வவுனியா மாநகர எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை!!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் இன்றைய அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார்.

குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றது.

இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்துள்ளதையடுத்து குறித்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.

அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் க.கிருஸ்ணதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பெரும் துயரம் : தந்தை கண் முன்னே நடந்தேறிய சோகம்!!

கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

பந்தகிரிய பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் தந்தையும் மகளும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை தெரிவித்ததாவது,

என் மகள் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது.

கோர விபத்து பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.

எனக்கு சுயநினைவு திரும்பிய போது, ​​நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்தன. எனது மகளின் தலையில் இருந்து இரத்தம் கசிந்திருந்தது. 9 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் மகள் உயிரிழந்து விட்டார்.” என தெரிவித்துள்ளார்.

யாழில் இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 37 வயதான ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்

திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் யாழ் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து மூன்று வயது குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியை இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இளம் ஆசிரியையின் உயிரிழப்பு பருத்தித்துறை பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

பேரூந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் பலி!!

பலாங்கொடை – இரத்தினபுரி வீதியில் எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (10.09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை கடந்து செல்ல முயன்ற போது பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஆவார். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் காயம்!!

இன்று காலை கொழும்பு-பதுளை பிரதான சாலையில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில்இன்று (11) மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

பெல்மதுளையிலிருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை குழந்தைகள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து,

பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால், அப்பகுதி மக்கள் பாடசாலை குழந்தைகள் மற்றும் சிறு காயங்களுக்கு உள்ளான பல பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்து காரணமாக பதுளை-கொழும்பு பிரதான சாலை முற்றிலுமாக தடைபட்டது.

விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்பது மாத காலப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி!!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898 வேன்கள் மற்றும் பேருந்துகள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுங்கத் திணைக்களம் ரூ. 429 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வாகன இறக்குமதிக்காக 30,594 கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 1,491 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் படுகாயம்!!

குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை (11) காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

பிரபல வங்கியில் நடந்த பாரிய மோசடி அம்பலம்!!

 

இலங்கையில் பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கிக்கு சொந்தமான 50 மில்லியன் ரூபாய் மோசடியாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார். இந்த மோசடித் திட்டம் நாட்டிற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு இந்த மோசடியைப் பற்றிய தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மேலும், மோசடியுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கணவர் எடுத்த விபரீத முடிவு!!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெருங்காப்பூர், பசுமலைத்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் நமச்சிவாயம். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதில் பாண்டியராஜன் அரசு உருது பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.தினமும் வீட்டுக்கு வந்தவுடன் கணவருடன் சேர்ந்து கால்நடைகளை பராமரிப்பது மற்றும் விவசாய பணிகளையும் கவனித்து கொண்டார்.

இந்நிலையில் நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பத்மாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுமாம். நேற்று முன்தினம் வழக்கம்போல் பத்மாவதி சத்துணவு பொறுப்பாளர் பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.

வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கால்நடைகளை கொட்டகையில் கட்டுவதற்கு சென்றுள்ளார்.

ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் பத்மாவதி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி சென்றுள்ளனர்.

அப்போது பசுமலைத்தாங்கல் மலை அடிவாரத்தின் கீழே உள்ள ஓடை நீரில் பத்மாவதி மூச்சு பேச்சின்றி மயக்க நிலையில் கிடந்தார். அதன் அருகில் இருந்த மரத்தில் நமச்சிவாயம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்டிருந்த கிராம மக்கள், பத்மாவதியை மீட்டு உடனே செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மனைவியை அங்குள்ள ஓடை நீரில் அமுக்கி நமச்சிவாயம் கொலை செய்து விட்டு தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

5 வருட காதல் : காதலன் நடத்தையில் மாற்றத்தால் இளம்பெண் விபரீத முடிவு!!

5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் லதா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் எலெக்டரீசியனாக பணியாற்றி வருகிறார்.

லதா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் ராஜாஜிநகர் காயத்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்தார்.

ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், லதா, ரஞ்சித் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரஞ்சித் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது லதாவுடன் முன்புபோல் பேசி, பழகுவதை அவர் தவிர்த்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதுபோல் நேற்று முன்தினம் இரவும் லதா-ரஞ்சித் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த லதா, தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சுப்பிரமணிய நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்து லதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து லதா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 3 லட்சம் ரூபாவாக அதிகரித்த தங்கத்தின் விலை!!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11.09.2025) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

போராட்டகாரர்களுக்கு பயந்து ஹெலிகாப்டரில் தொங்கிய நேபாள அதிகாரிகள்!!

நேபாளத்தில் போராட்டகாரர்களுக்கு பயந்து அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது.

அதில், மூத்த அரசு அதிகாரிகள் அவசரகால ஹெலிகாப்டரில் கட்டப்பட்ட கயிறுகளில் ஒட்டிக்கொண்டு, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது.

ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன் கூட்டத்திலிருந்து தப்பிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்களால் வேரூன்றிய ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், கோபமடைந்த கூட்டத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அவசரமாக தப்பிச் சென்றனர்.

நேபாளத்தில் சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்ததை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டம் வெடித்ததுடன், கலவரங்களும் இடம்பெற்றது.

ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.

நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார்.

நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. மேலும், நாட்​டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்​வேறு பகு​தி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் தொடர்​கின்​றன.

ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கையிலும் 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்த நிலையில் ராஜபக்க்ஷர்கள் ஆட்சியில் இருந்து மக்களால் விடட்டி அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக மரணம்!!

கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நெத்மி பிரபோதா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பந்தகிரிய பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் தந்தையும் மகளும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். ஒகஸ்ட் 29 ஆம் திகதி, என் மகள் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார்.

மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது.

பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.

எனக்கு சுயநினைவு திரும்பிய போது, ​​நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்தன.

எனது மகளின் தலையில் இருந்து இரத்தம் கசிந்திருந்தது. 9 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் 8ஆம் திகதி மகள் உயிரிழந்து விட்டார்.” என உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

பல் வலிக்காக வைத்தியசாலை சென்ற இளம் பெண் மர்மமான முறையில் மரணம்!!

மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதென கணவர் தெரிவித்துள்ளார். மொனராகலை சிரி விஜயபுரத்தைச் சேர்ந்த பி. ஷியாமலி மதுஷானி என்ற 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தாயான தனது மனைவியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கணவர் நுவன் லக்மின மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், மருத்துவமனையின் ஆறாவது வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பலரின் உயிர்களை காப்பாற்ற போராடிய பிரித்தானிய பெண்ணுக்கு கெளரவம்!!

கடந்த 5ஆம் திகதி எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரஜையான எமி விக்டோரியா கிப் என்பவர் நாடாளுமன்றத்தில் சிறப்பு அங்கீகாரத்துடன் கௌரவிக்கப்பட்டார்.

இந்த அங்கீகாரம் சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அவசர சேவைகள் வரும் வரை பயணிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆறுதல் வழங்கிய அவரது சேவையை பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட அவரது செயல்கள், பேருந்தில் இருந்தவர்களின் உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றின என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலா பிரதி அமைச்சர், “மனித குலத்திற்கு எல்லைகள் இல்லை என்பதை அவரது தன்னலமற்ற செயல் நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும், கிப்பின் இரக்கமும் தைரியமும் நெருக்கடியான தருணத்தில் உண்மையான மனிதத்துவத்தை வெளிப்படுத்தியது.

இந்த அங்கீகாரம், அசாதாரண சூழ்நிலைகளில் சாதாரண நபர்கள் வழங்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றது. உலகளாவிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் இலங்கையின் பாராட்டையும் பிரதிபலிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்

யாழில் இன்று இடம்பெற்ற விசித்திர விபத்து : ஐந்து பேருக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த உந்துருளியுடன் மோதியது.

பின்னர் அந்த உந்துருளி நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு உந்துருளிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.