வாகன விபத்தில் இளம் இசைக்கலைஞர் உயிரிழப்பு!!

அனுராதபுரம் – பாதெனிய ஏ28 பிரதான வீதியின் தலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தலாவ, கெக்கிராவ வீதியில் தலாவ நகருக்கு அருகில் வசித்து வந்த 23 வயதுடைய கோவிந்தகே இஷான் நிமந்த என்ற இசைக்கலைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் இன்று (8) அநுராதபுரத்திலிருந்து தலாவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியை விட்டு வாகனம் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தென்பட்ட சூரியக் கிரகணம்!!

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க முடியும் என்று நாசா கூறியிருந்த போதிலும் சூரிய கிரகணத்தினை இயல்பாக டெலஸ்க்கோப் மூலமாக யாழ்ப்பாணத்திலும் பார்க்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள 15 மாநிலங்களில் நேற்று (2024.04.08) முழு சூரிய கிரகணம் தென்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்கும் என்று நாசா அறிவித்திருந்தது.

முழு சூரிய கிரகணத்தை காண்பது மிகவும் அரிது. இதற்குப் பிறகு 2044 இல் வட அமெரிக்கர்கள் இத்தகைய முழு சூரிய கிரகணத்தைக் காண்பார்கள் என்றும் நாசா அறிவித்திருந்தது.

போலி நகைகளை அரச வங்கியில் அடகு வைத்து பணம் பெற்ற இளைஞன் சிக்கினார்!!

அக்கரைப்பற்றில் தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் (08-04-2024) கைது செய்துள்ளது.

அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில், கடந்த ஆண்டு தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை சந்தேக நபர் அடகு வைத்து, 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், குறித்த வங்கிக் கிளையில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோதே, தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் குறித்த வங்கிக் கிளையினர் இது தொடர்பாக செய்த முறைப்பாட்டுக்கு அமைய, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் நாளைய தினம் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

9 லட்சத்திற்கு கல்லூரி மாணவி கடத்திக கொலை… சக மாணவர் உட்பட 3 பேர் கைது!!

ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சக வகுப்பு தோழியை கடத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவருடைய கல்லூரி மற்றும் விடுதிக்கு வந்து பெற்றோர் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதன் பின் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மாணவியை பணம் கேட்டு சக மாணவர் உள்பட 3 பேர் கடத்திய விவரம் தெரிய வந்தது. ஆனால், அவரை அந்த கும்பல் தாக்கி கொலை செய்துள்ளது. அவருடைய உடல் அகமது நகரில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 29-ம் தேதி சக மாணவர் உள்பட 3 பேர் அவரை விடுதியில் விட்டு சென்றனர். அடுத்த நாள் மீண்டும் அவரை வணிக வளாகத்திற்கு வரும்படி சக மாணவர் அழைத்துள்ளார்.

அதன்பின், வீட்டில் விடுகிறோம் என கூறி காரில் அழைத்து சென்றார். காரில் வேறு 2 பேர் இருந்தனர். புனே நகருக்கு வெளியே கார் சென்றது. மாணவியை அழைத்து கொண்டு அகமதுநகருக்கு சென்றனர்.

இதன் பின்னர், மாணவியின் பெற்றோரிடம் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்பு, மாணவியை கழுத்து நெரித்து கொலை செய்து, உடலை புதைத்து விட்டு தப்பினர். மாணவியின் செல்போனில் இருந்த சிம் கார்டையும் கழற்றி வீசினர்.

இது குறித்து புனே நகர கிழக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் மனோஜ் பாட்டீல் கூறும் போது, இந்த வழக்கில் சக மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணம் கேட்டு மிரட்டினர். பின்னர், மாணவியை கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

சாப்பிட்டு முடித்து விட்டு சரிந்து வீழ்ந்து பலியான 9ம் வகுப்பு மாணவி!!

மதியம் உணவு இடைவேளையின் போது, தன்னுடைய மதிய உணவை சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீலட்சுமி, திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், முறிக்காசேரி பகுதி, தோப்பிரம்குடியில் இன்று மதியம் சாப்பிட்டு விட்டு, தான் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவி திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

பள்ளி நகரைச் சேர்ந்த மாங்காட்டுகுன்னல் என்பவரின் மகள் ஸ்ரீலட்சுமி, தங்கமணியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் தனது வீட்டில் 2 மணியளவில் மதிய உணவுக்குப் பிறகு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது அவர் சரிந்து விழுந்தார்.

உடனடியாக முறிக்காசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஸ்ரீலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அசிட் வீச்சு.. 14 ஆண்டுக்கால போராட்டம்.. `வாழ்வதற்கான விருப்பத்தையே இழந்துவிட்டோம்’.. சகோதரிகள் குமுறல்!!

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என, டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கிறது. மேலும், இரு சகோதரிகளுக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

டெல்லியில் சமர் – ஜவேரியா என்ற சகோதரிகள் இருவருக்கும் பக்கத்து வீட்டாரால் திருமண வரன் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வரனைச் சமர் நிராகரித்தார். இதனால் மணமகன் வீட்டார் ஆத்திரமடைந்தனர்.

இந்த நிலையில், சகோதரிகள் இருவரும் அழகு நிலையத்திலிருந்து ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்… அவர்கள்மீது ஆசிட் வீசினர். இந்தச் சம்பவம் 2009-ம் ஆண்டு நடந்தது.

இதில் பலத்தக் காயமடைந்த சகோதரிகள், இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முடிவெடுத்து, சட்டப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கிறது. மேலும், இரு சகோதரிகளுக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் அனுஜ் கபூர், “நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்.

ஆசிட் தாக்குதலின் விளைவாகப் பாதிக்கப்பட்ட இருவரும் இரு கண்களிலும் முழுமையான பார்வையை இழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த சட்ட உதவியும் வழங்கப்படவில்லை.

அவர்களின் சாட்சியங்கள் விரோதமான அமைப்பில் பதிவு செய்யப்பட்டன. விசாரணை நடத்தப்பட்ட விதமும் இந்த வழக்கை இத்தகைய தீர்ப்புக்கு நகர்த்தியிருக்கிறது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட சகோதரிகளில் இளையவர், “நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, நாங்கள் சட்டப் போராட்டத்தில் மட்டுமல்ல, வாழ்வதற்கான விருப்பத்தையும் இழந்துவிட்டோம். இதைச் செய்தவர்கள் துரதிஷ்டவசமாக மகிழ்ச்சியாக உள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வலம் வருவார்கள். ஆனால் நாங்கள் ஒரு மெய் நிகர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம். எங்களுக்கே எங்களுக்கான ஒரு அறையில் பூட்டப்பட்டிருக்கிறோம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கிறோம். அப்போது முதலாம் ஆண்டு எம்.பி.ஏ மாணவியாக இருந்த அக்கா சமருக்கு ஒரே ஒரு கனவு இருந்தது… வேலை தேடிக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதுதான் அது.

ஆசிட் எங்களின் முகத்தை மட்டுமல்ல, எங்கள் கனவுகளையும் சிதைத்துவிட்டது. எங்களின் அப்பாவின் ஓய்வூதிய பணத்தில் சிகிச்சை செய்துவந்தோம். இப்போது அப்பாவும் இறந்துவிட்டார். எங்களின் எதிர்காலம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இரு குழந்தைகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்று தாய் தீக்குளித்து தற்கொலை..!!

பாலக்காடு : பட்டாம்பி அருகே வல்லப்புழாவைச் சேர்ந்தவர் பிரதீப் (40). இவர், வடகராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பீனா (35).

இவர்களுக்கு நிகா (12), நிவேதா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று காலை பீனா கணவருடன் போனில் பேசியுள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் பீனா மற்றும் 2 குழந்தைகள் மூவரும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் மேல்மாடியில் கரும்புகை எழும்புவதைப் பார்த்த பொதுமக்கள் பட்டாம்பி தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர்.

உடனடியாக விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து மூவரையும் மீட்டு பட்டாம்பி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பீனா (35) பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து 2 பெண் குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பட்டாம்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்தது போலீசாரிடம் கிடைத்துள்ளது. கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை!!

புதுவருடப் பிற்ப்பை முன்னிட்டு வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியா நகரப்பகுதி, வைரவபுளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் சுகாதார பரிசோதகர்களால் இன்று (08.04) சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடந்த சிலநாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு பழுதடைந்த பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகள் பொறிக்கப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 8 பேருக்கு எதிராக முதல் கட்டமாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன்,

அதில் 6 பேருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும்மொரு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு பாதுகாப்பானதும், சுகாதாரமானதுமான பொருட்களை வழங்கும் பொருட்டு சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம்!!

வவுனியா, பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை இன்று (08.04) காலை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதியதிலேயே மாணவன் படுகாயமடைந்தார்.

காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் கணவர் மரணம்… சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கணவர் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). இவரது மனைவி ராமவள்ளி (40) அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கணவர் இறந்ததால், மனமுடைந்த ராமவள்ளி, வீட்டின் கழிவறையில் திடீரென தாக்கி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ராமவள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாய்க்காலில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்… 2 இளம்பெண்கள் உட்பட மூவர் பரிதாபமாக மரணம்!!

திருப்பூர் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்காலில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய்க்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பிச் சென்று வருகிறது.

தற்போது கடுமையான கோடைக் காலம் என்பதால், ஏராளமானோர் விடுமுறையை கழிப்பதற்காக இந்த வாய்க்காலில் குளிப்பதற்காக வருகை தருகின்றனர்.

அந்த வகையில் நேற்று திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீணா, 18 வயது இளம் பெண் பிரீத்தா ஆகிய 3 பேரும் வாய்க்காலுக்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பிஏபி வாய்க்காலுக்கு நேற்று மதியம் அவர்கள் சென்ற நிலையில், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் கிடைக்காததால், அவினாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று பொங்கலூர் அருகே தேவனாம்பாளையம் என்ற இடத்தில் பிஏபி வாய்க்கால் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் வீணா மற்றும் பிரீத்தா ஆகிய இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி பாளையம் காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து மாயமான சந்தோஷை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது உடல் பொங்கலூர் அருகே கண்டெடுக்கப்பட்டது.

மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் பிஏபி வாய்க்காலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் மாணவர்களை வாய்க்காலில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவினாசி பாளையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படகு கவிழ்ந்து விபத்து… கடலில் மூழ்கி பலியான 90 பேர்!!

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

சுமார் 130 பேர்களுடன் புறப்பட்ட அந்த சிறு படகு, நம்புலா மாகாணத்திலிருந்து ஒரு தீவை அடைய முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளது. சிறு படகில் அதிகமானோர் பயணித்ததும், அது பயணிகளுக்கான படகு அல்ல என்பதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

மொத்தம் 91 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பலர் சிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஐவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கடலின் சீற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலானோர் காலரா பாதிப்புக்கு பயந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த அக்டோபரில் இருந்தே காலரா பாதிப்பு நீடித்து வருகிறது.

சுமார் 15,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். உலகின் மிகவும் ஏழ்மை நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணமே காலராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபகுதி நம்புலா பகுதியை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞன் பலி!!

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி டெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று (07.04.2023) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஹட்டன் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்திரகுமார் (சந்துரு) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் தொழில் நிமித்தம் உணவகங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து இடம் பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே இளைஞன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு அடித்த அதிஷ்டம்!!

இலங்கைக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுபித்துள்ளதுடன், பல தடைகளை தளத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையானது அனைத்து முக்கிய மூலச் சந்தைகளிலும் பல மடங்கு நன்மையை எதிர்பார்க்கப்படுகின்றது.

இது வரவிருக்கும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் உடனடியாக குறிப்பிடத்தக்க ஊக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குப் பின்னர், ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் புதுப்பித்த பயண ஆலோசனை நடைமுறைக்கு வந்தது.

அவசரகால மருத்துவ சேவைகளுக்கான அணுகல், பாதுகாப்பு நுழைவுத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளை அணுகுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புதுப்பித்தல் காணப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட ஆலோசனையில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பான முந்தைய பிரச்சினைகள் இல்லை. கூடுதலாக, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உட்பட சுகாதார சேவைகளில் வரம்புகள் தொடர்பான முன்னர் குறிப்பிடப்பட்ட அபாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

பல நாடுகள் பிரித்தானிய பயண ஆலோசனையால் வழிநடத்தப்படுகின்றன, மேலும் இந்த புதுப்பிப்பு எங்களின் அனைத்து உற்பத்தி சந்தைகளிலும் நன்மையை ஏற்படுத்தும்.

இலங்கை்ககான பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட சமூகமான உரையாடல் மூலம் இந்தத் பயண புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : மே மாதம் முதல் வழங்கப்படும் கொடுப்பனவு!!

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.presidentsfund.gov.lk) அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்.

மேலதிக விவரங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை (www.facebook com/president.fund) like/follow செய்யுமாறு ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மேலும், தரம் 1 முதல் தரம் 11 வரை பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான ஒரு இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது முடிவடைந்துள்ளதுடன், புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றோரின் பட்டியல் எதிர்வரும் நாட்களில் வலய மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கவுள்ளது.

இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதாங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தப் புலமைப்பரிசில் தொகையும் 2024 மே மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவிழாவில் சோகம்…150 அடி உயர தேர் சரிந்து கோர விபத்து!!

பெங்களூருவில், கோயில் திருவிழாவில் 150 அடி உயரத்தில் இருந்த தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் போது, திடீரென எதிர்பாராத விதத்தில் தேர் சரிந்து கீழே விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது.

சுமார் 150 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. தேர் கீழே விழுவதை உணர்ந்த பக்தர்கள் அங்கிருந்து ஓடியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பல பக்தர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி மெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

150 அடி உயரத்தில் தேர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து சரிந்து கீழே விழுந்தது.

தேர் சாய்ந்து விழுவதை பார்த்த பக்தர்கள் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படங்கள் , வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.