அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்கப்படும்.

அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பன்றி சுமுகமான முறையில் தேர்தலை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு உங்கள் உரிமை, அதனை நாட்டு மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு அவசர நிலைமையின் போதும் அழைப்பதற்காக முப்படையினரும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் பரபரப்பு : சகோதரன் இறந்த துக்கத்தில் சகோதரி எடுத்த முடிவு!!

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த பெண் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (18) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரே விபரீத முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

யாழில் பதிவு திருமணம் இடம்பெற்ற சில மாதங்களில் இளம் யுவதிக்கு நேர்ந்த பெரும் துயரம்!!

யாழ்ப்பாணத்தில் பதிவுத்திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவரை ஒன்பது மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த யுவதி பதிவுத்திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நுரையிரலில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வந்த ரிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!!

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

இதேவேளை வவுனியாவில் 128585 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிசார் உட்பட 2500 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி தேர்தல் தொகுதியில் 387 வாக்குப்பெட்டிகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது!!

வன்னி மாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியாமாவட்டத்தில் 128585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும் மன்னாரில் 90607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் இதுவரை 36 சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சாதாரண வாக்குஎண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12, முல்லைத்தீவில் 8, மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால்வாக்குகள் எண்ணுவதற்காக 10 நிலையங்களும் என மொத்தமாக 37 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் வாக்குகள் நாளை மாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்களிக்க செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

 

குடிமக்கள் வாக்களிக்க வரும் போது நிதானமாக இருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கான அறிவித்தல்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வாக்காளர்கள் வாக்களிக்க நிலையங்களுக்கு வரும் போது தவிர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்களை பார்த்திருக்கின்றோம்.

இதனால் ஏனைய வாக்காளர்களுக்கும் அவர்களால் இடையூறு ஏற்படலாம். எனவே வாக்களிக்க வரும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு குடிமக்களுக்கு உண்டு.

மேலும், சிலர் கூரிய ஆயுதங்கள், சிறு கத்திகள் உள்ளிட்டவற்றை வாக்குச்சாவடிக்குள் எடுத்து வருவதையும் நாங்கள் அவதானித்திருக்கின்றோம்.

ஒருவேளை, அவ்வாறு வருபவர்கள் தங்களது தொழிலின் நிமித்தம், தொழிலுக்கு செல்லும் வழியில் வாக்களிக்க வந்திருக்கலாம். எனினும், இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான சிறு தவறுகளால் வாக்குச்சாவடியில் குழுப்ப நிலை தோன்றினால், அது முழு வாக்குப் பதிவு செயல்முறையையும் தடுக்கக் கூடிய அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 20 வருட தடை!!

பெண் வீரர் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் 20 வருடங்களுக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட்டில் (CA)பணியாற்ற இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக துலீப் சமரவீர, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பால் அவுஸ்திரேலியாவினால் (CA) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், துலீப் சமரவீர, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

பாரதூரமான ஒழுக்க சீர்கேடு

இதன்போது பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் (CA) 20 வருடங்களுக்கு பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 40 கிலோமீற்றர் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

40 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை 100 – 150 கிலோமீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படவுள்ளது.

மேலும், பணியிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள சில வாக்காளர்களுக்கு வாக்களிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மூன்று நாள் விடுமுறையையும் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் : பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது வெளியில் திரையிடுவதால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம். எனவே, வன்முறைகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுத்த தகவல்!!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார். அதோடு பொலிஸாருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தமிழ் இளைஞன்!!

சுவிட்ஸர்லாந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. திருமலை பகுதியை சேர்ந்த 34 வயதான கோபிநாத் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுவிஸ் – சூரிச் நகரின் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன் அவர் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த வெளிநாட்டவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் குழந்தையின் தந்தையான இந்த இளைஞன் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அவர், திருமலை மண்மீது மிகுந்த பற்று கொண்டவராகவும் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் தேடப்படும் பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பில் சந்தேக நபரான பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பாரிய காணி ஆவண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

150 மில்லியன் ரூபா பெறுமதியான காணிக்கு போலியான ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கையகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, குறித்த பெண் வேறு ஒருவரைப் போன்று அடையாளப்படுத்தி போலியான பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் தெரிவித்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார், மக்களை கேட்டுள்ளனர். சந்தேக நபரான பெண்ணின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

 

தினமும் 200 தோப்புக்கரணம் : மயங்கி சரிந்த 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

90களில் பள்ளி மாணவர்களுக்கு சரியாக படிக்கவில்லை எனில் கடுமையான தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்குவார்கள். வெயிலில் முட்டிக்கால், விளையாட்டு மைதானத்தை சுற்றி வரச் செய்வது, தோப்புக்கரணம், முழங்கால், கைகளில் சராமரியான அடி என சகலமும் அரங்கேறும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களே அடிக்கும் அளவுக்கு நீ என்ன செய்தாய்? என பிள்ளைகளை தான் கண்டிப்பர். ஆனால் தற்போதைய கல்வி முறைகளில் அடித்தல் பெரும்பாலும் கிடையாது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட நூதன தண்டனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு பள்ளியில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து, பள்ளி முதல்வர் மாணவிகளை அழைத்து அனைவரையும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிலர் கால்கள் வீங்கியபடி அழுது கதறினர்.

பள்ளி முதல்வர் அப்போதும் தண்டனையை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்தனர்.

இதனைக் கண்டு மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விஷயம் அப்படியே பூதாகரமாக, ரம்பச்சோதவரம் எம்.எல்.ஏ., மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு தகவல் பறந்திருக்கிறது.

இதுகுறித்து எம்.எல்.ஏ “மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மனித தன்மையற்ற செயல். ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை அவசியமே இல்லை” எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!!

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றையதினம்(18) இடம்பெற்ற நிலையில் கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இதன்போது, மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 01 ஆம் திகதியன்று தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைக்கு தாயார் பாலூட்டிய வேளை குழந்தையால் பால் அருந்த முடியாததையடுத்து குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, குழந்தை கடந்த 16ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்கப் பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை நிறைவில் வினாத்தாள் கசிந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் பரீட்சையை நடத்தத் தயங்கப்போவதில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!!

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போதும் அதன் பின்னரும் உளவுத்துறையினர் தேவையான முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை தேடுவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் உதவியை நாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.