கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் காரில் ஆலுவாவில் இருந்து திரும்பினர். அவர்கள் பயணித்த கார் கொளஞ்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக விழுந்துள்ளது. கார்த்திக், விஸ்மயா இருவரும் பயத்தில் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தம்பதியரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் புதுமணத்தம்பதி இருவரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்று இலங்கையின் சுற்றுச்சூழல் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான புதுடில்லியின் முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை தேசத்தால் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டம் இதுவாகும்.
இந்தியா இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது மற்றும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) பங்களிப்பாளர்களில் ஒன்றாகும். 2021 இல் இலங்கையில் இந்திய முதலீடு சுமார் 142 மில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்நிலையில், “கடந்த மாதம் நான் இந்தியாவுடன் புதுதில்லியில் ஒரு சந்திப்பில் பங்கேற்றேன், மேலும் இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் திருகோணமலை இடையே நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை இணைப்பை ஏற்படுத்த உள்ளோம்” என்று பி.கே.பிரபாத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“இரு நாடுகளிலும் உள்ள தொழிலதிபர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாலும், சாலை மற்றும் இரயில் இணைப்புடன், இரு தரப்பினரும் உதவி பெறலாம் என்பதால் இது திட்டமிடப்பட்டுள்ளது, ஏனெனில் இது ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகத்திற்கு உதவும். இந்திய வர்த்தகர்களும் இலங்கையிடமிருந்து சில நன்மைகளைப் பெற முடியும்” என்று சந்திரகீர்த்தி மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னார் கிராமத்திற்கும் இடையில் தரைப்பாலத்தை இலங்கை அரசாங்கம் 2002 இல் முன்மொழிந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தத்தின்படி, பாக் ஜலசந்தியின் இருபுறமும் பொருளாதார நன்மைகளை வழங்கும் வகையில், சாலை மற்றும் ரயில் பால இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வீதி அல்லது புகையிரதத்தின் ஊடாக எந்தவொரு நிலத் தொடர்பும் இல்லை.
இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்திய நகரமான தனுஷ்கோடியில் ஒரு ரயில் நிலையம் இருந்தது. ஆனால் அது 1964 இல் ஏற்பட்ட சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டது.
1966 வரை ஒரு குறுகிய படகு சவாரி இலங்கையில் தலைமன்னார் மற்றும் இந்தியாவின் தனுஷ்கோடி ரயில் நிலையங்களை இணைத்தது.
மேலும் “திட்டத்திற்கான செலவு இன்னும் முடிவாகவில்லை. நாம் அதைப் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும், ஆனால் அது கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வகையில் பாலங்கள் மற்றும் நீருக்கடியில் சுரங்கப்பாதைகளை அமைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது தாயின், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருடிய மகனை ஹட்டன் பொலிஸார் நேற்று(14) கைது செய்துள்ளனர்.
ஹட்டன் செனன் தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் அலமாரியில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்கொண்ட விசாரணையின் போது பெண்ணின் மகன், தங்க நகையை ஹட்டன் நகரில் உள்ள தனியார் அடகுக் கடையொன்றில் ஒன்பது இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அடகுவைத்த காசில் ஒன்பது லட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாவை அவரது நண்பருக்கு வழங்கியுள்ளதாகவும் மீதி பணத்தை சந்தேகநபர் முழுமையாக செலவழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தாய் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வருவதுடன் அவரின் மனைவி வெளிநாட்டில் தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்த பொலிஸார் மகன் மதுவுக்கு அடிமையானவர் எனவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (15) அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டு , வானின் கண்ணாடிகள் தாக்கப்பட்ட நிலையில் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உடுவில் ஏ.பி.சி வீதியை சேர்ந்த ஒருவரால் இந்த தீவைப்பு சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி, பாலத்தோப்பூர் பகுதியில் மற்றுமொரு வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்டபோது, இவ்விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
எனினும், இந்த விபத்தில் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிய வருகின்றது.
தற்போது திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றமையால் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்ற
பதாகைகளை பார்த்து கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனன.
அதற்கமைய சிவில் போக்குவரத்து விதிகளின்படி விசாணைகள் இடம்பெறுவதுடன் பிரதான விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எயார்பஸ்-330 ரக UL 607 விமானம் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விமானிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கழிப்பறை இடைவேளை தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் இணைப்பு
அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு சென்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை விமானி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானிகளுக்கு இடையில் முறுகல்
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ளெியாகி உள்ளன.
இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
மட்டக்களப்பு – காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை(14)காலை கையளித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரியே மாணவி மகஜரை பிரதமரிடம் கையளித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுவ, ஊரிய – அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவருக்கே மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
2006 ஆம் ஆண்டு தனது 15 வயது மகளை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
மேற்படி குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரை குற்றவாளியாகக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2 இலட்சம் ரூபா அபராதம் செலுத்தாவிடின் சந்தேகநபருக்கு 6 மாத கடூழிய கடூழிய சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார்.
பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள 2 மாடி வீட்டின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.
ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டது.
உடனடியாக குளியலறையிலிருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்திலிருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
பின்னர், ஹன்சனியை உடனடியாக 1990 நோயாளர் காவு வண்டியை கொண்டு வந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இதேவேளை யுவதியின் துரதிர்ஷ்டவசமான மரணம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.
அவளது தங்குமிடத்தில் உள்ள ஆபத்தான இடத்தைச் சரிசெய்திருந்தால், இந்த பெண் உயிரிழந்திருக்க மாட்டார், ஹன்சினியின் மரணம் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்நாட்டிற்கும் ஒரு சிறந்த பாடமாகுமென சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 217.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
களுத்துறை,கட்டுகுருந்த பிரதேசத்தில் சனிக்கிழமை (12) இரவு ரயிலில் மோதி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் தந்தையும், 01 வயது குழந்தையும் 49 வயதுடைய அயல் வீட்டு நபருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளம் தந்தை தனது 01 வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த அயல் வீட்டு நபர், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் தந்தையையும் குழந்தையையும் காப்பாற்ற முற்பட்ட போது மூவரும் ரயிலில் மோதியுள்ளனர்.
இளம் தந்தையையும் அயல் வீட்டு நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் குழந்தை களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்த இளம் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் இது உயிர் மாய்ப்பு சம்பவம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்லை பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனிமுல்லை, கம்சபா வீதியைச் சேர்ந்த நிலான் சதுரங்க என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
களனிமுல்லை பகுதியில் கட்டடப்பொருட்கள் கடையொன்றினை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் சமூக சேவகராகவும், களனிமுல்லை இராணுவ முகாமில் சிவில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக தொண்டாற்றியுள்ளார்.
உயிரிழந்த நபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக படகில் பயணித்த போதே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது, 8 வயது மகளை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு தந்தை கரை சேர்த்திருந்த நிலையில், தாயும் மரக்கிளையில் தொங்கியபடி கரைக்கு வந்துள்ளார்.
இதன்போது நீர்மட்டம் அதிகரித்து நிலான் சதுரங்க அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
உடனடியாக பொலிஸ் கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அழைத்து காணாமல்போனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று (13) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பிஃபா உலகக் கிண்ண (FIFA world cup) 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற இலங்கையர் அறிமுகமாகியுள்ளார்.
நிஷான் வேலுப்பிள்ளை, கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலேயே அவுஸ்திரேலிய (Australia) தேசியக் கால்பந்து அணியில் அறிமுகமானார்.
23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர், 2019ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
2026 பிஃபா உலகக் கிண்ணத்தை நோக்கி அவுஸ்திரேலியா தனது பயணத்தைத் தொடரும்போது, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அவுஸ்திரேலியக் கால்பந்து அணி, நிஷான் வேலுப்பிள்ளையால் பிஃபா உலகக் கிண்ணத் தகுதி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக , 24 கரட் தங்கம் ஒரு பவுண் 210,000 ரூபாவாகவும் உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 194,200 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த வாரம் (11) தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 209,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 193,300 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,659.93 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றிய 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பங்கேற்று கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசிரியர் தரையில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களின் உதவியுடன் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.