எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளான 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதக் கடவையினை கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் நானாட்டன் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய ராஜன் நிரோஜன் என்பரே உயிரிழந்தவராவர். புளியங்குளம் பொலிஸார் விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.
காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.
இந்நிலையில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிலும் பட்டா ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதியான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் 21வயது மதிக்கத்தக்க அல்முதீன் மிஹ்ராஜ் என்ற இளைஞரே உயிரிழந்தவராவர். சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியில் இருந்து நாவுல நோக்கி பயணித்த லொறி மீது யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து, இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மொரகஹகந்த – வடுருமுல்ல பிரதேசத்தில் நேற்று(05) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் லொறியின் பின் தளத்தில் பயணித்த சிங்கபுர சூரியவெவ பகுதியைச் சேர்ந்த திலுக நுவன் (வயது 25) மற்றும் நாவல, கணேவத்த நிகடலுபொத்த பகுதியைச் சேர்ந்த தனஞ்சய நவரத்ன ஆகியோரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை லொறியில் பயணித்த ஏனையவர்கள் படுகாயமடைந்து அம்பானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான பிலியந்தலையில் முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க முயற்சித்த இளம் தாதி உட்பட குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் காதலன் குழுவொன்று வருகைத்தந்து தாக்குதல் மேற்கொண்டு அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக தாதி ஒருவர் பெற்றோருடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் அந்த முறைப்பாடு போலியானதெனவும் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதற்காகவும் தாதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் முறைப்பாடு செய்த தாதி, அவரின் தாய், தந்தை மற்றும் உறவினரான பாடசாலை மாணவரும் அடங்குவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி தாதி அணிந்திருந்த சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான வளையல் மற்றும் தங்க நகைகள் என்பன அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து இரு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையம் சென்ற தாதி மற்றும் குடும்பத்தினர் முன்னாள் காதலன் தாக்கிவிட்டு தங்கத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் குறித்த யுவதியிடமும் ஏனையவர்களிடமும் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வாக்குமூலங்கள் பொய்யானது என்பதை சில நிமிடங்களிலேயே உணர்ந்துள்ளனர்.
முன்னாள் காதலனை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காகவே அவ்வாறு செய்ததாக தெரியவந்த நிலையில் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்று முன் தினம்(04) காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டுள்ளன.
இதன்போது டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த கடற்றொழிலாளர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு திரும்பவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த கடற்றொழிலாளர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் – மாந்தை மேற்கு மூன்றாம்பிட்டி கிராமத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஏ32 வீதி நாச்சிகுடா சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் குறித்த நபர் உணவு உண்பதற்கு சென்ற வேளை உணவில் ஈ இருப்பதை அவதானித்து உணவு பரிமாறுபரிடம் கூறியுள்ளார்.
இதன்போது உணவு பரிமாறும் நபர் சிங்கள மொழியில் கதைத்ததையடுத்து அதற்கு உணவு உண்ண சென்றவர் ஏன் சிங்கள மொழியில் கதைக்கின்றீர்கள் தமிழில் கதையுங்கள் என்று கூறி போது உணவகத்தில் நின்ற ஏனைய பணியாளர்கள் இணைந்து முரண்பட்டு குறித்த நபரிடம் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அதில் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து உணவக உரிமையாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விடயம் தொடர்பில் கூறிய போது, பொலிஸ் நிலையத்தில் முறையிட வேண்டாம் என உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையினாலும் தாக்கப்பட்டதாலும் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
எனினும் பொலிஸார் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவை பொலீசார் பரிசோதித்தால் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் வருகை தந்துள்ளனர்.
இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகள் சுவாமி உலாவரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்ற காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழர் பாரம்பரிய உடையுடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் இருவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் சுவாமி வலம் வரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுவாமியை தோலில் சுமந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறன. இந்தப் போட்டியில் 14 வயதான சாமுதி பிரபோதா என்ற சிறுமி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சாமுதி பிரபோதா மொனராகலை மாவட்டத்தில் உள்ள கும்புக்கன கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளராகும்.
14 வயதில் தேசிய மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை சிறப்பம்சமாகும். அது மட்டுமன்றி மொனராகலை போன்ற கடினமான பிரதேசத்திலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.
அவரது பகுதியில் தேசிய அளவில் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இதுவரையில் எவரும் உருவாக்க முடியவில்லை. ஆனால் இம்முறை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான வீராங்கனைகள் இது போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வந்த மிகவும் திறமையான வீராங்கனைகள் என தெரியவந்துள்ளது.
மேலும், உலகின் தலைசிறந்த பெண்கள் அணிகளான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இளம் பெண்கள் அணிகளை இலங்கைக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தப்பட்டு வருகின்றது.
மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவன் சுகவீனமடைந்து உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவனின் மரணம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்காக களனி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய நான்கு மாணவர்களிடமும், மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற விடுதி கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சாரதி உள்ளிட்ட 08 பேரிடமும் இந்த குழு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நோய்வாய்ப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் குழுவினால் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தின் அடிப்படையில் அவசரகால சுகாதார நிலைமைகளுக்கு பல்கலைக்கழக நடவடிக்கைளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதி ஊழியர்களுக்கும், விரும்பும் மாணவர்களுக்கும் முதலுதவி மற்றும் அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதக்கடவையினை கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் பிக்கப் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி, தர்மபுரம் – பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் மெய்வள்ளுனர் திறனாய்வு போட்டியை இடம்பெற்றுள்ளது.
இதனை பார்வையிட்டு திரும்பி சென்ற பொழுது, வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு 30 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுதே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது.
மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.
நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம்.
இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தனது அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன், அடிக்கடி குடித்துவிட்டு, மனைவி பாரதியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மகேந்திரன் சமீபத்தில் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய மகேந்திரன் தொடர்ந்து போதை பழக்கத்தில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், 15 நாட்களுக்கு பிறகு திப்பாலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பாரதி, நேற்று கணவர் வீட்டிற்கு வந்தபோது, மகேந்திரன் தனது மனைவி பாரதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார்.
இன்று காலை மகேந்திரனின் தாய் வீட்டை சுற்றி பார்த்தபோது மருமகள் பாரதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாரதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.