கனடாவில் தமிழ் நினைவுத்தூபி மீது தாக்குதல் :14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு!!

8

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்குயாகுசி பூங்காவில் அமைந்த தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை மார்ச் 20 அன்று அவதூறான வாசகங்கள் மற்றும் வர்ணங்களால் சேதப்படுத்திய சம்பவத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீல் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, தொடர் விசாரணையின் பின் மார்ச் 31 அன்று பிராம்ப்டனைச் சேர்ந்த இளைஞரை $5,000 க்கும் மேல் மதிப்புள்ள பொதுச் சொத்துக்களுக்கு சேதம் (Mischief over $5,000) செய்த குற்றச்சாட்டுகளுடன் கைது செய்துள்ளனர்.

இளையோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவரது அடையாளம் வெளியிட முடியாது.

பீல் பிராந்திய காவல்துறைத்தலைவர் நிஷான் துரையப்பா, “சமூகத்திற்கு முக்கியமான நினைவிடங்களை வெறுப்புணர்வால் சேதப்படுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்து, Hate Crime Unit இனை வலுப்படுத்தி, சமூக பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி 2025 மே மாதம் திறக்கப்பட்டு, திறந்தபடியே சில முறை சமூக விரோதிகளால் இலக்கு செய்யப்பட்டதாகவும், இத்தகைய சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் 905-453-2121 (ext. 6098) அல்லது அடையாளம் காட்டாமல் Crime Stoppers மூலம் தொடர்பு கொள்ளலாம்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவியான ஷாருணியா பழனியாண்டி ஆங்கில மொழி மூலமான வர்த்தக பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாவது நிலையினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்றயதினம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த மாணவி வர்த்தக பாடப்பரப்பில் மூன்று பாடங்களிலும் A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவிகளான குகன்ஜா ஜெநந்தராஜா இரண்டாம் நிலையினையும், அஸ்மிதா மெய்யழகன் மாவட்ட மட்டத்தில் நான்காம் நிலையினையும் பெற்றுள்ளனர்.

 

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 72.43% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி!!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 72.43 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெறுபேற்றின் அடிப்படையில் 10 மாணவர்கள் 3ஏ சித்திகளையும் , 4 மாணவர்கள் 2ஏ பி சித்திகளையும் , 6 மாணவர்கள் ஏ 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

159 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 156 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் அவர்களில் 113 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதி சித்தியினை பெற்றுள்ளனதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் மாத்திரமே 3A சித்தி!!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் மாத்திரமே 3ஏ சித்தியினை பெற்றுள்ளனர்.

பெறுபேற்றின் அடிப்படையில் 3ஏ சித்திகளை 7 மாணவர்களும் , 2ஏ,பி சித்திகளை 5 மாணவர்களும் , ஏ,2பி சித்திகளை 5 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் கிதுர்சன் என்ற மாணவன் 3ஏ சித்தியும் , விஞ்ஞான பிரிவில் சியோன், அமுதினி, அகிரகன், அபினாந் ஆகிய நான்கு மாணவர்கள் 3ஏ சித்தியும் ,

வர்த்தகப் பிரிவில் ஜெயசன் என்ற மாணவன் 3ஏ சித்தியும் , கலைப்பிரிவில் துசாந்தினி 3ஏ சித்திகளையும் தனதாக்கி கொண்டுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F!!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் மாத்திரம் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனித்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா சூடுவெந்தபுலவு அல்க்பால் மகா வித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும், செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும்,

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் என 17 பாடசாலைகளில் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கலைப்பிரிவில் 526 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 24 மாணவர்கள் 3A சித்திகளையும் , 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சதுர்சிகா தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனையை கைவிட்டதால் முதல்நிலை!!

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனையை கைவிட்டதால் முதல் நிலை பெற முடிந்தது என வர்த்தகப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதல்நிலை பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சதுர்சிகா சௌந்தரராசா தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், வர்த்தகப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையையும் தமிழ் மொழி மூலத்தில் மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைவதற்கு உதவிய இறைவனுக்கு முதல் கண் நன்றிகள். அத்துடன் குடும்பத்தினருக்கும் நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் எனது அப்பா ஒரு மில் தொழிலாளி. அம்மா இல்லத்தரசி. அவர்களது உழைப்பினை பயன்படுத்தியே நான் இந்த சித்தியை பெற்றுள்ளேன்.

நான் இந்த சித்தியைப் பெற வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

மிகுந்த கஷ்டப்பட்டு தான் நான் இந்த நிலையை அடைந்தேன். பாடசாலையிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் படித்தவற்றை வீட்டில் வந்து நீண்ட நேரம் மீட்டு படித்தேன்.

தொலைபேசி பாவனை, தொலைகாட்சி பார்த்தல் என்பவற்றை தவிர்த்து இருந்ததுடன் தேவையற்ற சிந்தனைகளையும் தவிர்த்திருந்தேன். ஒரு வழக்கறிஞராக வந்து வவுனியா மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் எனவும் தெரிவித்தார்.

டித்வா புயலில் உயிரிழந்த மாணவி உயிரியல் பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலில் சிக்கி உயிரிழந்த மாணவியொருவர் உயிரியல் பிரிவில் மூன்று ‘பி’ சித்திகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.

கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் மாணவியான அயோத்யா சத்மினி உயிரியல் பிரிவில் மூன்று ‘பி’ தரங்களைப் பெற்று பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளார்.

குறித்த மாணவி கேகாலை மாவட்டத்தில் 118 ஆவது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கங்கானி திலகரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி தனது பதின்மூன்று ஆண்டு பாடசாலை வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்களின் பலன்களைக்காண அவர் இன்று இல்லை என்றும் சோகத்தை பகிர்ந்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் திருமணமாகி இரண்டு வாரங்களில் கோர விபத்தில் பலியான இளம் பெண்!!

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

அன்றிரவே மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

நள்ளிரவு 12.15 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் மதுஷானியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

“மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் ஆசையாக இருந்தது. இன்று அவரது உறுப்புகள் மூலம் பல உயிர்கள் வாழும்” என அவரது கணவர் சதுரங்க அல்விஸ் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

மதுஷானி தனது பாடசாலைக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வந்துள்ளார். அத்துடன், தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான பத்திரத்திலும் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்தார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

அவரது இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். மதுஷானி மற்றும் சதுரங்க கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். பின்னர் பண்டாரகமவிலுள்ள தமது புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

உயிரிழந்த மதுஷானி கொழும்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் உதவி ஆராய்ச்சி பொறியியலாளராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான குடும்ப சூழ்நிலை : கடும் சிரமத்திலும் உயிரியல் துறையில் சாதனை படைத்த யாழ். மாணவி!!

யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிஷானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாதக் குழந்தையாக இருக்கும் போது கடற்றொழிலுக்கு சென்றவேளை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

நிம்மதியாகக் கல்வி கற்பதற்கு கூட சீரான வீடு இல்லாத நிலையிலும், இந்த மாணவி சாதனை படைத்துள்ளது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களுக்கு எமனான பேருந்து : 12ம் வகுப்பு மாணவன் பலி!!

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் இன்று காலை (02) நிகழ்ந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்ததுடன் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.

திகன திசையிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பேருந்து, பல்லேகலை இராணுவ முகாமிற்கு எதிரே உள்ள கண்டி–திகன சாலையில், அவ்விரு மாணவர்களையும் ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மோதிய வேகத்தில் மாணவர்கள் இருவரும் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதனால் ஒரு மாணவர் உயிரிழக்க நேரிட்டதுடன், மற்றொரு மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

விபத்தில் உயிரிழந்தவர் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஆவார். காயமடைந்த மற்றொரு மாணவர் தற்போது கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நிகழ்ந்த நேரத்தில், பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த கண்டிப் பள்ளிகளுக்கு இடையிலான ஒரு முக்கிய கிரிக்கெட் போட்டியை (Big Match) ஏற்பாடு செய்யும் பணிகளில் உதவுவதற்காகவே இரு மாணவர்களும் சென்றுகொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்!!

நுவரெலியா கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக லலித் தெரிவித்தார்.

வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் பயணித்துள்ளதாகவும், வேன் உரிமையாளரே அதனை ஓட்டிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த வேன் உரிமையாளரின் மகன் ஒருவர் பிரதான வீதிக்கு வந்து, அந்த வழியாகச் சென்ற கேப் ரக வாகனத்தை நிறுத்தி, தனது தாய், தந்தை மற்றும் உதவியாளரை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவி கோரியுள்ளார்.

பின்னர் இது குறித்து கொத்மலை பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த ஒருவரைப் பார்வையிட்டு விட்டு மீண்டும் கொத்மலை தவலந்தென்ன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.

அதேவேளை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான இடத்திற்கும் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

4 இலட்சத்தை கடந்த சில மணிநேரங்களில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் நண்பகலுக்குப் பின் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (02.04.2026) காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 403,000 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. எனினும், நண்பகலின் பின்னர் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 399000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு : உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு 4780 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கம் 4695.96 டொலர்களாக பதிவாகியிருந்தது. அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து 75.4 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் (02.04.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 7000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு!!

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். அதுவரையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவிரமடையும் நிலைமை : நாட்டில் செல்லப்பிராணி வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை!!

தற்போது நிலவும் கடுமையான வெப்பம், வீட்டு செல்லப்பிராணிகளுக்கு, குறிப்பாக அடர் நிற உரோமம் கொண்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை மருத்துவர் டாக்டர் ஷோபத் விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் விலங்குகளை ஒருபோதும் விட்டுச் செல்லக்கூடாது என்றும், உச்ச நேரங்களில் செல்லப்பிராணிகளை நேரடி சூரிய ஒளியில் காட்டுவதைத் தவிர்க்குமாறு உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ராட்வீலர்கள் போன்ற பெரிய இன நாய்களும், 40 கிலோகிராமுக்கு மேல் எடை கொண்ட விலங்குகளும் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக் கூடியவை. தற்போதைய கடுமையான வெப்பம் வெவ்வேறு விலங்குகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது.

பூனைகள், நாய்கள், பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப் பறவைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான அபாயங்களை எதிர்கொள்கின்றன. அதிகப்படியான மூச்சு வாங்குதல் மற்றும் நாக்கை வெளியே நீட்டுதல் ஆகியவை துன்பத்தின் அறிகுறிகளாகும்.

அவை தங்களால் முடிந்தவரை நாக்கை வெளியே நீட்டி மூச்சு வாங்குவதை நீங்கள் காண்பீர்கள். பூனைகளும் இதே போன்ற அறிகுறிகளைக் காட்டக்கூடும்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், அதற்கு சிறிது பனிக்கட்டியைக் கொடுங்கள், தண்ணீரில் ஊற வைக்கவும், உடனடியாக கால்நடை மருத்துவ உதவியை நாடவும். ஏனெனில் தாமதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

செல்லப்பிராணிகளுக்குத் தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும், பகல் நேரங்களில் வாய்க்கவசம் அணிவிப்பதைத் தவிர்க்கவும், வெப்பம் தாக்குவதைக் குறைக்கக் கூண்டுகளை நிழலில் வைக்கவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்த பல கோடி ரூபா பறிமுதல்!!

நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தனியார் வங்கிகளில் 8 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல்காரரிடமிருந்து போதைப்பொருளைப் பெறுவதற்காக, அவரது முகவர்கள் இந்தப் பணத்தை வைப்பு செய்ததாக நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் முகவர்கள் நாளாந்த அடிப்படையில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் போதைப்பொருட்களை விநியோகிக்க இந்த கடத்தல்காரருக்கு உதவிய நான்கு பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி : மூவர் பலத்த காயம்!!

நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை காரியாலயத்திற்கு அருகில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது நேற்றையதினம் (01.04.2026) இடம்பெற்றுள்ளது. குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறியொன்று எனவும் தெரியவந்துள்ளது.

இதன் போது லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்சுவர் மற்றும் வீட்டிற்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.