுகளை மேய்ச்சல் தரையிலிருந்து அழைத்து செல்வதற்காக சென்றிருந்த வேளையிலேயே காட்டு யானையால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தற்சமயம் இறந்தவரின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மாமடு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 12 ரூபாவினால் குறைத்து 332 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 377 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 307 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை எனவும் 202 ரூபாய் என்ற விலையிலேயே அதன் விலை மாற்றமின்றி தொடரும் என் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சிலிண்டரின் விலை 8000 ரூபாவிற்கு செல்லும் : ரணில் எச்சரிக்கை!!

கைத்தட்டல் வாங்குவதற்காக போலி பிரசாரம் செய்யும் வேட்பாளர்களை நம்பினால் சிலிண்டரின் விலை எதிர்காலத்தில் 8000 ரூபாவிற்கு செல்லும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

10 ரூபாய்க்கு அத்தியாவசிய பொருட்களை தருவேன் என்று நான் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

பண்டாரவளையில் இன்று (31.08.2024) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜேவிபி தொழில் வங்கியை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்களை அறிவிப்போம் என்று சொல்கிறது. அதற்காக முதலில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் மறந்து போயுள்ளனர்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 41 சொற்கள் கூட இளையோரைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

இவ்வாறானவர்களிடம் நாட்டை கையளிக்க வேண்டுமா? நாம் சுற்றுலாவை பலப்படுத்துவோம். உள்ளூர் மக்களை விடவும் அதிகமாக சுற்றுலா பயணிகள் இங்கு நடமாடும் அளவிற்கு சுற்றுலா துறையை ஊக்குவித்து பண்டாரவளை பகுதியை மேம்படுத்துவோம்.

நான் டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, பிரேமதாச போன்ற ஜனாதிபதிகள் வழியை பின்பற்றி நடக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் ஆர்.எம்.அப்புஹாமியுடன் கட்சி சார்பில் பல கூட்டங்களை இந்தப் பிரதேசத்தில் நடத்தியிருக்கிறேன்.

கட்சிக்காக பாடுபட்டிருக்கிறேன். அன்று பிரேமதாச ஜனாதிபதி பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுகொண்டு தொழில் வலயங்களை அமைக்க முன்வந்த போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அப்போது அவரை நான் தான் பாதுகாத்தேன். ஆனால் சஜித் பிரேமதாச இன்று ஐக்கிய தேசிய கட்சியை உடைத்துவிட்டார். அதனால் உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்கள் என்னோடு வந்து இணையுங்கள்” என்றார்.

 

“மிஸ் பண்றேன் அம்மா” தாயைக் கொன்று விட்டு ஸ்டேட்டஸ் வைத்த மகன்!!

 

குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாயை கொலைச் செய்து விட்டு, சமூக வலைத்தளத்தில், ‘உங்களை மிஸ் பண்றேன் அம்மா’ என்று மகன் போஸ்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை, 21 வயது மகன் கவனித்து வந்த நிலையில், தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகனே தாயைக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பகத்சிங்ஜி தோட்டத்தைச் சேர்ந்தவர் நிலேஷ் கோசாய் (21). இவரது தாயார் ஜோதிபென். ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவரது கணவரும், மற்ற குழந்தைகளும் அவரை விட்டி பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். மகன் நிலேஷ் மட்டும் தனியே தனது தாயர் ஜோதிபென்னை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிலேஷ், ஜோதிபென் கழுத்தை போர்வையால் நெரித்து கொலைச் செய்துள்ளார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே ஜோதிபென் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல், தனது தாயாரைக் கொலைச் செய்தது குறித்து நிலேஷ் சமூக ஊடகத்தில், “அம்மா நான் உங்களைக் கொன்றுவிட்டேன். அதனால் என் வாழ்க்கையையே இழந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா. ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

நிலேஷின் பதிவைப் பார்த்த அவரது உறவினர், இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக நிலேஷின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஜோதிபென்னின் சடலத்தின் அருகே நிலேஷ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் நிலேஷை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், ஜோதிபென் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மருந்துகள் கொடுப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக மருந்துகளை சாப்பிடாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஜோதிபென்னின் மனநலம் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றி அவரை கத்தியால் குத்த முயன்றதாகவும், அப்போது அவர் நிலேஷை தடுத்ததாகவும், இதையடுத்து போர்வையால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் போலீசாரிடம் நிலேஷ் தெரிவித்துள்ளார்.

நிலேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜோதிபென்னின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மறுத்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

எரிபொருளின் விலையில் இன்று (31.08.2024) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட எரிபொருள் விலையே ஓகஸ்ட் மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்தது.

அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் 379ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டால் போக்குவரத்து கட்டணம் உட்பட பல்வேறு விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

யாழில் பொலிஸ் உத்தியோத்தர் திடீர் மரணம் : உடற்கூற்று பரிசோதனையில் வெளியான உண்மை!!

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30.08) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது.

இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெரும் சோக சம்பவம் : இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!!

யாழ்ப்பாணத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் அதனை மீளச் செலுத்த முடியாத கார்ணத்தால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்ததையடுத்து வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வாங்கிய கடனை செலுத்த மீளச் முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனைதொடர்ந்தே நேற்றையதினம் (30-08-2024) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்திற்குள் மோதல் : மனைவி குத்திக் கொலை!!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்பேர்ன் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

மனைவி கொலை

அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே அவரை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் வாதாடி வந்தார்.

எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு நேற்றையதினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டதையடுத்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (30) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று(31.08.2024) நண்பகல் 12.10 அளவில் ரம்பேவ, தோப்பூர் மற்றும் மஹாவிலாச்சி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது..

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள்!!

இலங்கையர்களுக்கு புதிய துறைகளில் வேலை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ​​கட்டுமானம், தாதியர் சேவைகள், உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேக்கேஜிங் சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஜப்பான் ஜனாதிபதி ஹிசாயோஷி கிமுரா மற்றும் பணிப்பாளர் மசனோபி கோமியா ஆகியோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் பணிப்பாளர் ஜெஃப் குணவர்தன மற்றும் பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க ஆகியோரை அண்மையில் பணியகத்தில் சந்தித்துள்ளனர்.

இதன்போது ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாயம், தங்குமிட சேவைகள் மற்றும் கட்டடங்களை சுத்தம் செய்தல் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த துறைகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களை கொண்ட பயிற்சிக் குழுவை இலங்கையில் நிறுவுவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

IM ஜப்பான் திட்டத்தின் கீழ் சுமார் 500 இலங்கையர்கள் தற்போது ஜப்பானில் தொழில்நுட்ப சேவையில் பயிற்சி பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில், சுமார் 100 பயிற்சியாளர்கள் ஜப்பான் செல்ல தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி- ஒருவர் படுகாயம்!!

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30.08) மாலை இவ் விபத்து இடம்பெற்றிருந்தது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமனாத் சிவாகரன் (வயது 30) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார். செல்லத்துரை கிருஸ்னபாலமன் (வயது 37) என்ற இளைஞரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

55 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்!!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்று ஜனாதிபதிக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் செல்ல முடியாமல் அஞ்சி ஓடினர்.

அப்படியிருந்த நாட்டில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்கியிருக்கிறோம். எதிர்கட்சியினர் மக்களிடத்தில் வெறுப்பை தூண்டுவதை மட்டுமே செய்தனர்.

இரண்டு வருடங்கள் நாட்டு மாணவர்களின் கல்வி வாழ்க்கை கேள்விக்குறியானது.

மே மாதத்தில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனால் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும்.

எனவே நாடு மீண்டும் நெருக்கடிக்குள் விழுந்து பூச்சியமாவதை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.