யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம் : பரிதாபமாக உயிரிழந்த நபர்!!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 5ம் வட்டாரம், அனலைதீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதான நடராசா துசியந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ஒலிபரப்புவதற்காக மின்சார இணைப்புகளில் ஈடுபட்டபோது தவறுதலாக மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பெண்!!

கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள் போட்டியிட்டுள்ளன.

APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை. இந்த போட்டியானது இந்த ஆண்டும் கம்போடியாவில் நடைபெற்றது.

எல்லாமாக 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.

அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை – யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வர்த்தகரால் ஆடிப்போன விமான நிலைய அதிகாரிகள்!!

25 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு , தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபரான வர்த்தகர் மலேசியாவிலிருந்து நேற்றையதினம் இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வர்த்தகர் (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, வர்த்தகர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்த தேயிலை பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 179 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு மனித குலத்திற்கு பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்புகள்!!

பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு முதல் மனித குலத்தின் வீழ்ச்சி தொடங்கும் என கூறியிருப்பது உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

1911 ஆம் ஆண்டு பல்கேரிய நாட்டில் பிறந்த தீர்க்கத்தரிசியான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பாபா வங்கா தன்னுடைய 12 வயதில் புயலில் சிக்கிய பின்னர் அவரது பார்வை பறிபோனதாகவும் கூறப்படுகிறது.

பாபா வங்காவின் கணிப்புகள்

ஆனால் அதன்பிறகு அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. பாபா வங்காவின் கணிப்பின்படி , அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல், பிரிட்டன் இளவரசி டயானா மரணம், பிரிக்ஸிட் போன்ற பல முக்கிய சம்பவங்கள் பலித்துள்ளன.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாபா வங்காவின் கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2025ஆம் ஆண்டு முதல் உலகின் அழிவு தொடங்கும் என கணித்துள்ளார். 5079ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அப்போது பூமியில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளார்.

பல முக்கிய நாடுகளுக்குள் மோதல் வெடிக்கும்

இந்நிலையில் 2025 ஆண்டு பல முக்கிய நாடுகளுக்குள் மோதல் வெடிக்கும் என்றும் அதிர்ச்சியளிக்கும் பல சம்பவங்கள் அரங்கேறும் என்றும் பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மனித குலத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில், மோதல் காரணமாக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். ஏற்கனவே பாபா வங்காவின் கணிப்புகள் பலித்து வருகின்றன.

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு!!

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையைக் குறைப்பதாக அறிவித்த போதிலும், சந்தையில் தற்போது ஒரு கிலோ நாட்டரிசி 225 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் 160 ரூபாய்க்கும் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த சங்குப்பிட்டி பாலம் : அவசர திருத்தப் பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!!

கிளிநொச்சி – கேரதீவு – சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

திருத்தப் பணிகள் தொடர்பில் இன்று (18.10.2024) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் வாகனப் பயணத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் இறங்கி, நடந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பாலத்தினூடாக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனகர வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்துக்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (18.10.2024) சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாருடங்களில் நாட்டில் தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டது இதுவே முதன் முறையாகும்.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 196,250 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 210,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 194,400 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,710.73 அமெரிக்க டொலர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாட்டில் எதிர்காலத்தில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 53 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அதே சமயம் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 389 ரூபா 03சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 05சதம், விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 18 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 55 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 74 சதம், விற்பனைப் பெறுமதி 217 ரூபாய் 05 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 40 என அறிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 30 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 99 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி!!

மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18) இந்த விபத்து ஏற்பட்டது.

உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

16 வயதுடைய பிரமோத் சத்சர என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்தார். கெப் ரக வாகனத்தின் சாரதி நாவுல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

50000 ரூபா மானியம் குறித்த செய்தி : பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி நிதி மோசடி இடம்பெறுவதாக கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறியுள்ளார்.

அது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

50000 ரூபா மானியம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி செய்திகளைப் பெறுவது குறித்து, பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான செய்திகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். இந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று அதிகாலையில் ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் பலி!!

கொழும்பு கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்லோயா – ஹிங்குரான்கொடை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதுடன் இரண்டு எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்துள்ளது.

அத்துடன் ரயிலின் இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த ரயில் பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு – கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து – மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலும் ஊழியராக கடமை புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு காய்ச்சல் என தெரிவித்து கடந்த 11ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது நிமோனியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

வீடொன்றில் நடந்த விருந்து : பெண்கள் உட்பட 12 பேர் கைது!!

காலி, பெந்தோட்டையில் வீடொன்றில் நடந்த விருந்தொன்றில் கலந்துக் கொண்ட கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நேற்றைய தினம் இடம்பெற்ற மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பயன்படுத்திய ஐஸ், கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பில் விற்கப்பட்ட அரிய வகை மீன் : அதன் மதிப்பு என்ன தெரியுமா?

அல்பினோ யெல்லோ பர்ராமுண்டி என்று அழைக்கப்படும் இந்த வகை மீன் இனமானது உலகளவில் மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.

தங்க நிறத்தில் இருக்கும் இந்த மீன் ஆனது உயிருடன் 1000 முதல் 2000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதி கொண்டதாகும். ரூபா 300,000 முதல் 500,000 இலட்சம் வரை பெறுமதி விலை போக கூடியவை.

நீர்கொழும்பில் இதன் பெறுமதி அறியாமல் இந்த மீன் ஆனது கொல்லப்பட்டு, கிலோ சில்லறை விலையில் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என முகநூலில் நபர் ஒருவர் குறித்த பதிவை ஈட்டுள்ளார்.

சந்தையில் தேங்காய் விலை திடீர் அதிகரிப்பு!!

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!!

யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா – நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் யாழில் வீடொன்றில் தங்கியிருந்து மேசன் வேலை செய்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.