விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாயின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வனிதா இன்று காலை சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒருமனு கொடுத்தார். பின்னர் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது..
நான் வனிதா பிலிம் புரோடக்சன் கம்பெனி சார்பில் புதுப்படம் தயாரிக்கிறேன். இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நால்வரும் சினிமாவுக்கு கடவுள் போன்றவர்கள். எனவேதான் இவர்கள் பெயரில் படம் எடுக்கிறேன். இதில் நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிரபலமானவர்கள் மற்றும் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். டான்ஸ்மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்க உள்ளது. படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன் என்று வனிதா கூறினார்.
சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். இந்த படத்தில் கமலுக்கு இருபது வயது நிரம்பிய மகள் கரக்டர் ஒன்று உள்ளது. அதில் நடிக்கத்தான் சுருதி ஹாசனை அழைத்தனர். இதில் நடிக்காதது குறித்து சுருதி ஹாசன் கூறியதாவது..
எனது தந்தையுடன் நடிக்க அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. வேறு படங்களில் பிசியாக நடிப்பதால் தேதி ஒதுக்க முடியவில்லை. எனவே நடிக்க மறுத்து விட்டேன். கடந்த சில நாட்களாக ஒய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு படம் முடிந்ததும் அடுத்த படம் என ஓடிக் கொண்டே இருக்கிறேன். என் சொந்த விஷயங்களை கூட கவனிக்க முடியவில்லை. தோழிகளிடமும் பேச முடியவில்லை. காதல் பற்றி கேட்கிறார்கள். எனக்கு காதலிக்க கூட நேரம் இல்லை என்று சுருதி ஹாசன் கூறினார்.
அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரும்புக் குதிரை படத்தில் அதர்வாவும் பிரியா ஆனந்தும் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி தனியாக சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம்.
காதல் காட்சிகளிலும் எல்லை மீறி நெருக்கம் காட்டுகிறார்களாம். காதல் கிசு கிசுக்கள் பற்றி பிரியா ஆனந்திடம் கேட்ட போது நட்பாகத்தான் பழகுகிறோம் என்றார். அதர்வாவும் நானும் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிற நட்சத்திரங்கள். படப்பிடிப்பில் கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கம் காட்டினோம். இதை வைத்து காதல் என்கின்றனர். எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம் என்றார்.
எந்த நடிகையும் காதலை ஒப்புக்கொண்டதே இல்லை. பிரியா ஆனந்தும் அப்படித்தான் என்றார் படக்குழுவை சேர்ந்த ஒருவர்.
நடிகை ஷர்மிளா, நேற்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது..
நான் கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா, இவன் வேற மாதிரி போன்ற 52 படங்களில் நடித்துள்ளேன். நடிகர்கள் பிரசாந்த், நெப்போலியன் ஆகியோருடன் கதாநாயகியாக படங்களில் நடித்து இருக்கிறேன். புகழின் உச்சியில் இருக்கும்போது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டேன்.
தற்போது 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். 1ம் வகுப்பு படிக்கிறான். எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில், செல்போன் கம்பெனியில் என்ஜினீயராக வேலைபார்க்கிறார்.
எங்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது பெரும்புயல் வீசி விட்டது. எனது கணவரும், நானும் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். நான் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறேன். எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில் அவரது தாயாருடன் வாழ்கிறார். எனது கணவர் என் மீது சந்தேகப்பட்டார். அவருக்கு சினிமாவில் நடித்து பணமும் சம்பாதித்து கொடுக்கவேண்டும். ஆனால் நான் யாருடனும் பேசக்கூடாது.
சினிமா சூட்டிங்கிற்கு பகலில் மட்டும்தான் போகவேண்டும். அவருக்கு இரவில் நல்ல மனைவியாக நடந்து கொள்ளவேண்டும். அவரது தாயாருக்கு நல்ல மருமகளாகவும் இருக்க வேண்டும். சினிமாவில் நடித்ததால் எனது கணவர் விருப்பப்பட்ட மேற்கண்ட எதையும் நிறைவேற்றுவது கடினமாக இருந்தது. இதனால் எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு, மோதல் ஏற்பட்டது. கணவரை விட்டு பிரிந்து விட்டேன்.
அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தை என்னுடன் தான் இருந்தான். ஆனால் கடந்த மாதம் 23ம் திகதி அன்று எனது குழந்தையை எனது கணவர் கடத்திச் சென்றுவிட்டார். இப்போது எனது குழந்தை எங்கு இருக்கிறான், என்று தெரியவில்லை. இரவில் செல்போனில் பேசி எனது கணவர் என்னை மிரட்டுகிறார். எனது குழந்தையை, செல்போனில் என்னை திட்டி பேசவைக்கிறார்.
இதன்மூலம் என்னை மன உளைச்சல் அடைய செய்கிறார். இரவில் தூங்கவிடாமல், தொல்லை கொடுத்து செல்போனில் பேசுகிறார். எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். அவனது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனது கணவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்று ஷர்மிளா தெரிவித்தார்.
அவர் கொடுத்துள்ள புகார் மனு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் தொடர் மற்றும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென்னாபிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன்.
அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய நிலையில் அந்த நாட்டு அணியில் கடைப்பிடிக்கப்படும் இன ரீதியான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி 2001ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறினார்.
இதன் பின்னர் 2004ம் ஆண்டில் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்த கெவின் பீட்டர்சன் அருமையான துடுப்பாட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகும்.
2008ம் ஆண்டு ஓகஸ்டு மாதத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் பொறுப்பை ஏற்ற கெவின் பீட்டர்சன், பயிற்சியாளர் பீட்டர் மூர்சுடனான மோதல் காரணமாக 5 மாதத்தில் பதவியை இழந்தார். இதுமட்டுமின்றி 2012ம் ஆண்டில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விமர்சித்து சமூக வலைதளம் மூலம் தென்னாபிரிக்க அணியினருக்கு செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார்.
2010ம் ஆண்டில் 20 ஓவர் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கெவின் பீட்டர்சன் 2005, 2009, 2010–11, 2013ம் ஆண்டுகளில் ஆஷஸ் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார்.
சமீபத்தில் 0–5 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருந்த கெவின் பீட்டர்சன் மோசமான ஆட்டம் காரணமாக, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.
இருப்பினும் அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. எனவே தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆஷஸ் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து அணியை வலுப்படுத்த அந்த நாட்டு கிரிக்கெட் சபை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக பயிற்சியாளர் அண்டி பிளவர் நீக்கப்பட்டார்.
மேலும் கெவின் பீட்டர்சனையும் அணியில் இருந்து முழுமையாக கழற்றி விடுவது என்ற துணிச்சலான நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.
இந்த மாதத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் பங்களாதேஷில் நடக்கும் 20 ஓவர் உலககிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கிண்ணத்தை கருத்தில் கொண்டு புதிய வலுவான அணியை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அணி நிர்வாகத்தினரால் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
இருப்பினும் பீட்டர்சனை நீக்க எடுத்த முடிவு கடினமானதாகும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பீட்டர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து விளையாடியது பெருமையாக கருதுகிறேன். எனது நம்பமுடியாத கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இங்கிலாந்து அணியின் அற்புதமான வெற்றிகளில் பங்கேற்றதையும், சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடியதையும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். இருப்பினும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
33 வயதான கெவின் பீட்டர்சன் 104 டெஸ்டில் விளையாடி 23 சதங்களுடன் 8181 ஓட்டங்களையும், 136 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதங்களுடன் 4440 ஓட்டங்களையும், இருபது ஓவர் போட்டியில் 37 ஆட்டத்தில் விளையாடி 1176 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக கூறப்படும் ஒரு சி.டி. பதிவை ஆம்ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். அது 2ஜி வழக்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி உரையாடல் உள்ளதாக கூறப்படும் அந்த சி.டி. தகவல்கள் அனைத்தும் பொய் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன், ஆம்ஆத்மி வெளியிட்ட சி.டி. போலியாக தயாரிக்கப்பட்டது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
ஆம்ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக ஒரு உரையாடல் சி.டி. பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க.வின் வெற்றியையும், புகழையும் கெடுக்கும் தீய எண்ணத்துடன் அந்த சி.டி. பதிவு உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க.வின் எதிரிகள் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த சி.டி. பதிவு உரையாடல் முழுக்க முழுக்க பொய்யானது. வேறு, வேறு பேச்சுக்களை ஒட்டி அந்த சி.டி.யை தயாரித்துள்ளனர். இத்தகைய சதி செயல் மூலம் அரசியல் களத்தில் தி.மு.க.வை விரட்ட நெருக்கடி கொடுக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
டி.ஆர்.பாலு எம்.பி. இது தொடர்பாக கூறியதாவது..
பிரசாந்த் பூஷன் போன்ற ஒரு பிரபல வக்கீல், ஒரு சி.டி. பதிவில் என்ன உள்ளது என்பதை அறியாமலே அதை ஊடகங்களுக்கு கொண்டு சென்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. முதலில் அவர் நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டும்.
ஊடகங்களிடம் அவர் அந்த சி.டி. பதிவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது, இதன் மூலம் கனிமொழி குரலை வைத்து சி.டி. தயாரித்து வெளியிட்டிருப்பதில் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.
தி.மு.க.வின் கூட்டணி முயற்சியை சீர்குலைக்க இப்படி ஒரு சி.டி. வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். எங்கள் தலைவரை யாராலும், எந்த கட்சியாலும் நெருக்கடிக்குள் தள்ளவே முடியாது.
ஏனெனில் எங்கள் தலைவர் கலைஞர் அவ்வளவு எளிதில் சாய்க்க முடியாத பெரியார் கொள்கை வழியில் வந்தவராவார். இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை அடித்து துன்புறுத்துவது, கள்ளக்காதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
வீட்டில் மனைவியை கணவர் அடிப்பது சர்வ சாதாரணமான செயலாக அங்கு கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் வீட்டு கௌரவத்தை காப்பாற்றும் வகையில் மனைவி மற்றும் மகள்களை ஆண்கள் அடித்தால் அது தவறு அல்ல. இதுபோன்ற குற்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வரவேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கௌரவ கொலைகள் என்ற பெயரில் பெண்களை கொல்வது அதிகமாக நடந்துவருகிற நேரத்தில் இதுபோன்ற சட்டம் கொண்டுவந்திருப்பது பெண்களை மிகவும் பாதிக்கும். இதன் மூலம் பெண்கள் உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (04.02) காலை இல்லத் திறனாய்வு போட்டியின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் இப் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பல மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இப் போட்டிகள் செட்டிகுளம் பிரதான வீதியில் 10KM தூரம் கொண்டதாக அமைந்திருந்ததுடன் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. செட்டிகுளம் போக்குவரத்து பொலிசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் நடந்த விபத்தில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று மதியம் ஒருமணியளவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சுகாதார அமைச்சின் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாயும் மகளும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுகாதார அமைச்சின் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில் இரு வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதாகவும் இந்த கோர விபத்தைப் பார்த்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிரான்சில் நகையை கொள்ளையிட்டவர்கள் நகைக்கடையின் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் பொலிசாரிடம் பிடிபட்டனர்.
பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர்.
அந்த பெண்ணை கயிற்றால் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினர். பின் நகைக்கடையின் சாவியை தருமாறும் இல்லையென்றால் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டினர். உயிருக்கு பயந்த அந்த பெண் கடைச்சாவியை அவர்களிடம் கொடுத்தார்.
ஒரு கொள்ளையன் மட்டும் கடைக்குச் சென்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு வந்தான். பின் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு இரண்டு கொள்ளையர்களும் தப்பிச் சென்றுவிட்டனர்.
பொலிசாருக்கு தகவல் தெரிவித்த அந்த பெண் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார். தடவியல் நிபுணர்கள் பெண்ணின் கன்னத்தில் பொடியை தூவி முத்தமிட்ட தடயத்தை டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பியதில் தேசிய மரபணு தகவல் தொகுப்பில் அந்த கொள்ளையன் பற்றிய விவரம் இருப்பதை அறிந்து அவனை கைது செய்தனர்.
ஏற்கனவே அவன் பிரான்சின் நைம்ஸ் சிறையில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பொலிசாரிடம் பிடிபட்ட கொள்ளையன், கொள்ளை தொடர்பான அதிர்ச்சியிலிருந்து அப்பெண் மீள்வதற்காகவே அவரது கன்னத்தில் முத்தமிட்டதாக தெரிவித்தான்.
இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான பிட்ஸா உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.
இதற்கு முன்பு வரை சைவ, தவளை, முதலை அடங்களாக அசைவ பிட்ஸாக்களை தின்று சலித்து விட்ட மக்களுக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பிரபல பிட்ஸா நிறுவனம் தற்போது சுடச்சுட மலைப்பாம்பு பிட்ஸாக்களை பரிமாறி பரவசப்படுத்துகிறது.
இதற்காக பர்மா மலைப்பாம்பு என்ற வகை பாம்புகளை வெட்டி, அவற்றை அரை வேக்காடாக அவித்து, பின்னர் மசாலா பொருட்களுடன் கலந்து பொரித்து, ஒவ்வொரு பிட்சாவுக்குள்ளும் ஒரு மலைப்பாம்பு துண்டு இருக்கும் வகையில் ஃப்ளோரிடா மக்களை இந்நிறுவனத்தின் உரிமையாளர் இவான் டானியேல் மகிழ்வித்து வருகிறார்.
இந்த பிட்ஸாவுக்காக அவர் கொள்முதல் செய்யும் மலைப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் கொண்டவை என தெரிகிறது. இதற்கான மலைப்பாம்பு இறைச்சியை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்வதாக பெருமையுடன் கூறும் இவர், தனது புது வகை பிட்ஸாவை 45 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்கிறார்.
இதனால், இவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புதிய மெனுவை தொடர்ந்து ருசிக்க வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் பிட்ஸாவின் உள்ளே இருக்கும் இறைச்சி கோழிக்கறியைப் போல் சுவையாக உள்ளது. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு மென்று தின்ன வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் மிருதுவாக அவித்தால் நல்லது என்று கூறுகிறார்.
மருதானை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் விபச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 26 பெண்கள் உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மருதானை – வஜிரானந்த மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று (05) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இருவரும் அதற்கு உதவியாக இருந்த 8 பெண்களுமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களான எட்டுப் பெண்களும் 21 – 31 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்கள் தேவிநுவர, ஹட்டன், இறக்குவானை, அவிசாவளை, கந்தப்பொல, கல்முனை, இரத்மலானை, வரக்காபொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, மருதானை – டெக்கிக்கல் சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கைதான குறித்த பெண்கள் 26 – 44 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் கலுபோவில, கடுவெல, மருதானை, மதவாச்சி, நுவரெலியா, வாழைத்தோட்டம், கலவகெலே, போரல்லை, வடகொட, மினுவான்கொடை, ரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும் மருதானை – பஞ்சிகாவத்தை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, விபச்சார விடுதி நடத்தி வந்த தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கைதான குறித்த பெண்கள் நுவரெலியா, கிரான்பாஸ், பேலியகொட, அவிசாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25- 45 வயதானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியில் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப சமய நிகழ்வுகள் இன்று (06) கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று காலை 08 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய மற்றும் பெறியியல் பீட வளாகத்திற்கு வருகைதந்த உயர் கல்வி அமைச்சர் மற்றும் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற பிரதிகுழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார், பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் அங்குரார்பண சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். பல்கலைகழத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது வடக்கு வாழ் மக்களின் நீண்ட நாள் கனவு. இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து தரப்பு முயற்சிகளின் பயனாக யாழ். பல்கலைகழத்திற்கான பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்தது.
இதனையடுத்து கிளிநொச்சி அறிவியல் நகரில் இந்த பீடத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது வருட மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
அத்தோடு யுத்தத்திற்கு முன்னர் கிளிநொச்சி இயங்கிய விவசாய பீடமும் மீண்டும் கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்படுகிறது. 24 வருடங்களின் பின்னர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடம் நிரந்தர கட்டிடம் ஒன்றில் இயங்க ஆரம்பித்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்திற்கு 560 ஏக்கர் காணி அறிவியல் நகரில் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடல் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்று கிறிஸ்மஸ் தீவுகளில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இரவோடிரவாக கைது செய்து பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பத்தகு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கடந்த 1 வருடமாக தடுப்பு காவலில் வைக்கப்படிருந்து, எந்தவித அறிவிப்பும் இன்றி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தனிப்பட்ட விமானம் முலம் நாடுகடத்தப்படுள்ளனர்.
இவர்களில் பலர் விடுதலைப் புலிகளை சேர்ந்த முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கக்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிப்போம் என அவுஸ்திரேலிய அரசப் பிரதிநிதியொருவர் அறிவித்துள்ள சில மணித்தியாலங்களுக்குள் அங்கு தஞ்சம் கோரியிருந்த தமிழ் மக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது.
அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமலாக்கலுக்காக செயற்படுகின்றன.
மும்மொழிக் கொள்கைக்காக 10 ஆண்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தொடங்கியது.
இந்த மும்மொழிக் கொள்கையின் நோக்கம் பற்றி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சரிடம் வினவப்பட்டது.
ஆங்கில மொழி மூலம் மக்களிடையே ஆங்கிலத் திறமைகளை வளர்ப்பதும், சிங்கள- தமிழ் மொழி பெயர்ப்புகள் மூலம் இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதும் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
இலங்கையில் பிரதான இரண்டு மொழிகளான சிங்களமும் தமிழும் அரசியலமைப்பின்படி அரசகரும மொழிகள். ஆங்கில மொழி இணைப்பு மொழி என்ற நிலையில் உள்ளது.
இணைப்பு மொழியான ஆங்கில மொழியையும், அரசியலமைப்பு ரீதியாக அல்லாமல்- நடைமுறை ரீதியில் அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
நாட்டின் சகல அரச நிறுவன கட்டடங்களிலும் பெயர்ப்பலகைகளும் ஆவணங்களும் மூன்று மொழிகளிலும் அமைய வேண்டும் என்பது தான் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்ட பணி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அரசின் மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தமிழ்பேசும் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுப் போக்குவரத்து வாகனங்கள், அரச கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் எழுத்து மற்றும் அர்த்தப் பிழைகளுடன் பிரசுரிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்மொழி இன்னும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே அரச நிறுவனங்களில் நடத்தப்பட்டுவருவதாக அரசின் மொழி அமுலாக்கங்கள் பற்றி முன்னைய காலங்களில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தவர்களில் ஒருவரான எஸ்.பாலகிருஷ்ணன் கூறினார்.
அரச பேருந்தொன்றில் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரியாக எழுதப்பட்டிருக்க தமிழில் மட்டும் கர்ப்பிணி நாய்மார்களுக்காக என்று தவறாக எழுதப்பட்டிருக்கின்றமை பற்றி உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியமை தொடர்பில் அமைச்சரிடம் வினவியது.
அவ்வாறு தவறுகள் நடந்துள்ள இடங்களை நாங்கள் கேள்விப்பட்டு திருத்தியுள்ளோம். நாங்கள் தான் அவற்றுக்குப் பொறுப்பேற்கிறோம்´ என்றார் அமைச்சர்.
பஸ் டிப்போ ஒன்றை எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் எழுத்துக்களை தமிழ் தெரிந்தவர்களிடமிருந்து எழுதிக் கொள்கின்றனர். ஆனால் தமிழ் எழுத்துக்களைப் புரியாத ஒருவர் தான் அவற்றை வரைந்து வர்ணம் பூசுவார். அதனால் தான் தவறு நடக்கிறது. பாராளுமன்ற பெயர்ப் பலகையிலும் இவ்வாறான தமிழ்ப் பிழை நடந்திருக்கிறது. அந்தப் பிழையை அண்மையில் திருத்தியிருக்கிறோம் என்றார் நாணயக்கார.
இவ்வாறான எழுத்துப் பிழைகள் மூலம் ஒரு சமூகமே அவமரியாதை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதை தெரிவித்தபோது- அந்தத் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்ற அமைச்சர், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடமும் தமிழ் பேசுபவர்களிடமும் மன்னிப்புக் கோருகின்றேன் என்று கூறினார்.
எழுத்துப் பிழைகள் பற்றிய முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்குமாறு பத்திரிகைகளில் அறிவித்தல்கள் போடப்படும் என்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் உண்மையில் மும்மொழிக் கொள்கையினூடாக நாட்டில் இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமானால், இதுவரை பெரும்பாலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடந்துவரும் மொழி நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்திலேயே போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1956-ம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டமையை, இலங்கையில் உள்நாட்டு மோதல்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அவதானிகள் சுட்டுக்காட்டுகின்றனர்.
1987-ம் ஆண்டில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வந்த அரசியலமைப்புத் திருத்தத்தின்படியே, தமிழ் மொழிக்கும் அரசகரும மொழி அந்தஸ்து கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.