நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சிறுவர்களின் நினைவாற்றல் மட்டுமல்லாமல் பெரியவர்களின் நினைவாற்றலும் குறையக்கூடும் என்று சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த நாட்களில் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த நாட்களில் வியர்வையாக உடலில் இருந்து நீரும் உப்பும் வெளியேறுவதால், ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
இந்த நிலையில் ஒருவர் தொடர்ந்து தண்ணீர் குடிக்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டால், அவர் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
இதன் காரணமாக, மூளை செயல்பாடு குறைதல், கற்றல் திறன் குறைதல், தலைவலி, வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட, எலுமிச்சை, மாதுளை, சூப்கள், இளநீர், ஜீவனி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அதிகமாகக் குடிக்க வேண்டும்.
மேலும் குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (09.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நோர்வூட் – பொககவந்தலாவ, மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே ஆற்றில் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
எனினும், சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மின்னல் அபாயம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (08.04.2026) அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தைத் தரவுகளின்படி, தங்கத்தின் விலை 2.3% அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில், மற்ற உலோகங்களில், வெள்ளியின் விலை 4.3% அதிகரித்து 76.08 டாலராக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (08) தங்கத்தின் விலையில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு செட்டிகுளம் தீர்வாகாது என வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக செட்டிகுளம், இரணை இலுப்பைக்குளம் மற்றும் ஓமந்தை ஆகிய இடங்களை அடையாளப்படுத்துவது மற்றும் அங்கு குப்பைகளைக் கொட்ட முற்படுவது தொடர்பில் செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளராக எனது கடும் கண்டனத்தையும் தெளிவான விளக்கத்தையும் முன்வைக்கிறேன்
இடமாற்றம் தீர்வாகாது அது எமது சபையின் இறையாண்மை. வவுனியா மாநகர சபை மற்றும் ஏனைய பகுதிகளின் குப்பைகளை செட்டிகுளம் பிரதேச சபை எல்லைக்குள் கொண்டு வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி ஒரு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தைப் பேணுவது அந்தந்த சபையின் தனிப்பட்ட பொறுப்பாகும்.
எமது பிரதேச மக்களே எமது எல்லைக்குள் உள்ள குப்பை மேடுகளால் ஏற்கனவே பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா மாநகரத்தின் சுமையை எமது மக்கள் மீது திணிப்பது எவ்விதத்திலும் அறமாகாது.
சாளம்பைக்குளம் குப்பை மேடு வரலாற்று ரீதியான உண்மை இது தான். சாளம்பைக்குளம் குப்பை மேடானது சுமார் 60 வருட கால வரலாற்றைக் கொண்டது. என நான் நினைக்கிறேன் 1992 ஆம் ஆண்டு முதல் அங்கு குப்பைகள் முறையாகக் கொட்டப்பட்டு வருகின்றன. என தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய மக்கள் குடியிருப்புக்கள் அந்த குப்பை மேடு அமைந்த பின்னரே அங்கு உருவாகின என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், அங்கு வாழும் 500 குடும்பங்களின் சுகாதார நிலையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. அதற்காக ஒரு பிரதேசத்தின் பிரச்சனையை இன்னொரு பிரதேசத்திற்கு மாற்றுவது ஆரோக்கியமான நிர்வாக நடைமுறையல்ல.
மத்திய அரசாங்கமும் மாவட்ட அபிவிருத்திக் குழுவும் இதற்காகப் பாரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். மாற்று இடங்களைத் தேடுவதை விடுத்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பைகளை மீள்சுழற்சி (Recycling) செய்யவும் அவற்றை எரிசக்தியாக மாற்றவும் அல்லது உரமாக்கும் செயற்திட்டங்களை (Waste-to-Energy projects) சாளம்பைக்குளத்திலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேசிய சுற்றுச்சூழல் சட்டம் (National Environmental Act) மற்றும் சுகாதாரக் கட்டளைச் சட்டங்களின்படி ஒரு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு முன்னர் முறையான சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்பட வேண்டும்.
செட்டிகுளம் மக்கள் மற்றும் சபையின் அனுமதி இன்றி இவ்வாறான தீர்மானங்களை திணிக்க முடியாது. இது குறித்து செட்டிகுளம் பிரதேச சபை கூடிய விரைவில் கூடி உத்தியோகபூர்வமான தீர்மானத்தை எடுத்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும்.
வவுனியா மாநகர சபை தனது குப்பைகளைத் தனது எல்லைக்குள்ளேயே அல்லது அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன பொறிமுறைகளைப் பயன்படுத்திச் சுத்திகரிக்க வேண்டுமே தவிர செட்டிகுளம் போன்ற வளர்ந்து வரும் பிரதேசங்களை குப்பைத் தொட்டியாக்கக்கூடாது.
மக்களின் ஆரோக்கியம் மற்றும் சூழல் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் ஓட்டுநருடன் மற்றுமொரு நபரும் பயணித்துள்ளதுடன், இந்த விபத்தில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வந்த தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிப்பதற்காகக் கையடக்கத் தொலைபேசியை எடுக்க முற்பட்ட போதே, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் பல்லேகம, சிறிபுர பகுதியைச் சேர்ந்த விஹங்க பாலித்த ஜயலத் என்ற 23 வயதுடைய இளைஞராவார். சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்ப , விபத்து ஏற்பட்டபோது வீதியால் சென்ற மருத்துவ தம்பதிகள் உதவி புரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடாங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையே இன்று (06) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஊர்தியுடன், சிமெந்துத் தூள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த வேளையில் அந்த வீதியால் பயணித்த கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் கித்மா குணரத்ன மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல
ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தின் வைத்தியர் வித்வ களுதொட்ட ஆகியோர், உடனடியாகச் செயற்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
டயர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து மிதிகம நோக்கிச் சென்ற கொள்கலன் ஊர்தியின் பின் சக்கரம் ஒன்றில் காற்று வெளியேறியதால்,
அதனை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்திச் சாரதி சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருந்த போதே பின்னால் வந்த சிமெந்து பவுசர் வாகனம் அதன் மீது மோதியுள்ளது.
விபத்தின் போது சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன் பகுதியில் மூவர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியே எடுத்து, அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை மீட்பதற்கு சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்துள்ளது. இதன் காரணமாக ஒரு மருங்கு சுமார் 2 மணித்தியாலங்கள் மூடப்பட்டதுடன், சாரதியை வெளியே எடுக்கும் போது சுமார் அரை மணித்தியாலம் வீதி முழுமையாக மூடப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மீட்பு பணியாளர்களுடன் நின்று தாமும் சேவையாற்றிய மருத்து தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.
கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 120 அடி பள்ளத்தில் வான் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 12 வயது சிறுவன் தனது முழு குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை துணிச்சலுடன் செயற்பட்டு குறித்த சிறுவன் காப்பாற்றியுள்ளார்.
கொத்மலை பகுதியைச் சேர்ந்த காமினி திசாநாயக்க தேசிய பாடசாலையில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஹிரனித சமரகோன் என்ற சிறுவனே இந்த துணிகர செயலை செய்துள்ளார்.
வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தனை நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் மற்றும் உறவினர் ஒருவர் பயணித்த வான், அதிகாலை 1.00 மணியளவில் ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இப்பகுதியில், நள்ளிரவு நேரம் என்பதால் வான் பள்ளத்தில் விழுந்ததை வீதியால் சென்றவர்கள் கவனிக்கவில்லை. விபத்தின் போது வான் நசுங்கியதில் சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
எனினும், வானில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஹிரனித, தானும் காயமடைந்திருந்த போதிலும் நசுங்கிய வானில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது பெற்றோரிடம் கவலைப்பட வேண்டாம், நான் உங்களை எப்படியாவது காப்பாற்றுகிறேன் என தைரியம் கூறியுள்ளார்.
பின்னர், தூக்கி வீசப்பட்டிருந்த மற்றைய நபரையும் அழைத்துக்கொண்டு, கடுமையான இருளில் கடும் சிரமத்திற்கு மத்தியில் மரங்களையும் கற்களையும் பற்றிக்கொண்டு தவழ்ந்து வீதிக்கு வந்துள்ளார்.
சுமார் 120 அடி பள்ளத்தாக்கிலிருந்து வீதிக்கு வந்த சிறுவன், அந்த நேரத்தில் வீதியால் சென்ற வாகனங்களை நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் பல வாகனங்கள் நிறுத்தாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அந்த வீதியால் வந்த ஒரு சிறிய ரக லொறி நிறுத்தப்பட்டது. அந்த லொறியில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து சிறுவன் விவரித்ததையடுத்து, அவர்கள் உடனடியாக கொத்மலை பொலிஸாருக்கும் வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கினர்.
அத்துடன், மக்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் அந்த லொறி சாரதி மற்றும் உதவியாளர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றின் பிரபலமான சீரியலில் நடித்துகொண்டிருந்த இலங்கை நடிகை சுபாஷினி தனது 37 ஆவது பிறந்தநாளுக்கு 7 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
சீரியலில் நடித்து வந்த சுபாஷினி கடந்த 05 ஆம் திகதி இரவு சென்னை ஐயப்பன்தாங்கலில் இருக்கும் வாடகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சுபாஷினியின் கணவர் பிபின், சமூக வலைத்தளத்தில் மனைவிக்காக, உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். பிபின் சந்திரா சமூகவலைத்தள பதிவில்,
பெங்களூரில் வசித்து வரும் பிபின் சந்திரா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, உன் ஆத்மா சாந்தி அடையட்டும் போபா. உன்னை போன்று என்னை யாரும் காதலித்தது இல்லை. நான் உன்னை போன்று வேறு யாரையும் காதலித்தது இல்லை.
இன்று நீ உயிருடன் இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. என் நினைவுகளில், எனக்குள் நீ வாழ்கிறாய். நீ இங்கு இருப்பது போன்றே உணர்கிறேன். என்னை விட்டு ஏன் சென்றாய்?. உன் பிறந்தநாள், நம் திருமணநாளை கொண்டாட விரும்புகிறேன். நீ இல்லாமல் நான் இல்லை. அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டோமே பேபி என தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 12 ஆம் திகதி சுபாஷினியின் பிறந்தநாளாகும். மேலும் ஏப்ரல் 21 ஆம் திகதி அவரின் திருமண நாளாகும். இப்படியொரு ஸ்பெஷலான மாதத்தில் வீடியோ காலில் கணவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார் சுபாஷினி.
அவரின் கடைசி இன்ஸ்டா போஸ்ட் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர் போட்ட போஸ்ட் மாதிரியே இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
நாவலப்பிட்டி – கம்பளை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உலப்பனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர் நாவலப்பிட்டி நகரில் நடைபெறும் கொரிய மொழி கற்பிக்கும் மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த இளைஞர் அதிவேகமாகப் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டிப்பர் வாகனத்தின் சாரதி நாவலப்பிட்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தனது சட்டபூர்வ மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடியான முறையில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை, வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இல. 01 நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.
வத்தளை, அக்பர் டவுன் பகுதியில் வசித்து வந்த அந்த கணவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். வேறொரு பெண்ணின் உதவியுடன், வங்கி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி அவர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டது நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.
குறிப்பிட்ட அந்தப் பெண் வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில், தான் ஈட்டிய பணத்தை இலங்கையில் உள்ள தனது அரச வங்கிக் கணக்கில் தொடர்ந்து வரவு வைத்து வந்தார்.
சிறிது காலத்திற்குப் பிறகு அவர் இலங்கைக்குத் திரும்பியதும், தனது கணவருடன் இணைந்து சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கணக்கு விவரங்களைச் சரிபார்த்தார்.
அப்போது, அந்தக் கணக்கிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளில்,
அந்த கணவர் வேறொரு பெண்ணை வங்கிக்கு அழைத்துச் சென்று, வங்கி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி அந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டது அம்பலமானது.
இந்த நிதி மோசப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட காவல்துறையினர் மேற்கொண்டனர்.
கிரிபத்கொட காவல் நிலையப் பொறுப்பதிகாரியான (OIC) தலைமை ஆய்வாளர் கே. ஓ. பி. அபேரத்னவின் வழிகாட்டுதலின் பேரில், குற்றத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆய்வாளர் ரோஹன நந்தசிறி மற்றும் பல்வேறு புகார்கள்
விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உதவி ஆய்வாளர் டபிள்யூ. எம். டி. திலகசிறி ஆகியோர் இணைந்து இந்த விசாரணையை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் ரத்நாயக்க (90071) மற்றும் குலசிங்க (10789) ஆகியோர், சந்தேக நபராகிய அந்தக் கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இலங்கையில் இன்றைய தினம் (07.04.2026) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்றும் அதே விலை நிலவரமே தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (07.04.2026) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4651.1 டொலராக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 டொலர்களாக பதிவாகியிருந்தது. அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 72.9 டொலராக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
90 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (07.04.2026) உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது இந்தச் சலுகை வழங்கப்படும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கான செலவை அரசாங்கமே ஏற்கும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை பொலிஸார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(06.04.2026) இடம்பெற்றுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த 20 வயதான மாணவியான லூனா துகாட், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
அவர், கடந்த (05.04.2026) ஹட்டனின் பொன்னகர் வீதியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்தில் தனது சில நண்பர்களுடன் தங்கியிருந்து, சிங்கமலை சிகரத்தை நோக்கி ஒரு ஆராய்ச்சி திட்டத்திற்கு பயணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று(06) காலையில் சிங்கமலை சிகரத்தைப் பார்க்கச் செல்வதாகக் கூறி சென்ற யுவதி, திரும்பி வருவதற்கான வழியைக் கண்டறிய மலை உச்சிக்குச் சென்றிருந்த போது அவரால் கீழே இறங்குவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்னர், இது குறித்து ஹட்டனில் உள்ள அரசு சாரா நிறுவன அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரைப் பொறுப்பேற்றிருந்த ஹட்டன் பகுதி அதிகாரி ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் தலைமையகத்தின்
பிரதம ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், ஹட்டன் பொலிஸ்ஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழுவினர், சிங்கமலை வனப்பகுதி வழியாக மலை உச்சிக்குச் சென்று யுவதி அமர்ந்திருந்த இருப்பிடத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
மலை உச்சியில் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்த அந்த யுவதியை பாதுகாப்பாக மீட்டு, பொலிஸார் கொண்டு சென்ற உணவுகளையும் கொடுத்து பாதுகாப்பாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், காட்டுப் பகுதியிலிருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக ஹட்டன் பொலிஸாருக்கு குறித்த யுவதி நன்றி தெரிவித்துள்ளார்.
வவுனியா – சாளம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாளம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட இடம் பார்வையிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் நேற்று(06.04.2026) அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில், அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாளம்பைக்குளம் புதிய வீட்டு திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக வவுனியா மாவட்டம் குப்பை அகற்றுவதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு முதல், சாளம்பைகுளம் பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட நிலத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் தற்போது ஒரு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் குப்பைகளை அகற்றுவதற்கு முறையான அமைப்பு இல்லாததால் சுகாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனை எழுந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் குப்பைகளால் அருகிலுள்ள சாளம்பைகுளம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
மேலும், மழைநீருடன் கலக்கும் கழிவுகளால், சுற்றியுள்ள கிணற்று நீர் மாசுபடுதல் மற்றும் சுவாச நோய்கள் தோன்றுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
குழு நியமனம்
குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தனர்.
இந்த நிலைமை குறித்துக் கண்டறிய வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான திரு.உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்ரிஷாத் பதியுதீன்,
மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகள், வனப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகரசபை, பிரதேச சபை ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவினர் சாளம்பைகுளம் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு இருந்தனர்.
அதன்பின், மாவட்ட செயலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு, குப்பைகளை அகற்றுவதற்காக 03 சிறப்பு இடங்கள் முன்மொழியப்பட்டன.
வவுனியா செட்டிகுளம், இரணை இலுப்பபைகுளம் மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகள் முன்மொழியப்பட்டு இவ் விடயத்தை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.
மேலும், மாநகர சபையால் தினந்தோறும் கொண்டுவரப்படும் குப்பைகளை மண் கொண்டு மூடும் பணி மாநகர சபையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இப்பணிக்காக இரண்டு அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதன் மூலம் 500 குடும்பங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அகமதாபாத்தில் ரெடிமேட் தோசை மாவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த அச்சத்தை இச்சம்பவம் அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், நேற்று இரவு கடையில் வாங்கிய ‘ரெடிமேட்’ தோசை மாவில் தோசை சுட்டுச் சாப்பிட்டுள்ளனர்.
இதுவே அந்தக் குடும்பத்தின் இரண்டு உயிர்களைப் பறிக்கும் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் அவர்களது 4 வயது சிறுமி ஆகியோர் இரவு உணவாகத் தோசை சாப்பிட்டுள்ளனர். உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே, மூவருக்கும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தோசை சாப்பிடாத அந்தத் தம்பதியினரின் 3 மாதப் பச்சிளம் குழந்தையும் திடீரென உயிரிழந்தது.
தோசை சாப்பிடாத 3 மாதக் குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்துப் போலீசார் மற்றும் மருத்துவர்கள் தீவிர ஆய்வு நடத்தினர். இதில், தோசை சாப்பிட்ட தாயின் உடலில் கலந்த நச்சுத்தன்மை,
அவர் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த போது அந்தக் குழந்தையையும் தாக்கியிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்தத் தம்பதியினர் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அகமதாபாத் போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
அந்தக் குடும்பத்தினர் பயன்படுத்திய மீதமுள்ள தோசை மாவு மற்றும் அவர்கள் வாங்கிய கடையிலிருந்த அதே ரக மாவு பாக்கெட்டுகள் ஆய்வகச் சோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மாவு பாக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் என அப்பகுதி கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோடைக் காலம் என்பதால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாவுப் பொருட்கள் விரைவில் புளித்துப்போகவோ அல்லது பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படவோ வாய்ப்புள்ளது.
எனவே, ரெடிமேட் மாவு வாங்கும்போது அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பதுடன், ஏதேனும் துர்நாற்றம் வீசினால் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.