வவுனியா ஓமந்தையில் மாவட்ட விளையாட்டு வளாக உள்ளக அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் திறந்துவைப்பு!!

வவுனியா – ஓமந்தையில் மாவட்ட விளையாட்டு வளாக உள்ளக அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன இன்று (18.10) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, ஓமந்தை பகுதியில் மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது சான்றிதழ் உடனான உயிர் காப்பு மற்றும் நீச்சல் பயிற்சி வகுப்புகள், கடினப்பந்து பயிற்சி வகுப்புகள் என்பன இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வவுனியாவில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கு இது தனித்துவமான வாய்ப்பாக அமைய உள்ளமை சிறப்பம்சமாகும்.

இதன்போது விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பை ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்திற்கான தேர்தல் வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு கோரி மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சி தனது சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. கட்சியை சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசா என்பவரும் வேறு இருவரும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தங்கள் மனு நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள அவர்கள் தாங்கள் அவசியமான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய காட்டுக்குள் உயிரிழந்த யாழ் இளைஞன்!!

பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ்.ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகள் மற்றும் படங்கள் பெலாரஸ் புலனாய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் தனிப்பட்ட கணக்குகள் ஊடுருவல் : பொலிஸார் எச்சரிக்கை!!

இலங்கையில் அதிகரித்து வரும் ஒன்லைன் மோசடிகளுக்கு மத்தியில், ஒன்லைன் மோசடி செய்பவர்கள் தனிப்பட்ட கணக்குகளை மட்டுமே ஊருடுவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளை ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு நபர்களின் தனிப்பட்ட கணக்குகளை ஊடுவல் செய்த பல சம்பவங்களில் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்பவர்களால் மோசடி செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது.

முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவல் செய்யப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறினார். தனிநபர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளுக்கும் வங்கிகளுக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை.

சமீப நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சைபர் முகாம்களில் சோதனை நடத்தி 500 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 250 மடிக்கணினிகளை கைப்பற்றியதுடன் சீன மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோசடி செய்பவர்கள் ஹோட்டல்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். தங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வீடுகளில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்கின்றனர்.

மோசடி செய்பவர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையர்கள் நிதிச் சலுகைகள் குறித்த இத்தகைய கவர்ச்சிகரமான செய்திகளுக்கு எளிதில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடசாலை ஒன்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்!!

நுவரெலியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரான கன்னியாஸ்திரியை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 12 மாணவிகளை கன்னியாஸ்திரியான அதிபர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை மற்றும் கன்னியாஸ்திரியின் மனநலம் குறித்த மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி ஒருவர் நான்கு நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டதை அடுத்து அவர் மன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக யாழ் இளைஞரிடம் மோசடி!!

வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 80 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞரிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் வெளிநாட்டுக்கு அனுப்பாத காரணத்தால், அவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார் பணம் பெற்றுக்கொண்டவரை கைது செய்துனர்.

விசாரணைகளின் பின்னர், நேற்றைய தினம் (15.10) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை : எச்சரிக்கும் மருத்துவத் துறையினர்!!

இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், அசுத்தமான தண்ணீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை சுகாதாரத்துறையின் சிரேஸ்ட மருத்துவ ஆலோசகர் ஆனந்த விஜேவிக்ரம, இந்த எச்சரிக்கையை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

டெங்கு, எலிக்காய்ச்சல் என்ற லெப்டோஸ்பிரோசிஸ், டைபொய்ட் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நீர்வழி நோய்கள் பரவக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே அசுத்தமான தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் காய்ச்சல், தலைவலி மற்றும் தசைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று மருத்துவ நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் இந்த நோய்களின் தாக்கம், உடனடியாக இல்லையென்றாலும், வெள்ளம் வடிந்தவுடன் அடுத்த இரண்டு வாரங்களில் அவை வெளிப்பட ஆரம்பிக்கும்.

எனவே, இந்த நோய்களைத் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பான குடிநீர், முறையான சுகாதாரம் மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகள், கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பது ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்த மாணவி : குவியும் வாழ்த்துக்கள்!!

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் பயிலும் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார். குறித்த போட்டியானது கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி யாழ்ப்பாண இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் 2ஆம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை மன்னார் மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், பெருமையை பெற்றுத் தந்துள்ளார்.

இதேவேளை, நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன் : கொலை என சந்தேகம்?

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயற்சியில் ஈடுபட்டுளள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (14.10.2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா ரஷ்ய எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதான எஸ்.ஜதுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை காலை வரை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (16.10.2024) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.

இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.

எனவே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மொழிப்பிரச்சினையால் இலங்கை இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்!!

ஜேர்மனியில் உள்ள புலம்பெயர்ந்தோர், அந்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேருந்து ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற டுலாஜ் மதுசான் என்ற 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த இவர், அந்நாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, அங்கு 10 ஆண்டுகள் வரையான குடியிருப்பு அனுமதியை பெற்றுள்ளார்.

ஜேர்மனிக்கு சென்ற சில நாட்களில் தொழிற்பயிற்சியையும் மொழிப்பயிற்சியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் மதுசான் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

பெர்லினில் அமைந்துள்ள போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று இந்த பயிற்சிகள் குறித்து விசாரிக்கும் போது, மதுசானின் சுய விபரங்களை ‘BVG’ வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவிடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இணையத்தளம் முழுவதும், ஜேர்மன் மொழியில் காணப்பட்டதால் வெறுப்படைந்த அவர், அமேசான் பொருட்கள் பிரிக்கும் மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

எனவே, ஜேர்மனியில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும் மொழிப்பிரச்சினை அதற்கு தடையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும்.

வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள் : இலங்கையில் பலரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

புத்தளம் – மதுரங்குளி, கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வார காலப்பகுதியில் மூன்று சகோதரிகளும் திடீரென உயிரிழந்ததையடுத்து பிள்ளைகளும், உறவினர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 77 வயதான வயலட் பீர்ஸ், 70 வயதான லூசி பீர்ஸ் மற்றும் 67 வயதான அன்னி பீர்ஸ் ஆகிய மூன்று சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் திருமணமான பெண்கள் என்பதுடன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கந்ததொடுவாவ கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

உறவினர்கள் வெளியிட்ட காரணம்
கடந்த வாரம் இந்த சகோதரிகளின் தங்கையான 67 வயதான அனி பீர்ஸ் திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மூத்த சகோதரி வயலெட் பெசிர்ஸினும் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு சகோதரிகளின் மரணத்தால் மிகவும் வேதனையடைந்த மற்றுமொரு சகோதரியான 70 வயதான லூசி பீர்ஸ் மூன்று நாட்களுக்கு பின்னர் திடீரென உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மூன்று சகோதரிகளும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையே அற்புதமான சகோதர பந்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதல் தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இவர்களின் திடீர் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை அதிகாரி!!

இலங்கையின் முன்னாள் அமைச்சின் செயலாளரான நீல் ஹபுஹின்ன, அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் சம்பவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பதவி உட்பட பல அரசாங்கங்களில் முக்கிய பதவிகளை நீல் ஹபுஹின்ன வகித்துள்ளார். இறக்கும் போது அவரின் 61 ஆகும்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் , குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் தனது மூத்த மகளின் திருமணத்தை கொண்டாடுவதற்காக அவர் கடைசியாக இலங்கைக்கு வந்தார்.

இரண்டு மகள்களின் தந்தையான இவரது மனைவி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி 14 வயது மாணவன் மரணம்!!

மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க. திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14).

சிறுவன் தீபக்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தீபக்குமார் தனது வீட்டில் தனது சட்டையை எலக்ட்ரிக் அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மாணவன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் உதவியுடன் அவரை விடியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவனின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக பந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனைப் பரிசோதித்த டாக்டர்களும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து

, மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார அயன் பெட்டியை வைத்து துணியில் தேய்க்கும் முன் ஒயரை முழுமையாகச் சோதித்து அயன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

2 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தைகள் என 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பெங்களூரு எலகங்கா தாலுகா சிங்காநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). இவரது மனைவி மம்தா (30). இந்த தம்பதிக்கு அதீரா (5) மற்றும் அனன்யா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் இவர்கள் 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். கடன் தொல்லை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.