வவுனியா நகர சபையின் வெற்றிடமாக காணப்பட்ட செயலாளர் பதவிக்கு புதிதாக செயலாளர் இன்று (04.07.2023) நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய இ.தயாபரன் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து தற்காலிக செயலாளர் மூலம் இயங்கி வந்தது.
இந்நிலையில் புதிய செயலாளராக கடந்த நான்கு வருடங்களாக செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி வந்த பூ.செந்தில்நாதன் வவுனியா நகரசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் (04.07) உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் இன்றுகாலை சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது (37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.
குறித்த இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் படகில் நீர் நிரம்பி நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையிலே இன்று (03) காலை சக மீனவர்கள் காணாமல்போனோரை தேடிய போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மீனவரை தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்டவரின் சடலம் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தனகலு ஓயா நீர் மானிக்கு அருகில் நீரில் மூழ்கி யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என நிட்டம்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன யுவதி, கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதுடைய பாத்திமா பஸ்னா எனவும், அவர் புறக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குணசிங்கபுரவில் வசிக்கும் குறித்த யுவதி தனது குடும்பத்தினருடன் நேற்று பிற்பகல் தமது உறவினர்கள் வசிக்கும் திஹாரியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.
இந்த யுவதி உட்பட 7 பேர் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் குறித்த யுவதி பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி உதவி கோரி அலறிய போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று பிற்பகல் வரை பொலிஸார் அப்பகுதி மக்களுடன் இணைந்து சிறுமியைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போயுள்ளது.கடற்படையினர் குழுவொன்றை வரவழைத்து யுவதியை தேடும் பணியை தொடர்வதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்களுடன் பயனித்துக் கொண்டிருந்த,
சிறிய கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் மனைவியின் தலையைத் துண்டாக்கிய கணவரின் சம்பவத்தைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் மனைவியின் கழுத்தை கணவன் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் இருக்கும் மூன்றாவது மாடியில் மணிகண்டன் (37) என்பவர் வசித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர், தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக இந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இவர் அருகில் உள்ள கோயிலில் பூ வியாபாரம் செய்து பூசாரியாகப் பணியாற்றி வருகிறார்..இதனிடையே, கணவன் – மனைவி இடையே அவ்வப்போது சண்டை வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 30) மாலை ஏற்பட்ட சண்டையின்போது மனைவி பவித்ராவின் தலையைத் துண்டித்து, பல இடங்களில் வெட்டி, மணிகண்டன் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்டபோது, தான் தனது மனைவியைக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர், உயிரிழந்த பவித்ராவின் உடலையும், தலையையும் கைப்பற்றி, மணிகண்டனை கைது செய்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் பவித்ராவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது டிஎம்எஸ் நகரில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நடந்த சண்டையில் மணிகண்டன், பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்ரா, மணிகண்டனை அடித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், மணிகண்டன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட புத்தகரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், கலைவாணன் (38). இவருக்கும் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகள் கீர்த்திகா (29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், குவைத்தில் பணியாற்றி வந்த கலைவாணன், கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த கலைவாணன், தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்குக் கணக்கு கேட்டு உள்ளார்.
அப்போது கீர்த்திகா, தனது கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்ததுடன் தேவை இல்லாமல் செலவு செய்ததாகத் தெரிய வந்துள்ளது.மேலும், மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை கீர்த்திகாவின் கழுத்தை கலைவாணன் அரிவாளால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கீர்த்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கலைவாணனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் குரு பிரசாத். இவர்கள் இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.
பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் குரு பிசாத்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால் தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து குரு பிரசாத், பவித்ராவை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குரு பிரசாத்திற்குத் திருமணம் நடந்த விவகாரம் பவித்ராவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காதலன் தன்னை ஏமாற்றியதால் மன வேதனை அடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காதலி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குரு பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்தும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்த யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியரின் இறுதிச் சடங்குகள் கடந்த 30.06.2023 அன்று இடம்பெற்றன.
இந்த நிலையில் அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சறோஜன் (சுதா – வயது 29) இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் வேலங்காடு இந்து மயானத்தில் நடைபெற்றது.
அவரது இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சமூகமட்ட பொது அமைப்பினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீரின் மத்தியில் அவரை வழியனுப்பி வைத்தனர்.
அவர் அராலி மத்தி ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் கிணற்றில் தவறி விழுந்த பாடசாலை மாணவர்கள் மூன்று பேரைக் காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (02-07-2023) காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் அபினேஷ் (15). அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.
அதே பாடசாலையில் பயின்று வரும் தனது நண்பர்களான கம்மாளப்பட்டியை சேர்ந்த 15 வயது நிதீஷ்குமார், சமத்துவபுரத்தை சேர்ந்த 13 வயது விக்னேஷ் (13) ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் மூவரும் வீதியோரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர்.தகவல் அறிந்த கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த மாணவர் அபினேஷின் தந்தை குப்புசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், அசோகன் ஆகியோர் மாணவர்களை மீட்பதற்காகக் கிணற்றில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி கிராம மக்கள் ராசிபுரம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கட்டிலை இறக்கி மாணவர்கள் அபினேஷ், நிதீஷ்குமாரை உயிருடன் மீட்டுள்ளனர். மற்றவர்கள் களிமண் சேற்றுக்குள் சிக்கியதாகத் தெரிகிறது.
மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோல் முழுவதும் கசிந்து கிணற்று நீரில் கலந்த நிலையில், அதைப் பருகியதால் சேற்றில் சிக்கிய நான்கு பேரும் மயக்க நிலை அடைந்ததாகத் தெரிய வருகின்றது.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று(02.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர்.
மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் இன்று மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ,சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது அவர் பயணித்த வாகனம் -மதவாச்சி மன்னார் பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகில் உள்ள கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில் காயமடைந்த அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவரும் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது மூவரும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பதுளை – பண்டாரவளை வீதியில் இன்று காலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரில் பயணித்த குடும்பம் ஒன்றே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதி அருகில் இருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் எல்ல பகுதியைச் சேர்ந்த 51 வயதான வாகன சாரதியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.கடந்த மாத திருத்தத்தின் போது எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 3,186 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
இதேவேளை 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் லாஃப் நிறுவனமும் எதிர்காலத்தில் விலை திருத்தம் செய்யப்படலாம் என்று சமீபத்தில் அறிவித்தது, ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்தியாவின், மகாராஷ்டிராவில் சமுருத்தி-மஹாமார்க் அதிவேக வீதியில், பயணிகள் பேருந்தொன்று தீப்பற்றி எரிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்தில் சுமார் 33 பேர் பயணித்ததாகவும் மின்கம்பத்தில் மோதியே பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து தொடர்பில் புல்தானா மாவட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
குடும்பத் தகராறில் மனைவியின் தலையை அறிவாளால் வெட்டி துண்டித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு மனைவியின் தலையைத் துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு மெயின் ரோடு டிஎம்எஸ் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் 36 வயதான மணிகண்டன். இவர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருப்பூரில் இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 23 வயதான பவித்ரா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.
பவித்ரா மணிகண்டனுக்கு இரண்டாவது மனைவி ஆவார். அதேபோல் பவித்ராவும் மணிகண்டனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பவித்ரா தனது தாயாருடன் அடிக்கடி பேசி பேசி வருவதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது இரண்டு பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வாய்ப்பேச்சு போதாது என்று சரமாரியாக அடிதடியில் இறங்கித் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
கோபத்தில் உச்சத்திற்குச் சென்ற மணிகண்டன் வீட்டிலிருந்த அறிவாளால் பவித்ராவின் தலையை வெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு பேரும் மூன்றாவது மாடியில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
அறிவாளால் வெட்டிய போது அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மணிகண்டன் பவித்ராவை கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அங்கிருந்த மணிகண்டனைப் பிடித்துள்ளனர். காவல்துறையினர் மணிகண்டன் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பவித்ராவின் தலையை ஒரு பூக்கூடைக்குள் வைத்து வெளியே கொண்டு செல்ல மணிகண்டன் திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேசமயம் பவித்ராவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. மேலும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. பவித்ராவின் உடலை மீட்டு காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்த இரண்டே நாட்களில் பெண் குழந்தை ஒன்று கோடீஸ்வரரானது. ஆடம்பர மாளிகை, விலையுயர்ந்த கார்கள், வேலையாட்கள் என அனைத்தும் அந்த குழந்தையின் பெயரில் உள்ளன. இதையெல்லாம் குழந்தையின் பணக்கார தாத்தாவிடமிருந்து கிடைத்தது.
பிறந்து 48 மணி நேரத்தில் பணமழை பொழிந்த கோடீஸ்வர தாத்தா, தனது பேத்திக்கு ரூ.50 கோடிக்கு மேல் அறக்கட்டளை நிதியையும் பரிசாக அளித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாரி ட்ரூவிட்-பார்லோவின் (Barrie Drewitt-Barlow) மகள் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தனது பேத்தி பிறந்த பிறகு, இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றிய படங்களைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பாரி. 51 வயதான பாரி தனது பேத்தியின் பெயரில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான மாளிகையையும், சுமார் 52 கோடி ரூபாய் அறக்கட்டளை நிதியையும் கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது மகள் மற்றும் பேத்தியின் படத்தைப் பகிர்ந்து, “இன்று எனது 23 வயது மகள் சாஃப்ரன் டிரைவ்ட்-பார்லோ ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் பேத்திக்கு பெயர் வைத்துள்ளோம்.” என்று கூறினார்.
கடந்த வாரம் தான் அந்த மாளிகையை வாங்கியதாக பாரி கூறினார். இப்போது இந்த மாளிகை தனது பேத்திக்கு சொந்தமானதாக மாறியதால், அவர் தனது பேத்திக்கு ஏற்ப அதன் உட்புறத்தை வடிவமைப்பதாகவும் கூறினார்.
தொழிலதிபர் பாரி இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு கலைஞராக விவரிக்கிறார். அவருக்கு ரூ.1600 கோடி சொத்து இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. பாரி தனது குடும்பத்திற்கு பல கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கியதற்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் அவர் 4 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து கிறிஸ்துமஸ் கொண்டுவதாக பிரபலமாக அறியப்படுகிறார். பாரி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். 1999-ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.
இதற்குப் பிறகு, பாரி தனது கூட்டாளியான டோனியை 2019-ல் பிரிந்தார். தற்போது இவர்களது மகள் கேசருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, குழந்தை வந்த மகிழ்ச்சியில் பாரி பல கோடி மதிப்பிலான சொத்தை பேத்தியின் பெயரில் கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில், திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ், தனது சொத்தில் பங்கு வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலாப்புராவைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு சீனிவாஸ் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் குடும்ப சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சவிதாவின் வீட்டிற்கு சென்ற சீனிவாஸ் அவரிடம் சொத்தில் பங்கு தர முடியாது என்று தகராறில் ஈடுபட்டார். கண்டிப்பாக தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று சவிதா பிடிவாதம் பிடித்துள்ளார்.
அப்போது சீனிவாஸ் கையில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் இருந்து தப்பி செல்வதற்காக சவிதா ஓடினார். ஆனால் சீனிவாஸ் விடவில்லை. சவிதாவை துரத்தி சென்று தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சவிதா நடுரோட்டில் சுருண்டு விழுந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், சீனிவாசை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த ஆயுதத்தை பறித்தனர். பின்னர் சவிதாவை மீட்டு ஹாசனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சவிதாவை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹரிராம் சங்கர் கூறியதாவது, சொத்து தகராறில் சீனிவாஸ் இரும்பு கம்பி, மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக சீனிவாசை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.