சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!!

மன்னாரில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை (03.04) குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்.

 

வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் இன்று (03.04) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

அத்துடன் இதனை கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்றுவிடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.

இதனை ஆட்சேபித்த பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரனைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறை!!

எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றாது சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினால் வாகன போக்குவரத்து குறித்த நிபுணத்துவ பதக்கம் வழங்கப்படும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரயோக ரீதியான பரீட்சைக்கு மட்டும் தோற்றி சித்தி எய்துவதன் மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் மற்றம் பதக்கம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஆரம்பப் பிரிவு முதல் உயர்தர மாணவர்கள் வரையில் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கம் வழங்கப்படும் போது ஆசிரியர்களும் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளை மேற்கெளர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதக்கம் வழங்கும் நடைமுறையின் அதி உச்ச கட்டமாக ஜனாதிபதி பதக்கம் வரையில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பதக்கம் பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியின் போது சலுகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்!!

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனை தொலைநோக்கி உதவியுடன் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்'(12P/Pons-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095 இல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் இளைஞர்களுக்கான சந்தர்ப்பம்!!

ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்நூறு இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், மனிதவளம் மற்றும் பாதுகாப்புத் துறை அதன் ஒருங்கிணைப்பைச் செய்து வருகிறது. அதற்கான செலவை ஜனாதிபதி நிதியம் ஏற்கிறது. இந்தப் பயிற்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை இலக்காகக் கொண்டது.

இலங்கை ஹோட்டல் பயிற்சிக் கல்லூரியின் பாடநெறிகளுக்கு இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள், குறிப்பாக ஹோட்டல்துறையில் வேலைவாய்ப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இளைஞர்கள் நேரடியாக வேலைகளுக்கு வழிவகுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகளுக்கு அனுப்பப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சடலம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஷார்ஜா நகரில் நிலத்தடி மின் அமைப்பு மின்சாரம் கசிந்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, (Kalutara) மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க, என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மத்துகம C.W.W..கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர்தரம் படித்த மாணவியாகும். அவர் தனது சகோதரர் மூலம் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்தார். கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே அமைந்துள்ள கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார்.

அந்த நேரத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால், மின் அமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத சந்தமாலி வெள்ள நீரில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அந்த நேரத்தில், இரண்டு எகிப்தியர்கள், ஒரு பங்களாதேஷ் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் ஆகியோரும் இந்த இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்

தென்னிலங்கையில் இசை நிகழ்ச்சியில் வெடித்த மோதல் : மகனுக்காக பரிதாபமாக உயிரைவிட்ட தந்தை!!

இசை நிகழ்ச்சியின் போது மகனுக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாரம்மல (Naramala) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இல-80, கொங்கஹகொடுவ, களுகமுவ, மேவெவ என்ற முகவரியில் வசிக்கும் பிரதீப் குணதிலக்க (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் மீன் விற்பனையை தொழிலாக செய்து வரும் நிலையில், கடந்த 28 ஆம் திகதி முந்தல் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு மகனுடன் சென்றுள்ளார்.

இதன்போது இரவு இசை நிகழ்ச்சியில் மகனின் நண்பர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்க முற்பட்ட போது, ​​இசை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை நண்பர்கள் குழுவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் இசை நிகழ்ச்சி முடிந்ததும் அதிகாலை 1.45 மணியளவில் தந்தையும் மகனும் வீட்டிற்குச் செல்வதற்காக அரங்கிலிருந்து வெளியே வந்தபோது, ​​​​இருபது பேர் கொண்ட கும்பல் தந்தையையும் மகனையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தந்தையை போத்தலால் தாக்கி, ஹெல்மெட்டால் தலையில் அடித்து காயப்படுத்தி கும்பல் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான நபர் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்த , நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 30ஆம் திகதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றுமுன் தினம் 1ம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடும் வறுமையால் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

திஸ்ஸமஹாராம (Tissamaharama) பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை தெரியவந்துள்ளது. தனது 2 பிள்ளைகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் கல்வியை வழங்க முடியாத நிலையில் இந்த குடும்பத்தினர் சிக்கியுள்ளனர்.

அன்றாடம் உணவு இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனவிரக்தியில் இருந்த தந்தை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வசிக்கும் தந்தையொருவரே இவ்வாறான செயலை செய்துள்ளார்.

தாய்வானில் பாரிய நிலநடுக்கம் : தரைமட்டமான பல கட்டடங்கள் – சுனாமி எச்சரிக்கை!!

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக தாய்வானில் உள்ள கட்டடங்கள் பல தரைமட்டம் ஆகியுள்ளதுடன் இடிந்து விழுந்துள்ள கட்டிடங்கள் உள்ளே மக்கள் சிக்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்வானின் மத்திய வானிலை நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடக்கு கடலோர பகுதியில் சுனாமி அலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா மற்றும் ஒகினாவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. 3 மீற்றர் உயரத்திற்கு அலைகள் எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து : விசாரணைகள் தீவிரம்!!

மட்டக்குளிய – இக்பாவத்தை (Mattakuleya) பகுதியில் சுற்றுலாச்சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை (03.04.2024) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் வீதியில் பேருந்தினை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணை

கண்டி நோக்கிச்சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதன்போது பேருந்தில் யாரும் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் வசதி!!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் உள்ளது. எழுத்துப் பிழை அல்லது வார்த்தைப் பிழையுடன் செய்தியை அனுப்பினால், அதை முழுவதுமாக நீக்க வேண்டாம், எடிட் ஆப்ஷனைப் பயன்படுத்தி எளிதாகத் திருத்தலாம்.

செய்தியை அனுப்பிய 15 நிமிடங்களில் திருத்தவும்.

அதுவரை மட்டுமே இந்த விருப்பம் செயல்படுத்தப்படும். இந்த விருப்பம் iOS மற்றும் Android இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்த, மெசஞ்சரை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும்.

மெசஞ்சரில் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தும் முறை

முதலில் மெசஞ்சரில் உள்ள செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். குறிப்பிட்ட செட் பக்கத்திற்குச் சென்று, நீங்கள் திருத்த விரும்பும் செய்தியை நீண்ட நேரம் அழுத்தவும்.

அடுத்து எடிட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், இப்போது நீங்கள் அந்த செய்தியை திருத்தலாம். ஒரு செய்தியை அதிகபட்சம் 5 முறை திருத்தலாம். செய்தியை எடிட் செய்த பிறகு, அதன் கீழ் எடிட்டட் ஹைலைட் செய்யப்படும்.

யாழில் உயிரிழந்த தாய்…சொத்துக்காக நடந்த பாரிய மோசடி.. வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் என சந்தேகமடைந்த நிலையிலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். மானிப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த மூதாட்டி திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து, வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளார்” என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, பணிப்பாளர் சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார். மேலும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, குறித்த மூதாட்டியின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது, அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸார் உயிரிழந்த மூதாட்டியை பராமரித்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தாம் வைத்தியசாலையில் பெண்ணை அனுமதிக்கும் போது பெருவிரலில் மை அடையாளம் இல்லை எனவும், பின்னர் எப்படி வந்தது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வெளிநாட்டில் வசிக்கும் உயிரிழந்த பெண்ணின் மகன் வைத்தியசாலைக்கு நேரில் வருகை தந்து பெண்ணை அடையாளம் காட்டிய பின்னரே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அது வரை சடலம் பிரேத அறையில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்… பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்!!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம், உழவனூர் பகுதியில் இன்றைய தினம் (02-04-2024) காலை இருவீட்டாருக்கு இடையில் வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

காதலியுடன் சென்ற மாணவன் மாயம் : விசாரணையில் குடும்பத்தாருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்!!

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற மாணவனை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 17 வயதுடைய குறித்த மாணவன் தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் காதலியின் கருத்து தொடர்பில் மாணவனின் உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காலி(Galle) வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜங்கள் கடற்கரையில்(Jungle beach) இருந்து திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை எனவும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology sri lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வவுனியாவில் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்தின் சாரதி , நடத்துனர் தாக்குதல் முயற்சி!!

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (02.04.2024) மதியம் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் குறித்த பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தினை பாவற்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் வழி மறித்து செட்டிக்குளம் தனியார் பேரூந்தின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டமையுடன் அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

நேரசூசி பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.