வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது!!

வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று குறித்த நபர்கள் கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை வழிமறித்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த காரினுள் ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி,ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து : தப்பிச் சென்ற கார் : இருவர் காயம்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று (04.04) மாலை இடம்பெற்றது.

வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர். சேதமடைந்த மோட்டார் சைக்கிள் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன்,

தப்பிச் சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படடம் மற்றும் சிசீரீவி கணொளி உதவியுடன் வவுனியா பொலிசார் தேடி வருகின்றனர்.

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!

கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.

மனோகரன் மற்றும் சுமதி தங்களது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் சவுரிபாளையம் மற்றும் சேரன்மாநகர் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மனோகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினர் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் உணவகத்திற்கு சென்ற மனோகரன், மதியம் வீடு திரும்பி உள்ளார்.

பின்னர் மாலையில் சேலம் செல்வதாக கூறிவிட்டு மனோகரனும் சுமதியும் காரில் சென்றுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரை இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தாங்கள் வாங்கி வந்த விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதனால் சிறிது நேரத்தில் சுமதி உயிரிழந்த நிலையில், மனோகரன் உயிருக்குப் போராடியுள்ளார். நெடுஞ்சாலை ஓரம் கார் நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்துவிட்டு சுங்கச்சாவடியில் இருந்த மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு சென்ற மருத்துவக் குழுவினர், இருவரையும் பரிசோதித்ததில் சுமதி ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த மனோகரனை மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகவேலு தலைமையிலான போலீஸார் அங்கு வந்து சுமதியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மனோகரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடன் பிரச்சினை மற்றும் உடல் நலப் பிரச்சினையால் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த பிரச்சினைகளால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17545 கோடி சொத்துக்களை இழந்து பைஜூஸ் நிறுவனம் பூஜ்யத்திற்கு வந்த கதை!!

பைஜூஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு நோட்டிஸ் பீரியட் கொடுக்காமல் சாதரணமாக போன் கால் மூலமாக வேலையை விட்டு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

`உங்கள் வேலை 2024 மார்ச் 31 உடன் நிறைவடைகிறது. சம்பளம் பின்னர் தறப்படும்` என்று போன் காலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இச்செயலுக்குக் கடுமையான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

மேலும், இதன்மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம எனத் தகவல்கள் வெளியாகிள்ளன. இது குறித்து பைஜூஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், `வணிக கட்டமைப்பின் இறுதி கட்டத்தில் இருப்பதால் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் கடந்த 2023-ல் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. சட்டச் சிக்கல்கள் காரணமாக, நிறுவனத்தில் அசாதாரணமான சூழ்நிலையை நாங்கள் சந்திக்கிறோம்.` என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பைஜூஸ் நிறுவனம் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல பைஜூஸ் நிறுவனம்.

ஆன்லைன் வழியே கல்வியை வீடுகளுக்கே கொண்டு வந்த சேர்த்த மிகப்பெரிய நிறுவனமாக பைஜூஸ் மாணவர்களிடையே பரந்து விரிந்துள்ளது. இதன் எதிரொலியாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம் பிடித்தார் பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன். 2 வருடங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் , வருவாய் இழப்பு , கடன் சுமை என அடுத்தடுத்து பைஜுஸ் நிறுவனத்திற்கு அடிமேல் அடி விழுந்தது.

அதே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை முதலீட்டாளர்களுடன் பிரச்சனை என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. இந்நிறுவனம் ரூ28000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு Byju’s நிறுவனம் ரூ9754 கோடியை அனுப்பி உள்ளது.

ரூ944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக இந்நிறுவனம் செலவு செய்தாலும் அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை இந்நிறுவனம் சமர்ப்பிக்க தவறியது.

இதனால் ரூ. 9,362 கோடிக்கு அந்நிய செலவாணி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல சவால்களை இந்நிறுவனம் சந்திக்க தொடங்கியது. நிதி கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை. கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவில்லை என அடுத்தடுத்து வழக்குகள்.

அத்துடன் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை வைத்து நிறுவனம் மறைத்தது கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீடு இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக குறைந்தது.

தொடர் குற்றச்சாட்டுகளால் முதலீட்டாளர்கள் பின்வாங்கினர். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்த கூட முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு ரூ17,545 கோடி மற்றும் அவர் பல மதிப்புமிக்க ‘உலகின் பணக்காரர்’ பட்டியல்களில் இடம் பெற்றிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் 2024 ன் படி, ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியமாகக் குறைந்திருப்பதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர்.

இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும், திடீரென தலைமறைவான கணவன் குறித்த வேதனையில் இருந்து வந்த புதுமணப்பெண், தன் எதிர்கால வாழ்க்கைக் குறித்த கவலையில் தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சிந்தலைசேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஜோதிடரான இவரது மகள் ஹேமலதா (19). பெங்களூரு இஸ்ரோவில் பணிபுரிந்து வருபவர் மணிவாசகம். சுரேஷ் உறவினரான இவரது வீட்டிற்கு சுரேஷ் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷன் மகள் ஹேமலதாவுக்கும், மணிவாசகத்தின் மகன் சந்துருவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்தது, காதலர்கள் இருவரும், தேனி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில், பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டிக் கொண்டு, மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரது பெற்றோர்களும் இவர்களின் காதலை ஏற்காத நிலையில், திருமணத்திற்கு பின்பு, ஹேமலதாவின் தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மணமகளுக்கு 19 வயதும் மணமகனுக்கு 20 வயதும் ஆனதால், மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று புதுமண தம்பதிகள் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என அறிவுரை கூறி அவர்களது பெற்றோருடன் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

சந்துருவின் பெற்றோர் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா மீண்டும் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் சந்துருவை தேடி வந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய காதல் கணவனைக் காணாததால், தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா தனது வீட்டிலேயே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான சந்துரு மீதும், அவரது பெற்றோர் மீதும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஹேமலதாவின் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு ஹேமலதாவின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை போதாது… இளம்பெண்ணை அடித்தே கொன்ற கணவன், மாமியார்!!

வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சௌகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, விகாசுக்கு வரதட்சணையாக காரும், ரூ.21 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கரிஷ்மாவை விகாசும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் கரிஷ்மா மனஉளைச்சலில் இருந்துள்ளார். வரதட்சனை தொடர்பாக விகாசுக்கும் கரிஷ்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.

பின்னர் கிராம பஞ்சாயத்து மூலம் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அப்போது, விகாசின் குடும்பத்துக்கு மேலும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை கரிஷ்மாவின் குடும்பத்தினர் கொடுத்தனர்.

இனி தனது பிரச்சனை தீர்ந்து விடும் என எண்ணிய கரிஷ்மாவுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தங்களுக்கு வரதட்சணையாக மேலும் ரூ.21 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு காரை வழங்க வேண்டும் எனக்கூறி கரிஷ்மாவை விகாசின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பான பிரச்சனை அதிகரித்த நிலையில், கடந்த வெள்ளியன்று விகாசும் அவரது அம்மாவும் சேர்ந்து கரிஷ்மாவை சரமாரியாக அடித்துள்ளனர்.

இதையடுத்து கரிஷ்மா, தனது சகோதரரான தீபக்கை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக தீபக், கரிஷ்மாவை வந்த பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார்.

இது தொடர்பாக தீபக் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், விகாசையும் அவரது தந்தையையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய விகாசின் தாய் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!!

அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில் அறை எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர்.

ஏப்ரல் 1-ம் தேதி இரவு வரை அவர்கள் ஓட்டல் அறையில் இருந்த வெளியே வராததால், ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

ஹோட்டல் அறையில் தம்பதி, குளியலறையில் ஆசிரியை ஆகியோர் மணிக்கட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்கள், கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ தம்பதிகளான நவீன் தாமஸ் (35), தேவி (35) என்று கண்டறியப்பட்டனர்.

அவர்களுடன் தங்கியிருந்தவர் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஆர்யா (29) என்பது தெரிய வந்தது. ஹோட்டல் அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தடவியல் நிபுணர்கள் விரைந்து சென்று அறையில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

ஆசிரியர் ஆர்யா நாயரைக் காணவில்லை என்று திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவனந்தபுரம் நகர காவல் துணை ஆணையர் நாகராஜு கூறுகையில், உயிரிழந்த மூவரின் நடத்தையில் ஏதோ அசாதாரணமானது இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அவர்களின் செல்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை ஆய்வு செய்யும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவர்களின் மரணம் சூனியத்தால் நிகழ்ந்ததா என்று சொல்ல முடியாது. அவர்கள் மூவரும் எதற்காக அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றார்கள், அவர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்நிலையில், மர்மமாக உயிரிழந்த தம்பதியரின் குடும்ப நண்பரான சூர்யா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தேவியின் தந்தை வனவிலங்கு புகைப்படக் கலைஞர். இவர்களின் மரணத்திற்குப் பின்னால் சூனியம் இருப்பதாகக் கருதுகிறார்.

அந்தத் தம்பதிகள் சூனிய வலையில் விழுந்ததாக அவர் (தந்தை) என்னிடம் சொன்னார். அத்துடன் ஆன்லைன் வர்த்தகத்திற்காக தம்பதியினர் தங்கள் ஆயுர்வேத தொழிலை கைவிட்டனர். மேலும், நவீன் மற்றும் தேவி ஆகியோர் சூனியம் செய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இறந்த மூவரும் நன்றாகப் படித்தவர்கள். எதற்காக இப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார். இவர்களின் மூவரின் மரணம் குறித்து அருணாச்சல பிரதேச போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டகிராமில் 34 வயதுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த 80 வயது முதியவர்!!

2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர்.

படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர், இளைஞர்கள், முதியவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கையடக்க சாதனமாக ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை.

சில சமயங்களில் ஸ்மார்ட்போன் நம்மை உட்கொள்கிறது என்று சொல்லலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பொதுவாக பெரும்பாலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாவை 2K குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதல் காரணமாக நடந்த திருமணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 80 வயது தாத்தா 34 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், அகர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் பலுராம் பக்கிரி. இதேபோல், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஷிலா இங்கிள்.

இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

தற்போது இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த திருமணம் பல இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கித் தவித்த 2 வயதுக் குழந்தை பத்திரமாக மீட்பு!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 15-20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து 18 மணிநேர போராட்டத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று (03) மாலை 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து, சிக்கி தவித்து வந்துள்ளது.

15-20 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

விசாரணையில் ஈடுப்பட்டிருக்கும் பொலிஸார் கூறுகையில், குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதாகவும் இந்த கிணறு குழந்தையின் தந்தையின் சொந்த காணியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவை அதிகாரிகள் உள்ளனர்.

வீடியோ மூலம் குழந்தையை பார்த்த போது, குழந்தையின் கால்கள் அசைந்துள்ளன. எனவே குழந்தைக்கு ஓட்சிசன் வழங்குவதற்காக கிணற்றுக்குள் குழாய்கள் செருகப்பட்டுள்ளதாக பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வீடியோ காட்சியின் மூலம் குழந்தையை கண்காணித்த பொழுது, அக்குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. பின் குழந்தையை மீட்டெடுப்பதற்காக சுமார் 21 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழி அதிகாரிகள் தோண்டியுள்ளனர்.

அருகில் தோண்டி குழியின் ஊடாக மீட்பு படையினர் சென்று குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு மருத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வானில் நிகழவுள்ள அதிசயம்… இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு!!

வானில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வினை பார்வையிடும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அடசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி,12P/Pons-Brooks என்ற விஞ்ஞான பெயர் கொண்ட வால் நட்சத்திரத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிக பட்ச வால் நட்சத்திரத்தை இலங்கை மக்கள் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திகதி அன்று இந்த வால் நட்சத்திரம் பூமியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் 240 மில்லியன் தூரம் பயணிக்கும்.

இந்த மாதத்தின் 3வது வாரத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் மேற்கு வானில் அடிவானத்திற்கு அருகில் இந்த வால் நட்சத்திரத்தை அவதானிக்க முடியும் என பேராசிரியர் ஜானக அதாசூரிய மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாட்டில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக தொடர் அதிகரிப்பை சந்தித்து வருகின்றது.

இதன்படி, இன்றைய தின தங்க நிலவரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 195,100

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,360

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 178,900

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,350

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,750 ஆக பதிவாகியுள்ளது.

தமிழர் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

திருகோணமலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்ய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.

இச்சம்பவம் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு, கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மின்கம்பத்தில் கணவனை கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த மனைவி : தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!!

மாத்தறையில் மது போதையில் வீட்டுக்கு சென்ற கணவரை மனைவி கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் நாளாந்தம் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்று தனது மனைவியை தாக்குவதனை வழக்கமாக கொண்டவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இவர் கடந்த 2 ஆம் திகதி அன்று வழமைபோல குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து இவரது மனைவி மற்றும் சிலர் இணைந்து கணவனை வீட்டிற்கு முன்பாக உள்ள கம்பத்தில் கட்டிவைத்து பலமாக தாக்கியுள்ளனர்.

காயமடைந்த கணவர் மயங்கிய நிலையில் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவரை கட்டி வைத்திருந்த கயிறு கழுத்தில் நெரிக்கப்பட்டதால் இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து சந்தேக நபரான மனைவி வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் : தாயார் எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே நேற்றையதினம் (03.04.2024) வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மகன் உயிரிழந்த தகவலறிந்து அவரது தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபர் யாழை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணொருவருக்கு நடுவீதியில் நேர்ந்த கதி!!

பிரான்ஸில் இலங்கை தமிழரையும் விடுதலை போராட்டத்தையும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி டிக்டொக்கில் வீடியோ வெளியிட்ட தமிழ் பெண்ணை புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில் பெண்ணொருவர் ஈழ தமிழர்களையும், புலிகளின் தலைவரையும், போராட்டத்தில் கலந்துகொண்ட மாவீரர்கள் பற்றியும் தவறாக பேசியதாக தெரியவந்துள்ளது.

இதனையறிந்த அங்கிருந்த இலங்கை தமிழர்கள் பெண்ணிடம் சென்று ஈழத்தை பற்றி பேசக் பேசக்கூடாது என கூறி தாக்கியுள்ளனர். மேலும் கையில் இருந்த உணவை அவர் மீது ஏறிந்துள்ளனர்.

மேலும், குறித்த பெண் ஈழத்தில் உள்ள தாய் மார்களை எல்லாம் வேசி என கூறியுள்ளதாக என கூட்டத்தில் இருந்த ஒருவர் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.