இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வாரிசு மரணம்!!

kingஇலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசித்து வந்த மன்னரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்தார்.

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம இராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள்.

அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16 1/2 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832ல் விக்கிரம இராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது.

இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக நிற்கிறது.

மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த மன்னரின் 3வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்தார்.

இவரை இளவரசன் என்று அப்பகுதி பொதுமக்கள் அழைத்து வந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவருக்கு புஷ்பா என்ற மனைவி, விக்கிரமன், விஜயகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இறந்த பிருதிவிராஜ் மன்னர் விக்கிரமசிங்கரின் மகன் வயிற்று பேரன் என்று தெரிவித்தனர்.

 

விளையாட்டாக சகோதரனை சுட்டுக்கொன்ற சிறுமி!!

Pistolஅமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெட்ராய்ட் நகரில் உள்ள உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் சம வயதுள்ள தனது சித்தப்பா மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

விரட்டிக் கொண்டே வந்த சிறுமியின் பார்வையில் படுக்கையறையில் உள்ள கட்டிலின் அருகே ஒளித்து வைக்கபட்டிருந்த துப்பாக்கி சிக்கியது.

அதனை கையில் எடுத்த சிறுமி விளையாட்டாக சிறுவனை மிரட்டும் நோக்கத்தில் அவனை நோக்கி குறிவைத்தபடி, ´ஹேண்ட்ஸ் அப்´ என கூறினாள்.

விளையாட்டாக சிறுமி துப்பாக்கியை அழுத்த அதிலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவனை தாக்க அவன் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

 

 

பெப்ரவரி முதல் இரு மொழிகளில் தேசிய அடையாள அட்டை!!

IDஇலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் வழங்கும் சகல தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகளை கணனிமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் கூறியுள்ளது.

அதேபோல் 2016 ஆம் முதல் வழங்கப்பட உள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை!!

Franceபிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரென கூறப்படும் ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இவருக்கு சர்வதேச பொலிஸாரினால் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி கிளிநொச்சியில் பிறந்துள்ளார்.

பிரான்ஸில் இவர் பணியாற்றிய இடத்தில் இருக்கும் குறைந்த வசதிகள், சட்டவிரோதமாக நபர்களை வேலைக்கு சேர்ப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து ஜெயந்தன், பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் கூறிய போதிலும் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.

ஜெயந்தன் தர்மலிங்கம், கொழும்பில் இடம்பெற்ற பல குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என இலங்கை பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்ததுடன், அவருக்கு எதிரான சர்வதேச பொலிஸார் ஊடாக பிடிவிராந்தை பிறப்பித்திருந்தனர்.

 

மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் iPhone 6!!(வீடியோ)

Iphone6அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு கைப்பேசி சந்தையில் தனி மதிப்பு உண்டு. இதனால் அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழமை.

அதே போலவே தற்போது iPhone 6 எனும் புதிய கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளதுடன் எதிர்ப்பார்பையும் அதிகரித்து வருகின்றது.

அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் தனது புதிய தயாரிப்பான iPhone 6 மற்றும் Apple iWatch ஆகியவற்றினை வெளியிடக் காத்திருக்கின்றது.

புதிய iPhone 6 ஆனது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரை, 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள நிலையில் மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பை கௌரவித்த அமெரிக்கா!!

Arjunசென்னை சிறுவனின் பயன்பாட்டு கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க பல்கழைக்கழகம் முதல் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த அர்ஜுன்(13) என்ற சிறுவன் வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.

சிறுவயதில் இருந்தே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தினமும் இணையதளத்தில் 3 மணி நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தச் சிறுவன் பொழுதுபோக்கு அம்சங்களான விளையாட்டில் கவனம் செலுத்தாமல் மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறந்த பயன்பாடுகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளான்.

இவனது இந்த ஆர்வமே பேருந்து இருப்பிடம் அறியும் பயன்பாட்டினை கண்டுபிடிப்பதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது.

தற்போழுது அவனின் கண்டுபிடிப்பிற்கு அமெரிக்காவின் மசாச்சுஸெட்ஸ் தொழிற்கல்வி நிறுவனம் 2012 மற்றும் 2013ம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கான முதல் பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது.

2012ம் ஆண்டிற்கான பரிசாக கூகுள் நெக்சஸ் லப்டப் 2013ம் ஆண்டிற்கான பரிசாக நெக்சஸ் 5 ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் மற்றும் சான்றிதழும் அந்நிறுவனத்தின் சார்பில் அச்சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து அச்சிறுவனின் தந்தை சந்தோஷ்குமார் கூறுகையில் அர்ஜீன் இரண்டரை வயதிலேயே கணனி இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் அவனாகவே மென்பொருள் பற்றிய விவரங்களை யூ டியூப் இணையதளம் மூலம் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அர்ஜீன் “ஐ-சேப்” எனும் ஒருவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை ஒரே பொத்தானை அழுத்தி தெரிவிக்கும் வகையில்(குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக) புதிய பயன்பாட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்துவருவதாக கூறப்படுகிறது.

 

வேலைக்காரருக்கு 600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்!!

Moneyகுஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் ராஜ்காட்டில் வசித்து வந்தவர் கஜ்ராஜ் சிங் சடேஜா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரது வீட்டில் வேலை செய்து வந்தவர் வினுபாய் கஞ்சிபாய்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார் கஜ்ராஜ் சிங். இவர் தனது மரணத்திற்கு முன்னர் தனது விசுவாசியான வினுபாய் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, பணம் உள்ளிட்ட சொத்தை எழுதி வைத்துள்ளார்.

சமீபத்தில் வினுபாயை அவரது குடும்பத்தாருடன் கஜ்ராஜின் உறவினர்கள் கடத்தியுள்ளனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவர்களை பொலிசார் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடத்தலின் பின்னணி குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கஜ்ராஜ் தனது உயிலில் தனது உறவினர்களைப் புறக்கணித்து, வினுபாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்தது தெரியவந்துள்ளது.

மேலும் கஜ்ராஜ் அளித்துள்ள பணத்தின் மூலம், எதிர்காலத்தில் தனது குழந்தைகளைக் கல்வி கற்க இங்கிலாந்து அனுப்ப வினுபாய் திட்டமிட்டுள்ளார்.

 

 

துணை ஜனாதிபதி மீது மாவை கொட்டி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!!(வீடியோ)

Flour

கவுதமாலாவின் துணை ஜனாதிபதி மீது இரு பெண்கள் மா கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டின் துணை ஜனாதிபதி ரோக்சானா தன் மாளிகையின் முன் குழந்தைகளின் சத்துணவு குறித்து நேற்று முன்தினம் உரையாற்றினார்.

அப்போது, அங்கிருந்த இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரோக்சானாவின் மீது உலர் மாவை கொட்டினர்.

இதனால் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கில் கைதான இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு என தாங்கள் செய்த செயலை நியாயப்படுத்துகின்றனர்.

மேலும் இவ்விரு பெண்களுடன் இவர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்ட மற்ற சிலரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

உச்சகட்ட சந்தோஷத்தில் ஷிகர் தவான்!!

Dhavanஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் படு உற்சாகத்தில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 2010ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.

அப்போது அவரால் அணியில் நிரந்தரமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின் கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பு பெற்றார்.

அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்து அசத்திய இவர், தொடர்ந்து இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி., சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார்.

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துமனையில் இவரது மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

2012ல் ஷிகர் தவானை இரண்டாவதாக மணந்த ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ரியா, ஆலியா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாட்டி வதைக்கும் வெப்பம் : திடீரென மயக்கமடையும் வீரர்கள் (வீடியோ)

Heat

அவுஸ்திரேலியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிய விதிமுறைகளை கிராண்ட்ஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவில் தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளதால், மக்கள் அனைவரும் கடற்கரையை நோக்கிப் படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் திறந்தவெளி அரங்குகளில் விளையாடும் வீரர்களின் நிலையோ மிக மோசம்.

வெப்பம் தாங்க முடியாமல் வெகு விரைவாக சோர்வடைந்து விடுகின்றனர், இந்த வாரம் நடந்த போட்டிகளில் இதன் தாக்கம் வெகுவாக உணரப்பட்டது.

நேற்று முன்தினம் தனது முதல் சுற்றில் தோல்வியடைந்த கனடா நாட்டு வீரர் பிரான்க் டான்செவிக் வெயில் தாங்காமல் மயக்கம் போட்டு விழுந்தார், சூழ்நிலைகள் மிகவும் மனிதாபிமானமற்றதாக இருக்கின்றது என கருத்து வெளியிட்டுள்ளார்.

அன்று நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த குருமி நராவும், சீனாவைச் சேர்ந்த பெங் ஷுயாயும் மோதினர். இதில் தோல்வியுற்ற சீன வீராங்கனையும் வெயிலின் தாக்கத்தினாலேயே வாந்தியெடுத்து மயங்கி விழுந்ததாக தனது தோல்விக்கான காரணத்தினைத் தெரிவித்தார்.

வீரர்கள் மட்டுமின்றி அன்று நடைபெற்ற மற்றொரு பந்தயத்தில் பந்து எடுத்துத் தரும் சிறுவன் ஒருவனும் மயக்கமடைந்துள்ளான்.
இதனால் கிராண்ட்ஸ்லாம் போட்டி அமைப்பாளர்கள் தீவிர வெப்ப கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி தற்போது திறந்தவெளி மைதானத்தில் ஆடப்பட்டுவரும் போட்டிகள் அந்த சுற்றுடன் நிறுத்தப்படும். ரோட் லவர் அரங்கமும், ஹிசென்ஸ் அரங்கமும் மேற்புறம் மூடப்பட்டு அதன்பின் அங்கு ஆட்டங்கள் தொடரப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஒழுக்கமீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!!

Policeஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களை தடுத்து மக்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய பின்னணியை உருவாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.

கடந்த ஆண்டில் சிறந்த முறையில் சேவையாற்றிய 367 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுடன் 14 சிவிலியன்களுக்கும் பணப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக 74,76,300 ரூபா செலவிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு பொலிஸாரை ஊக்குவிப்பதற்காக 1400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச்செல்ல தயாராகும் விண்கலம்!!

Spaceசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும். நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

Rajivமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேர் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார்.

அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஏற்கனவே தூக்கு தண்டனை பெற்ற கைதிகளின் 13 வழக்குகள் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு, ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த வழக்குகளின் தீர்ப்புக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

 

சினிமாவில நன்றியுணர்வு குறைந்து விட்டது : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கவலை!!

Murugadasரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் இயக்கிய எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம் நேர் எதிர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது..

ஒரு படத்துக்கு தலைப்பு அமைவது, மிகவும் சிரமம். நேர் எதிர் என்ற தலைப்பு அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இது, எனக்கு தோன்றாமல் போய்விட்டது. நான், அடுத்து விஜய் படத்தை இயக்கப்போகிறேன். கதை எல்லாம் தயாராகி விட்டது.

படப்பிடிப்புக்கு போகப்போகிறோம். ஆனால் தலைப்பு முடிவாகவில்லை. நான் இயக்கிய துப்பாக்கி படத்தில் முதல் தோட்டா தயாரிப்பாளர் தாணு. தயாரிப்பாளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று அம்மா மாதிரி. இன்னொன்று அப்பா மாதிரி.

அம்மா மாதிரி உள்ளவர்கள் பிள்ளையை வயிற்றில் சுமப்பதில் இருந்து கடைசி வரை அதைப்பார்த்துக் கொள்கிற மாதிரி படம் உருவாகிறபோது உடன் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள். அப்பா மாதிரி இருப்பவர்கள் படத்தின் தொடக்க விழாவுக்கு வருவார்கள்.

இடையில் டாக்டரிடம் அழைத்து செல்வது, பிரசவம் ஆனதும் இனிப்பு கொடுப்பது போல் இருப்பார்கள். தாணு, அம்மா மாதிரியான தயாரிப்பாளர். துப்பாக்கி படத்துக்கு வந்த பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து வெற்றி கண்டவர். இப்போதெல்லாம் ஒரு படம் ஓடினால் கூட அந்த படக்குழுவினர் சந்தித்துக்கொள்வதில்லை.

ஒருவரையொருவர் பார்ப்பதே இல்லை. சினிமாவில் இப்போது நல்ல நட்பு, நல்ல உறவு, நன்றியுணர்வு ஆகியவை குறைந்து விட்டன. போலிகள் அதிகமாகி விட்டார்கள். சினிமாவில், உண்மையான மனிதர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று பேசினார்.

விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் பி.வாசு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக, படத்தின் டிரைலரை பி.வாசு தலைமையில், ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றுக்கொண்டார். எஸ்.தாணு வரவேற்று பேசினார். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒருபகுதியை நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவ இருப்பதாக அவர் கூறினார்.

 

இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்!!

Deportஇலங்கையில் வீசா காலம் முடிவடைந்த போதும் சுமார் 4 மாதங்கள் தங்கியிருந்த ஐந்து இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்.

இவர்களின் கடவுச்சீட்டுக்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நடன மாதுக்கள் 18க்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்களாவர்.

பொரளையில் உள்ள இரவு கேளிக்கை இடம் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரம் ரூபாவை இலங்கையில் வருமானமாக பெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண் தேஜா மீது ஆபாசப்பட வழக்கு!!

Ramsaranநடிகர் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்குப்பட முன்னணி கதாநாயகனுமான ராம்சரண்தேஜா நடித்த எவடு என்ற படம், கடந்த 12ம் திகதி வெளியானது. நடிகைகள் ஸ்ருதி ஹாசன், எமி ஜக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

வம்சி பய்டிபள்ளி இயக்கி உள்ள இப்படத்தின் சுவரொட்டிகள், ஆபாசமாக இருப்பதாக கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ராம்சரண்தேஜா உள்பட 10 பேர் மீது இ.பி.கோ. மற்றும் பெண்களை அநாகரீகமாக வெளிப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.