வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்!!

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (05.07.2023) காலை இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருநாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாய்க்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்பப் பெண் அவரைத் தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இலங்கை வைத்தியசாலையில் தாய் உட்பட 3 சிசுக்களுக்கு நேர்ந்த சோகம்!!

ராகமவில்..

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார்.

எனினும் அடுத்த நாள் கர்ப்பிணியான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.அதேவேளை, கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலையின் தவறினால் ஏற்பட்டதல்ல என ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன. இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள்.குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.

எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக போராடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஏ9 வீதியில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை ஏ9 வீதிஅரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் கனரக வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில்,

எதிர்த் திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதுடன் 600 மீற்றர் தூரம் வரையில் மோட்டார் சைக்கில் தரையில் இழுத்துச் சென்றுள்ளாதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஊடக அமையத்திற்கும் USAID நிறுவனத்திற்கும் இடையில் வலுவூட்டல் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!!

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த ஒப்பந்தம் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, உதவி மாவட்ட செயலாளர் திருமதி சபர்ஜா முகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், அமெரிக்க நிறுவன திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (04.07) கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்காவைத் தலமையகமாக கொண்டு இயங்கும் குறித்த நிறுவனம் (USAID) பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த மற்றும் போரால் பாதிப்படைந்த நாடுகளுக்கு தனது உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றனது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா ஊடக அமையத்தின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா ஊடகவியலாளர்களை வலுப்படுத்தல், ஊடக அமையத்தை மாவட்ட மட்டத்தில் வலுவூட்டல், மாவட்ட மக்களின் காணிப் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்வு நோக்கி நகர்த்துதல்,

தென்பகுதி ஊடகவியலாளர்களுடன் தொழில்சார் தொடர்புகளை பேணல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் ஊடகம் தொடர்பில் அறிவூட்டல் மற்றும் ஊடகப் பிரிவை ஆரம்பித்து வைத்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு குறித்த ஓப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

வவுனியா ஊடக அமையம் சார்பாக அதன் தலைவர் ப.கார்த்தீபன் , அமெரிக்க நிறுவனத்தின் சார்பாக அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 4 மாதங்களுக்கு குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதில் வவுனியா ஊடக அமையத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் குப்பையை எரித்ததால் நடந்த விபரீதம்!!

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் பரவிய தீயை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று (04.07) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட போது குறித்த தீயானது மண்டபத்திலும் தீப்பிடித்து எரிந்திருந்தது.

தீ பரவுவதை அவதானித்த உத்தியோகத்தர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அருவியில் சாகசம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் சுமந்த் (23). இவர், சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் படித்து வந்தார். சென்னையிலேயே அறையெடுத்து தங்கிவந்தார். இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி இவர் தனது நண்பர்களுடன் ஆந்திர மாநிலம், திருப்பதியிலுள்ள தலகோணா நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தபோது சுமந்த் தனது நண்பர்களிடம், தான் அருவியில் குதிப்பதை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு பாறையில் இருந்து குதித்தார். தண்ணீரில் குதித்த சுமந்த் கீழே இருந்த பாறையில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து மீண்டு வர போராடியும் அவரால் இயலவில்லை.

இதனை சற்றும் எதிர்பாராத சுமந்தின் நண்பர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு நாடினர். இருந்தபோதிலும், சுமந்தை காப்பாற்ற இயலிவில்லை.

உடனடியாக அவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சுமந்தை மீட்க முயன்றனர். இரவு நேரம் ஆனதால் அவரை மீட்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 01) நீரில் மூழ்கிய சுமந்தை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, அவரது சடலத்தை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இந்த தலகோணா நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இதுவரை மூன்று இளைஞர்கள் இதேபோல் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சில இளைஞர்கள் தடையை மீறி இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் வாங்கி தராத கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி!!

சென்னையில்..

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து மூன்று மாதங்களான மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவரிடம் பூர்ணிமா தனக்கு என்று தனியாக ஒரு செல்போன் வேண்டும் வாங்கி கொடுங்கள் எனக் கூறி வந்துள்ளார்.

ஆனால் கணவர் வாங்கி கொடுக்காமல் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் தனக்கு செல்போனும் வாங்கி கொடுக்க மாட்டிறீங்க, குடும்ப செலவுக்குப் பணமும் தரமாட்டிறீங்க என வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் கணவன் பூர்ணிமாவைக் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் படுக்கை அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பூர்ணிமாவின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்.. ஐவர் படுகாயம்.!!

திருகோணமலையில்..

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட தொலைதொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

பலத்த காற்றின் காரணமாக கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரம் இன்று(04.07.2023) முற்பகல் சரிந்து விழுந்துள்ளது.

இதன்போது அருகில் இருந்த தபால் கட்டடத்தின் மேல் சரிந்து விழுந்ததால் கடமையில் ஈடுபட்டிருந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விபரம் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதியில் சில தொலைத்தொடர்பு சேவை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அமெரிக்காவில் விருது வென்று சாதனை படைத்த இலங்கையர்!!

அமெரிக்காவில்..

அமெரிக்க நாட்டில் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார்.

இந்த விருது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவ ஆராய்ச்சி சங்கத்தின் 101வது மாநாட்டில் கஸ்ஸபவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அல்லேபொலவின் ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச பல் ஆராய்ச்சி சங்கம் 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

கலாநிதி கஸ்ஸப அல்லேபொல கண்டி திரித்துவக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆவார்.

இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், அமெரிக்காவின் லுசியானா மாநில பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

கஸ்ஸப அல்லேபொல மற்றும் அவரது ஆலோசகர் பேராசிரியர் ரஸ்ஸல் பெசவென்டோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நானோ கலவை உமிழ்நீர் சுரப்பு குறைபாடு காரணமாக வாய் வறண்ட நோயாளிகளுக்கு உமிழ்நீரின் உயிர்வேதியியல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய விளையாட்டு ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு!!

வரஸ்முல்லவில்..

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத் தர்ஷன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என வரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த முதலாம் திகதி முதல் ஆசிரியர் காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அன்றைய தினம் விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆசிரியர் கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்து பலன் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆசிரியர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலிட்டது குடும்பத்தினருக்கு தெரியாது என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காலியில் ஏற்பட்ட கோர விபத்து.. தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த சோகம்!!

காலியில்..

காலி- கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இந்தக் கோர விபத்து இன்று (04.07.2023) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நாட்களில் மலையகத்துக்குச் சுற்றுலா சென்றுவிட்டு கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது.

பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக வாகனம் காருடன் மோதியதில் அதில் இருந்த 38 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.காரைச் செலுத்தி வந்த 42 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களுக்கு பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கம்…

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 593,255 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,450 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,930 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,190 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 146,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,320 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காணாமல் போன இளம் யுவதி.. இன்று சடலமாக மீட்பு!!

பாத்திமா பஸ்லா..

அத்தனகலு ஓயாவில் விழுந்து காணாமல் போன யுவதி உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இன்று காலை யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நீரோடையில் விழுந்த யுவதியின் உடல் சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. நேற்று பிற்பகல் அத்தனகலு ஓயாவில் நீர்மானி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுக்கச் சென்ற இந்த யுவதி, நீரில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பாத்திமா பஸ்லா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம்-கொழும்பு விமான சேவை கட்டண விபரங்கள் வெளியானது!

பலாலியில்..

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் இந்த உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் லக்‌ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விமானத்தினூடாக கொழும்பிலிருந்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும். குறித்த விமான சேவை செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் முன்னெடுக்கப்படுகிறது.

விமானத்தின் ஊடான பயணத்திற்கு பயணி ஒருவருக்கான ஒருவழி கட்டணமாக 22,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 41,500 ரூபாவும் அறிவிடப்படுகின்றது.

அத்துடன் பயணி ஒருவர் அதிகபட்சமாக 7 கிலோகிராம் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கணவன் கிடைத்ததில் மகிழ்ச்சி.. நோர்வே இளம் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞன்!!

கடலூரில்..

கடலூர் இளைஞர் பாலமுருகனை நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.,கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடலூரில் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது..இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மணமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

அப்போது பேசிய மணப்பெண் சிவனாந்தினி, நான் நார்வே நாட்டில் தான் பிறந்து வளர்ந்தேன், எனக்கு நீண்ட நாட்களாக தமிழ் கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், தற்போது நான் இன்று பாலமுருகனை திருமணம் செய்து கொண்டுள்ளேன்.

எனக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது, மற்றும் என்னுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறி இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

மணமகன் பாலமுருகன் பேசிய போது, முனைவர் பட்டம் பெற்று விட்டு மேற்படிப்பிற்காக நார்வே சென்று இருந்த போது சிவானாந்தினியை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தேன்.

அப்போது இருவருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போனதை தொடர்ந்து, எங்களுடைய இருவீட்டிற்கும் தெரிவித்தோம், அதன் பிறகு அவர்களுடைய முழு சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

மூளைச் சாவு அடைந்த கணவர்.. இருதயம், கண் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய மனைவி!!

தருமபுரியில்..

தருமபுரியில் மூளைச் சாவு அடைந்த கணவனின் உடல் உறுப்புகளைத் தானமாக மனைவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.

இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று செந்தில் குமார் பள்ளி முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செந்தில் குமார் மூளைச்சாவடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து மனைவி விஜயலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கணவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க மனைவி முன்வந்தார்.

பின்னர் இருதயம், நுரையீரல், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கண்களை மட்டும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாகம் பெற்றுக்கொண்டனர்.