இரண்டு தமிழர்கள் உட்பட ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தியத்தலாவவையில் தமிழர்கள் இருவர் உட்பட ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து தொடர்பான தகவலை நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

தியத்தலாவ, “Foxhill Supercross” கார் பந்தயத்தின் போது, ​​ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பந்தய நடுவர்களின் தவறினால் இந்த விபத்து நேர்ந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கார் தடத்தில் விபத்துக்குள்ளானதை அடுத்து, அப்பகுதியில் அதிக தூசு படிந்திருந்தது. நடுவர்களின் கவனக்குறைவால் இரண்டாவது காரும் தடத்தில் விபத்துக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது, ​​கார் சாரதிகளின் உதவியாளர்கள் பந்தயத்தை நிறுத்துமாறு ட்ரெக் மார்ஷல்களிடம் கோரிக்கை விடுத்த போதும் அவர்கள் மறுத்ததாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

கார் பந்தயம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே கார் ஒன்று விபத்துக்குள்ளாகி புரண்டது. கடுமையான தூசி வெளியேறிய நிலையில் வீதியில் நடப்பது கார் ஓட்டுபவர்களுக்கு தெரியாத அளவு மோசமான நிலையில் காணப்பட்டது.

பொதுவாக பந்தயத்தின் போது ஒரு கார் விபத்துக்குள்ளாகினால் அங்கிருக்கும் பணியாளர்கள் மஞ்சள் கொடியை அசைத்து சாரதிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறான நிலையில் இரண்டாவது கார் ஒன்றும் அதே இடத்தில் விபத்துக்குள்ளான போதிலும் போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர். இதன் போது இரண்டாவது காருடன் மோதிய மூன்றாவது கார் பொது மக்கள் இருந்த திசை நோக்கி தூக்கி வீசப்பட்டது.

முதலாவது கார் விபத்துக்குள்ளான போதே மக்கள் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தனர். சிறிய அளவிலானோர் மட்டுமே அவ்விடத்தில் இருந்துள்ளனர். முதல் கார் விபத்துக்குள்ளான போது இருந்த கூட்டம் இருந்திருந்தால் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.

மேலும் முதலாவது கார் விபத்துக்குள்ளான போது தூசி அதிகரித்த நிலையில் பந்தையத்தை உடனடியாக நிறுத்துமாறு பல தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ட்ரெக் மார்ஷல்கள் அதனை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.

பொதுவாக தூசி அதிகரித்தால் வீதியை நனைத்து தூசியை குறைக்கும் பணி மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் விபத்தின் பின்னரே வீதியை நனைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

19 வயது யுவதியின் உயிரைப்பறித்த விபத்து : சாரதி தப்பியோட்டம்!!

கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று (21) காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளை வீதியில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். சம்பவத்தில் கந்தளாய் – ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் மரணித்தார்.

விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் விபரம்!!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் வெலிமடை மற்றும் டயரபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் சீதுவ, ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் அடங்குவார்.

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், மாத்தறை, ராகுல வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும், மாத்தறை, கொடகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரும் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், அவர் அக்குரஸ்ஸ, வளவ்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற Fox Hill Supercross கார் பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட Fox Hill Supercross மோட்டார் பந்தயத் தொடர் ஐந்து வருடங்களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (22.04) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும்.

இதன்போது போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நிழலான இடங்களில் இயன்றவரை ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலை விடுதியில் கர்ப்பிணித் தாயும், குழந்தையும் பலியான சோகம்!!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..

மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் இன்றையதினம் விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிவதற்காக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : ஒருவர் பலி, இருவர் காயம்!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (21.04) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வான் , முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கில் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்தவராவர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

தியத்தலாவ பகுதியில் கோர விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!!

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்த ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு : தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களுள் 8 வயதுடைய சிறுமி ஒருவருடன் பார்வையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய நால்வரும் குறித்த பந்தயப் போட்டியில் கடமையாற்றிய அதிகாரிகள் என்பதுடன், சிறுமியைத் தவிர உயிரிழந்த ஏனைய அனைவரும் ஆண்கள் ஆவர்.

இரண்டாம் இணைப்பு : தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 6 பேர் விபத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்தவர்களுள் ஒரு குழந்தையும் நான்கு டிராக் மார்ஷல்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு : தியத்தலாவ பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்ட பந்தய போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போட்டியில் பங்குபற்றிய பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பம் : திருகோணமலையில் வயலில் மயங்கி வீழ்ந்து பலியான விவசாயி!!

விமானத்தில் பயணித்த கணவனும் கர்ப்பிணி மனைவியும் : விமானம் தரையிறங்கியபோது காத்திருந்த அதிர்ச்சி!!

இத்தாலி நாட்டவர்களான ஒரு தம்பதியர் தங்கள் உறவினர்களைக் காண விமானத்தில் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர, அந்த மனைவிக்கோர் பேரதிர்ச்சி காத்திருந்தது.

விமானத்தில் பயணித்த கணவனும் கர்ப்பிணி மனைவியும்

இத்தாலி நாட்டவர்களான Giuseppe Stilo (33)ம் அவரது மனைவியான Federica Marrellaவும் தங்கள் உறவினர்களைக் காண Turin என்னுமிடத்திலிருந்து Lamezia Terme என்னுமிடத்துக்குச் செல்ல விமானத்தில் புறப்பட்டுள்ளார்கள்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் Giuseppeக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு கணவருடைய இருக்கையின் அருகில் இடம் கிடைக்காததால், விமானத்தில் மறு முனையில் அவர் அமர்ந்திருந்திருக்கிறார்.

Federica ஐந்து மாத கர்ப்பிணி என்பதால், அவரிடம் விடயத்தைக் கூறாமலே விமானத்திலிருந்த மருத்துவர்கள் Giuseppeக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அவர்களால் அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது.

விமானத்தை விமானிகள் புறப்பட்ட இடத்துக்கே திருப்ப, விமானம் தரையிறங்கியபிறகுதான் தன் கணவர் உயிரிழந்த விடயமே Federicaவுக்கு தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

தந்தையாகும் மகிழ்ச்சியிலிருந்த கணவர்

விடயம் என்னவென்றால், தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் திருமணம் ஆகியுள்ளது. Federica ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தந்தையாகும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார் Giuseppe.

ஆனால், மனைவி குழந்தையைப் பெற்றெடுக்கும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்காமலே உயிரிழந்துவிட்டார் அவர்!

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை… குழந்தை திருமணத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நெகிழ்ச்சி!!

ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து அனைத்து தடைகளையும் தாண்டி கல்வியை தொடர்ந்த சிறுமி தற்போது 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் நிர்மலா. வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட இவரது குடும்பத்தில் 3 சிறுமிகள் ஏற்கனவே திருமணமானவர்கள்.

எனவே, நிர்மலாவையும் திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். ஆனால், நிர்மலாவோ படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளதால், இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

எனவே, கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளூர் ஒய்எஸ்ஆர்சிபி சட்டமன்ற உறுப்பினர் ஒய் சாய்பிரசாத் ரெட்டியை அணுகி தனது நிலையைத் தெரிவித்து, தான் படிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் இது குறித்து எம்எல்ஏ மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கவே நிர்மலா திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், நிர்மலா அஸ்பரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் சேர்க்கப்பட்டு உயர்கல்வி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதில் நிர்மலா 440க்கு 421 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகியுள்ளார். மேலும், 2023ம் ஆண்டு வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை திருமணத்தை ஒழிக்க பாடுபடுவேன். மேலும் என்னை போன்ற பெண்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதே எனது கனவு” என்றார்.

ஏழ்மையை ஒரு பொருட்டாக மதிக்காமல், பல தடைகளைத் தாண்டிச் சென்று, தற்போது முதல் மதிப்பெண்கள் பெற்ற நிர்மலாவின் வாழ்க்கைக் கதை பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழப் பெண்!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை தமிழ்நாடு – திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்.

நளினிக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தியுள்ளார்.

வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி, இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.

அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர். எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினி இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைப்பை லொறியில் சிக்கியதால் பரிதாபமாக பலியான பெண்!!

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!!

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறுதியான வாகன இறக்குமதியின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 3 வருடங்களை 7 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்தால், புதிய வாகனங்களை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் வரி வருமானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் கைபேசியால் இடம்பெற்ற பயங்கரம்!!

மொபைல் சண்டையால் வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகையின் 97 கோடி சொத்து முடக்கம் : அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்!!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிட்காயின் மோசடி தொடர்பிலேயே ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

வேரியபில் டெக் நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய், விவேக் மற்றும் சிம்பி பரத்வாஜ் உள்ளிட்ட ஏஜென்ட்டுகள் மீது டெல்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையில் உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா, 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக தெரியவந்தது. இன்னும் அந்த பிட்காயின் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் மதிப்பு மட்டும் 150 கோடி ரூபாய் என்று அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தி இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், பிட்காயின் மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திரைப்பிரபலங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடொன்றில் மர்மாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

 

கட்டாரில் தொழிலுக்கு சென்ற இலங்கை இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம பிரதேசத்தில் இருந்து புதிய வீடு கட்டும் கனவை நிறைவேற்ற கட்டார் சென்ற இளைஞன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

27 வயதான ஜனக சதுரங்க செனவிரத்ன என்ற இளைஞன் இலத்திரனியல் வேலைக்காக கட்டார் சென்றுள்ளார். கடந்த 12ஆம் திகதி தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென எவ்வித சத்தமும் கேட்டாமல் போனதாக காதலி கூறினார்.

சார்ஜரில் கையடக்க தொலைபேசியை பொருத்திய நிலையில் தொலைபேசியில் பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர் ஒருவர் 13ஆம் திகதி அறிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கியிருந்தால் கையடக்க தொலைபேசி எரிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணம் தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உடலை விரைவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.