நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது

அந்தவகையில், மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

உயிரிழந்த நபருடன் வங்கியில் கடன் வாங்க சென்ற பெண் : அதிர்ந்துபோன அதிகாரிகள்!!

பிரேசிலில் சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த நபருக்கு கடன் வாங்க வங்கிக்குச் சென்ற பெண்ணைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைதான் பெண் எரிக்கா வியரா நுவினிஸ் (Erika Vieira Nunes) 68 வயது ஆடவரை வங்கிக்கு அழைத்து வந்தார். சக்கர நாற்காலில் அழைத்துசெல்லப்பட்ட நபரின் பெயரில் கடன் கேட்டதும் வங்கி ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக அவசரச் சேவைகள் பிரிவிற்கு அழைப்பு விடுத்தனர். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் நுவினிஸ் அந்த ஆடவரைப் பிடிக்காத நேரத்தில் அவரது தலை பின்னால் சாய்வது தெரிந்தது.

“உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் கையெழுத்திட வேண்டும்,” என்று நுவினிஸ் அந்த நபரிடம் பேசுவது காணொளியில் பதிவானது. “அவர் எதுவும் பேசமாட்டார்.. அவர் அப்படித்தான்,” என்று நுவினிஸ் கூறினார்.

அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வங்கிக்கு வந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்தவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். நுவினிஸ் அந்த ஆடவரின் பெயரில் சுமார் 3,250 டாலர் கடன் வாங்க முயன்றதாக கூறப்படும் நிலையில் நுவினிஸ் கைது செய்யப்பட்டார்.

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,220 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,120 ரூபாவாகவும் , 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாகவும் காணப்படுகிறது. மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 22,070 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,550 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிற்கு பணிக்கு சென்று இலங்கை திரும்பிய வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து அல்லது வாடகைத் தளத்திற்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொரளை அல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரசாஞ்சலி ரத்நாயக்க என்ற வைத்தியர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பணிக்கு சென்றுள்ளார்.

பணி முடிந்து இலங்கை திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வேறு தம்பதிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ருவான் டி சொய்சா நேற்று சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ சில்வா தெரிவித்துள்ளார்.

10 நாட்களில் திருமணம்… இளம் பெண்ணுக்கு எமனான உளவு இயந்திரம்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  சே.பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்  21 வயது காயத்ரி.  இன்னும் 10 நாட்களில் காயத்ரிக்கு திருமணம். இதனையடுத்து  தனது வருங்கால  கணவருடன் இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார். வீடு திரும்பும் போது   எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காயத்ரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். வருங்கால கணவர் கண்முன்னே இக்கோர சம்பவம் அரங்கேறியது.

ஆங்காங்கே சிறிய காயங்களுடன் வருங்காலக் கணவர் தப்பித்து விட்டார்.  இச்சம்பவம்  குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறை  காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

குளத்தில் மூழ்கிய அண்ணன்… காப்பாற்ற சென்ற தம்பியும் பலியான சோகம்!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்  ராமமூர்த்தி. இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு  திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள்.  இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

இதனால் பிள்ளைகள் இருவரும் கடலூரில் உள்ள ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்று வந்தனர். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கோடை விடுமுறைக்காக சிறுவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் இன்று காலை அதே பகுதியில் உள்ள திருக்குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.

இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அண்ணன் திலிப்ராஜ் ஆழமான நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி தினேஷ், அண்ணனைக் காப்பாற்றுவதற்காக முயற்சித்துள்ளார். இந்த முயற்சியில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கோடை விடுமுறைக்காக, வீட்டிற்கு வந்த சகோதரர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவி விபத்தில் மரணம்… தகவல் அறிந்து தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில், சாலை விபத்தில் மகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் ஆலுவா யுசி கல்லூரி எம்பிஏ படித்து வந்த மாணவி சினேகா (24) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிராயின்கீழில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சினேகா உயிரிழந்தார்.

மகள் சினேகா உயிரிழந்த தகவல் அறிந்ததும் சினேகாவின் தாயார் காயத்ரி நெல்லிக்குழியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மகள் இறந்த செய்தி கேட்டு தாயும் தற்கொலைச் செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த தென்னிலங்கை நபர்கள் : பரபரப்பு வீடியோ!!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு சிங்களவர்கள் கசிப்பு கொடுத்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அண்மைக் காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு சிங்களவர்கள் பிளாஸ்டிக் பொத்தலில் கசிப்பு கொடுத்த நிலையில் அதை குறித்த வெளிநாட்டவர் வாங்கி அருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்!!

நாசாவின் (Nasa) விண்வெளி ஆய்வில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை உருவகப்படுத்திய ஒர் குடியிருப்பில் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இலங்கையரான பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara) என்ற விஞ்ஞான ஆய்வாளரும் நாசா ஆய்வில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த விஞ்ஞான ஆய்வில் ஜேசன் லீ, ஸ்டெப்னி நவாரோ, ஸாரீப் அல் ரோமாய்தி மற்றும் பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara) ஆகிய நான்கு பேர் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்க உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தைப் போன்றதொரு கட்டமைப்பிற்குள் இவர்கள் 45 நாட்கள் விண்வெளி ஆய்வாளர்களைப் போன்றே தங்கியிருப்பார்கள் என நாசா அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல், தொலைதூரம், தனித்திருத்தல் உள்ளிட்ட விடயங்களை விண்வெளி வீராகள் எவ்வாறு அணுகுகின்றார்கள் என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

நிலா, செவ்வாய் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக அந்த சூழ்நிலைகளில் விண்வெளி வீரர்களின் நிலைமை குறித்து கண்டறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக இவர்கள் செவ்வாயில் நடப்பது போன்றும் அங்கு வாழ்வதும் போன்றும் உணர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த விஜேசேகர கலாநிதி ஆய்வு விஞ்ஞானி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாசா ஆய்வு மையத்தின் கதிர்வீச்சு குறித்த ஆய்வாளராக கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுக்கொண்ட பியூமி விஜேசேகர, பிட்ஸ்பேர்க் கார்னிஜி மெலோன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் (Department of Meteorology) கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

எனவே, மக்கள் நீரேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வீடொன்றுக்குள் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு!!

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையின் இளம் வீரர்!!

இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளளயாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி பிரான்ஸில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது. ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதியை பெற்றுக்கொண்ட மிக இள வயது வீரர்களில் ஒருவராக ஹிரான் தெரிவாகியுள்ளார்.

படுக்கையில் எரிந்த நிலையில் கணவனின் சடலம் மீட்பு : மனைவி மற்றும் மகன் கைது!!

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர்.

உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில் இருந்த பொருட்களை கணவர் சேதப்படுத்தியதாகவும், மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த நபர் தனது வீட்டின் அறைக்குள் சென்று தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் படுக்கையில் கிடந்ததுடன், படுக்கையின் மெத்தை மற்றும் தலையணை எரிந்து நாசமானது.

தீயினால் அறை சேதமடையவில்லை எனவும், அறையின் தரையில் லைட்டர், மண்ணெண்ணெய் கொள்கலன் இருந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.

மாரடைப்பால் ஏற்பட்டுள்ள அதிகளவான மரணங்கள் : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளனர். குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள். மேலும் வயது வரம்பு இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியாவில் மாரடைப்பால் இறந்த கணவன் : சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

வவுனியா நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த தகவலை வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் மனைவியான 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றார்கள்.

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளம்பெண். பதறிய மருத்துவர்கள்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சித்ரா (35). இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது. வலி தாங்க முடியாமல் சித்ரா அலறியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

பின்னர் அவர்கள் சித்ராவை கடித்த பாம்பை தேடினர். புதருக்குள் இருந்த பாம்பை கண்டுபிடித்து பிடித்தனர். இதையடுத்து சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்து சென்றனர்.

இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.