கைதான எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளராக அவர் அதனை உரிய வகையில் பராமரிக்காமை காரணமாகவே இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தங்காலை நகரசபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மலேசியாவில் மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில், ஆகத்து மாதம் 31ஆம் திகதி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்திருக்கின்றன.
தேசிய கீதம் பாடப்படும்போது, திடீரென மன்னர் Perak Sultan Nazrin Shahஐ நோக்கி ஒரு பெண் ஓடியுள்ளார். அவர் மன்னரைக் கட்டியணைக்க முயல, உடனடியாக மன்னரின் பாதுகாவலர்கள் அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அந்தப் பெண்ணின் பெயர் Nurhaswani Afni Mohamad Zorki (41). அவர் மீது மலேசிய சட்டப்படி தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் schizophrenia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால், அவரை விசாரணைக்குட்படுத்த முடியுமா என்பதை அறிவதற்காக அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், Nurhaswani மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படுவதுடன் 1,000 Malaysian Ringgit அபராதமும் செலுத்தவேண்டிவரலாம். இலங்கை மதிப்பில் அது 71,489.64 ரூபாய் ஆகும்.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்திய தம்பதி சீன ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அந்த ஹொட்டல் ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில் வாழும் இந்தியர்களான கரண் மற்றும் நிகிதா தம்பதியர் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், Seehotel Schwert என்னும் ஹொட்டலில் தங்கியிருந்திருக்கிறார்கள்.
அந்த ஹொட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை ஆகும்.
அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் ஏசி இல்லாததால் ஃபேன்கள் கேட்டுள்ளார்கள் தம்பதியர். ஃபேன்கள் கொடுக்கப்பட்ட நிலையில், பின் இவர்களிடம் கேட்காமலே ஊழியர் ஒருவர் ஃபேனை எடுத்துச் சென்றுவிட்டாராம்.
அவர்கள் மீண்டும் ஃபேனை கேட்க, அவர் இவர்களை முட்டாள் என திட்டியதாகவும், அதைத் தொடர்ந்து பின்னரும் அந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதை நிகிதா மொபைலில் வீடியோ எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஊழியர் நிகிதாவின் மொபைலைப் பறித்ததுடன் அவரையும் கரணையும் தாக்கியதாகவும், கனமான செராமிக் மக் ஒன்றை தூக்கி நிகிதா மீது வீசியதாகவும்,
அதில் அவரது பல் ஒன்று உடைந்ததுடன், தாடையும் சேதமடைந்துள்ளதாகவும், மீண்டும் அவரது தாடை முழுமையாக சரியாக செயல்படாது என மருத்துவர்கள் கூறியதாகவும் தம்பதியர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், கரண், நிகிதா தம்பதியம் ஆரம்பம் முதலே முரட்டுத்தனமாக நாட்ந்துகொண்டதாகவும், 60 வயது ஊழியர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் ஹொட்டல் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்காப்புக்காக அவர் ஒரு கப்பை எடுத்து வீசியதாகவும் அது நிகிதாவை தாக்கிவிட்டதாகவும் ஹொட்டல் ஊழியர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், வெள்ளையர்களையும் ஜேர்மன் மொழி பேசியவர்களையும் அந்த ஹொட்டல் ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தியதாகவும், தங்களை மட்டுமே மோசமாக நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நிகிதா.
இந்த விடயம் தொடர்பில் பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக கரண் தெரிவித்துள்ளார்.
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. சரக்கு ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சவுமியா. இவர், காங்கயத்தில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுப்பெண்ணான சவுமியா, தனது கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கடந்த ஒருவாரமாக வற்புறுத்தி வந்தார்.
ஆனால் அவர், வேலை காரணமாக மனைவியை சினிமா பார்க்க அழைத்து செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சவுமியா, தனது தாயிடம் செல்போனில் கூறி அழுதார்.
மேலும், மிகுந்த மனவேதனையில் அவர் இருந்தார். நேற்று காலை ஜீவா சரக்கு ஆட்டோவை எடுத்துக் கொண்டு வேலை விஷயமாக காங்கயம் சென்று விட்டார்.
சவுமியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர், திடீரென வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ஜீவா, மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சவுமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வடகம்பட்டியில் வசித்து வரும் முருகன் மகள் பிரியராகினி தொப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்லும் போது, கலைச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
5 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் செப்டம்பர் 4ம் தேதி, காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டது. பிரியராகினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காதல் ஜோடியை தேடத் தொடங்கினர்.
உடனடியாக காதல் ஜோடி, சேலம் மாவட்ட எஸ்.பி ஆபீசில் தஞ்சம் அடையலாம் என காரில் புறப்பட்டனர்.
டோல்கேட்டில் வைத்து, அவர்களை பிடிப்பதற்காக சிலர் தயாராக இருந்தனர். கார் மாற்றுப்பாதையில் பறந்தது. அங்கும் ஒரு வேறு கும்பல் காத்திருந்து விரட்டத் தொடங்கியது.
மண் சாலையில் சென்ற கார் நடுவழியில் நின்று விட்டதால், காரில் இறந்து கீழே இறங்கி ஓடத் தொடங்கிய காதல் ஜோடியை துரத்திச் சென்று மடக்கி பிடித்த கும்பல், சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் கலைச்செல்வன் மயங்கி சரிந்தார்.
பிரியராகினி கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்தது. அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காயமடைந்த கலைச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 2 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர், மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் நேற்று மாலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸை பராமரிக்காமல் வைத்திருந்த குற்றச்சாட்டில் பஸ்ஸின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை,
பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம், வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது தாயும் சகோதரியும் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த மாணவியும் அவரது தந்தையும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள ஆபத்தான இடத்தில் மோதியதில் மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி தங்கொட்டுவ மருத்துவமனையிலும், அங்கிருந்து நீர்கொழும்பு மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி நாச்சியார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மூத்த மகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்து விட்டார். இளைய மகள் ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியன்-குருபாக்கியம் தம்பதியின் மகன் ஆகாஷ் (22). எலக்ட்ரீசியன். முத்துப்பாண்டியன் இறந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக ஆகாஷூம், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று மாணவி மட்டும் வீட்டில் இருந்தார்.
இதை அறிந்து அவரது வீட்டுக்கு ஆகாஷ் வந்தார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவு எடுத்து, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வெளியே சென்றிருந்த நாச்சியார் வீட்டிற்கு வந்த போது மின்விசிறியில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும்,
ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார்.
உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார்.
முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (09.09) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கப் பயணித்த ரயில் ஒன்று புவக்பிட்டிய மற்றும் அவிசாவளைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி இளநீர் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து அதிகாலை 4.25 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதனால் குறித்த ரயில் வீதியில் ரயில் போக்குவரத்துகள் கொஸ்கமவரை மட்டுப்படுத்தப்பட்டதுடன், விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதன் பின்னர் மீள ரயில் சேவை வழமைக்கு திரும்பியது.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (09.09.2025) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000 ரூபாயால் அதிகரித்து 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (09.09) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் களுத்துறை, ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
ஹொரணை , கெபெல்லகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் தனது அயல் வீட்டுக்குச் சென்று அங்கு வசிக்கும் நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான அயல் வீட்டில் வசிக்கும் நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை,
தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கலட்டி பகுதியில் வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து வீதியில் சென்றவர்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.