பேரூந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!!

நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் அட்டகாசம் செய்த இலங்கையர்கள் – பெண் உட்பட 8 பேர் நாடு கடத்தல்…….!!

இஸ்ரேலுக்கு கட்டுமான பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவரது மன மற்றும் உடல் நிலை சரியில்லாததால், அவரை மீண்டும் அழைத்து வருவதற்காக தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரியும் அவருடன் கொழும்புக்கு சென்றதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கைக்கு செல்ல நேற்று காலை டெல் அவிவ் விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட அவரை கடந்த சில தினங்களாக பல இலங்கையர்கள் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் தூதரகம் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

அவரைத் தவிர, இஸ்ரேலுக்கு வந்து போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மற்றொரு இலங்கையர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் அவரது கடவுச்சீட்டு தொலைந்து போனதால், அவருக்கு கட்டணம் வசூலிக்காமல் தற்காலிக கடவுச்சீட்டு வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவருடன், மது மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக நெருக்கடியை எதிர்கொண்ட 07 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

07 பேருக்கு மேலதிகமாக, மது அருந்திய பின்னர் குளியலறையில் வழுக்கி விழுந்து நிரந்தர ஊனமுற்ற ஒரு நபரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், கடந்த காலங்களில் இஸ்ரேலில் உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு இலங்கையர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

எனவே, மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர்களை இஸ்ரேலில் வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று தூதுவர் கேட்டுக்கொள்கிறார்.

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு : யார் அவர்?

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளார். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60). இவர் தனது 36 ஆண்டுகால பணிக்கு பிறகு ஓய்வு பெறவுள்ளார்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்த சுரேகா யாதவ் தனக்கு 24 வயதாக இருக்கும்போது இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சேர்ந்தார்.

இதனால் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றார் சுரேகா. இதையடுத்து, 1996-ம் ஆண்டில் சரக்கு ரயிலை இயக்கிய சுரேகா, 2000-ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில்களை ஓட்டத் தொடங்கினார்.

இந்நிலையில், 36 ஆண்டுகால ரயில்வே பணிக்கு பிறகு வரும் செப்டம்பர் 30-ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார் சுரேகா. தனது பயணத்தின் இறுதியாக ஹஸ்ரத் நிஜாமுதீன்-CSMT ராஜ்தானி எக்ஸ்பிரஸை (ரயில் எண்: 22222) சுரேகா ஓட்டியுள்ளார்.

மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றார். எளிய பின்னணியில் இருந்து வந்த சுரேகா யாதவ் கடின உழைப்பு, விடாமுயற்சியால் தனது கனவுகளை நனவாக்கி மற்றவர்க்கு உதாரணமாக இருக்கிறார்.

பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ரயில்வே துறையில் சுரேகாவுக்கு பிறகு தற்போது 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

30 ஆண்டுகளாக ஒருதலைக் காதல் : காதலிக்க மறுத்த குடும்ப பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்!!

காதலிக்க மறுத்த பெண்ணை கடந்த 30 ஆண்டுகளாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு முன் ஆணொருவர் தனது இளமைக் காலத்தில் பெண்ணொருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

அவரது காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய போதிலும் குறித்த பெண் அதனை ஏற்காமல் நிராகரித்துள்ளார். மேலும், வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஆணும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே அந்த பெண் திருமணம் ஆன ஆறே மாதத்தில் கணவரைப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார்.

இதனால் அவரை சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்லும் குறித்த ஆண், தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார்.

தொடர்ந்து பத்து வருடம் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஆண் 2015 ஆம் ஆண்டு குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் குறித்த பெண் தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குறித்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

10 வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் அந்த பெண்ணின் சாட்சி விசாரணை நடைபெற இருந்த நிலையில் குறித்த ஆண் மீண்டும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அந்த நபரைத் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்க மறுத்த பெண்ணை 30 ஆண்டுகளாகத் தொல்லை செய்து வந்தது மட்டுமல்லாமல் இரு முறை கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் ஆலயத்திலேயே பலியான பட்டதாரி இளைஞன் : அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை!!

யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.

மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். கிடைத்த தகவல்களின்படி, இவருக்கு செப்டம்பர் 14 முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஆலயத்தில் பூஜை செய்யச் சென்றபோது மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அவர் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

உறவினர்கள் ஆலயத்திற்கு சென்று பார்த்தபோது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளர். அவரை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளில், நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய விருந்தில் இலங்கையர்!!

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சி தொடர்பான தனியார் இரவு விருந்தில்,

இலங்கையில் பிறந்த அமெரிக்க வாழ் தொழில்நுட்ப தொழில்முனைவோரான சமத் பலிஹாபிட்டிய ( Chamath Palihapitiya), கலந்து கொண்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்,

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டதாக அமெரிக்காவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை , இந்த இரவு விருந்தில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கலந்து கொள்ளவில்லை. இந்த இரவு உணவு விருந்து வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் நடைபெற்றது.

49 வயதான சமத் பலிஹாபிட்டிய ( Chamath Palihapitiya), இலங்கையில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய கனேடிய-அமெரிக்கர் ஆவார்.

சமத் பலிஹாபிட்டிய, சோஷியல் கேபிடலின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிரபலமான ‘ஆல்-இன்’ பாட்காஸ்டின் இணை தொகுப்பாளர் ஆவார்.

பேஸ்புக்கின் முன்னாள் மூத்த நிர்வாகியான பாலிஹாபிட்டி, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிகர மதிப்புள்ள ஒரு பில்லியனர் துணிகர முதலீட்டாளர் ஆவார்.

தனித்தனியாக, இரவு உணவிற்கு முந்தைய நாள், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தலைமையில் AI கல்வி பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது, இதில் கூகிள் மற்றும் OpenAI இன் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேவேளை சர்வதேச அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் AI கல்வியை ஆதரிக்க கூகிள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் கொடுத்த விருந்தில் இலங்கையை பூர்வீகமாக் கொண்ட வெளிநாட்டு வாழ் இலங்கை தொழிலதிபர் ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

மகனை கொலை செய்த தந்தை : ஆபத்தான நிலையில் தாய்!!

குருணாகல், தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில், தனது மனைவி மற்றும் மகனை ஒருவர் கொடூரமாக தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட நபர் பட்டுவத்த ஹலமட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஆவார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு தடியால் தாக்கப்பட்டு இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் மீதான நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது. அத்துடன், தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தியர் தாக்குதல் விவகாரம் : பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17ஆம் திகதி(17.09.2025) அன்று இரவு வைத்தியர் ஒருவர் உரும்பிராய் சந்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடாத்தினர்.

பின்னர் குறித்த வைத்தியர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மூவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார்.

இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.

குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர் மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார், இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்த இருவரையும் விடுவிக்குமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கூறியமைக்கு அமைவாக பிணை எதுவுமின்றி அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் விடுவித்தமையானது குறித்த கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையே தொடர்பு உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து செய்திகள் வெளிவந்த நிலையிலேயே தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் இருவரும் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 குறையுது… பானி பூரிக்காக நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்த பெண்!!

இந்தியாவில் பலரும் விரும்பி சாப்பிடும் சாலையோர உணவுகளில் பானிப்பூரியும் ஒன்றாகும். பாமர மக்கள் முதல் பணக்காரர்களும் விரும்பி சாப்பிடும் உணவாக பாணிப்பூரி உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் வடோதராவில், ஒரு பெண் நடுரோட்டில் அமர்ந்துபல மணி நேரம் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடோதராவின் சுர்சாகர் ஏரி பகுதியில், ஒரு பெண் பானிபூரி கடைக்கு சென்றுள்ளார்.

ரூ.20-க்கு வழக்கமாக ஆறு பூரி வழங்கப்படும் என எதிர்பார்ப்புடன் இருந்த அவருக்கு, கடைக்காரர் நான்கு பூரிகளை மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனக்கு குறைந்த அளவு பூரி வழங்கப்பட்டதை கண்டித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கூடுதலாக இரண்டு பூரிகள் கிடைக்கும் வரை அங்கிருந்து நகர மறுத்துவிட்டார்.

இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. தகவலறிந்து போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

அப்போது அந்தப் பெண் போலீஸாரிடம் , “ரூ.20-க்கு ஆறு பூரிதான் சரியான விலை. அதை வாங்கி தாருங்கள்” என்று அழுதுகொண்டே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இறுதியாக, போலீஸார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. எனினும் அந்த பெண்ணுக்கு கூடுதலாக இரண்டு பூரிகள் கிடைத்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கிளிநொச்சியில் இடம்பெற்ற பெரும் துயரம் : இளைஞன் பரிதாபமாக பலி!!

கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யானை வைத்திருந்த அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறை!!

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, 15 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேக நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதோடு அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 2.06 பில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சபுவித மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

எல்ல – வெல்லவாய விபத்து : பேருந்துடன் மோதிய கார் தொடர்பில் புதிய தகவல்!!

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து பதினாறு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

விபத்துக்கு முன்னர் பேருந்து மோதிய ரூ.88 மில்லியன் மதிப்புள்ள சொகுசு ஜீப் ரக வாகனத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி அமைப்பில் வீடியோ பதிவு வசதி இல்லை என்று குறித்த காரின் உள்ளூர் வர்த்தகர் எல்ல காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்துள்ளார்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முக்கிய ஆதாரங்களைக் கண்டறிய, ஜீப் ரக வாகனத்தின் கண்காணிப்பு கருவி காட்சிகளை ஆய்வு செய்ய பொலிஸ் தரப்புகள் நீதிமன்ற உத்தரவை நாடியது.

இருப்பினும், வாகனத்தில் உள்ள நான்கு நேரடி கண்காணிப்பு கருவிகள் ஓட்டுநரின் வசதிக்காக மட்டுமே என்று விற்பனை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாகனத்தை ஓட்டுவதற்குத் தேவையான நேரடி படங்களை அவை வழங்கினாலும், அவை பதிவுகள் அல்ல என்று தொழில்நுட்ப ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த வகை சொகுசு வாகனங்களில் காணொளி பதிவு செய்யும் மென்பொருள், வாகன உரிமையாளரின் சிறப்பு கோரிக்கையின் பேரில் மட்டுமே நிறுவப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஜீப் ரக வாகனத்தின் உரிமையாளர் அத்தகைய கோரிக்கையை வைக்கவில்லை என்றும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வசதியைக் கோருவதில்லை என்றும் நிறுவனம் பொலிஸாருக்கு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர, விசாரணை முடியும் வரை வாகனத்தை விற்பனை செய்வதையோ, அதன் உரிமையை மாற்றுவதையோ அல்லது அதன் நிறத்தை மாற்றுவதையோ தடைசெய்து, உரிமையாளருக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கணவர் மரணம் : மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தாய் விபரீத முடிவு!!

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏர்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 32 வயதான தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கணவர் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும், 34 வயதான அவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் உயிரிழந்த பெண்னின் 12, 10 மற்றும் 5 வயதான மூன்று பிள்ளைகளும் (ஆண்கள் பிள்ளைகள்) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இறந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் 21 வயது யுவதியின் மோசமான செயல் : அம்பலமான தகவல்!!

ஹட்டன் , எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்லனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதே பிரதேசத்தை சேர்ந்த யுவதி, அயல் வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை களவாடியுள்ளார்.

அதோடு 95,000 ரூபாயை ஹட்டன் பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெற்றுக் கொண்டு, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தேயிலை மலையில் வீசியமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பணத்தின் உரிமையாளருக்கு , யுவதி மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸார், யுவதியை கைது செய்ததோடு, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பணத்தையும் மீட்டனர்.

சந்தேக நபரான யுவதி ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதி இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த கணவனின் வெறிச்செயல் : 33 வயதான மனைவிக்கு நேர்ந்த கதி!!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

மீரிகம ரெண்டபொல பகுதியில் வீட்டிற்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி எனப்படும் 2 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மதியம் தனது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்த நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நாடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் : பொலிஸ் எச்சரிக்கை!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, ஹபரணை பகுதியில் மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் 02 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணையின் போது, ​​பிஹிம்பியகொல்லேவ பகுதியில் இன்று 138 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு்ள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் ஒரு அச்சுப்பொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 42 வயதுக்குட்பட்ட ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

மேலும் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.