காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாகக் காதல் திருமணம் செய்த இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் அந்தப் பகுதியில் ஆன்லைன் சேவை மையம் (ஈ-சேவை மையம்) நடத்தி வருகிறார். இவருக்கும் சினேகா (22) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் அல்லது எதிர்ப்பையும் மீறி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு யாசினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சினேகா திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சினேகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார், சினேகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சினேகாவுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்பது குறித்துச் சேலம் உதவி ஆட்சியர் மற்றும் வாழப்பாடி துணைப் போலீஸ்

சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் விசாரணை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தாய் உயிரிழந்த நிலையில், 2 வயதுக் குழந்தை தாயின் அரவணைப்பின்றித் தவிக்கும் காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.

 

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் : போலி நாடகமாடிய தந்தை கைது!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சவுடேஸ்வரி (22), வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்ததற்காகத் அவரது தந்தையாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சவுடேஸ்வரிக்கும், பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நாகராஜ் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்குச் சவுடேஸ்வரியின் தந்தை சந்திர சீனு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு முன்பே சவுடேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி நாகராஜைத் திருமணம் செய்து கொண்டார்.

மகளைக் காணவில்லை என்றும், வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் சந்திர சீனு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் காதல் ஜோடியைக் கண்டுபிடித்துத் தேடி வந்தனர். காவல் நிலையத்தில் ஆஜரான சவுடேஸ்வரி, “தான் அணிந்திருந்த கம்மலைக் கூட கழற்றி வைத்து விட்டுத் தான் வந்தேன், நகைகளை எடுக்கவில்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

போலீசார் சவுடேஸ்வரியை 5 நாட்கள் தந்தையின் வீட்டில் தங்கிவிட்டு, அதன் பின் கணவர் வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தித் தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் 19-ம் தேதி சவுடேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் இது தற்கொலை எனச் சொல்லப்பட்டாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையணையால் அமுக்கிக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சந்திர சீனுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஏழை வாலிபரைக் காதலித்ததால் கௌரவம் கருதி மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்த ஆணவக் கொலைக்குக் காவல் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்திர சீனுவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த அந்த மர்மக் காவல் அதிகாரி யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் நபர் ஒருவர் செய்த கொடூரம்!!

தன் மனைவிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார் ஒருவர். இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அசாருதின். அசாருதின் மனைவி ஃபர்ஹாத் (26).

தம்பதியருக்கு உமேரா (8), ஆயிஷா (6) என்னும் இரண்டு பிள்ளைகள். இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் ஃபர்ஹாத் மீண்டும் கர்ப்பமாக, இரண்டு முறை அவருக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளார் அசாருதின்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஃபர்ஹாத் கர்ப்பமாக, இம்முறையும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயந்த அசாருதின் கருக்கலைப்பு செய்யுமாறு ஃபர்ஹாத்தை வற்புறுத்த, அவர் இம்முறை மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆகவே, திட்டமிட்டு மனைவியையும் பிள்ளைகளையும் தனது கண்காணிப்பின் கீழிருக்கும் நீச்சல் குளம் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற அசாருதின், அவர்கள் மூவரையும் தண்ணீரில் அமிழ்த்திக் கொலை செய்துள்ளார்.

மனைவியையும் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு விபத்து என அவர் நாடகமாட, ஃபர்ஹாத்தின் தந்தை அது குறித்து சந்தேகம் எழுப்ப, பொலிசார் அசாருதீனை விசாரித்துள்ளார்கள்.

அப்போது தன் மனைவியையும் பிள்ளைகளையும் தண்ணீரில் அமிழ்த்திக் கொன்றுவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் அசாருதின். மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் ஒருவர் கொலை செய்துள்ளார் என்ற விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய நீதிபதி!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், தன் மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடியுள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒன்றில் விளம்பரப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதில், ஒருவர் மேளதாளங்களுடன் தனது மகள் வீட்டுக்கு வருவார்.

எல்லோரும் என்னவென்று பார்க்க, தன் மகளைத் தான் மேளதாளத்துடன் மணமகனுடைய வீட்டுக்கு அழைத்துவந்ததுபோலவே, தற்போது அவளை திரும்ப தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்ததாக கூறுவார் அவர்.

அதாவது, கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு நீ அவன் வீட்டில் வாழவேண்டாம், நம் வீட்டுக்கு வந்துவிடு, புதுவாழ்வைத் துவக்கு, நாங்கள் உனக்கு ஆதரவு என அவர் சொல்லாமல் சொல்ல, மகள் கண்ணீருடன் ஓடோடிவந்து தந்தையைக் கட்டி அணைத்துக்கொள்ளுவாள்.

தற்போது அதேபோன்றதொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகரில் நடந்துள்ளது.

விவாகரத்தான பெண்களை இன்னும் அவமரியாதையுடன் நடத்தும் பலர் இருக்க, விவாகரத்தான தன் மகளை மேளதாளம் முழங்க, மாலையும், இனிப்புகளும், நடனமுமாக தன் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஞானேந்திர குமார் ஷர்மா.

ஷர்மாவின் மகளான வினீதா என்னும் ப்ரனீதா வசிஷ்டாவுக்கும் மேஜர் கௌரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

சீக்கிரமாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாக, இம்மாதம் 4ஆம் திகதி இருவருக்குமான விவாகரத்து இறுதியானது.

மகளுடைய மகிழ்ச்சியும் கௌரவமும்தான் தனக்கு முக்கியம் என்பதைக் காட்டுவதற்காக மேளதாளத்துடன் அவரை தன் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் ஷர்மா.

ப்ரனீதாவை அழைத்துவர மேளதாளத்துடன் சென்ற ஷர்மா உட்பட அனைவரும், ப்ரனீதாவின் புகைப்படம் மற்றும் நான் உன்னை நேசிக்கிறேன் என் செல்ல மகளே என்று எழுதப்பட்ட சட்டைகளை அணிந்திருப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவாக்கடை முற்றுகை : அறுவர் கைது!!

வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவா பாக்கு கடை நேற்றயதினம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாரால் நேற்றயதினம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் மாவா என்ற ஒருவகை தடைசெய்யப்பட்ட பாக்கு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றயதினம் குறித்த பகுதியை முற்றுகையிட்ட பொலிசார் கடையை நடாத்திச்சென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், மாவா பாக்கினை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்த மேலும் ஐந்துபேரையும் கைதுசெய்துள்ளனர்.

அங்கிருந்து பாக்குகளும் வேறு பொருட்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை : மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (06) பிற்பகல் 3.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் நிலவும் வெப்ப அலை, மனித உடலால் உணரக்கூடிய அளவில் உள்ளது என்றும், இது கவனம் தேவைப்படும் நிலை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு : இலங்கையில் மே அல்லது ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

“தற்போது இருப்பதை விட தென்மேற்குப் பருவமழையின் போது மழைப்பொழிவு குறையக்கூடும்… அதாவது, அது 30% க்கும் அதிகமாகக் குறையலாம். ஆனால் மே மாதம் என்பது பருவமழையின் தொடக்கம் மட்டுமே.

மே மற்றும் ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் உச்சியில் சூரியன் நேரடியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், பல மாகாணங்களில் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தாலும், தற்போது நிலவும் வறண்ட வானிலை அப்படியே தொடரும் என்று மேலும் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு : நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகல மாவட்டத்திலும் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக்குறியீடு “எச்சரிக்கை” நிலையை எட்டும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக, மக்கள் நாள் முழுவதும் நீரோற்றத்துடன் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும், அடிக்கடி ஓய்வெடுக்கவும், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் குறைக்கவும், அத்துடன் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (06) பேருவளை, குருளுவத்த, ரக்வானை, கொடகவெல, உடவளவை மற்றும் தனமல்வில உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

12:13 மணியளவில் குறித்த பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து : வெளியான அறிவிப்பு!!

இலங்கையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு : தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறை முறைமை, நிலைமை வழமைக்குத் திரும்பியதும் நீக்கப்பட்டு, நாட்டின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு : எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நேற்று (05.04.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக ஏப்ரல் மாதத்திற்குள் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை.

மத்திய கிழக்கு போர் வெடித்ததன் பின்னர் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே வெற்றிகரமாக நிர்வகித்துள்ளது.

தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன.

தற்போது எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளன. விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

அத்துடன் QR முறைமை தற்போது வினைத்திறனாகச் செயல்பட்டு வருவதாகவும், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் இயல்பு நிலையை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

திடீரென உருவான அலை – கடலுக்கு சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

புதிய இணைப்பு

திடீரென உருவான பாரிய அலையில் சிக்கிக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முதலாம் இணைப்பு

அம்பாந்தோட்டை – மெதல்ல கடற்கரைப் பகுதியில் நீராடச் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(02.04.2026) இடம்பெற்றுள்ளது.

காணாமல்போன இளைஞர் நாகுலுகமுவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாரிய அலையால் நேர்ந்த கதி

மேற்படி இளைஞர் தனது நண்பருடன் மெதல்ல கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே, திடீரென உருவான பாரிய அலையில் சிக்கிக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல்போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காகத் தங்கல்ல பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கடலில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் நீரோட்டம் காரணமாகத் தேடுதல் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் : ஒருவர் மரணம்!!

லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 15 வயதுடைய மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவனுக்கும், 10ஆம் தரத்தில் பயிலும் 14 வயதுடைய மாணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த ஆசிரியர்கள் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 15 வயதுடைய மாணவன், திடீரென வாந்தி எடுத்ததோடு உடல்நலக் குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது பெற்றோர் வினவியபோது, தான் பாடசாலையில் தவறி விழுந்ததாக மாணவன் கூறியுள்ளார். உடனடியாக அவர் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கும், பின்னர் அங்கிருந்து காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மாணவனின் மூளையினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் ஈடுபட்ட மற்றைய மாணவன் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பின்னர், மத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது மாணவன் உயிரிழந்துள்ள நிலையில், மத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். மண்ணுக்கு பெருமை சேர்த்த மற்றுமொரு மாணவி!!

வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவி பத்மநாதன் பானுஷா சிறந்த பெறுபேற்றினை பெற்று சாவகச்சேரி மண்ணுக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

இவர், உயிர்முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 67ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவரின் சாதனை பாடசாலை சமூகத்துக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

குறித்த மாணவிக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கால்வாய் ஒன்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்!!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அவர் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்படும் சடுதியான மாற்றம் : இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (04.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் 3 இலட்சம் ரூபாவை நெருங்கிய தங்கதின் விலையானது தற்போது மீண்டும் உயர்ந்து நான்கு இலட்சம் ரூபாவை தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு : உலக சந்தையில் இன்றைய தினம் (04.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது முதல் தினத்துடன் ஒப்பிடுகையில் +23.77 (+0.51%) வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இலங்கை சந்தையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 48,520 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 44,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

யாழில் பெரும் துயரம் : உயர்தர பரீட்சையில் 3 ஏ பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்!!

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த யாழ்ப்பாணம் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணுவில் பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவன் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற லவன் அக்சயன் எனும் மாணவரே இன்று (4) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.9

அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திகள் பெற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். இந்நிலையில் மாணவனின் மரணம் பாடசாலை சமூகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தலை: தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகால மரணமடைந்திருந்தார்.

அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது.

தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் அகற்றிச் சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளதுடன், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு, அதன் பின்னர் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் இரு இளைஞர்களை பலிகொண்ட கோர விபத்து!!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவதானமாக செயற்படவும் : இன்றிரவு 11 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (04) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மத்திய, சபரகமுவ, ஊவா, தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.