சமையலில் கூடுதலாக 2 தக்காளி சேர்த்த கணவன்.. வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், அவரது மனைவி ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். தக்காளியின் அதிக விலைகள் நுகர்வோரை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளை பெரிதும் நம்பியிருக்கும் பிற வணிகங்களுக்கும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

சமையலில் தக்காளியை பயன்படுத்தியதால் மனைவி ஓட்டம்
மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் சந்தீப் பர்மன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ஆர்த்தி பர்மன். சந்தீப் பர்மன் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்து ஆர்த்தி பர்மன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உணவகம் வைத்திருக்கும் சந்தீப் பர்மன், தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் கண்டுபிடித்து தருமாறு காவல்துறையை அணுகினார். அப்போது அவர், “என் மனைவி ஆர்த்தி பர்மன் எனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பேருந்தில் ஏறினார்.

நான் அவர்களை மூன்று நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். மனைவியின் புகைப்படத்தையும் காவல்துறையிடம் கொடுத்தேன். ஆனால் அவர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், நான் என் மனைவியிடம் கேட்காமல் உணவில் தக்காளி சேர்த்ததால் மனைவி வருத்தமடைந்ததார். அது குறித்து வாக்குவாதம் செய்தேன். நான் தக்காளி சேர்ப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை” என்று கூறினார். பின்பு சந்தீப் பர்மன், தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஷாஹ்டோலின் அலுவலக அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் “ஆர்த்தி தனது கணவருடன் வாக்குவாதத்திற்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியேறி, உமாரியாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். கணவன், மனைவி இருவரையும் பொலிசார் பேச வைத்துள்ளனர். அவர் விரைவில் திரும்புவார்” என்று கூறினார்.

வவுனியாவில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

உலகத்தின் முதலாவது தமிழ் பேராசிரியரும், முத்தமிழ் வித்தகர் என புகழ்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களின் 76 வது நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரின் சிலையடியில் வவுனிய மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் மாலை அணிவித்ததுடன் நகரசபையின் செயலாளர் உட்பட்ட பலரும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

வவுனியா மண்ணின் சாதனை மாணவி கோசியா திருமேனனுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு!!

கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்ட மாணவி கோசியா திருமேனனுக்கு அரசாங்க அதிபர் தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய கனிஷ்ட பொதுநலவாய போட்டித் தொடரில் பளு தூக்கும் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.

வவுனியா மாவடத்தினை சேர்ந்த 14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில் 92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

குறித்த மாணவியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வரவழைத்து தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தமையுடன் மாவட்ட செயலக ஏனைய அதிகாரிகளும் தமது வாழ்த்துக்களை மாணவிக்கு தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது!!

வவுனியா இரு வேவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் கரோயினுடன் இளைஞர் ஒருவரையும் வேப்பங்குளம் பகுதியில் 5கிராம் 100மில்லிகிராம் கரோயினுடன் இளைஞர் ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன் கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

வவுனியாவுக்கு பெருமை சேர்ந்து பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு!!

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம் மாணவியின் முயற்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவரைப் பாராட்டும் விதமாக பளுதூக்கல் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடைப் பிரிவில் 16 வயதான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியிருந்தார்.

போட்டிகள் யூலை மாதம் 12 தொடக்கம் 16 ஆம் திகதிவரை டெல்லியில் நடைபெற்றிருந்தது. கடந்த 12ம் திகதி இடம்பெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தினை பிடித்து வெண்கலபதக்கத்தினை குறித்த மாணவி பெற்றுள்ளார்.

பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பத்தினியார் மகிழங்குள கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரில் தீப்பற்றி எரிந்த உணவகம்!!

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்று இன்று (19.07.2023) இரவு 8.25 மணியளவில் திடீரென தீப்பற்றியமையினையடுத்து பலத்த போராட்டத்தின் மத்தியின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமானது இரவு திடீரேன தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இத் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதிலும் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இத் தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 170 000 ரூபாவை அடைந்தது தங்கத்தின் விலை : இரண்டு இலட்சத்தை தொடுமா?

தங்கம்..

செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது 160,000 ரூபாவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை தொட்டுள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழில்..

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். கொக்குவில் தெற்கு தாவடி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் (வயது 25) என்ற இளைஞரே இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டதாபவும், அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் தாய் : தற்கொலையா? கொலையா? பொலிஸார் குழப்பம்!!

யக்கலயில்..

கொழும்பு – கண்டி வீதி யக்கல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு (16) யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்தே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சம்பவ இரவு இருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர்களின் ஏழு வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இளம் தாய் உயிர்ழந்தமை தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

பொட்டாசியம் அருந்தி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கடன் பிரச்சினை காரணமாக அவர் இவ்வாறானதொரு தவறான முடிவு எடுத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவருடன் முறுகல் நிலை : இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

யக்கலயில்..

யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது கணவர் மற்றும் 7 வயது மகளுடன் வாடகை அடிப்படையில் அங்கு வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் தொடர்ந்து தகராறுகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பெம்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாத குழந்தைபலி : பிரேத பரிசோதனையில் வழங்கப்பட்டுள்ள திறந்த தீர்ப்பு!!

பண்டுவஸ்நுவரவில்..

தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் உயிரிழந்த பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த குழந்தையின் பிரேத பரிசோதனையில் மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற நான்கு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அதன்படி, குழந்தையின் உடற்கூறுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார திணைக்களத்தினால் 4 மாதங்களில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி கடந்த சனிக்கிழமை ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மறுநாள் அதிகாலை ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றுமுன் தினம் காலை உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் குழந்தையின் உடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன இது தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் : சடலத்தை அடையாளம் காண வந்த தோழி!!

இலங்கையில்..

இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

டென்மார் பெண்ணின் உடல் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடல் கடந்த 14ஆம் திகதி வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பெண் கண்டி ஹோட்டலில் இருந்து மலையேறுவதற்காக சென்ற போது, ​​கடந்த 10ஆம் திகதி இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இப்பிரதேசத்தில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உடல் விரைவாக சிதைவடையவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும். அவரது மரணம் குறித்து, இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையேறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படும் டென்மார்க் பெண்ணின் சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, 20 டொலர் தாள்கள் ஐந்தும், இரண்டு 05 டொலர் தாள்கள் மற்றும் 62000 இலங்கை நாணயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கையடக்க தொலைபேசி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம்பெண்ணிற்கு நேர்ந்தசோகம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் (16-07-2023) வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நேற்றையதினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் அவர் இன்றையதினம் (17-07-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர் அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

குடும்ப வறுமையை போக்க அரபு நாடு சென்ற இலங்கை தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

லிந்துலையில்..

லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற இளம் குடும்ப பெண், தன் குடும்ப வறுமையை போக்குவதற்காக அரபு நாடு சென்ற நிலையில் அங்கு கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த , கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றார்.அந் நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிய தாய் அது தொடர்பான தகவல்களை தனது கணவனுக்கு தொலைபேசி ஊடாக வழங்கியுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மனைவி தன்னை கடுமையாக தாக்கி குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி உள்ளதாகவும் தான் பெரும் சிரமப்படுவதாகவும் கணவனிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

துன்புறுத்தல்களை தன்னால் தாங்க முடியவில்லை என்றும், உடனடியாக இலங்கைக்கு எடுக்குமாறு சிவரஞ்சனி தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்தார்.

வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் சம்பவம் தொடர்பாக பல முறை கதைத்தபோதிலும் உபதரகர் அச்சுறுத்தல் கொடுத்ததாக கூறுகின்றார்.

எனினும் சிவரஞ்சனி சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் வந்துள்ளார். பணியகத்தில் இருந்த அதிகாரி சிவரஞ்சனிக்கு உதவி வழங்கியதோடு கழுத்தில் இருந்த குண்டு ஊசி ஒன்றினை அகற்றிய பின்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 14 ஆம் திகதி அன்று இலங்கைக்கு காலை 6 மணிக்கு வந்த நிலையில், உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குன்டூசிகள் இருப்பது தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிவரஞ்சனியின் உடம்பில் இருந்து இதுவரை 4 குண்டூசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் சிவரஞ்சனியின் கணவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தம் வாழ்வை வளப்படுத்த குடும்பத்தை பிரிந்து அரபு நாட்டுக்கு சென்ற சிவரஞ்சனியின் நிலை கண்களில் கண்னீரை வரவழைக்கின்றது.

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு!!

வவுனியா தமிழர் கலாசார பண்பாட்டுடன் தொடர்புடைய ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா நகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் இ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.’

இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாடலை வவுனியா பிரமாண்டு வித்தியாலய மாணவர்கள் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றதுடன், ஆடிக்கூழும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் நகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.