திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ்த்தில் மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இன்று காலை கொலையுண்டவர் கொழும்பில் இருந்து வீடு திரும்பி அறைக்குள் சென்றபோதே கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையை 39 நாட்களாக நடைப் பயணம் மூலம் சுற்றி வந்து பாடசாலை மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தரம் 06இல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் என்னும் மாணவனே தனது பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளான்.
11 வயதான குறித்த மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த 25-09-2024 ஆம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறான நிலையில், இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்றையதினம் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிய முறையில் பராமரிக்கப்படாத, நெரிசலான பேருந்து ஒன்று திங்களன்று வட இந்தியாவில் வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்களின் குழுக்கள் தளத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
குறிப்பாக மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் ஏழு பயணிகள் சிகிச்சைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம், உத்தர பிரதேச மாநிலத்தில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றின் மீது மோதியதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், மே மாதம், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.
மொனராகல, வெல்லவாய பிரதேசத்தில் மகன் தனது தாயின் கையின் மூன்று விரல்களை மன்னா கத்தியால் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாயின் விரல்களை வெட்டிய மகன் தனது சகோதரியையும் கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் விரல்கள் துண்டிக்கப்பட்ட தாயையும், காயமடைந்த சகோதரியையும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மகன் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும் அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் கடைகளுக்கு முன்னால் ஏராளமான பெண் யாசகர்கள் உறங்கும் நிலையில், அவர்களில் பலர் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது பிள்ளைகளைப் பயன்படுத்தியும் துன்புறுத்தியும் யாசகம் எடுத்துவிட்டு அந்தப் பணத்தை அடாத்தாகப் பறித்து மதுபானத்தைக் கொள்வனவு செய்து பருகுகின்றனர் என்றும் பொலிஸாரிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த யாசகர்களைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் மாநகர சபை முறையான நடவடிக்கைகள் எதையும் எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அடிவயிறு மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட மரண விசாரணையில் யுவதியின் மரணம் குறித்து அவரது அத்தை மஹதுர தில ஜயசேகர (62) பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
யுவதியின் தாய் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தார். தகப்பனில்லாத இரண்டு குழந்தைகளையும் என் சொந்தப் பிள்ளைகள் போல தத்தெடுத்தேன்.
ஆடையகமொன்றில் பணி புரிந்து வந்த நிலையில், தினமும் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து செல்வார். மினுவாங்கொடை சந்தி வரை தொடருந்து பாதையில் நடந்து செல்வார்.
கடந்த (01) திகதி காலை எட்டு மணியளவில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். இதன்போது பாதையை கடக்க முயற்சித்த போது தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்ததாக தொடருந்து சாரதி தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் காயங்கள் இருந்தன. அவள் மிகவும் வேதனைப்பட்டு என்னிடம் பேசினாள். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இயந்திரங்கள் சத்தமாக ஒலித்தன. இன்று காலை குழந்தைக்கு போதி பூஜை செய்ய கோவிலுக்கு சென்றபோது, அவள் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்த சீன, இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாள பிரஜைகள் அடங்கிய குழு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது.
மேலும், இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய இலங்கையிலுள்ள பல வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிநாட்டுப் பிரஜைகள், ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் மோசடிகளில் ஈடுபட்ட பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும்,
மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈச்சங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (29). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.
தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தவரை உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸார், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பெண் பலியானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துள்ளவுள்ளார்.
இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச் சேர்ந்த செல்வி கஜிஷனா- தர்ஷன் , தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதேவேளை வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லபட்ட நிலையில் அதனை குறித்த சிறுமியே பெற்றுள்ளார்.
இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக கஜிஷனா- தர்ஷன் பங்குபற்றவுள்ளார்.
அத்துடன் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக கஜிஷனா- தர்ஷன் விளையாடவுள்ளார்.
இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமியாக இவர் திகழ்கிறார். அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார்.
மேலும் இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடங்களையும் கஜிஷனா- தர்ஷன் பெற்றவர் ஆவார்.
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியிலும் கஜிஷனா- தர்ஷன் வெற்றி பெற வேண்டுமென பல்லரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டையைச் சேர்ந்த பிரதீபன் ரத்னீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை தெல்தோட்டையில் தங்க வியாபாரம் செய்து வருகிறார்.
அவரது மனைவி மூன்று குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக மாலை ஐந்து மணியளவில் இந்த வணிக வளாகத்திற்கு வந்தார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த தங்க பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்திய கொப்பர் அமிலம் சிறு குழந்தை குடித்த நிலையில் குழந்தை தரையில் விழுந்துள்ளது.
பதறியடித்த பெற்றோர் குழந்தையை தெல்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் , வைத்தியர்கள் குழந்தையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்த போதிலும், சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.பி.ஜெயசூரியவினால் வெளிப்படையான தீர்ப்பு நவம்பர் 2ஆம் திகதியன்று வழங்கப்பட்டு சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு ‘பி’ பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இந்த தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும்,
டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகளும் மொத்தமாக 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பெறப்படும் என தெரிவித்துள்ளது.
அத்துடன், மற்றொரு தொகுதி கடவுச்சீட்டு வாங்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, டிசம்பர் தொடக்கத்தில் இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு,
விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவுக்கேற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறை மாற்றியமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது என தோழர் பாலன் முகநூலில் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் நடந்த போட்டி நிகழ்ச்சியில் ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் பங்குபற்றியிருந்தான். சில வாரங்கள் கடந்த பின்னர் அவ் இளைஞன் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பது குறித்த தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
உடனே அந்த அகதி இளைஞன் எவ்வித காரணமும் கூறாமல் நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஏற்கனவே தன் படம் ஒன்றில் ஈழத் தமிழ் பெண் ஒருவருக்கு நடிக்க நடிகர் விஜய் வாய்ப்பு கொடுத்தார்.
இப்போது தன் அரசியல் மாநாட்டில் தமிழ்த்தாய் பாடவும் தமது கட்சி பாடல் ஒன்றை எழுதவும் என இரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இவர் இவ்வாறு வாய்ப்பளிப்பது இனி மற்றவர்களும் ஈழத் தமிழருக்கு வாய்ப்பளிக்க வழி செய்கிறது என முகநூலில் தோழர் பாலன் என்பவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
பதுளை – துன்ஹிந்தவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 41 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (02-11-2024) இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்களில் 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குறித்த விபத்தில் 23 வயதுடைய 2 பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
நிவிதிகல, தொலபுகமுவ, பஹல கந்தவில் வசித்த இசுரி உமயங்கனா மற்றும் குருநாகல், ஹுனுபொலகெதர, அம்பகொட்டே பகுதியில் வசித்து வந்த பூபதி ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான இசுரி உமயங்கனா, நேற்று (01) தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதிகாலையில் எழுந்த நிலையில், 05.03 மணிக்கு வட்ஸ்அப்பில் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இவ்வாறான போலி தகவல் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் பின்னணியில் இந்த 5000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உருவப்படமும் அவரது கையொப்பமும் இடப்பட்ட புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாளானது போலியானது எனவும் இது எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) செயற்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன்(Arjun Mahendran) கடமையாற்றி இருந்தார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்தில் இதுவரையில் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக 10 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சந்தையில் தற்போது போதியளவு வெங்காயம் கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.