வவுனியா மகாறம்பைக்குளம் 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த 15இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா (DCDB) மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்தபோதே இவை மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களின் உத்தரவில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு (DCDB) பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்கள் குறித்த நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர்.
இக்குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக வந்திருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் (08) உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார்.
கடந்த சனிக்கிழமை (07) அன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மனைவி தொடர்ந்து யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய கனகசபாபதி றமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை என்பதுடன் மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவர் உணவினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம் என்ற நிலையில், இவருக்கு வழமையாக உணவினை கொடுக்க பெண் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது நடமாட்டம் இருக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அயல் வீட்டாரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதன் பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்து சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்தவுடன் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலதா மாளிகையில் உள்ள பல முக்கிய இடங்களில் இந்த ஜோடி புகைப்படங்களை எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
ஸ்ரீ தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க ஓவியங்களைக் கொண்ட பௌத்த விகாரைகளில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கப் பயன்படுத்தப்படும் ஒளியினால் ஓவியங்கள் சேதமடைவதாகவும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தொல்லியல் நோக்கங்களுக்காக இவ்வாறான இடங்களில் புகைப்படம் எடுக்கும்போது, ஒளியைக் குறைக்க பிரத்யேக கமெராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இல்லையெனில் இயற்கைப் பொருட்களால் வரையப்பட்ட படங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செயற்பட முடியும் எனவும் அதன் பிரகாரம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மேலதிக நடவடிக்கை எடுப்பார் எனவும் பேராசிரியர் காமினி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் அதிகபட்சமாக 50 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவது கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் பிரிவு 216 இன் படி இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொது சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறும் அதிகாரிகள், நியமனக் கடிதம் கிடைத்த நாளிலிருந்து 22 நாட்களுக்குள் புதிய பதவியை ஏற்க வேண்டும் என்று பொதுச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு மாதத்திற்குள் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் இரத்து செய்யப்பட்டதாக கருதப்பட வேண்டுமென்றும் பொதுச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டரை வாங்கிய நிறுவனத்திடம் இருந்து ஒரு தொகை கடவுச்சீட்டுகள் பெறப்படும் என்றும், இதனால் கடவுச்சீட்டுகளை வழக்கம் போல் அச்சிட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், எஞ்சியுள்ள வெற்று கடவுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் குடிவரவு திணைக்களத்தை சூழவுள்ள நிலைமைகள் தொடர்பிலும் நேற்று (09) பொது பாதுகாப்பு அமைச்சில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 2003 ஆம் ஆண்டு முதல் இருபது வருட காலத்திற்கு 11 மில்லியன் வெற்று கடவுச்சீட்டு புத்தகங்களை வழங்கியுள்ளதுடன், இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கான தேவையின் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மின்கடவுச்சீட்டுக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தோற்றம் கொண்ட கடவுச்சீட்டுகள் அடுத்த மாதம் வரவிருப்பதால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் மனுஷ ஜென்மமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இன்னொடு காதல் இருந்தால், என்ன இவனுங்க எல்லாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? என்று அந்த பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
கணவனுக்கு திருமணத்தை மீறிய உறவு இன்னொரு பெண்ணுடன் இருந்தது தெரிய வந்த நிலையில், வீடியோ காலில் கணவனுடன் பேசியபடியே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளம்மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவனின் நடத்தைக் குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியும், அவர்களும் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல், சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு உளிமாவு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஹரி. இவருடைய மனைவி அனுஷா.
இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ள நிலையில், திருமணமான நாள் முதலே ஸ்ரீஹரி தனது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. ஸ்ரீஹரிக்கு திருமணத்திற்கு முன்பிருந்தே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து அனுஷா தனது பெற்றோரிடம் புகார் கூறியதும், அவர்கள் அனுஷாவுக்கு அறிவுரை கூறி அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று அனுப்பி வைத்து விட்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஹரி தனது மனைவியை கொடுமைப்படுத்தி விவாகரத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதன் பிறகு ஸ்ரீஹரி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அனுஷா தனது கணவருக்கு வீடியோ கால் செய்து கொண்டே, கணவர் லைனில் இருந்த போது தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்த அனுஷாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்ன ர்அனுஷாவை தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அனுஷா பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக சிகிச்சை பெற்று வந்த அனுஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அதில் கணவர் கொடுமைப்படுத்தியதாலும், திருமண உறவை மீறி வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாலும் தற்கொலை செய்து கொண்டதாக அனுஷா மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் பேரில் அவரது கணவர் ஸ்ரீஹரியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
கேரள மாநிலத்தில், அடுத்த இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், விஷ்ணுஜித் என்கிற இளைஞர் திடீர் மாயமானது உறவினர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தங்களது மகனைக் காணவில்லை என்று போலீசில் பெற்றோர்கள், திருமண பத்திரிக்கையுடன் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் திருமணத்திற்கு இரண்டு நாட்களாக முன்பாக மாப்பிள்ளையைக் காணவில்லை என புகார் எழுந்துள்ளது.
நேற்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய திருமணம் இன்னும் மாப்பிள்ளை கண்டுபிடிக்கபடாததால், பெண் வீட்டாரும் சோகத்தில் மூழ்கினர்.
மலப்புரத்தில் பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜித் (30). திருமணத்திற்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக பாலக்காட்டில் உள்ள தனது நண்பர்களைப் பார்க்க விஷ்ணு சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அன்றைய இரவு 8 மணியளவில் விஷ்ணு வீட்டிற்கு போன் செய்து, நேரமாகி விட்டதால் அன்றைய தினம் உறவினர் வீட்டில் தங்குவதாகவும், மறுநாள் திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் விஷ்ணுவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பாலக்காட்டில் உள்ள அவரது நண்பரை தொடர்பு கொண்டபோது, விஷ்ணுவிடம் ரூ.1 லட்சம் கொடுத்ததாகவும், பணத்துடன் விஷ்ணு கஞ்சிக்கோட்டில் இருந்து பாலக்காடு சென்றதாகவும் கூறப்படுகிறது.
விஷ்ணுவின் செல்போன் சிக்னல் கடைசியாக பயன்படுத்திய இடமாக கஞ்சிக்கோட்டைக் காட்டுகிறது. மகனைக் காணவில்லை என குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மலப்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஷ்ணுவுக்கு பணக் கஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விஷ்ணுவின் உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை விஷ்ணு திருமணம் செய்யவிருந்தார். பாலக்காடு கஞ்சிக்கோட்டில் உள்ள ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார் விஷ்ணு.
விஷ்ணுவிடம் பணம் இருப்பதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாகவும், விசாரணைக்காக 2 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பி சசிதரன் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஸ்பி தெரிவித்தார். உறவினர்களும், நண்பர்களும், அப்பகுதி மக்களும் விஷ்ணுவை தேடி வருகின்றனர்.
மொத்தமே 15 வினாடிகள் தான். கண்ணிமைக்கும் நேரத்துல 22 மாடி கட்டிடமும் சுக்குநூறாய் பொலபொலவென சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போல சரிந்து தரைமட்டமானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லூதியானா மாகாணத்தில் ஹெர்ட்ஸ் டவர் என்கிற 22 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சூறாவளியால் சேதமடைந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக பயனற்ற நிலையில், அந்த பகுதி வழியே செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இருந்து வந்தது.
இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். இந்நிலையில், நேற்று இந்த 22 மாடி கட்டிடத்திற்கு வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
என்ன தான் பாழடைந்த கட்டிடம் என்றாலும், மொத்தமே 15 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் வானுயர்ந்து நிற்கிற கட்டிடம் தூள் தூளாய் இடிந்து தரைமட்டமானது மனதைப் பிசைந்தது.
அடுத்த சில நொடிகளில் அந்த கட்டிடம் இருந்த இடமே தெரியாமல் முற்றிலும் தரைமட்டமான நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக கைகுழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கழிவு வாய்க்காலின் மிக மோசமான துர்நாற்றம், நுளம்பு கடி தொல்லை, பாம்புகளின் நடமாட்டம் என பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்து வாரக்கணக்கில் இரவு பகலாக படுக்கை விரிப்புக்களை விரித்து படுத்து உறங்குவதாகவும் பாதிக்கபப்ட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பெரும் அவலத்திற்கு விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேவேளை நாள் ஒன்றுக்கு 60 கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன நிலையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இவ்வாறு15 நாட்களுக்கு மேலாக வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது
நாட்டின் பல பகுதிகளிலும் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகக் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கடும் வறட்சி மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தால் தெங்குச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் காய்க்கும் தன்மையை தென்னைகள் இழந்து வருவதாகவும் செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் விலையும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரபல நடிகரான ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவி இத்திரைப்படத்திற்கு பிறகே, ”ஜெயம் ரவி” என்ற பெயர் பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து மணந்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.
” நல்ல ஜோடி, கியூட் ஜோடி” என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் பல வெளியாகின.
இதை மெய்ப்பிக்கும் வகையிலே, இன்ஸ்ட்ராகிமில் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்குவது, அவரை unfollow செய்வது, தன் மகன்களுடன் இருக்கும் படங்களை நீக்குவது என பல சமிக்சைகளை வெளிக்காட்டி வந்தார் ஆர்த்தி.
எனினும் பிரிந்து வாழ்வது குறித்து இருவரும் வெளிப்படையாக பதிலளிக்காமல் இருந்தனர். இந்நிலையில்தான், இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயம்ரவி.
அதில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், தங்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளம்ை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கெலியா மக்கள் வங்கி தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 16,000 ரூபாய் பணம் களவாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த கடந்த 3 ம் திகதி மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மஸ்கெலியா மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்த நபரொருவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் , நேற்றையதினம்(08) சந்தேகத்திற்கு இடமான முறையில் மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் தன்னியக்க இயந்திரம் பகுதியில் நடமாடிய யுவதி ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான யுவதியை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அதேவேளை, வங்கிகளில் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க செல்லும் அனைவரும் தங்களது பணத்தை மீள பெற வங்கி அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய நபர்களிடம் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் பெற உதவியை நாடவேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.
காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனை நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. காவ்யஸ்ரீ, மட்டக்களப்பு பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளாவார்.
இந் நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங், பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந் நிலையில், அந்த வாரத்தில் 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் அதாவது 16, 17 ஆகிய திகதிகளில் அரசு விடுமுறை என்பதால், மீதமுள்ள நாட்கள் குறித்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாலும், தொலைதூரத்தில் வசிக்கும் ஆசிரியர்கள் வாக்களிக்க விடுமுறை எடுப்பதாலும், அந்த நாட்களில் பாடசாலைகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என தேசிய தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கோரிக்கை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் பாடசாலை விடுமுறைகள் தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.