ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மகிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட, பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தர பாடசாலை ஆகியன இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தர பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20 திகதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.
அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதுவரை நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளை 1000 ஆக மட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
தற்போது தம்வசம் 30,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை அண்மித்து கடவுச்சீட்டை பெறுவதற்காக நீண்ட வரிசைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்றிரவு (04.09.2024) வேகக் கட்டுப்பட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது உருத்திரபுரத்தைச் சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் நேற்றிரவு (04.09.2024) இடம்பெற்ற மற்றுமொரு வீதி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றுக்குள் விழுந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது சந்திரசேகரம் புவனேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இரு சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறித்த விபத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் நேற்றைய தினம் (03.09) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் (S.C.I.B) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பிரிவிற்கான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுகந்த், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களுடன் உப பொலிஸ் பரிசோதகர் குணத்திலக்க, மற்றும் பொலிஸ் சார்ஜன்டுகளான விஜேசிங்க(12535), மெதகொட(70812), மேலும் பொலிஸ் கொன்ஸ்தாபிள் கிரிநாத் ஆகியோரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஆள் அடையாள அணிவகுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாப் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து வவுனியா இசை ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக “வவுனியாவின் குரல்2024” என்ற நிகழ்விற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இசை ஆர்வலர்கள் மாத்திரம் குறித்த போட்டியில் பங்குபற்றமுடியும்.
இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பிரிவு
ஒன்றில் 10-18 வயதிற்குட்பட்டோரும் பிரிவு இரண்டில்18 வயதிற்கு மேற்பட்டோரும் கலந்துகொள்ளமுடியும்.
போட்டியில் பங்குபற்றுவோர் பிறப்பு சான்றிதழ்/ தேசிய அடையாள அட்டை மூலம் வயதினை உறுதிப்படுத்த வேண்டும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
விண்ணப்பப்படிவங்களை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் அல்லது Divisional Secretariat Vavuniya அல்லது Vavuniya culture எனும் முகநுால் பக்கங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 10.09.2024 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பெறுகின்ற வெற்றியாளர்களுக்கு 2024ஆம் ஆண்டு நடாத்தப்படுகின்ற பிரதேச கலாசார விழாவில் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதேவேளை பின்னணி இசைக்காக “கரோக்கி” பயன்படுத்தலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த பள்ளி மாணவன் மரணமடைத நிலையில், மாணவனின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன. மாணவனின் இறுதி சடங்கில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் நரசிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாழைக்குலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், மகாலட்சுமி தம்பதியர். இவர்களின் மகன் தருண். 13 வயதுடைய தருண், அதிராம்பட்டினம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி பள்ளியிலிருந்து, தனது உறவுக்கார பெண்ணான பவ்யாவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாணவன் தருண் மூளைச் சாவு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்நிலையில் மாணவனின் தாயார் மகாலட்சுமி ஒப்புதலோடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வட்டாட்சியர் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் சிறுவனின் அனைத்து உடல் உறுப்புகளும் தானம் அளிக்கப்பட்டது .
இதில் மாணவர் உடலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அதிமுக அவை தலைவர் கல்யாணஓடை செந்தில் குமார் மாணவனை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி அரசு மரியாதை உடன் அடக்கம் செய்தனர். இந்த விபத்து குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார்.
தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இரவு முழுவதும் படித்து விட்டு காலையில் சமோசா விற்பனை செய்து இந்த சாதனையை எட்டியுள்ளார்.
குறிப்புகளை காகிதங்களில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். இதுகுறித்து மாணவர் சன்னிகுமார் கூறுகையில், “மருந்துகளை பார்க்கும் போது எனக்கு எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. மக்களை நோய்களில் இருந்து காப்பேன்.
எனது படிப்பை சமோசா தொழில் பாதிக்காது. அதனை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார். இதனிடையே, ‘பிஸிக்ஸ்வாலா’ என்ற நீட் தேர்வு பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலேக் பாண்டே என்பவர் சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ.6 லட்சம் நிதியை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அலேக் பாண்டே, “பிஸிக்ஸ்வாலா நடத்தும் நீட் தேர்வு பயிற்சியை டெலிகிராம் ஆப் மூலம் சன்னிக்குமார் படித்துள்ளார். அவருக்கு எங்களது ஆதரவு உண்டு” என்று கூறியுள்ளார்.
கல்லூரி கழிவறையில் பாம்புகள் இருப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலாக பரவி வருகிறது.
கழிவறையில் பாம்புகள்
தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் காலை, மாலை என்று இரண்டு பகுதி நேரமாக சுமார் 8000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிவறை நீண்ட காலமாக பயன்பாடில்லாமல் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சில மாணவிகள் கழிவறைக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள ஒரு கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததை கண்ட மாணவிகள் அலறியடித்து வெளியில் ஓடி வந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து மற்ற மாணவிகளிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள சில மாணவர்கள் பாம்புகள் இருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பின்னர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் நபர்களை கொண்டு கழிவறையில் உள்ள பாம்புகளை கல்லூரி நிர்வாகம் தேடியுள்ளனர்.
அப்போது, சில பாம்புகள் பிடிபட்டுள்ளது என்றும், மற்ற பாம்புகளை தேடி வருகிறோம் என்றும் தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த விமான பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி சுமார் 33 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கொச்சிக்கடை – பல்லன்சேன பிரதேசத்தில் வசித்து வரும் 47 வயதுடைய வர்த்தகர் எனவும் அவர் அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அபுதாபியில் இருந்து EY-394 Etihad Airlines விமானத்தில் இன்று அதிகாலை 03.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபர் எடுத்துச் சென்ற பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22,000 மென்செஸ்டர் ரக சிகரெட்டுகள் அடங்கிய 110 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தேகநபருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் அளவுடன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக கடவுச்சீட்டு வழங்கும் நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதற்காக அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய தொழில்நுட்ப டிஜிட்டல் முறைகள் இல்லாமல் சிங்கப்பூர் போன்ற நாட்டிற்குள் நுழையவும் முடியாது. ஏனைய நாடுகளின் விதிமுறைகளின்படி டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தப்படி, விலைமனு கோரல் அழைப்புகள் மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும்.
எனவே நீண்ட காலமாக கடவுச்சீட்டு வழங்கிய நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் கடவுச்சீட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஒக்டோபர் மாதம் வரை அச்சிட முடியாது. மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை விட குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன கடவுச்சீட்டு ஒக்டோபர் மாதம் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிபில – மொனராகல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இருகாணவிகளும் பயிற்சி வகுப்பிற்குச் சென்று மாலை ஐந்து மணியளவில் பிபில மொனராகலை வீதியில் உள்ள கடைக்கு முன்பாக வீதி ஓரத்தில் நின்ற வேளை விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது அப் பகுதியால் பயணித்த கார் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரு மாணவர்களின் மீது கார் மோதியுள்ளது.
படுகாயமடைந்த இரு மாணவர்களும் பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த துலாஷி கெஷாலா என்ற 15 வயது மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மைனர் பெண்ணை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டிபென்டிகே 15 வருட சிறைத்தண்டனைக்கு உத்தரவிட்டார்.
எனினும் உயர் நீதிமன்ற நீதிபதி கோரிக்கையை நிராகரித்தார், மேலும் இந்த அதிகாரி தனது சேவையைப் பெற வந்த ஒருவருக்கு எதிராக கடுமையான குற்றத்தைச் செய்துள்ளார் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தந்தை கடை நடத்தி வருவதுடன், கடையில் இருந்து சிறுவன் தனியாக வீட்டுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் விட்டிற்கு திரும்பி வராமையினால், வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்திற்கு தயார்படுத்தப்பட்ட நீர் நிரம்பிய வடிகாலில் சிறுவன் மூழ்கி கிடப்பதைக்கண்ட தந்தை ஆராச்சிகந்த வைத்தியசாலைக்கு அனுமதிக்க கொண்டு சென்று போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (01.09.24 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றமடைந்தனர்.
பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் ஜுடிமெயில் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் பொலிஸாருக்கு மர்ம நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் அரியமங்கலம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது, ஜான் ஜுடிமெயில் உறவினர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அரியமங்கலம் பொலிஸார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக பிரேதத்தை கைப்பற்ற முடிவு எடுத்தனர்.
பின்னர், அவர்களது உறவினர்களிடம் சுமுகமாக பேசி, ‘எங்களுக்கு முறைப்பாடு வந்துள்ளது, அதனடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும்.
இன்று மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் சிறுமியின் உடலை உங்களுக்கு பிரேத பறிசோதனை செய்து கொடுக்க முடியும்’ எனக் கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், ‘சிறுமிக்கு நூடுல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அடிக்கடி நூடுல்ஸ் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவார்.
அந்த வகையில் தான் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் போட்டு வாங்கி நேற்று இரவு சமைத்து சாப்பிட்ட பிறகு குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தினார்.
இதன் பின் அவர் படுக்கைக்கு சென்று விட்டார். விடிந்து பார்த்தபோதுதான் அவர் பிரேதமாக இருந்ததை அறிய முடிந்தது.
பின்னர், எங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது தான் பொலிஸார் எங்களது பெண்ணின் உடலை பறித்து சென்றனர்’ என்றனர். இதுதொடர்பில் அப்பகுதியில் உள்ள சிலர் தெரிவிக்கையில்,
‘சிறுமியை நேற்றிரவு பார்க்கும்போது நல்ல நிலையில் திடகாத்திரமாக இருந்தார். காலையில் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சிறுமி குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் இவர் உயிரிழந்திருக்கலாம்’ என அச்சம் எங்களுக்கு என தெரிவித்துள்ளனர்.