கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு, கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து சுமார் 144 இலட்சம் ரூபா பணத்தை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். றாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) உருவப்படத்துடன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 5,000 ரூபாய் தாள்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 நவம்பர் 11 ஆம் திகதி வரை குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் உருவப்படத்துடன் கூடிய 5000 ரூபாய் போலி நாணயத் தாளின் புகைப்படத்தைப் பரப்பியதாக சந்தேகிக்கப்பட்டே, அவர் நவம்பர் 04 ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், அதுருகிரிய, கொரத்தோட்டை பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன் அவர் விற்பனையாளராக பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியில் தும்மோதர கால்வாயை கடக்க முயன்ற கெப் வண்டியொன்று திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தினால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கொஸ்கம – எஸ்வத்த மாணக்கட வீதியில் ரபுகேவத்த பக்க வீதியில் தும்மோதர கால்வாய் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தும்மோதர கால்வாயை கடக்க சென்ற கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட 04 பேர் பயணித்துள்ளனர். கேப் சாரதியும் அதன் உரிமையாளரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடைய பலல்கொடுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் விளம்பரம் செய்வதாக கூறி,
வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுக்கொண்டு,
குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்து, 7 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (05) தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர். சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறை இன்று (06) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை காரணமாக, தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால், கடந்த சில மாதங்களாக திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இம்மாதம் தொடர்பான திகதிகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால்,
இன்று முதல் இணையத்தில் திகதிகளை முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து திகதிகளை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் திணைக்களத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற முடியாது என குடிவரவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று மக்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவன் வெண்கல பதக்கத்தை வென்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 31-10-2024 ஆம் திகதி முதல் 05-11-2024 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி இடம்பெற்றிருந்தது.
இந்த போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவன் சத்தியராசா யதுர்சன் 20 வயது பிரிவினருக்கான 60.64 Kg எடை பிரிவில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, பயிற்றுவிப்பாளர் குருபரன் நிதீஸ் பயிற்றுவிப்பில் பதக்கம் பெற்ற மாணவனை பாடசாலை, சமூகத்தினர் பாராட்டுவதோடு, இவ் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் தேசிய பதக்கத்தை கொண்டு வந்த மாணவர் என்ற பெருமையையும் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளரின் இரண்டு வாகனங்கள் மூன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (06.11.2024) தெரிவித்தனர்.
வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.
குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியா பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது படம் பொறித்த வாகனங்களே தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று (06.11.2024) விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா பெரியபுளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த, சிறிசுப்பிரமணியம் கிரிசா, கந்தப்பு கஜேந்திரன், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காகைசிங்கம் காந்தரூபன் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் B அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த எதிரிகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக,
எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் எம்பிக்க தவறியமையால் சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.
குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் வழக்கு தொடுனரினால் அதாவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் எம்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதுடன்,
அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால்
தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் பிரிவு 134 இன் சான்று கட்டளை சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு எதிரிகளான குறித்த மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகி உள்ளார். இதனை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பொக்ஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நேற்று நடைபெற்றன. இந்நிலையில் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டனர்.
அமெரிக்காவிலுள்ள மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 277 பேரின் ஆதரவை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 பேரின் ஆதவை பெற்றுள்ளார். அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செனட் சபையை கைப்பற்றிய குடியரசு கட்சி
அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
இன்னும் முடிவுகள் வெளிவராத மாநிலங்களின் நிலவரங்கள் பாரியளவான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றிலும் பல மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதற்கமைய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் 277 இடங்களையும் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 226 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவரில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 16 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படி எல்லாம் கூட இறப்பு நேரிடுமா என்கிற அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.
சூயிங் கம் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழை இழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 4 வயது குழந்தை பபிள்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பபிள்கம் குழந்தையின் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நவம்பர் 3ம் மாலை பர்ரா காவல் நிலையப் பகுதியின் ஒரு பகுதியான பர்ரா ஜரௌலி கட்டம்-1ல் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திகளின்படி, 4 வயது குழந்தை ஒன்று, ஃப்ரூடோலா மிட்டாய் என்றழைக்கப்படுகின்ற கண் போன்ற வடிவிலான பபிள்கம் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அது எதிர்பாராமல் குழந்தையின் தொண்டையில் பபிள்கம் சிக்கி உள்ளது.
தனது வீட்டின் அருகே இருந்த உள்ளூர் கடையில் இருந்து இந்த மிட்டாயை குழந்தை வாங்கியதாக தெரிகிறது.
குழந்தையின் தாயார் சோனாலிகா தன் மகன் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்ததை அறிந்து உடனடியாக சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்து முழுக்க கூறியிருக்கிறார்.
இதனால் சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்த பபிள்கம், தொண்டையில் ஆழமாக நழுவி மேலும் சிக்கலாக்கியது. இதனால் அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
குழந்தையின் உறவினர்கள் உடனடியாக வீட்டிருகே இருந்த உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்களால் குழந்தையின் தொண்டையில் இருந்து பபிள்கம்மை எடுக்க முடியவில்லை.
தீபாவளிக்கு பெரும்பாலான உள்ளூர் மருத்துவமனைகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மருத்துவர்களை அவசர காலத்திற்கு கண்டுபிடிக்க முடியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர்கள் குழந்தையை அடுத்தடுத்து நான்கு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களால் குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை. குழந்தையின் தொண்டையில் மிட்டாய் சிக்கியதில் மூச்சுத் திணறடித்துள்ளது.
சுமார் 3 மணி நேரம் போராடிய பின்னர் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டோஃபி வகையான சாக்லேட் உற்பத்தியாளர் குழந்தையின் மரணத்திற்கு பதில் கூற வேண்டும் என உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, சூயிங் கம் மற்றும் ஜெல்லி வகையிலான மிட்டாய்கள் ஆகியவைகளை 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தருவது மிகவும் ஆபத்தானவை என்கிறார்கள்.
இது குறித்து ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் ஹரேந்திரா கூறுகையில், “நாம் எதையும் உட்கொள்ளும் போது, அது ஒரு குழாய் வழியாகவும், உணவுக் குழாய் எனப்படும் உணவு செயல்முறையிலும் செல்கிறது. சில சமயங்களில் மூச்சுக்குழாய் அதே குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.
சூயிங் கம் மூச்சுக்குழாயில் தங்கிவிட்டால், சுவாசம் தடைப்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். கடினமான தரமான சூயிங்கம் போன்றவைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறிய மருத்துவர், இதனை உட்கொண்டால் குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமம் உட்பட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றார்.
குழந்தை மருத்துவ துறையின் தலைவர் பேராசிரியர் ஏ.கே.ஆர்யா கூறுகையில், சிறு குழந்தைகள் தொண்டையில் சிக்கக்கூடிய உணவுகள் உட்கொள்வதை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக பட்டாணி, வேர்க்கடலை, நாணயங்கள், சூயிங் கம் ஆகியவை அடங்கும். இதில் பலரும் சில்லறை நாணயங்களை அஜாக்கிரதையாக குழந்தைகளிடத்தில் தருகிறார்கள்.
சிறு குழந்தைகள் இந்த உணவுகளை மெல்லாமல் அடிக்கடி சாப்பிடுவார்கள். இதன் விளைவாக அவர்களின் தொண்டை மூச்சுத் திணறலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கக் கூடாது.
சூயிங் கம் போன்றவை தொண்டையில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
சூயிங் கம் போன்றவை தொண்டையில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்று நிபுணர்கள் சொல்கிறார்கள் என்பதை கவனியுங்க.
உங்கள் குழந்தை தனது வாயில் எதையாவது வைக்கும் போது மூச்சுத் திணறினால் உடனடியாக விரைவாக வாயைத் திறந்து குழந்தை சுவாசிப்பதை உறுதி செய்யுங்க.
தொண்டையில் உள்ள பொருள் உடனடியாகத் தெரிந்தால் வாயில் உள்ள விரலால் அதை அகற்ற முயற்சிக்கவும்.
குழந்தையின் தொண்டையில் சிக்கியிருப்பதை உங்களால் பார்க்க முடியாவிட்டால், உங்கள் விரலை வைத்து எடுக்க முயற்சிக்காதீர்கள்.
அப்படி செய்வது பொருளை மிகவும் சிக்கலாகி உயிருக்கே ஆபத்தாக கொண்டு சென்று விடும்” என்கிறார்கள். பெற்றோர்களே குழந்தை விஷயத்தில் ரொம்பவே ஜாக்கிரதையாக இருங்க.
தமிழக மாவட்டம் கோவையில் வைரஸ் காய்ச்சலால் மகன் உயிரிழந்த துயரத்தில், தம்பதியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் காய்ச்சல்
கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி, வக்சலா. இவர்களது 7 வயது மகன் விஷ்ணு. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு வைரஸ் காய்ச்சலுக்கு விஷ்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் பழனிசாமி – வக்சலா தம்பதி மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனையடுத்து மகனை இழந்த துக்கத்தில் இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் பொலிஸார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் உயிரிழந்த துக்கத்தில் பெற்றோர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் பயோ மெட்ரிக் (Biometric) அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள் உள்ளடக்கப்படுமென்று ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்து யுவதி ரணை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த, ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த 23 வயதான நுவங்கி இந்துனில் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
இன்றைய (05) தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 802,163 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) சற்று குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,736.23 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லொறிக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இந்த விபத்து (05) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் லொறியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று , மருத்துவப் பணிகள் நிறைவடைந்ததும் கர்ப்பிணிப் பெண் லொறியில் அமர்ந்திருந்துள்ளார். இதன்போது சாரதியின்றி லொறி முன்னோக்கி சென்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.