உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

உயர்தரப் பரீட்சை பதற்றம் காரணமாக கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள உள்ள ஒரு பாடசாலையின் மூன்றாம் மாடியிலிருந்து மாணவியொருவர் குதித்துள்ளார்.

இன்று பிற்பகல் 19 வயது உயர்தர மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவையைச் சேர்ந்த இந்த மாணவி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.

சம்பவம் உயிரியல் வினாத்தாள் தொடங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி விழுந்த இடம் கார்பட் செய்யப்பட்ட பகுதியாக இருந்ததால், உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி பரீட்சையை எதிர்கொள்வதில் கடுமையான மனஅழுத்தத்தை அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

அவரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களிலும் இந்த தகவலை உறுதிப்படுத்தப்படுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் : தாய்மாமன் கைது!!

யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் நேற்றையதினம் (11.11.2025) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றுள்ளனர்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டு, கண்டல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின்போது அதிர்ச்சி மிக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனேயே வசித்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் யுவதியின் தாயின் தம்பி பச்சை பனை மட்டையால் யுவதியை கடுமையாக தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் குறித்த யுவதிக்கு 09ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பேரூந்துகள் மோதி விபத்து : 5 பேர் காயம்!!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை,பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பியை நம்பி ஏமாந்த தாதியின் விபரீத முடிவு : தாய் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத தாதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி குறித்த யுவதி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், வீட்டில் இருந்த அவரது தாயும் தம்பியும் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தனது மகள் ஒரு நண்பரின் வேண்டுகோளின் பேரில் ஒன்லைனில் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தனது நண்பிக்கு வழங்கியதாக உயிரிழந்த தாதியின் தாயார் சுனிதா தெரிவித்துள்ளார்.

தோழி கடனை செலுத்தாமையினால் அதற்கான வட்டி 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடன் கொடுத்த நபர் தனது மகளை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் மற்றும் வட்டியை செலுத்துமாறும் இல்லை என்றால் பொலிஸாரை அழைத்து வருவதாக அச்சுறுத்து வந்துள்ளார்.

குறித்த நபரின் துன்புறுத்தல் தாங்க முடியவில்லையாமலேயே மகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என உயிரிழந்த பெண்ணின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக இவ்வாறான இணையம் ஊடாக முறையற்ற வகையில் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நிறுவனங்களால் கடும் அழுத்தங்களுக்கு உள்ளான பலர் ஏற்கனவே உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலர்களில் எகிறும் தங்கத்தின் விலை : இலங்கையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 4100 டொலர்களைத் தாண்டியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நிலைமை பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நேற்று காலை, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4116 டொலராக காணப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 56% வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு, செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 326,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய விலை நிலவரத்தை ஒப்பிடும் போது 24 கரட் தங்க பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட அதிபர் – நீதிமன்றத்தின் உத்தரவு!!

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று (12.11.2025) பிறப்பித்துள்ளது.

தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவரான குறித்த பாடசாலை அதிபர், கடந்த 5ஆம் திகதி (05.11.2025) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவர்களது மகன், கடந்த மாதம் 29ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் உணவில் புழு : சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மூடல்!!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது.

வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாகவும், சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும் தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டது.

இன்றில் (11.11) இருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைய திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!!

தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த இலங்கைத் தொழிலாளர்கள் இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (09) இரவு, உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றின் நீர்த்தாங்கிக்குள் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குப் பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்ணையில் இருந்த 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பெரிய நீர்த்தாங்கி ஒன்றில் சிக்கி, 50 வயதுடைய கொரிய நாட்டவரும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த கொரிய நாட்டவர் அந்த மீன் வளர்ப்புப் பண்ணையின் முகாமையாளராகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனையிறவு பகுதியில் விபத்து!!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (11.11.2025) விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் டிப்பர் சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாடு ஒன்று வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்தபோது வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி வேகத்தை குறைத்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதன்போது பேருந்தின் பின்னால், சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனமும் சடுதியாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பின்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வேக கட்டுப்பாட்டை இழந்து பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த மாணவி விஷம் அருந்தியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த தம்புள்ளை மேல்அரவுல பகுதியைச் சேர்ந்த உயிரியல் துறை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் தூங்கியதாகவும், தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால் பெற்றோர் அவரைப் பரிசோதித்த போது மயக்கமடைந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, இந்த மாணவியை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ள போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூல் பயனர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை!!

சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களின் போது நீங்கள் இருக்கும் இடத்தை முகநூல் மூலம் தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள பொலிஸார் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (11.11.2025) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுக்கும் பேருந்து அல்லது வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த வாகனத்தின் ஓட்டுநரைப் பற்றிய சரியான புரிதல் மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயணங்களின் போது, நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை புகைப்படம் மூலம் முகநூலில் பகிர்ந்துகொள்வது குற்றவாளிகள் அல்லது உங்களின் வீட்டை நோட்டமிடும் ஒருவருக்கு சாதகமானதாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என்பதை யாரும் அறியத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரியல் துறையில் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி!!

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

குளியாப்பிட்டியில் பிரதான வீதியில் மயக்கமடைந்து விழுந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நகரவாசிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

உயிரியல் துறையில் மூன்றாவது முறையாக பரீட்சை எழுத வந்த மாணவர் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். பேருந்திற்கு பணம் செலுத்தச் சென்றபோது, ​​பணப்பை காணாமல் போனதை உணர்ந்ததாக மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில், அங்கு இருந்த ஒருவர் உடனடியாக தலையிட்டு விண்ணப்பப் படிவத்தின் நகலை ஒன்லைனில் பெற உதவியுள்ளார்.

அதே நேரத்தில், ஒருவர் விரைவாக மாணவனுடன் சேர்ந்து, பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே வசிக்கும் சமாதான நீதிவான் ஒருவரிடம் கையொப்பத்தைப் பெற்று, மாணவனை பரீட்சைக்கு அனுப்பி வைத்தார்.

எனினும் மாணவர் மீண்டும் சிரமப்படுவதைத் தடுக்க, சமாதான நீதிவான் சம்பா ஏகநாயக்க மாணவருக்கு பணம் கொடுத்து, புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட ஸ்டுடியோவிற்கு அனுப்பினார்.

அந்த நேரத்தில், அவர் நகரத்தின் நடுவில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று, பேருந்துகளில் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயற்பட்ட டொக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் நண்பர் எனக் கூறப்படுகிறது.

மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது.  இவ் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டள்ளனர். டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11.11.2025) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 325,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப்பவுணின் விலை 293,200 ரூபாவாகவும், 24 கரட் தங்கப்பவுணின் விலை 317,000 ரூபாவாகவும் இருந்துள்ளது.

இந்த தகவல்படி கடந்த செவ்வாய்க்கிழமையை விட இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சுமார் எட்டாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி : பெற்றோர் செய்துள்ள நெகிழ்ச்சியான செயல்!!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவியின் திடீர் மரணத்தையடுத்து அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய சிறுநீரகங்கள் உட்பட உறுப்புகள் வேறு நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளது. கண்டியை சேர்ந்த 24 வயது மாணவி ஜெயதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதி மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.

கடந்த 5 ஆம் திகதி பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பிய மாணவி, தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்துள்ளார்.

மறுநாள் அதிகாலை 2.00 மணியளவில் கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பெற்றோரின் விருப்பப்படி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறுப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனை கண்டி தேசிய மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

முதுகெலும்புகள் அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே மரணத்திற்கான காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், இதுவோரு திடீர் மரணம் என கண்டி தேசிய மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு!!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என்ற 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது.

சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.