வடமாகாணத்தில் அதி கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வவுனியா பொலிசார் அகற்றியுள்ளதுடன், தொடர்ந்தும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இன்றும் (18.09) தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா நகரம், குருமன்காடு, திருநாவற்குளம், யாழ்வீதி, தாண்டிக்குளம், நகரப்பகுதி என்பவற்றில் வலம் வந்த பொலிசார் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அகற்றினர்.
தேர்தல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த தேர்தல் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரை நடைவடிக்கைளுகம் நிறைவடையும் நிலையில் பொலிசார் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, 9000 வரையிலான தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் வவுனியாவிலேயே அதிக சுவரொட்டிகள் அகற்றபட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி தனது தாயும், தந்தையும் உயிரற்ற சடலங்களாக விழுந்துக் கிடப்பதைப் பார்த்து மகள் கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் பகுதியில், துணி காய வைத்துக் கொண்டிருந்த மனைவி, மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி (48 ). பாடபுத்தகம், நோட்டுகள், எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி நீலா(46) நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கணவன், மனைவி காலை அலுவலகம் செல்வதற்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின்புறம் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த மின்கம்பியில் நீலாவின் கைகள் உரசிய நிலையில், மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த ரத்தினமணி உடனடியாக மனைவி நீலாவை தூக்கியுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரமாக பெற்றோரை காணாத அவரது மகள், வீட்டிற்கு சென்று பார்த்தபோது தாய் தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
உடனடியாக மகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய மாணவிகள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த சனிக்கழமை மாயமாகினர். சுதா அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த போலீசாருடன், அக்கம் பக்கத்தில் வாழும் மக்களும் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில், சற்று தொலைவிலுள்ள குளம் ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் கிடப்பது தெரியவரவே, ஓடோடிச் சென்ற பெல்லா பல்டி (14) என்னும் சிறுமி, பிள்ளைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கொடுக்க முயற்சித்தார்.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, இரண்டு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இன்னொரு துயரம் என்னவென்றால், குழந்தைகளின் தாய் சுதாவும், குழந்தைகளின் பாட்டியும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் தந்தையான டேவிட் அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்துள்ளார்.
ழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் இழந்து, அவர்களுடைய பெற்றோர் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
பால்மா விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”பாலுற்பத்தி அதிகரித்துள்ளமையினால் வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அதிகரித்ததன் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, நேற்று முதல்(10.09.2024) நடைமுறைக்கு வரும் வகையில் , 400 கிராம் பால்மா பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 190 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு சில மாதங்களில் பால்மா விலையை மேலும் குறைக்க முடியும். பால் உற்பத்தியின் போது அறவிடப்படும் வரிக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் நிதியமைச்சினால் தனிப்பட்ட தீர்மானம் மேற்கொள்ள முடியாது. சர்வதேச நாணயநிதியத்துடன் இணங்கியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு உடன்படும் பட்சத்தில் மேலும் 200 ரூபாவினால் பால்மா விலையினை குறைக்க முடியும்.
எனவே எதிர்காலத்தில் பால்மா இறக்குமதியை மட்டுப்படுத்தி உள்நாட்டில் பால்மா உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அதனால் பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.
எனினும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலனாக தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்திசையில் பயணித்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் பேருந்தில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் வரக்காபொல தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தலையிட்டு நிலைமையை சீர்செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனையடுத்து, சந்தேகநபரான காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய (2024.09.11) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 26,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 214,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,550 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 196,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 202,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 186,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இளைஞனை கடத்தி சென்று , தாக்கி இளைஞனிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி நகை என்பவற்றை கொள்ளையடித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞனை முச்சக்கர வண்டி ஒன்றில் மூவர் கடத்தி சென்று தாக்குதல் நடாத்தி பணம் மற்றும் வெள்ளி நகை என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதை அடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை தலைமறைவாகியுள்ள ஏனைய இருவரையும் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவுதினம் இன்று (11.09.2024) வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் நடைபெற்றது. இதன்போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தொடர்பான நினைவுப் பேருரைகளை து.டன்சிகா, பி.அனிஸ்ரன், ரொ.றக்ஸன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றினர்.
வவுனியா நகரசபை மற்றும் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் ஜெகதீஸ்வரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா,
நகரசபை உத்தியோகத்தர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டர் குண்டு ஒன்று நேற்று (10.09) மீட்க்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, வவுனியா பொலிசாருக்கு அறிவித்தையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுட்ன், அது மோட்டர் குண்டு என உறுதிப்படுத்தினர். விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அதனை அகற்றுவதந்கான நடவடிக்கையை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10.09) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது.
விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு மீண்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடிகாமத்தில் வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மூன்று மாதங்களின் பின் உலக கின்னஸ் மதிப்பீட்டுக் குழுவழனால் (world guiness assesment commity) இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி அன்று இந்நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கின்னஸ் சாதனை படைத்த இந்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த கின்னஸ் சாதனைக்கான விண்ணப்பம் முதல் அனைத்து விடயங்களையும் குறித்த மாணவியே தனது சுய முயற்சியில் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்கத் தயாராக உள்ளோம்.
எமது தேவை மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதுதான். பெறுபேறுகளை இறுதி செய்யும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும். இதனையடுத்து இன்னும் இரு வாரங்களுக்குள் செப்டெம்பர் மாதத்திற்குள்ளாகவே பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.