யாழில் பெரும் சோக சம்பவம் : இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!!

யாழ்ப்பாணத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் அதனை மீளச் செலுத்த முடியாத கார்ணத்தால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்ததையடுத்து வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வாங்கிய கடனை செலுத்த மீளச் முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனைதொடர்ந்தே நேற்றையதினம் (30-08-2024) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்திற்குள் மோதல் : மனைவி குத்திக் கொலை!!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்பேர்ன் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

மனைவி கொலை

அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே அவரை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் வாதாடி வந்தார்.

எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு நேற்றையதினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டதையடுத்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (30) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று(31.08.2024) நண்பகல் 12.10 அளவில் ரம்பேவ, தோப்பூர் மற்றும் மஹாவிலாச்சி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது..

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள்!!

இலங்கையர்களுக்கு புதிய துறைகளில் வேலை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ​​கட்டுமானம், தாதியர் சேவைகள், உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேக்கேஜிங் சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஜப்பான் ஜனாதிபதி ஹிசாயோஷி கிமுரா மற்றும் பணிப்பாளர் மசனோபி கோமியா ஆகியோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் பணிப்பாளர் ஜெஃப் குணவர்தன மற்றும் பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க ஆகியோரை அண்மையில் பணியகத்தில் சந்தித்துள்ளனர்.

இதன்போது ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாயம், தங்குமிட சேவைகள் மற்றும் கட்டடங்களை சுத்தம் செய்தல் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த துறைகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களை கொண்ட பயிற்சிக் குழுவை இலங்கையில் நிறுவுவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

IM ஜப்பான் திட்டத்தின் கீழ் சுமார் 500 இலங்கையர்கள் தற்போது ஜப்பானில் தொழில்நுட்ப சேவையில் பயிற்சி பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில், சுமார் 100 பயிற்சியாளர்கள் ஜப்பான் செல்ல தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி- ஒருவர் படுகாயம்!!

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30.08) மாலை இவ் விபத்து இடம்பெற்றிருந்தது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமனாத் சிவாகரன் (வயது 30) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார். செல்லத்துரை கிருஸ்னபாலமன் (வயது 37) என்ற இளைஞரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

55 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்!!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்று ஜனாதிபதிக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் செல்ல முடியாமல் அஞ்சி ஓடினர்.

அப்படியிருந்த நாட்டில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்கியிருக்கிறோம். எதிர்கட்சியினர் மக்களிடத்தில் வெறுப்பை தூண்டுவதை மட்டுமே செய்தனர்.

இரண்டு வருடங்கள் நாட்டு மாணவர்களின் கல்வி வாழ்க்கை கேள்விக்குறியானது.

மே மாதத்தில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனால் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும்.

எனவே நாடு மீண்டும் நெருக்கடிக்குள் விழுந்து பூச்சியமாவதை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு : பொலிஸார் அவசர கோரிக்கை!!

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(29.08.2024) யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடு புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குறித்த சந்தேகநபர் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.

கண்காணிப்பு கருவியின் காணொளியில் நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையை மாற்றிச் செல்வதும் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். குறித்த காணொளியில் பதிவாகிய நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 0718591337 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறும் சாவகச்சேரி பொலிஸார் மக்களிடம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 

இலங்கையில் புதிய முயற்சி : உயரத்தில் பறக்கும் பட்டங்களில் இருந்து மின்சாரம்!!

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும்.

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது.

இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்கள்!!

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகளவில் அதிக இணைய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் (Facebook) தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.

இதேவேளை இரண்டாவது இடத்தில் யூடியூப் (YouTube) மற்றும் மூன்றாவது இடத்தில் இன்ஸ்டாகிராம்(Instagram) உள்ளன.

Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் படி உலகளாவிய இணைய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக இணைய பயனர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

260 ரூபாவாக குறையும் அமெரிக்க டொலரின் பெறுமதி : சலுகைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!!

370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 260 ரூபாவாக வீழ்ச்சியடையும் போது மேலும் அதிகமாக சலுகைகள் வழங்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 89 பில்லியன் டொலர் இருந்தது. நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது 76 பில்லியன் டொலர்களாக அது குறைந்திருந்தது.

ஒருநாள் ஒரு டொலர் கூட பணம் இருக்கவில்லை. அந்த நாளில் 2000 டொலர்கள் என்னிடம் இருந்தது. அன்று தாய்நாட்டை விட நான் செல்வந்தராக இருந்தேன். இன்று தாய்நாடு என்னை விட செல்வந்த நாடாக மாறியுள்ளது.

அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் ரூபாவின் பெறுமதி 100 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. பொருட்களின் விலை 100 வீதத்தினால் உயர்ந்தது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

கிரீஸில் பொருளாதார வீழ்ச்சியுடன் அரச ஊழியர்களின் சம்பளம் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டது. எமது நாட்டில் அன்று அரச ஊழியர்கள் கஷ்டப்பட்டனர். நகை கடைகளில் அதிகளவான நகைகள் அடகுவைக்கப்பட்டன. அனைவரும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

இன்று சிவப்புப் பருப்பு விலை 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. டீசல் மற்றும் எரிவாயு என்பன 33 வீதத்தினால் குறைந்துள்ளது. 40 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் கஷ்டத்துடன் வாழும் 25 வீதமான மக்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரூபாவின் பெறுமதி பலப்படுத்தப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியை 84 பில்லின் டொலர்களாக உயர்த்தியுள்ளேன்.

குறைந்த வருமானம் பெறுவோருக்காக அஸ்வெசும அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வருடத்தில் வரிச்சலுகை மற்றும் சம்பள உயர்வு வழங்க முடியவில்லை. ஆனால் 2024 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.

பின்னர் அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்படுகிறது.

எம்மிடம் உள்ள பணம் அதிகரிப்பதோடு நிவாரணம் வழங்க ஆரம்பித்தோம். 370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 260 ரூபாவாக வீழ்ச்சியடையும் போது மேலும் அதிகமாக சலுகைகள் வழங்கலாம்.

மக்கள் படும் வேதனை எமக்குத் தெரியும். அதனை போக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். உழைக்கும் போதான வரியை திருத்த ஜஎம்எப் உடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எமது யோசனையும் ஜஎம்எப் யோசனையும் ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

அவுஸ்திரேலியாவில் பெண் விவகாரத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்!!

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்துகொண்டமை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீர, அவுஸ்திரேலிய கிரிக்கெட்டினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

துலீப் சமரவீர, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இதன்போது பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் அந்த பதவியிலிருந்து விலகிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை எனவும் விக்டோரியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துலீப் சமரவீர, இலங்கை அணியின் சார்பில் 5 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பதுடன், நட்சத்திர கிரிக்கெட் வீரர் திலான் சமரவீரவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தெஹிவளையில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் : முதல் நாளிலேயே குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தெஹிவளையில் வீடொன்றில் பெருந்தொகை பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லியனகே வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சென்றவர், சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் தங்க சங்கிலி, காப்பு, மோதிரங்கள் உட்பட 50,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் உள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை ஊடாக பணிப்பெண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது மூத்த சகோதரி ஊடாக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்கள் எதுவுமின்றி தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் வழங்கி பணியை ஆரம்பித்ததாக விசாரணைகளில் தெரியவந்துளளது.

அன்றைய தினம், வீட்டு உரிமையாளரின் மனைவி இரண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் மனைவியின் தந்தை மற்றும் தாயார் மட்டும் வீட்டில் இருந்ததால், மனைவியின் தந்தை வீட்டு உரிமையாளரான மருமகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பணிப்பெண் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சந்தேகம் ஏற்பட்டு மேல் மாடியை சோதனையிட்ட போது தங்கம் மற்றும் பணம் அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

தங்கப் பொருட்களுக்கு மேலதிகமாக 45ஆயிரம் ரூபாய் பெறுமதியான Apple Air Pods இரண்டையும் அவர் எடுத்து சென்றள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கனடாவுக்கான விசிட்டர் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு : குழப்பத்தில் தமிழர்கள்!!

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான கால எல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

விசிட்டர் விசா மூலம் கனடாவுக்கு அதிகளவான ஈழத்தமிழர்கள் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செப்டெம்பர் 1 முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமான சேவை!!

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செப்டெம்பர் 1 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானத்தை இயக்குகிறது.

ஆரம்பத்தில், வட இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் விமானங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் பயணிகள் படகு சேவையும் சமீபத்தில் மீண்டும் இயக்கப்பட்டது.

‘சிவகங்கை’ என்று பெயரிடப்பட்ட இந்த படகு, சமீபத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நான்கு மணி நேரத்தில் தனது முதல் பயணத்தை முடித்தது.

 

யாழ் வைத்தியசாலையில் முதலாவது பிறந்தாளை கொண்டாடிய இரட்டையர்கள் : நெகிழவைத்த தருணம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்தை இரட்டை குழந்தைகள் தமது பிறந்தநாளை வைத்தியசாலையில் கொண்டாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த இரட்டைகுழந்தைகள் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு வருடத்திற்கு முன்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு அதிசயத்தை கண்டது. அதாவது இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு ஆகும். தாம் இவ்வுலகிற்கு வர விருந்த காலத்திற்கு முன்னராகவே உலகிற்கு கொண்டுவரப்பட்ட இவ் இரட்டை குழந்தைகள் இந்த உலகில் நுழைந்த தருணத்திலிருந்து நம்பமுடியாத சவால்களை எதிர்கொண்டிருந்தனர்.

எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னதாகவே பிறந்து இக் குழந்தைகளின் பயணம் மருத்துவமனையின் மிகவும் சிறப்பு வாய்ந்த குழந்தை பராமரிப்புக் குழுவின் பாதுகாப்பான மற்றும் அக்கறையுள்ள கைகளில் தொடங்கியது.

இவர்கள் பிறந்த உடனேயே கண்ணாடியிலான புதிதாகப் பிறந்த குழந்தைகள் காப்பகங்களில் வைக்கப்பட்டனர். அங்கு இவர்கள் இரண்டு மாதங்கள் விழிப்புடன் கவனிப்பில் இருந்தனர்.

பிறந்த குழந்தை பராமரிப்பு குழுவின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் 24 மணிநேர கண்காணிப்பு ஆகியவை இந்த விலைமதிப்பற்ற உயிர்கள் ஒவ்வொரு நாளும் வலுவாக வளர சிறந்த வாய்ப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்யப்பட்டன.

இரு மாதங்கள் அவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் சவாலான காலங்களை பார்த்து இனிதே குழந்தைகளுடன் வீடு சென்றனர். இந்த இரட்டைக் குழந்தைகளின் கதை உயிர்வாழ்வதற்கான கதை மட்டுமல்ல யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைப் பாராமரிப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட அசாதாரணமான பராமரிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

இந்த சாதனை மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது, இந் நிகழ்வானது பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவின் முன்னேற்றம் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. இக் குழந்தைகளின் வளர்ச்சி இன்று வரை வேகமாக முன்னேறி, முழு வட்டத்திற்கு வந்துள்ளது.

இந்த நெகிழ்ச்சியான இரட்டையர்களின் பெற்றோர் சமீபத்தில் மருத்துவமனைக்குத் வந்திருந்தனர், பரிசோதனைக்காக அல்ல, ஆனால் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாடுவதற்காக.

ஆம் தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக. இந்த கொண்டாட்டம் ஆனது அவர்களின் குழந்தைகளின் ஆரம்பகால வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டிருந்த குழுவுடன் ஒரு மனதைக் கவரும் வகையில் மீண்டும் இணைந்த தருணமாகும்.

தங்கள் கைக்குழந்தைகளுடன், பெருமை வாய்ந்த பெற்றோர்கள் தம் பிறந்த குழந்தை பராமிப்பு குழுவிற்கு இதயம் கணிந்த நன்றியைத் தெரிவித்தனர், இவர்களும் குழந்தை பராமரிப்பு குழுவினரும் அந்த முக்கியமான ஆரம்ப மாதங்களில் குடும்பத்தைப் போல மாறியிருந்தனர்.

இரட்டைக் குழந்தைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்ட குழுவால் சூழப்பட்டதால் அங்கு உண்மையிலேயே மாயாஜாலமான ஒன்று நடந்தது இரண்டு குழந்தைகளும் அக்கறையுள்ள குழுவினரைப் பார்த்து சிரித்தன, இது ஒரு சைகையை பெரிதாகப் பேசியது. இந்த தருணம், புகைப்படங்களில் கைப்பற்றப்பட்டது,

இந்நிகழ்வானது நம்பிக்கை, நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புள்ள சுகாதார நிபுணர்களின் நம்பமுடியாத தாக்கத்தின் சின்னமாக மாறியது. இது சமூகத்திற்கு ஒரு நினைவூட்டல் மற்றும் அதற்கு அப்பால் திறமையான மற்றும் இரக்கமுள்ள பராமரிப்பாளர்களின் கைகளில் ஒவ்வொரு நாளும் அற்புதங்கள் நிகழ்கின்றன.

இந்த சாதனையை மருத்துவமனை கொண்டாடும் போது, இந்த இரட்டை குழந்தைகளின் கதை அனைவருக்கும் ஒரு உத்வேகமாக விளங்குகிறது. தரமான பிறந்த குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தக்கூடிய வித்தியாசத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரண்டு உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமன்றி ஒரு குடும்பத்திற்கு தமது பிள்ளைகள் வளர்ந்து செழித்து வளர்வதைப் பார்க்கும் விலைமதிப்பற்ற பரிசையும் வழங்கியுள்ளது

. மருத்துவ நிபுணத்துவத்தின் ஆற்றலையும், மேம்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், பராமரிப்பாளர்களுக்கும் அவர்கள் தொடும் வாழ்க்கைக்கும் இடையே உருவான அழகான பிணைப்புகளைக் காட்டுவதால், இந்தக் கதை அனைவருக்கும் பகிரப்படத் தகுதியானது என பதிவிட்டுள்ளார்.