கனடாவில் பயங்கரம் : வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோவில் வசித்து வந்த 44 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

 

கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை (20) இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்த போது குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ள நிலையில், இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டி தீர்க்க போகும் மழை : இடி மின்னல் குறித்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கண்கவரும் இலங்கையின் புதிய கடவுச்சீட்டு : நல்லூர் கோவில் முதல் வரலாற்று சிறப்புமிக்க அழகிய புகைப்படங்கள்!!

பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன.

முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கடவுச்சீட்டில் ஸ்ரீ தலதா மாளிகை, யாழ்ப்பாணம் நல்லூர் கோவில், கொழும்பு தாமரை கோபுரம், வரலாற்று சிறப்புமிக்க காலி டச்சு கோட்டை சுவர், பொலன்னறுவை வரலாற்று இடங்கள், ரிட்டிபன்ன மீன்பிடி தொழில் அரக்கு நைனிவியா பாலம், சீகிரியா, தேயிலை தோட்டம், இறப்பர் வெட்டு இடம் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.

புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு பெற்றுள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்வரும் காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவது சாதாரணமாகிவிடும் என்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி!!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(22.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 216.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 388.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 9 மாதங்களில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு!!

நாட்டில் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன.

இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி இலக்கங்களுடன் தொடர்புடையவை ஆகும்.

தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன.

இதனால், பொதுமக்கள் தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நண்பியுடன் தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

பதுளையில் தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, திங்கட்கிழமை (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்பது விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலையில், நேற்று (20) இரவு பயணித்த மோட்டார் சைக்கிளை மாணவி ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்.

பொலிஸ் வீதித்தடை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, நேற்று (20) காலையிலேயே வீட்டில் இருந்து சென்ற இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையிம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை திருமணம் செய்ய மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை : இலங்கையில் சம்பவம்!!

காதலியை திருமணம் செய்ய, பாடசாலை ஆசிரியையான தனது மனைவி மற்றும் தூங்கிக் கொண்டிருந்த, மூன்று வயதான மகன் மற்றும் ஒரு மாத மகன், ஆகியோரை கொன்ற வழக்கில் தனியார் நிறுவன நிர்வாக அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இரத்மலானை கொலுமடம சந்தி பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனமொன்றின் நிறைவேற்று அதிகாரியான விஜேமுனி மதுர மனுரங்க டி சில்வா (43) என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ரத்மலானையை வசிப்பிடமாகக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை சாட்சியங்கள் மற்றும் விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தியதன் பின்னரே கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது.

சந்தேக நபர் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளதாக நிருபித்து, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து 38 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன்ரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

கல்தெமுல்ல, இரத்மலானை, கொலுமடம சந்தியில் வசிக்கும் மனைவியான சச்சேதன சண்டமாலி பெர்னாண்டோ (29), விஜேமுனி இஷான் சானுக டி சில்வா (03), மற்றும் குஷான் சண்டாரு டி சில்வா (01 மாதங்கள்) இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு படுக்கையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாளன்று வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தலைமையில் வழக்கு நெறிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த தீர்ப்பை வழங்கினார்.

சம்பவம் நடந்த போது 31 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், படிக்கும் போது சந்தித்த நீர்கொழும்பில் உள்ள சர்வதேச பள்ளியின் ஆசிரியை ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தெரியவந்ததாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஒரு பாடப்பிரிவில், அவருடன் காதல் உறவு வைத்திருந்த சர்வதேச பாடசாலை ஆசிரியையை திருமணம் செய்யும் நோக்கில், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது மேல் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்ததாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டுக்களவில் சிக்கிய மட்டக்களப்பு தம்பதி!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கணவன்,மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்கு சென்ற நிலையில் தனது கணக்கில் இருந்து 13000 ரூபாய்க்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக குறுஞ்செய்தியொன்று வந்தது.

இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரிலிருந்த தங்க நகைகள் , ஏ.டி.எம் அட்டை என்பன திருடபட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட விசாரணையின் போது வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த தம்பதியினர் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த தங்க பாதையைத் திருடி மட்டக்களப்பு நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் 2,60 000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

அதோடு வீட்டிலிருந்த ஏ.டி.எம் அட்டையையும் திருடி அருகிலுள்ள பூட் சிட்டி ஒன்றில் 13,000 ரூபாய்க்கு பொருட்களை கொள்வனவு செய்துன்னமை தெரியவந்துள்ளது.

மேற்படி பல்பொருள் பூட் சிட்டியின் சிசிடிவி கேமராவை பரிசோதித்த போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் பணம் ஏ.டி.எம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன .

மேலும் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

 

வைத்தியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை!!

தலங்கமை பிரதேசத்தில் உள்ள வைத்தியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

வைத்தியரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும், சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகளின் மொத்த பெறுமதி 7 இலட்சம் ரூபா என்றும், கொள்ளை சம்பவம் வைத்தியரின் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்று (21) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடவுச்சீட்டு வரிசைக்கு முடிவு : மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!!

கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

அதற்கமைய கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகச்வும் அவர் கூறினார்.

இந்நிலையில், தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கொள்வனவு தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மரணம் : திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்!!

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது தோல்பூரில் உள்ள பாரி சதாரின் சுமித்பூரில் இருந்து ஆட்டோ ரிக்ஷா வந்தபோது, இரு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த சோக நிகழ்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

 

காதலிக்க மறுத்த 16 வயது மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மதியம் ஒரு இளம்பெண் எரியும் தீயுடன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கதறியபடி சாலையில் ஓடிவந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த தீக்காயத்துடன் தவித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு பத்வேல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கடப்பா மாவட்டம் பத்வேல் ராமாஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(20). தீக்காயமடைந்த பெண் தஸ்தகிரிம்மா (18), அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் விக்னேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவியை விட்டுவிட முடிவு செய்தார்.

இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட விக்னேஷ், நேற்று கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையொட்டிய ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு மாணவியிடம் ஆசையாக பேசிக்கொண்டிருந்த விக்னேஷ், தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் மாணவி மீது திடீரென தீ வைத்துள்ளார்.

தீ மாணவி அணிந்திருந்த உடைகள் மீது பரவி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி தஸ்தகிரிம்மா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை இன்று கைது செய்தனர். காதல் தகராறில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல உணவகத்தில் குடிநீரை அருந்திய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு, கொத்தடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு அருந்திய பின்னர் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த யுவதி நோய்வாய்ப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி 250 மில்லி குடிநீர் போத்தலில் இருந்த குடிநீரை அருந்தியதாகவும், அதன் போது தொண்டையில் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர் குடித்த தண்ணீரை வாந்தி எடுத்ததாகவும், தொண்டையில் எரிவது போல் உணர்ந்ததாகவும் அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ​​உணவகத்தில் சாப்பிட வந்த மருத்துவர், தண்ணீர் போத்தலை சோதனையிட்ட போது அது குடிநீர் இல்லை எனவும் அது surgical spirit என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், surgical spirit இருந்ததாக கூறப்படும் குடிநீர் போத்தல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அது பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

யூரோபார்முலா கார் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய முதல் இலங்கையர்!!

இத்தாலியில் நடைபெற்று வரும் யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தய தொடரின் 8ஆவது கட்டத்தில் இலங்கை கார் பந்தய சாம்பியன் யெவன் டேவிட் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இந்த முக்கிய F3 மோட்டார் பந்தய நிகழ்வில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.

யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தயத் தொடரின் 8ஆவது கட்டமாக இத்தாலியின் மொன்சா பாதையில் நடைபெற்ற பந்தயத்தில் யோவான் கலந்துகொண்டார்.

தனது அறிமுகப் போட்டியில் அனுபவம் வாய்ந்த போட்டியாளர்களுடன் ஓட்ட பாதையில் நுழைந்த 17 வயதான அவர், போட்டியின் தொடக்கத்திலிருந்தே அனைவரும் பாராட்டும் அளவுக்கு செயற்பட்டுள்ளார்.

யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தயத்தின் 8ஆவது கட்டத்தில் மோன்சாவில் நடந்த 16 சுற்றுகள் பந்தயத்தை 30 நிமிடங்கள் 13 வினாடிகளில் முடித்த யோவான் டேவிட் வெற்றியினை தழுவிக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றியானது, இலங்கை மோட்டார் பந்தய வரலாற்றில் ஒரு தடகள வீரர் பெற்ற அதிகூடிய வெற்றிகளில் ஒன்றாகும்.

யாழில் முச்சக்கர வண்டி மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!!

யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் – 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்று முன்தினம் (19.10.2024) தனது வீட்டுக்கு எதிரே உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு, பிற்பகல் 6.00 மணியளவில் வீதியை கடந்து தனது வீடு நோக்கி செல்ல முற்பட்டுள்ளார்.

இதன் போது பருத்தித் துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி அவரை மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் படுக்காயம் அடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்திசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள் : வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு!!

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் கணிசமான அளவுக்கு இணையவழி மோசடிகள் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த குழு அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் மாத்திரம் முன்னூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணனி அவசர தயார் நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதே போன்று கடந்த காலங்களில் முகப்புத்தக மோசடிகள் தொடர்பிலும் பெருமளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கையில் இணைய வழி மோசடிகளை அரங்கேற்றிய குற்றச்சாட்டில் இதுவரை 200க்கும் ​மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெருமளவான இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.