பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்!!

மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு!!

மூன்று மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண தொடருந்து சேவை இன்று (09.08.2026) மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேதமடைந்த தொடருந்து பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று(09) அதிகாலை கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை காலை 11.15 மணியளவில் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனரமைப்பு நடவடிக்கைகள், இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, இன்று காலை 5.15-க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் பிற்பகல் 1.05-க்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் தொடருந்துகளில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச இலக்கிய உலகில் மைல்கல்லை எட்டிய இலங்கைத் தமிழர்!!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய நாடக ஆசிரியரான எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ‘வின்டம்-கேம்ப்பெல்’ (Windham-Campbell Prize) விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.

நாடகத் துறைக்கான பிரிவில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, 1,75,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையைக் கொண்டது.\ எழுத்தாளர்களின் ஒட்டுமொத்தப் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது; நடுவர் குழுவினரால் ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வியலையும், தலைமுறை கடந்த இடப்பெயர்வு அனுபவங்களையும் மையமாகக் கொண்டு சக்திதரன் எழுதிய கவுண்டிங் என் கிரக்கிங் ‘Counting and Cracking’ மற்றும் தி ஜங்கல் என்ட் சீ ‘The Jungle and the Sea’ போன்ற படைப்புகளுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறிப்பாக, ‘Counting and Cracking’ நாடகம் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் 1,00,000 டொலர் மதிப்பிலான ‘விக்டோரியன் இலக்கியப் பரிசை’ வென்றதுடன், லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

1983 கருப்பு ஜூலை கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான தனது குடும்பப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே சக்தி தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

தற்போது இலங்கையில் தனது முதல் திரைப்படமான தி லாப் ஒப் லக்ஷ்மி ‘The Laugh of Lakshmi’ படப்பிடிப்பில் சக்திதரன் ஈடுபட்டுள்ளார். எங்கள் கதைகள் உலக மேடையில் இடம்பிடித்திருப்பது பெருமையளிக்கிறது என அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஆசிய மற்றும் ஆஸ்திரேலியா சார்ந்த இந்தக் கதைகள், என்னைப் பற்றி அறியாத கடல் கடந்த ஒரு நடுவர் குழுவை ஈர்த்துள்ளது என்பது எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சக்திதரன் தற்போது மேற்கு சிட்னியில் ‘குறிஞ்சி’ (Kurinji) எனும் நாடக நிறுவனத்தின் இயக்குநராகவும், இணை நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சகோதரன் நடத்திய கத்திக்குத்து : பெண் பரிதாப மரணம்!!

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, செக்கடிப்புலவு கிராமத்தைச் சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று (08.04) இரவு, செல்வமலருக்கும் அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபோதையில் இருந்த குறித்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வமலரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், காயங்கள் பலமாக இருந்தமையால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடியாகக் களமிறங்கிய பூவரசங்குளம் பொலிஸார், தலைமறைவாக இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட தனிப்பட்ட கோபமே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்க நகை விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்க ஆபரணங்கள் விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டில் தங்க ஆபரணங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

இவ்வாறு தங்க ஆபரணங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக தங்க ஆபரணங்களின் விற்பனை 25 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் சுப்பிரமணியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்றைய தினம் 24 கரட்டைக் கொண்ட ஒரு பவுண் தங்கம் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது 7 ஆயிரம் ரூபாய் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாகவே உலக சந்தையிலும் இலங்கையிலும் தங்க ஆபரணங்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

இதனால் தங்க ஆபரண தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்வது வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திடீரென தீப்பற்றி எரிந்த தொடருந்து இயந்திரம் : அதிகாரிகள் தீவிர விசாரணை!!

திருகோணமலை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து என்ஜின் இயந்திரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.​ குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08.04.2026) இடம்பெற்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை திருகோணமலை தொடருந்து நிலைய வளாகத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த என்ஜின் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து என்ஜின் பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதனை அவதானித்த தொடருந்து நிலைய ஊழியர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.​

சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரத்தில் திடீரென தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.

தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு வரும் தொடருந்துகளை நிலைய எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திரம், இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த தொடருந்து பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன், தீயணைப்பு துறையினரின் அறிக்கை விரைவில் கிடைக்கும் என தெரிவித்தார்.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படும் நிலையில், தொடருந்து திணைக்களத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.​

இந்த தீ விபத்தில் தொடருந்து இயந்திரம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் வெப்பநிலை : இலங்கை மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண், ‘அவதானிப்பு’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதிக சோர்வு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், தொடர்ச்சியான உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருத்தல், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்தல் அல்லது மட்டுப்படுத்தல், நிழலான இடங்களில் ஓய்வெடுக்க முன்னுரிமை அளித்தல் ஆகிய மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

விமானம் மீது மோதிய கார் : விமான நிலையத்தில் அசம்பாவிதம்!!

இந்தியா கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென நகர்ந்து வந்து விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரின் ஹேண்ட் பிரேக் செயலிழந்ததால் டிரைவர் இன்றியே நகரத் தொடங்கிய கார், விமானத்தின் மீது மோதிதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் எஞ்சின் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் மோதியதில் சேதமடைந்த இண்டிகோ நிறுவனத்தின் ஏ320 விமானம் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை விமானம் மீது மோதிய அந்தக் கார் உணவு கொண்டு செல்லும் வாகனம் என கூறப்படுகின்றது.

 

பணத்தாசையால் நேர்ந்த விபரீதம் : மனைவியையும் மகனையும் 2 கோடிக்கு விற்ற கணவன்!!

பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் ஒரு நபரின் கொடூரச் செயல், தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தையே அடகு வைக்கும் விதமாக, ஆசை மனைவியையும் பெற்ற மகனையும் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஒரு கும்பலிடம் விற்றுள்ளார் அந்த நபர்.

காணாமல் போனதாகத் தனது குடும்பத்தினர் பற்றித் தொடக்கத்தில் நாடகமாடிய இவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் இந்த உண்மை வெளிவந்தது.

தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும், கடன் தொல்லைகளைத் தீர்க்கவும் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி தனது மனைவியையும் குழந்தையையும் ஒரு மர்ம கும்பலிடம் ஒப்படைத்துவிட்டு, பெரும் தொகையை அவர் கைமாற்றியுள்ளார்.

இது குறித்து ரகசியமாகத் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட தாய் மற்றும் மகனை ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்து மீட்டனர். அவர்களை விலைக்கு வாங்கிய கும்பலுக்கும், கணவனுக்கும் இடையே இருந்த பணப் பரிமாற்ற ஆதாரங்களை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கணவன் உட்பட அந்தக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விசாரணையில், இந்தக் கும்பல் இதுபோன்ற குடும்பப் பின்னணி கொண்டவர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

கைதான நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என்பதால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழர் பகுதியொன்றில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம் : காளைகளால் கண்ணீரில் மூழ்கிய கிராமம்!!

வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு உணவளித்துப் பராமரித்த எஜமானின் இறுதி ஊர்வலத்தில், அவரது பூதவுடலை காளைகளே சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் மன்னார் – நறுவிலிக்குளத்தில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மன்னார், நறுவிலிக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிருடன் இருந்தபோது, “நான் இறந்த பின்பு, எனது உடலை நான் வளர்த்த காளைகள் பூட்டிய மாட்டு வண்டியிலேயே மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தனது இறுதி விருப்பத்தை உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அவரது மறைவைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது அவரது விருப்பப்படியே காளைகள் பூட்டிய வண்டியில் பூதவுடல் வைக்கப்பட்ட இறுதி கிரியைகளுக்காக எடுத்து செல்லப்பட்டது.

தனது எஜமானைப் பிரிந்த துயரம் அந்தக் காளைகளின் முகத்திலும் சோகமாகப் பிரதிபலித்தது. இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கிராம மக்கள், எஜமானின் விசுவாசமிக்க அந்தக் காளைகளின் செயலைக் கண்டு சோகத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புறாவை பிடிக்க சென்று மலசலகூடக் குழிக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!!

அனுராதபுரம் – மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு அனாவாரியாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தனது 9 மற்றும் 13 வயதுடைய சகோதரர்களுடன் இணைந்து, அப்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீர் நிறைந்த மலசலகூடக் குழிக்குள் அச்சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனைத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நடுவீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி : வாளிகளுடன் மக்கள் செய்த செயல்!!

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விரைவான நடவடிக்கை

விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் விரைந்த பிரதேச வாசிகள், வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

வாட்டிய வறுமையை போக்க பெற்ற குழந்தையை விற்ற தம்பதி!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் , வறுமையின் கொடுமை காரணமாக, பிறந்து மூன்று நாட்களே ஆன தமது ஆண் குழந்தையை 2.25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் பரித்கோட் பகுதியைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி தம்பதியினரே இந்த சம்பவத்தை செய்துள்ளனர். ஹரியானாவின் பகதூர்கர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததை அடுத்து, குழந்தை விற்ற சம்பவம் அம்பலமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது டெல்லியில் உள்ள பிள்ளைப் பேறற்ற தம்பதியினருக்கு , குழந்தையை 9.25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குழந்தையை மீட்ட காவல்துறையினர், ஜஜ்ஜாரில் உள்ள சமூக சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து,

குழந்தையின் உண்மையான பெற்றோரிடம் விசாரணை செய்த நிலையில், தாம் கடும் வறுமையில் வாடுவதால், தமது மகன் சிறந்த முறையில் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் குழந்தையை விற்றதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேரை கைது செய்துள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ம் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

உயர்தரப் பரீட்சை முடிவுகள் : பல்கலைகழக தகுதியில் வடமாகாணம் முதலிடம்!!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் முன்னிலையில் பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அனைத்து விண்ணப்பதாரர்களையும் கருதும் போது, பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில் வட மாகாணம் (65.19 வீதம்) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாடசாலை விண்ணப்பதாரர்களின் மாகாண ரீதியான பெறுபேறுகள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில், பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களில் மேல் மாகாணம் (69.43 வீதம்) முதலிடத்தில் உள்ளது.

மேல் மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 53,275 மாணவர்களில் 36,987 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளை வடமேல் மாகாணம் (68.48 வீதம்) மற்றும் வட மாகாணம் (66.91 வீதம்) ஆகியன முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.

மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றவர்களில் மேல் மாகாணம் அதிக எண்ணிக்கையையும் (2,328 மாணவர்கள்), அதிக சதவீதத்தையும் (4.37 வீதம்) கொண்டுள்ளது.

வடமத்திய மாகாணம் (60.91 வீதம்) பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளதுடன், அங்கு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் சதவீதம் (11.02 வீதம்) மற்றைய மாகாணங்களை விட அதிகமாகக் காணப்படுகிறது.

அதேவேளை நாடளாவிய ரீதியில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் 66.12 வீதம் பேர் பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளனர். இதில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என அனைவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து விண்ணப்பதாரர்களையும் கருதும் போது, பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில் வட மாகாணம் (65.19 வீதம்) முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேல் மாகாணம் 63.76 வீத சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், தென் மாகாணம் 63.69 வீத சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் சதவீதம் 12.75 வீதம் ஆகக் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்தமாகப் பரீட்சைக்குத் தோற்றிய 281,810 விண்ணப்பதாரர்களில் 176,527 (62.64 வீதம்) பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன

முச்சக்கரவண்டி சாரதியால் பறிபோன 06 வயது சிறுமியின் வாழ்க்கை!!

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமான செலுத்துகையே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்!!

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய ‘டித்வா’ புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (09.04.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்தில் இந்த அறிவிப்பு வடக்கு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.