இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான பிட்ஸா உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.
இதற்கு முன்பு வரை சைவ, தவளை, முதலை அடங்களாக அசைவ பிட்ஸாக்களை தின்று சலித்து விட்ட மக்களுக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பிரபல பிட்ஸா நிறுவனம் தற்போது சுடச்சுட மலைப்பாம்பு பிட்ஸாக்களை பரிமாறி பரவசப்படுத்துகிறது.
இதற்காக பர்மா மலைப்பாம்பு என்ற வகை பாம்புகளை வெட்டி, அவற்றை அரை வேக்காடாக அவித்து, பின்னர் மசாலா பொருட்களுடன் கலந்து பொரித்து, ஒவ்வொரு பிட்சாவுக்குள்ளும் ஒரு மலைப்பாம்பு துண்டு இருக்கும் வகையில் ஃப்ளோரிடா மக்களை இந்நிறுவனத்தின் உரிமையாளர் இவான் டானியேல் மகிழ்வித்து வருகிறார்.
இந்த பிட்ஸாவுக்காக அவர் கொள்முதல் செய்யும் மலைப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் கொண்டவை என தெரிகிறது. இதற்கான மலைப்பாம்பு இறைச்சியை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்வதாக பெருமையுடன் கூறும் இவர், தனது புது வகை பிட்ஸாவை 45 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்கிறார்.
இதனால், இவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புதிய மெனுவை தொடர்ந்து ருசிக்க வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் பிட்ஸாவின் உள்ளே இருக்கும் இறைச்சி கோழிக்கறியைப் போல் சுவையாக உள்ளது. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு மென்று தின்ன வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் மிருதுவாக அவித்தால் நல்லது என்று கூறுகிறார்.
மருதானை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் விபச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 26 பெண்கள் உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மருதானை – வஜிரானந்த மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று (05) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இருவரும் அதற்கு உதவியாக இருந்த 8 பெண்களுமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களான எட்டுப் பெண்களும் 21 – 31 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்கள் தேவிநுவர, ஹட்டன், இறக்குவானை, அவிசாவளை, கந்தப்பொல, கல்முனை, இரத்மலானை, வரக்காபொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, மருதானை – டெக்கிக்கல் சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கைதான குறித்த பெண்கள் 26 – 44 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் கலுபோவில, கடுவெல, மருதானை, மதவாச்சி, நுவரெலியா, வாழைத்தோட்டம், கலவகெலே, போரல்லை, வடகொட, மினுவான்கொடை, ரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும் மருதானை – பஞ்சிகாவத்தை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, விபச்சார விடுதி நடத்தி வந்த தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கைதான குறித்த பெண்கள் நுவரெலியா, கிரான்பாஸ், பேலியகொட, அவிசாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25- 45 வயதானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியில் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப சமய நிகழ்வுகள் இன்று (06) கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று காலை 08 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய மற்றும் பெறியியல் பீட வளாகத்திற்கு வருகைதந்த உயர் கல்வி அமைச்சர் மற்றும் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற பிரதிகுழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார், பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் அங்குரார்பண சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். பல்கலைகழத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது வடக்கு வாழ் மக்களின் நீண்ட நாள் கனவு. இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து தரப்பு முயற்சிகளின் பயனாக யாழ். பல்கலைகழத்திற்கான பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்தது.
இதனையடுத்து கிளிநொச்சி அறிவியல் நகரில் இந்த பீடத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது வருட மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
அத்தோடு யுத்தத்திற்கு முன்னர் கிளிநொச்சி இயங்கிய விவசாய பீடமும் மீண்டும் கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்படுகிறது. 24 வருடங்களின் பின்னர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடம் நிரந்தர கட்டிடம் ஒன்றில் இயங்க ஆரம்பித்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்திற்கு 560 ஏக்கர் காணி அறிவியல் நகரில் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடல் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்று கிறிஸ்மஸ் தீவுகளில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இரவோடிரவாக கைது செய்து பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பத்தகு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கடந்த 1 வருடமாக தடுப்பு காவலில் வைக்கப்படிருந்து, எந்தவித அறிவிப்பும் இன்றி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தனிப்பட்ட விமானம் முலம் நாடுகடத்தப்படுள்ளனர்.
இவர்களில் பலர் விடுதலைப் புலிகளை சேர்ந்த முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கக்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிப்போம் என அவுஸ்திரேலிய அரசப் பிரதிநிதியொருவர் அறிவித்துள்ள சில மணித்தியாலங்களுக்குள் அங்கு தஞ்சம் கோரியிருந்த தமிழ் மக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது.
அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமலாக்கலுக்காக செயற்படுகின்றன.
மும்மொழிக் கொள்கைக்காக 10 ஆண்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தொடங்கியது.
இந்த மும்மொழிக் கொள்கையின் நோக்கம் பற்றி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சரிடம் வினவப்பட்டது.
ஆங்கில மொழி மூலம் மக்களிடையே ஆங்கிலத் திறமைகளை வளர்ப்பதும், சிங்கள- தமிழ் மொழி பெயர்ப்புகள் மூலம் இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதும் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
இலங்கையில் பிரதான இரண்டு மொழிகளான சிங்களமும் தமிழும் அரசியலமைப்பின்படி அரசகரும மொழிகள். ஆங்கில மொழி இணைப்பு மொழி என்ற நிலையில் உள்ளது.
இணைப்பு மொழியான ஆங்கில மொழியையும், அரசியலமைப்பு ரீதியாக அல்லாமல்- நடைமுறை ரீதியில் அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
நாட்டின் சகல அரச நிறுவன கட்டடங்களிலும் பெயர்ப்பலகைகளும் ஆவணங்களும் மூன்று மொழிகளிலும் அமைய வேண்டும் என்பது தான் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்ட பணி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அரசின் மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தமிழ்பேசும் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுப் போக்குவரத்து வாகனங்கள், அரச கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் எழுத்து மற்றும் அர்த்தப் பிழைகளுடன் பிரசுரிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்மொழி இன்னும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே அரச நிறுவனங்களில் நடத்தப்பட்டுவருவதாக அரசின் மொழி அமுலாக்கங்கள் பற்றி முன்னைய காலங்களில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தவர்களில் ஒருவரான எஸ்.பாலகிருஷ்ணன் கூறினார்.
அரச பேருந்தொன்றில் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரியாக எழுதப்பட்டிருக்க தமிழில் மட்டும் கர்ப்பிணி நாய்மார்களுக்காக என்று தவறாக எழுதப்பட்டிருக்கின்றமை பற்றி உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியமை தொடர்பில் அமைச்சரிடம் வினவியது.
அவ்வாறு தவறுகள் நடந்துள்ள இடங்களை நாங்கள் கேள்விப்பட்டு திருத்தியுள்ளோம். நாங்கள் தான் அவற்றுக்குப் பொறுப்பேற்கிறோம்´ என்றார் அமைச்சர்.
பஸ் டிப்போ ஒன்றை எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் எழுத்துக்களை தமிழ் தெரிந்தவர்களிடமிருந்து எழுதிக் கொள்கின்றனர். ஆனால் தமிழ் எழுத்துக்களைப் புரியாத ஒருவர் தான் அவற்றை வரைந்து வர்ணம் பூசுவார். அதனால் தான் தவறு நடக்கிறது. பாராளுமன்ற பெயர்ப் பலகையிலும் இவ்வாறான தமிழ்ப் பிழை நடந்திருக்கிறது. அந்தப் பிழையை அண்மையில் திருத்தியிருக்கிறோம் என்றார் நாணயக்கார.
இவ்வாறான எழுத்துப் பிழைகள் மூலம் ஒரு சமூகமே அவமரியாதை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதை தெரிவித்தபோது- அந்தத் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்ற அமைச்சர், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடமும் தமிழ் பேசுபவர்களிடமும் மன்னிப்புக் கோருகின்றேன் என்று கூறினார்.
எழுத்துப் பிழைகள் பற்றிய முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்குமாறு பத்திரிகைகளில் அறிவித்தல்கள் போடப்படும் என்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் உண்மையில் மும்மொழிக் கொள்கையினூடாக நாட்டில் இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமானால், இதுவரை பெரும்பாலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடந்துவரும் மொழி நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்திலேயே போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1956-ம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டமையை, இலங்கையில் உள்நாட்டு மோதல்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அவதானிகள் சுட்டுக்காட்டுகின்றனர்.
1987-ம் ஆண்டில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வந்த அரசியலமைப்புத் திருத்தத்தின்படியே, தமிழ் மொழிக்கும் அரசகரும மொழி அந்தஸ்து கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி கிடையாது என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா முறைமை நீடிக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக், சோமாலியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த வீசா சலுகை நீடிக்கப்படவில்லை.
இதுவரை காலமும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே ஒன் அரைவல் வீசா முறைமை காணப்பட்டது.
எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
சில மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக இலங்கை முதலான நாடுகளுக்கு வீசா சலுகை வழங்கப்படவில்லை என்பது பற்றிய தகவல்களை இந்தியா வெளியிடவில்லை.
முகநூலில் பிரசுரமான புகைப்படம் ஒன்று காரணமாக குருநாகல் பிரதேசத்தில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
முகநூலில் பிரசுரமான புகைப்படம் காரணமாக மன வேதனை அடைந்த குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முகநூலில் பிரசுரமாகியிருந்த புகைப்படம் தொடர்பில் பாடசாலையில் விளக்கம் கோரப்பட்டதாகவும் பெற்றோரிடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகநூலில் பிரசுரமான புகைப்படம் தொடாபில் பாடசாலையின் அதிபர் பெற்றோரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த மாணவி வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஏகமனதாக இந்த எதிர்ப்பை தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையினை முழுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய பிரேரணையொன்றை இந்திய, இங்கிலாந்து மற்றும்அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தயாரித்துள்ளன.
வருமானத்தில் அதிக பங்கு, நிர்வாகத்தில் முழுமையான ஆதிக்கம், டெஸ்ட் பிரிவுகளில் குறித்த 3 கிரிக்கெட் அணிகளும் தரம் இறக்கப்பட முடியாத தன்மை உட்பட பல அம்சங்கள் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இப்பிரேரணைக்கு நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து ஆசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய பரிந்துரைகள் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்துகிறது. ஆனால் ஐ.சி.சி.யின் முக்கிய தீர்மானம் எடுப்பதில் மூன்று நாடுகளுக்கு மாத்திரம் அதிக அதிகாரம் வழங்குவதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முற்றாக நிராகரிப்பதாக தெரியவருகிறது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஷேன் வோன் இலங்கையில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளார். இதற்காக அவர் விரைவில் இலங்கைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின் போது ஜெயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள், 726 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுர் லோக்சபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்காக, இலங்கை மற்றம் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், கடந்த ஓராண்டில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 726 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2014 ஜனவரி 31 ம் திகதி நிலவரப்படி இலங்கை சிறையில் 38 இந்திய மீனவர்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். பாக். சிறையில் 232 இந்திய மீனவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பிறகு சந்தானம் தன்னுடைய தயாரிப்பில் களம் இறங்கும் படம் வாலிப ராஜா. இப்படம் தெலுங்கு படம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தில் சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கும் விசில் பறக்குமாம்,உதாரணத்துக்கு உன் காதலை போரடிக்காம பார்த்துக்கிட்டா அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும், ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும், மாடு முன்னாடி போனா முட்டும், ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயும் மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’ என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கை தட்டல்களை வரவழைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
வைகைபுயல் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன்.
இப்படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக மீனாக்ஷி தீக்ஷித் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகிவரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி ரிலீஸாகவுள்ளதாக வடிவேலுவின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதே நாளில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படமும் வெளியாகிறது. இதனால் இவ்விரு படங்களுக்கிடையே வியாபார போட்டி உருவாகியுள்ளது.
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார்.
குறித்த நபர் வீட்டில் இருந்த போது வந்த இனந்தெரியாத நபர்கள் “ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்”, “நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா” என கேட்டு தன்னை அடித்ததாக குறித்த நபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், மத அவமதிப்பு ஆகிய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கிலுள்ள டாய்ப் நகரை சேர்ந்த அப்துலெல்லா அல் ஒடாய்பி என்பவர் சக பழங்குடியினத்தவரை குத்திக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதுபோன்று தென்கிழக்கிலுள்ள அசிர் பகுதியை சேர்ந்த நசிர்-அல்-கடானி, அயெத்-அல்-கடானி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இவர்கள் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நேற்று அவர்களின் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 7 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து சவுதியில் மரண தண்டனை அதிகம் நிறைவேற்றப்படுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இன்று (05) மீண்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று தமது மகஜரினை வவுனியா வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் வி.ஆயகுலனிடம் கையளித்திருந்தனர்.
50 இற்கும் உட்பட்டவர்களே கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் வவுனியாவில் வசிப்பிடம் நெடுங்கேணியில் கழிவறையா, அதிகாரிகளே வீட்டுத்திட்டத்தை சீராக வழங்குங்கள், வீட்டுத்திட்டத்தில் நெடுங்கேணி வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கோசங்களை எழுப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பிரதேச செயலாளர் அவர்களுடைய கோரிக்கைகளை செவிமெடுத்ததுடன் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அகன்று சென்றனர். சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி.லிங்கநாதன் மற்றும் ம.தியாகராசா ஆகியோர் பிரதேச செயலாளர் க. பரந்தாமனுடன் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் பின்னர் பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட முறைகள் அதனை வழங்குவதற்குள்ள நடைமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட். பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் சிவப்பு.
இந்த படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ் , அல்வா வாசு, பூ ராம் ஆகியோர் நடிக்கிறார்கள். கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இலங்கை அகதிகளின் உணர்வுகளையும், அவர்கள் வாழ்வில் உள்ள பல்வேறு சோகங்களையும் பதிவு செய்யும் படைப்பாக உருவாகி உள்ளது. இதில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கோணார் என்ற கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் ராஜ்கிரண். இவரின் கரக்டர் படத்தில் மிக வலிமையான கரக்டராக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கட்டுமானத் தொழில் செய்து வரும் ராஜ்கிரண், இலங்கை அகதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி அடைக்கலம் கொடுப்பாராம். மேலும் படத்தில் நவீன்சந்திரா – ரூபாமஞ்சரி காதலும் கவித்துவமான சம்பவமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சென்னை,பாண்டி,ஹைதராபாத்,தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுருக்கிறது.