பலத்த காற்று வீசக்கூடும் : காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

பதுளை பேருந்து விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து பதுளை, துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளானதற்கு சாரதியே காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக சாரதி மாணவர்களிடம் கூறியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

இருப்பினும், பேருந்து சாரதி தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் பிரேக் செயலிழந்ததா அல்லது அதிவேகமாக வாகனம் செலுத்தியதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 மாணவர்கள் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு இருந்த ஆபத்து தற்போது மறைந்துவிட்டதாகவும், நேற்றைய நிலவரப்படி அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில் சிலர் நேற்று பொது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் மரணத்திற்கு தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த பாதிப்பே காரணம் என தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் (03.11) மகா சங்கரத்தினத்தின் சமய அனுஷ்டானங்களின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கும் மத்தியில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்!!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் 70,396 பயிற்றப்பட்ட பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும். இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 70,396 பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் வௌிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 62,177 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 8,219 பெண் தொழிலாளர்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தமிழ்க்கடை ஒன்றில் 16 கிலோ தங்கம் திருட்டு : திடுக்கிடும் சிசிரிவி காட்சிகள்!!

கனடாவில் (Canada) தமிழ் பேசும் நபர்களால் இயக்கப்பட்டு வரும் வர்த்தக நிலையம் ஒன்றில் 16 கிலோ தங்கம், இனம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி அந்த வர்த்தக நிலையத்தில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இதற்கமைய, சம்பவத்தின் போது, 6 நபர்கள் முகமூடி அணிந்த நிலையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து அங்கிருந்து தங்கத்திலான பொருட்களை எடுத்து செல்கின்றமை குறித்த சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

மரத்தால் வந்த பிரச்னை : அண்ணன் குடும்பத்தையே கொலை செய்த தம்பி!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி (24).

இந்த நிலையில், முருகன் வீட்டின் அருகில் உள்ள மரத்தை வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, அண்ணன் மாரிமுத்து மரத்தை வெட்டியுள்ளார்.

இதனால் மாரிமுத்துவுக்கும், தம்பி முருகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், முருகனுக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், முருகன் வீட்டுக்குச் செல்லும் பாதையில் மாரிமுத்து, வழியை மறித்து வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் மாரிமுத்துவுக்கும், முருகனுக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாரிமுத்து மற்றும் ருக்மணியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கொலை செய்து தப்பி ஓடிய முருகன் பவானி பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், சிவரஞ்சனியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான செவிப்புலனற்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ((01.11) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

தென்கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக காணாமல் போனவர்களை மீட்பதற்காக தற்போது பாதுகாப்புப் படையினருக்கு மேலதிகமாக 500 வீரர்களும், பல ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்று பிற்பகல் வரை பாதிக்கப்பட்ட 4,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்கள் கடந்துள்ள போதும், குறித்த பிரதேசம் இயல்புநிலைக்கு திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பேரழிவை வலேன்சியா மக்கள் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மக்களை பெருமழை வேறொரு விதமாக பாதிப்படைய வைத்துள்ளது.

இதற்கிடையில் அந்நாட்டின் வலேன்சியா, ஹூல்வா, காஸ்டெலான், மலோர்கா, கேட்டலோனியாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் அரைஇறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி!!

கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரின்(Hong Kong Sixes International Cricket Tournament) காலிறுதிச் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நேபாளம் அணியுடன் இன்று(02.11.2024) இடம்பெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரில் லஹிரு மதுஷங்க தலைமையிலான 7 வீரர்கள் கொண்ட இலங்கை அணி விளையாடி வருகிறது.

ஏ பிரிவில் தென்னாப்பிரிக்காவும், சி பிரிவில் பாகிஸ்தானும் முன்னிலை வகிக்கிப்பதோடு, அரை இறுதிப்போட்டிக்கு குறித்த இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

22 வயது யுவதிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த காதலன் கைது!!

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பெற்ற காதலனை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதினொரு மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தற்செயலாக சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் உறவுகொண்ட வேவெல்லத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

காதலரின் வேண்டுகோளுக்கு இணங்க படங்களை எடுத்து காதலனின் கைபேசிக்கு அனுப்பியதாகவும், காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும் பொலிஸில் ஒப்புக்கொண்டுள்ளார்.

நுவரெலியாவினை சேர்ந்த காதலன் இரத்தினபுரிக்கு வந்து காதலியை பல தடவைகள் சந்தித்ததாகவும், திருமணத்தின் பின்னர் நுவரெலியாவில் வீடு ஒன்றை நிர்மாணிக்க விரும்புவதாகவும், அதற்கு 100,000 ரூபா தேவைப்படுவதாகவும் யுவதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி ஒரு இலட்சம் ரூபாவை காதலனுக்கு வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் பணம் கேட்டு யுவதியின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், 20 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறியொன்று வானுடன் மோதி விபத்து : ஒருவர் பலி – 20 பேர் வைத்தியசாலையில்!!

நுவரெலியா – நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01.11) மாலை 06.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று ஹட்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வழியாக நுவரெலியா நோக்கி சென்ற வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த மழை பெய்யக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேற்கு, தென் வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல்!!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இரு மாணவிகளுக்கும் விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் திடீர் மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா நேற்று (1) இரவு பதுளை போதனா வைத்தியசாலைக்கு சென்று சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை பதுளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.எம்.கே.பி. விஜேதுங்க மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, இரு மாணவிகளின் மரணம் வாகன விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் என வைத்திய அறிக்கைகள் முடிவு செய்துள்ளன.

நேற்று (01.11) காலை பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருந்தது.

இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் நிவிதிகல, தோலம்புகமுவ பஹல்கந்தவில் வசித்து வந்த எம்.ஜி.ஐ. உமயங்கனி (24) மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த எம்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகள் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த இரு மாணவிகளின் இறுதிக் கிரியைகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியான உமயங்கனியின் தாயார் மல்லிகா நிமல் சாந்தி மகளின் மரணம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கூறியதாவது:

“நேற்று எனது கணவரின் பிறந்தநாள். மகள் காலையில் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அவரது நண்பன் ஊடாக தந்தைக்கு கேக் அனுப்பியிருந்தார். பிறகு எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி பேசிக்கொண்டு சென்ற போதே மகள் விபத்தில் சிக்கி இறந்து போனதை அறிந்தேன்.

“இறந்தவர் எனது மூத்த மகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி. எனக்கு மேலும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர்.

நான் சில காலம் பொலிஸ் சேவையில் இருந்தேன், பின்னர் பிள்ளைகளின் படிப்பின் காரணமாக விலகிவிட்டேன். கணவர் ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து மகள் தொலைபேசியில் அழைத்து எதிர்வரும் 31ஆம் திகதி பதுளைக்கு பயிற்சித் திட்டமொன்றுக்கு செல்லவுள்ளோம் என்றார்.

இதன்பின்னர் அங்கு சென்று அனைவரும் நேற்று இரவு (31) மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் என தெரிவித்தார். என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை… கனவு போல இருக்கிறது. காலையில் பேசிய மகள் சில மணி நேரம் கழித்து விபத்தில் இறந்தது தெரியவந்தது என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த விஞ்ஞான பீட விரிவுரையாளரை கொத்தலாவல விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு நேற்று மாலை (01.11) மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தோல்வியடைந்துள்ளது.

காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் பதுளை கால்பந்து மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டதால், அவரை மீண்டும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்று தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சீவ விஜேரத்ன, பொலிஸ் பரிசோதகர் ஜயதுங்க, பிரதி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் ஜினதாச, 54124 பீரிஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அநுரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : புதிய அமைச்சர்களுக்கு ஏமாற்றம்!!

பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் 25இற்கும் குறைவான அமைச்சர்களே செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு கொழும்பில் அரசாங்க வீடுகள் வழங்கப்பட்டு வருவது வழமை.

எனினும் அடுத்து வரும் அரசாங்கத்தில் அந்த சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, அமைச்சர்களை அரச ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் பெருமளவில் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, நாட்டின் அபிவிருத்திக்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீபாவளி தினத்தில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வந்தாறுமூலையில் பாவனையற்ற கிணற்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தீபாவளி தினமான நேற்று முன்தினம் (31.10) மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாவனையற்ற கிணற்றை துருப்பிடித்த தகரத்தினால் மூடியும், அதில் பலமற்ற ஏணியொன்று சாத்தி வைக்கப்பட்டும் இருந்துள்ளது. இந்நிலையில், சிறுவன் அதில் ஏறி தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின்போது பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்தார்.

சிறுவனின் உடல் நேற்று (01) உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் சாதனைப் பயணம்!!

கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுவன் நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த நிலையில் இன்று பிற்பகல் மருதங்கேணி பகுதியை வந்தடைந்துள்ளனர்.

சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

மேலும் நாளை மறுதினம் கிளிநொச்சி நகரில் 11 மணியளவில் பயணம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஸ்யா : தலைசுற்ற வைக்கும் பெரும் தொகை!!

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது.

இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது.

இந்த அபராத தொகையானது முழு உலகப் பொருளாதாரத்தையும் பல மடங்கு விஞ்சும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2 என்ற எண்ணிற்குப் பிறகு 34 இலக்க பூஜ்ஜியத்தை கொண்டுள்ளது. இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.

யூடியூப்பில் ரஷிய அரசின் ஆதரவு ஊடகங்களில் இருந்து சேனல்களைத் தடுப்பதன் மூலம் கூகுள் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

ஒன்பது மாத காலத்திற்குள் இந்த உத்தரவிற்கு இணங்க மறுத்தால் அபராத தொகை ஒவ்வொரு நாளுக்கும் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது.

RT மற்றும் ஸ்புட்னிக் உட்பட பல ரஷிய அரசால் இயக்கப்படும் சேனல்களுக்கு உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.