யாழ்ப்பாணம் – காத்தான்குடி பகுதியில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் தனது அறையில் உறங்கிக்கொண்டு இருந்தவேளை நேற்றிரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, விழுந்தவர் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உலகளவில் 27 நாடுகளில் எக்ஸ்.இ.சி (XEC) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த ஜூன் மாதம் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் குறித்த வைரஸ் இதுவரை பிரித்தானியா, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிர் காலத்தில் வேகமாகப் பரவத் தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த புதிய வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்தத் திரிபால் மனிதர்களுக்குத் தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்பத் தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்.இ.சி XEC எனும் இந்தப் புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரோன் திரிபில் இருந்து உருவாகியுள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20.09.2024) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று (18.09) நள்ளிரவுடன் நிறைவடைந்திருந்தது.
அதன்படி நேற்று (18) நள்ளிரவு 12.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் 21 சனிக்கிழமை வரையிலான காலப்பகுதி “அமைதி காலமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியில் தேர்தல் ஒழுங்குபடுத்தல்களுக்காக அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு தொடக்கம் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி சனிக்கிழமை வரையான அமைதி காலப்பகுதியில் எந்தவிதமான பிரச்சார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி போன்று 22 ஆம் திகதியும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி. குணசிறி தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டெம்பர் 20ஆம் திகதி மூடப்படும் எனவும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் (18.09) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.
ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தடியில் பயணித்த வேளை வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டிடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகம் யோகராசா ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதை என்னவெல்லாம் செய்யும்? என்பதற்கு இன்னொரு உதாரணமாக தன்னுடைய 3 வயது மகளைப் பறிகொடுத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்னாண்டஸ் எனும் பெண்மணி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் ஹெர்னாண்டஸ், கடந்த 11ம் தேதி மது அருந்திவிட்டு தனது 3வயது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளார்.
காரின் பின் இருக்கையில் தனது மகளை அமர வைத்துக் கொண்டு, பேஷன் லேனில் தனது காரை நிறுத்தி இருந்திருக்கிறார். அப்போது வெளியில் வெப்பநிலை 104 டிகிரியை எட்டியது. இந்நிலையில், ஹெர்னாண்டஸ் தன்னுடைய குழந்தையை காருக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனால் குழந்தை வெப்பம் தாங்க முடியாமல் கதறி அழுதது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.மேலும், வெப்ப வாதத்தால் ஏற்பட்ட சிக்கலே மரணத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து ஹெர்னாண்டஸின் பெரிய அத்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஹெர்னாண்டஸ் தனது 3 வயது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல சென்றதாக அவர் கூறினார்.
ஆனால் ஹெர்னாண்டஸ் குடிபோதையில் குழந்தையை காருக்குள் வைத்து, காரின் கதவுகளைப் பூட்டி விட்டார். வெயிலின் காரணமாக குழந்தை இறந்ததாக அவர் கூறினார். போலீசார் ஹெர்னாண்டஸின் காரை சோதனையிட்டதில், உள்ளே காலி மது பாட்டில்கள் இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு ஹெர்னாண்டஸைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்ற்னார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சோ்ந்தவர் பெருமாள். இவரது மகன் கண்ணன் (14). இவர், மாறாந்தை அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில், பள்ளி விடுமுறை நாள்களில் தன் தந்தையுடன் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தாா்.
இதனிடையே, கண்ணனின் தந்தை பெருமாளுக்கு வாதநோய் ஏற்பட்டதால் சில மாதங்களாக அவரது முழுப்பணியையும் கண்ணன் கவனித்து வந்தாராம். இந்நிலையில் இரு தினங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அவரை, பள்ளிக்குச் செல்லுமாறு தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த கண்ணன், தந்தை திட்டிய ஆத்திரத்தில் தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், மாணவன் கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வசித்து வந்த நரசிங் யாதவ், தனது இரண்டாவது மனைவியான விமலா பாசியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
நரசிங் யாதவ் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என பலரும் பலவிதமாக பேசிய நிலையில், முதல் மனைவி புஷ்பா, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக உள்ளூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பின், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தபோது, நரசிங் யாதவ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், நரசிங் யாதவின் இரண்டாவது மனைவி விமலா பாசி தனது கணவரை கழுத்தை நெரித்தது தெரியவந்தது. போலீஸ் அதிகாரி பிரதீப்குமார் கூறுகையில், ‘குடிப்பழக்கத்திற்கு அடிமையான நரசிங் யாதவ், சம்பவத்தன்று வீட்டில் இருந்த சொம்புகளை விற்று மது வாங்கினார்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் இருந்த சோம்பாவை விற்றுவிட்டு மது அருந்தியதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். என்னுடைய அம்மா வீட்டில் சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்தினாயா? என்று கூறி விமலா கணவனிடம் தகராறு செய்தார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் கணவரின் கழுத்தை நெரித்தார். விமலா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்,” என்றார்.
ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம்.
வன்முறைகள் இதேவேளை தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை.
வன்முறைகள், அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது. இதன்போதே இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றன.
வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது – 54) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்தார். சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த தயாரூபன் வைஷ்ணவன் (வயது – 30) என்ற இளைஞர் காணாமல்போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை நடந்த சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
வழமை போன்று வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர். இதன்போது, உயிரிழந்த நபர் நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை மீட்ட அங்கிருந்த மக்கள் – கடற்கரையை அண்டிய பரப்பு மணல் நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டரில் கொண்டு சென்று, பின்னர் அம்புலன்ஸ் மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி தொடர்ந்தது.
நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை. இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரை 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 24.8 சதவீத நோயாளிகள் அதாவது 9451 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 2097 நோயாளிகள் மற்றும் மேல் மாகாணத்தில் 15929 நோயாளிகள், இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 41.8 சதவீதமாகும்.
மத்திய மாகாணத்தில் 3895 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 10.2 சதவீதமாகும். வடமேற்கு மாகாணத்தில் 2521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது சதவீதமாக 6.6 சதவீதமாகும்.
வட மாகாணத்தில் 4738 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 2834 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 3875 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
இந்த மாதத்தில் 1446, கடந்த மாதம் 3897, ஜூலையில் 4506, மே மாதத்தில் 2647, ஏப்ரலில் 2234, மார்ச்சில் 3615, பெப்ரவரியில் 6007, ஜனவரியில் 10417 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் டெங்குவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலமுல்லை – மீகொட வீதியில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் ஏறச் சென்ற பெண் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் மற்றுமொரு நபருடன் தனியார் பேருந்தில் ஏறிய போது அதிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்துடன் சாரதி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
மீகொடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (18) அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக , இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,09,000 ரூபாவாகவும் உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,92,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 206,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 189,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,567.34 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வரும் 21 ஆம் திதை இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பிரசாரப்பணிகள் நிவடையவுள்ளது.
இந்நிலையில் சமூக ஊடகங்களின் நடத்தையை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமைதியான காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் பிரசாரம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஊடகங்களுக்கும் மௌன காலம் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, சமூக ஊடகங்களின் நடத்தையை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அரசியல் பிரசாரங்கள் தொடர்பில் விசேட ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உடனடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பல குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இறந்த உயிரினத்தின் செல்கள் அதன் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படும் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட “மூன்றாவது நிலையை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் நோபல் மற்றும் கலிபோர்னியாவின் சிட்டி ஆஃப் ஹோப் நேஷனல் மெடிக்கல் சென்டரின் அதிகாரி அலெக்ஸ் போஜிட்கோவ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உடலியலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, ஒரு அறிவியல் புனைகதை திரைப்படத்தின் கதைக்களத்தைப் போல எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு உயிரினம் மரணித்த பின் , அதன் செல்கள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் இல்லாத புதிய திறன்களைப் பெறுவதை அவர்கள் கண்டறிந்தனர்.
வாழ்வும் மரணமும் பாரம்பரியமாக எதிரெதிர்களாகப் பார்க்கப்படுகின்றன ஆய்வாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த உயிரினத்தின் உயிரணுக்களிலிருந்து புதிய பலசெல்லுலர் வாழ்க்கை வடிவங்கள் தோன்றுவது, வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ‘மூன்றாவது நிலையை’ அறிமுகப்படுத்துகிறது.
மேலும் 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறந்த தவளைகளின் தோல் செல்கள் ஆய்வகத்தில் உள்ள பெட்ரி டிஷுக்கு எவ்வாறு மாற்றியமைக்க முடிந்தது என்பதை அறிந்தனர், பின்னர் அவை “xenobots” எனப்படும் பலசெல்லுலர் உயிரினங்களாக தங்களை மறுசீரமைத்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சிக் குழு இது ஒரு புதிய செல் செயல்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறியது.
மூன்றாம் நிலை என்று அழைக்கப்படும் நிலையில் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது ஒரு மர்மமாகவே உள்ளது, ஆனால் ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் “மின்சுற்றுகள்” உயிர்ப்புடன் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகளவில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்பு 2025 மற்றும் 2050 க்கு இடையில் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி லான்காஸ்ட்’ இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தநிலைமைக்கு ‘சூப்பர்பக் நெருக்கடி’ என்று பெயரிட்டுள்ளது.
மருந்து-எதிர்ப்பு நுண்ணுயிர் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியானது உலகளாவிய பொது சுகாதார அபாயம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏறக்குறைய 520 மில்லியன் மக்களைப் பயன்படுத்தி நீண்ட பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையில், இந்த நெருக்கடியின் மிகப்பெரிய தாக்கம் முதியவர்கள் மீது இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் இருவரை வாழவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூளைச்சாவு அடைந்த யுவதியின் சிறுநீரகம், இரண்டு நோயாளர்களுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டதாகவும், நோயாளிகள் நலமுடன் இருப்பதாகவும் கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன விஜேசிங்க நேற்று (15) தெரிவித்தாதுள்ளார்.
கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தை சேர்ந்த சுபன்யா வீரகோன் என்ற 21 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலை தலைவலி ஏற்பட்டதையடுத்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிகிற்சை பலனின்றி கடந்த 13ம் திகதி அவர் மூளைச்சாவு அடைந்தமை உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பில் யுவதியின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, (14) திகதி இரண்டு நோயாளர்களுக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உயிரிழந்த யுவதியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினோம். நேற்று (15) அந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டு நலமாக இருப்பதாக அறிந்தோம்.
தன் மகள் இறந்துவிட்டாலும், அவளது உறுப்புகளுடன் வேறு யாரோ வாழ்கிறார்கள் என்று கேட்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சுபன்யா வீரகோனின் இறுதிக் கிரியைகள் நேற்று (16) கலிகமுவவில் உள்ள பத்தபாவின் பொது மயானத்தில் நடைபெற்றுள்ளது.