வவுனியா – ஈரற்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!!

வவுனியா, ஈரற்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (21.07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!!

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நள்ளிரவு (20.07) இரவு இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவத்தில வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.

பேராதனை வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி : தடுப்பூசி குறித்து தொடரும் சிக்கல்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“செஃப்டர் எக்ஸோன் (Ceftriaxone) மருந்து பயன்பாட்டினால் மரணம் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றே மீண்டும் பதிவாகியுள்ளது.மேலும், சில மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் தற்போது காணப்படும் நிலை மிகவும் அசாதாரணமானது.

நாட்டில் பல பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்ற காரணத்தினால் ஒவ்வாமை என்ற விடயத்திற்கு அப்பால் சென்று இந்த மருந்தில் சிக்கல் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஆகவே இந்த சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக சந்தேகங்களை மாத்திரம் எழுப்பாமல் உரிய மருந்துகளை உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காட்டில் சடமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை : நடந்தது என்ன?

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன இளம் தாயும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீடகப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருவரும் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையான தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.கணவர் வேலைக்குச் சென்ற நிலையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண்னின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை , காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் அவர்மீது முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் மனதை உருக்கும் சம்பவம் : கண்ணீருடன் பட்டத்தை வாங்கிய தாய்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராவார்.

எனினும் அவர் உயிருடன் இல்லாததால் இன்று (20.07.2023) இடம்பெற்ற 37ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில், அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ள நிலையில், குறித்த பட்டத்தை தாய் கண்ணீருடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

வவுனியாவில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம்!!

வவுனியா பறனட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வந்த பாரவூர்த்தி பறன்நட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (19.07) மாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது.

இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப் பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.

பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.

மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் வருகை தந்து குறித்த புகையிரத்தினை இழுந்துச் சென்றிருந்தது.

இளம் பெண்ணின் விபரீத முடிவு : மகளின் வாக்குமூலத்தினால் சிக்கிய தந்தை!!

யக்கலயில்..

யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இளம் தாயின் மரணம் தொடர்பில் 7 வயது சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யக்கல பகுதியில் வீட்டுத்தொகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான சதுரிகா மதுஷானி இவ்வாறு உயிரிழந்திருந்தார்.இவ்வாறு உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி குடும்ப தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சம்பவ தினத்தன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏழு வயது மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

யாழில்..

யாழ்ப்பாண மாவட்டம் பாசையூர் பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், பாசையூரைச் சேர்ந்த 19 வயதுடைய லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.இதனால் கோபமடைந்த சானுயா தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் உயிரிழந்த மாணவியின், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த மாணவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.மேலும், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8 பாடங்களில் விசேட சித்தியினையும் 1 பாடத்தில் திறமைச் சித்தியினையும் பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

ஜப்பானில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த சகோதரிகள்!!

ஜப்பானில்..

ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் மரணம் தொடர்பில் அவரது சகோதரிகள் ஜப்பான் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.

2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.

2021 ஆகஸ்ட் மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமாவினால் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம் : அறையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட, உரதுதாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் காணாமல்போயுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்றுமுன்தினம் (18) முதல் காணாமல்போயுள்ளதாக கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அவர் குறித்து சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் தாய் காணாமல்போனதையடுத்து, சந்தேகநபர் தனது மனைவியுடன் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக வந்த முச்சக்கர வண்டியை மோப்ப நாய் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இளம் தாய் மற்றும் 11 மாதகுழந்தை காணாமல்போனமை தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணிப்பதற்கு முன்னர் நான்கு பேரை வாழ வைத்த பெண் : இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

உடுகமவில்..

உடுகம வைத்தியசாலையில் உயிரிழப்பதற்கு முன்னர் நான்கு பேரை வாழ வைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் நான்கு பேருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெறப்பட்டதாக உடுகம வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுசந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உடுகம வைத்தியசாலை வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரிடமிருந்து உறுப்புகள் சேகரிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.2/169, நயதொல, அலபலதெனியவில் வசிக்கும் எல்.பிரேமாவதி என்பவர் இந்த மாபெரும் தொண்டுக்காக தனது உடல் உறுப்புகளை வழங்கியுள்ளார்.

இதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் உறுப்புகள் பிக்கு ஒருவர் உட்பட மூவருக்கு மாற்று சிகிச்சைக்காக தேசிய உறுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

மூளைச்சாவு அடைந்த இந்த நோயாளி உறுப்புகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.பிரேமாவதி சுகயீனம் காரணமாக மூளை நரம்பு வெடித்து இரத்தம் கசிந்ததால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மூளைச்சாவுடைந்துள்ளமையினால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.இந்த மிகப்பெரிய தியாகத்தை செய்த குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது!!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக,

பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

தேவகோட்டையில்..

தேவகோட்டையில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் செவிலியர் மனைவியை வெட்டிக் படுகொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி சூர்யா (30).

இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. சூரியா தேவக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த நான்கு வருடங்களாக பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தம்பதியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை விட்டு சூரியா பிரிந்து வந்து தேவகோட்டை சரஸ்வதி ஸாசகசாலை தெருவில் முனியய்யா கோவிலில் அருகில் வாடகை வீட்டில் தனியாக மகளுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சூர்யாவை வழிமறித்த கணவர் பிரபாகரன் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனைவி சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து, மனைவி நடத்தையில் மீது சந்தேகம் உள்ளதால் கொலை செய்ததாக கூறி பிரபாகரன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உடனடியாக பிரபாகரனை கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“உன் உயிர் ஊஞ்சலாடுது..மரணம் நெருங்குது” இளம் பெண் கடத்தல்.. பதறவைக்கும் குரல் பதிவு!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறையில் கடத்தப்பட்டு ஒருமாதமாகியும் இளம்பெண் குறித்து எந்த தகவலும் இல்லாததால் பெண்ணின் தாயார் மகளை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்ரி வந்துள்ளார். இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது. இந்த காதலுக்கு உமா மகேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையடுத்து கடந்த 2022 டிசம்பர் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாரிமுத்துவை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான 4 மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொடர்பு கொண்ட மகேஸ்வரி தனது கணவன் சைக்கோ போல தன் மீது சந்தேகப்படுவதாகவும் அடடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனலெட்சுமி தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். மாரிமுத்துவிடம் இருந்து தனலெட்சுமியை பிரித்து அவரது தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வீட்டை விட்டா போகிறாய் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்துசென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் ஒருமாதமாகும் நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது, கணவனை பிரிந்து தாயாருடன் வசித்தபோது, உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவினை அவர் போலீஸாரிடம் வழங்கி, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.