குடும்பத் தகராறில் விபரீதம் : மருமகள் தற்கொலை… வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் மாமனார், மாமியார் பலி!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் மாமனார், மாமியார் உடல்கருகி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள முத்திகஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அன்ஷிகா கேசர்வானி என்ற 27 வயது இளம்பெண், குடும்பத் தகராறு காரணமாக நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் வந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்கள் மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு விட்டதாக மாமனார் ராஜேந்திர கேசர்வானி (65), மாமியார் ஷோபா தேவி (62) ஆகியோர் மீது பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்போது ஆத்திரமடைந்த, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அவரது மாமியார் வீட்டிற்கு தீ வைத்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் ராஜேந்திர கேசர்வானி, ஷோபா தேவி ஆகிய இருவரும் தீயில் கருகி இறந்தனர்.

மேலும், படுகாயமடைந்த அவர்களது மகன் ராஜேந்திரா, பேத்தி ஷிவானி, மற்றொரு மருமகள் லவ்லி கேசர்வானி ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்திகஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், வீட்டுக்கு தீ வைத்து, கணவரின் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடி..காதலன் உயிரிழந்த பரிதாபம்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. குறித்த மாணவியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் கல்லூரி மாணவியான சிறுமி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரும் காதலர் ராஜூவும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் விஷம் அருந்திவிட்டு, ஹேமாவதி ஆற்றுப்பாலம் வழியாக செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர்.

அப்போது பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு ராஜூ சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சிறுமி தொடர் சிகிச்சையில் உள்ளார். பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸாரிடம் மாட்டியதால் காதலியை தவிக்கவிட்டு காதலன் ஓட்டம்!!

காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி தனது காதலனுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் சில காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தும்மலசூரிய விலத்தாவ வீதியில் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சோதனையிட்டபோதே அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

பிரான்ஸில் இருந்து திருமணத்திற்கு தாயகம் வந்த இளைஞனுக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி!!

பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சயிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான இளைஞன் கிளிநொச்சி சென்றுள்ளார்.

இளைஞனின் பெற்றோர் யுத்ததில் இறந்துவிட்டார்கள். தனது மூத்த சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த இளைஞன் 2010ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்றுள்ளார்.

இந்நிலையில் இளைஞனுக்கு மூத்த சகோதரி பெண் பார்க்கும் படலத்த தொடங்கியுள்ளார். இந் நிலையில் தனது கணவனின் துாரத்து உறவுக்கார குடும்பம் ஒன்றில் 24 வயதான யுவுதி ஒருவரை இ பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் இளைஞன் யுவதியுடன் தொடர்ச்சியாக கதைத்து வந்துள்ளார்.

அத்துடன் பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் தொடர்ச்சியாக தனது வருங்கால மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் திருமணம் நடக்க ஆயுத்தமாகியுள்ளது.

பிரான்சிலிருந்து இளைஞன் தை மாத நடுப்பகுதியிலேயே இலங்கை சென்றுள்ளார். அவர் தாயகம் திரும்பிய ஓரிரு நாட்களில் யுவதி வீட்டிலிருந்து காணாமல் போனதால் மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளது.

அதன் பின்னரே குறித்த யுவதி, தான் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அவருடனேயே தற்போது தங்கியுள்ளதாகவும் தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் கூறிய நிலையில் விரக்தியடைந்த மணமகன் பிரான்ஸ் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா உட்பட மக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில், மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை இன்று (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் இன்று முதல், விசேடமாக தென் அரைப்பிராந்தியத்தில் தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

மேலும் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இலங்கையில் அனைவரையும் நெகிழ வைத்த இளம் தாயின் செயல்!!

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.

பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

இதன்போது, நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

குறித்த தாயின் செயலைக் கண்டு இலங்கை வாழ் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்… மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ அழைப்பு!!

கனடாவில் இருந்து பஞ்சாப்பில் உள்ள தனது தாயிக்கு வீடியோ கால் செய்து மனைவியை கொலை செய்துவிட்டதாக சந்தேக நபர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங் – பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை, ஜக்பிரீத் சிங் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார்.

அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனைவி பல்வீந்தர் கவுர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜக்பிரீத் சிங்கை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் ஜக்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில்,

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோரக்கன் கட்டு பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயதிற்கும் குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது நேற்று (19.03.2024) மதியம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.எம் சகாப்தீனின் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சந்தேக நபருக்கு 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 24 மாத கால சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தவறும் சந்தர்ப்பத்தில் 24 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்பளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடியிருப்பு கோரக்கன் கட்டு பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியமை சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலமும் சாட்சியங்கள் மூலமும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றை அடிப்படையாக கொண்டு,

சிறுமி சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக அடையாளம் கண்டு மேற்படி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு : துயரத்தில் குடும்பத்தினர்!!

கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வடமாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் 2 பிள்ளைகளின் தாயான சுமங்கலா என்பவரே உயிரிழந்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!

ஆஸ்திரேலியாவில் Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 2 திகதி இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள லாமிங்டன் தேசிய பூங்காவில் உள்ள யான்பாகூச்சி நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அனைவரும் ஆங்காங்கே இருந்து போட்டோ எடுத்துக்கொள்ளவே, இவரும் தான் கொண்டுபோன Tripod-ஐ பயன்படுத்தி போட்டோ எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அந்த Tripod-ஐ சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள விழுந்துள்ளது. இதனை கண்ட அந்த இளம்பெண், தாமாகவே எந்த உதவியும் இன்றி எடுக்க முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் கால் இடறவே, சட்டென்று சரிந்து பள்ளத்தில் விழுந்துள்ளார். முதல் 10 மீட்டரில் சிக்கிய அவர், சில நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் நிரம்பிய மீதமுள்ள 10 மீட்டரில் சரிந்து மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் பள்ளத்தில் விழுந்த பெண்ணை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொலிஸார் மீட்டதாக கூறப்படுகின்றது.

வட மாகாண மக்களுக்கு யாழ். மூத்த விரிவுரையாளர் ஒருவரின் அவசர எச்சரிக்கை!!

வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மூத்த விரிவுரையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நேற்றைய தினம் (18-03-2024) அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. உணரக்கூடிய வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது. குறித்த நிலைமை எதிர்வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் சராசரி ஆவியாக்க அளவு 11 மில்லிமீற்றர் ஆகும். சில இடங்களில் சராசரியை விட மிக உயர்வாக பதிவாகியுள்ளது. எனவே ஒரு நாளின் ஆவியாக்க அளவே, 11 மில்லிமீற்றர் என்றால் ஒரு மாதத்தின் 30 நாளுக்கான ஆவியாக்க அளவு 330 மில்லிமீற்றர் ஆகும். இதேவேளை இந்த ஆண்டு மார்ச் மாதம் இதுவரை 1 மில்லிமீற்றர் மழை கூடக் கிடைக்கவில்லை.

எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரையிலான தினங்களில் வெப்பச்சலன செயற்பாட்டால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடுமையான ஆவியாக்கம் எமது தரை மேற்பரப்பு மற்றும் தரைக் கீழ் நீர்நிலைகளின் நீரின் அளவை கணிசமான அளவு குறைக்கும். யாழில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரே தரைக்கீழ் நீரை மீள் நிரப்பக்கூடிய கன மழைக்கு வாய்ப்புண்டு.

எனவே நிலவுகின்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நீர் விரயத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மருந்தக பிரிவுகள் முற்றாக செயலிழந்துள்ளன.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகைதந்த நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

வீதியில் காத்திருந்த பெண்ணை உதவி செய்வதாக கூறி கடத்திச்சென்று பாலியல் துஸ்பிரயோகம்!!

கொழும்பில் இருந்து பஸ்ஸொன்றில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக மொனராகலையில் காத்திருந்த பெண்ணொருவரை, கெப்ரக வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் , அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் சந்தேகநபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து மொனராகலை தொம்பஹாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 36 வயதான பெண், கொழும்பில் இருந்து பஸ்ஸில் அனுப்பப்பட்ட பொதியை பெற்றுக்கொள்வதற்காக இரவு 9 மணியளவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அப்பெண்ணுக்கு அருகில் கெப்ரக வாகன​மொன்று வந்து நின்றுள்ளது. அந்த கெப்ரக வாகனத்தின் சாரதி, எங்கே போகின்றீர்கள் என அப்பெண்ணிடம் வினவியுள்ளார்.

தொம்பஹாவெல நகருக்குச் செல்வதாக அப்பெண் பதிலளிக்கவே, தானும் நகருக்குத்தான் செல்கின்றேன் எனக்கூறி, அப்பெண்ணை வாகனத்தின் முன்பக்க இருக்கையில் ஏற்றிக்கொண்டுள்ளார்.

வாகனத்தை நகரத்தில் நிறுத்தாமல், கொஞ்சம் முன்சென்று, பாழடைந்த குறுக்கு வீதியில் நிறுத்தி,அப்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர், அதே கெப்ரக வாகனத்தில் அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு நகரத்துக்கு வந்து இறக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் அபகரித்துச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அக்காவின் மகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்ட தாய்மாமன்!!

திருமணம் செய்ய மறுத்த தனது அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து மரத்தில் தூக்கில் விட்ட இளைஞர் ஐந்து நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகா பைச்சவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதேஷ் பார்கி(35). இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை.

ஆனால், தனது அக்கா மகள் தீபா கோண்டி(21) என்பவரை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று மாலதேஷ் விரும்பினார். ஆனால், குடிப்பழக்கம் கொண்ட மாலதேஷை தீபாவிற்கு பிடிக்கவில்லை. அத்துடன் வயதும் கூடியவர் என்பதால் மாலதேஷை அவருக்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில், தனது அக்காவிடம் எப்படியாவது தீபாவை திருமணம் செய்து வைத்து விடு என்று தொடர்ந்து மாலதேஷ் வற்புறுத்தி வந்தார். அத்துடன் குடும்பத்தினருடன் இதே கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இதனால் தீபாவிற்கும், மாலதேஷ்க்கும் ஏப்ரல் 22-ம் தேதி நடத்துவது என்று குடும்பத்தினரால் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு மரத்தில் தீபாவின் உடல் தூக்கில் இறந்த நிலையில் இருந்தது. இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறித் துடித்தனர். திருமணம் பிடிக்காத காரணத்தால், தீபா தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் குடும்பத்தினர் நினைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மாலதேஷ் தலைமறைவானது தீபாவின் குடுப்ம்பத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவர்கள், போலீஸாரிடம் இந்த விஷயத்தைக் கூறினர்.அதனால் மாலதேஷ் பார்கியை போலீஸார் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சியான தகவல் வெளியானது.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்டாலும், என்னைப் பிடிக்கவில்லை என்று தீபா தொடர்ந்து கூறி வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் அவருக்கு விஷம் கொடுத்து கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விட்டேன் என்று போலீஸாரிடம் மாலதேஷ் கூறியுள்ளார்.

இதனால், அவரை ஹானகல் போலீஸார் இன்று கைது செய்தனர். கொலை நடந்து ஐந்து நாட்களுக்குப் அபிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்பப் பெண் உயிரிழப்பு!!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் முல்லைத்தீவில் இருந்து பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள்!!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த மோசடிகள் தொடர்பில் இதுவரை 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகவர்களின் மோசடி குறித்து மக்கள் விழிப்படையாத வரை இவ்வாறான மோசடிகளை தடுக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.