முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தையை எரித்த தாய் : மதபோதகர் உட்பட மூவர் கைது!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

குழந்தையை குறித்த பெண்ணின் வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றி கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும் குறித்த பெண்ணுடன் தொடர்பு சந்தேகிக்கப்படும் மதபோதகர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இன்றையதினம் (19.03.2024) சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த சம்பவ இடத்தினை பார்வையிட்ட போது, குழந்தையை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து சில தடயப்பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டுள்ளதாக நீதிபதியிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தடய பொருட்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கொடூர சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசுவமடு – இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.

இளம் பெண்ணின் மோசமான செயல் : விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது!!

 

 

 

 

 

 

 

களனி, பெத்தியகொட பிரதேசத்தில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெத்தியகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் 820 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், டிஜிட்டல் தராசு மற்றும் 02 லட்சம் ரூபாய் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 5 கோடியை இழந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

தென்னிலங்கை பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி ஐந்து கோடி ரூபாயை இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கொரியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த இளைஞன் நாடு திரும்பிய நிலையில் வீடியோ கேம்களுக்கு அடிமையாக மாறியுள்ளார்.

இந்த விளையாட்டில் ஐந்து கோடியை இழந்தமையினால் மனம் உடைந்து இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

8 வயதிலே வரலாற்று சாதனை படைத்த லண்டன் தமிழ் சிறுமி பற்றிய சுவாரஸ்ய பதிவு!!

லண்டன் வாழ் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் தனது எட்டு வயதிலேயே கான்டினென்டல் போட்டியில் வெற்றி பெற்று ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளார். இவர் பற்றிய ஒரு சுவாரஸ்ய கதை இதோ..

2020 ஆம் சிறுமி போதனாவின் தந்தை சிவானந்தன் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நண்பர் தற்போது குடியிருக்கும் வீட்டை விட்டு மற்றொரு வீட்டு மாறியுள்ளார்.

இதன்போது பழைய வீட்டிலிருந்து பொருட்களை எல்லாம் புது வீட்டிற்கு எடுத்து செல்ல சிவானந்தன் உதவி செய்துள்ளார்.

அப்போது, நண்பரின் வீட்டில் பழைய புத்தகங்கள், அதிகமாக இருப்பதை கண்டு சிவானந்தன் நண்பரிடம் இதனை தான் என் வீட்டிற்கு எடுத்து கொண்டு போகவா என கேட்டுள்ளார் அதற்கு நண்பர் எடுத்து கொண்டு போங்கே என கூறியுள்ளார்.

இதனையடுத்து சிவானந்தன் புத்தகங்களை எடுத்து கொண்டு இருக்கும் போது அங்கு புத்தகங்களுடன் புத்தகமாக போர்டு இருந்துள்ளது. அது என்னென்று பார்த்தால் அதுதான் செஸ் போர்டு அதனையும் சிவானந்தன் புத்தகங்களுடன் எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுளார்.

சிவானந்தனுக்கு சிறிய வயதில் இருந்தே செஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இதனால் அவர் குறித்த செஸ் போர்டையும் நண்பர் வீட்டில் இருந்து எடுத்துகொண்டு வந்துள்ளார்.

பின்னர் புத்தங்களையும், செஸ் போர்டையும் மகள் போதனாவிடம் காண்பித்துள்ளார். இதனை பார்த்த சிறுமி போதனாவிற்கு செஸ் மீது ஒரு அர்வம் வந்து நான் இதை கற்றுக்கொள்ள போவதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தந்தையும், செஸ்ஸில் தனக்குத் தெரிந்ததையும், மற்றும் யூடியூபில் பார்த்தும் மகள் போதனாவுக்கு கற்று கொடுத்துள்ளார்.

இதேவேளை கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நாடு முழுவதும் அழுல்ப்படுத்தப்பட்டதால் சிறுமி படிப்பு போக முழு நேரம் செஸ் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டயுடன் சிறிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற ஆரம்பித்தவுடன் அவருடன் பாடசாலையில் முதல் தர போட்டியாளராக மாறியுள்ளார்.

அப்படியிருக்கும் போது கடந்த 2023 டிசம்பர் மாதம் குரோஷியா நாட்டில் நடந்த ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று 2023 க்கான சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகியுள்ளார்.

இந்த செய்திகள் உடனடியாக பிரித்தானியாவில் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதங்களில் பரவியது. இன்றைய திகதிகளில் போதனா பிரித்தானியாவின் மிக மிக்கிய சதுரங்க போட்டியளாராக உள்ளார்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : மகள் அனுப்பியுள்ள உருக்கமான இரங்கல் செய்தி!!

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளன.

மார்ச் 6 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த 19 வயதான மாணவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட அவர்களுடன் தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையரும் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த காமினி அமரகோனின் மனைவி மற்றும் மகள் இறுதிச் சடங்குக்காக இலங்கையில் இருந்து இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளனர்.

உயிரிழந்த காமினி அமரகோனின் 11 வயது மகள் ஆஷேரி அமரகோன் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், “என் அப்பாவை பற்றி நான் சொல்ல வேண்டும், அவர் எங்கள் அனைவருக்கும் சிறந்த தந்தையாகவும், என் அம்மாவுக்கு நல்ல கணவராகவும் இருந்தார்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நாங்கள் உங்களை சந்திக்க வருகின்றோம். கடவுள் ஆசீர்வதிப்பார்.”

காமினி அமரகோனின் மனைவி திஷானி பெர்னாண்டோ, “மன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதற்கு. ஆனால் மகள்கள் ஆஷேரி மற்றும் கெய்லியுடன் நான் எப்போதும் உன்னுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருப்பேன்.

நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றோம். நீங்கள் இல்லாமல் எங்களுக்கு பாழடைந்த வாழ்க்கையே அமையும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

2 பிள்ளைகளின் தாய் கொலை : சிக்கிய குற்றவாளி!!

சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறை ஒன்றில் 2 பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகநபர் பல்லாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.

27 வயதுடைய இளம் தாய் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி ரத்தொலுவ,பகுதி விடுதி அறை ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் வந்து சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு தயாராகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலையின் பின்னர், சந்தேகநபர் தொலைபேசியில் தனது நண்பரிடம் முழு விடயத்தையும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை : வழக்கும் தள்ளுபடி!!

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை இன்று (19.03) செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆவயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 9 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள எடுக்கப்பட்ட போது, 19 ஆம் திகதி (இன்று) வரை பொலிசாரின் கோரிக்கைகு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம் (19.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிசார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தரப்பில் தொல்பொருள்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றம் அனைவரையும் கடந்த 12 ஆத் திகதி வரை விளக்கமறியலில் வைக்கின்ற உத்தரவை வழங்கியிருந்தது.

பொலிசாரையும் விசாரணையை துரிதப்படுத்தி பூரணமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது. கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆட்சேபித்து,

எந்தவொரு இடத்திலும் சட்டம் மீறப்படுவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி, தொல்பொருட்கள்கட்டளைச்சட்டம் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கின்ற போது இதற்கு பொருந்தாது என்று சுட்டிக் காட்டப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு வாதிட்டோம்.

ஆயினும், பொலிஸ் தரப்பில் குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15 உப பிரிவு சீயினை சுட்டிக்காட்டி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரப்பட்டது.

அந்நிலையில் அறிவு சார் நீதவான் அவர்கள் இந்த விசாரணை முடிவுறுத்தப்பட்டு பொலிஸ் தரப்பில் இறுதி அறிக்கை வடிவில் பிராத்து எனப்படும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு பொலிசார் கோரியவாறு ஏற்றுக் கொண்ட ஒருவார கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.

இன்று (19.03) வரை சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை வழங்கியிருந்தார். மீண்டும் இன்றைய தினம் (19.03) வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருடைய ஆலோசனையையும், அறுவுறுத்தல்களையும் பெறுவதற்காக வழக்கின் விசாரணை கோவையையும், தங்கள் வசம் இருக்கும் அனைத்து கோவைகளையும் சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக தாங்கள் அனுப்ப வேண்டி இருப்பதால் இன்றைய தினம் (19.03) குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மன்றில் தெரியப்படுத்தினர்.

இந்த அடிப்படையில் சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான விண்ணப்பதை முன்வைத்தனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள்.

நீதிமன்ற கட்டளை ஊடாக விளக்கமறியலில் வைப்பதனால் அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது சட்டத்திற்கு அமைவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தோம்.

பொலிஸ் தரப்பின் விண்ணப்பம், குற்றத்ப்பத்திரத்தை தாக்கல் செய்ய தாங்கள் ஒத்துக் கொண்ட இன்றைய தினம் (19.03) தாக்கல் செய்யாமல் சட்டா அதிபரின் அறிவுரையை இப்போது நாடியிருப்பது இந்த வழக்கின் சட்ட அடிப்படை தொடர்பிலே அவர்கள் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை முன்வைத்தோம்.

இருட்டு அறை ஒன்றில் கறுப்பு பூனையை தேடுவது போன்று தான் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வடிவமைக்கும் விதமாக செயற்படுகிறார்கள் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

எங்கள் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்கள் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது சட்டமா அதிபரிடம் தற்போது ஆலோசனை பெறுவது தொடர்பில் பல கேள்விகளை பொலிசாரிடம் கேட்டிருந்தது.

இறுதியில் விபரமான தீர்ப்பிளை வழங்கியிருக்கின்றது. சந்தேகநபர்கள் பிணை மறுக்கப்படும் தொல்பொருள் கட்டளைச் சட்டம் 15 சீயின் கீழ் பொலிசார் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய மன்று, பிரஜைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது.

இது சட்டத்திற்கோ, நீதிக்குகோ ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அதனடிப்படையில் நாங்கள் கோரியவாறு உகந்த கட்டளை ஒன்றை வழங்குமாறு முன்வைத்த கருத்தினை எடுத்து இந்த வழக்கில் இருந்து அனைத்து சந்தேக நபர்களையும் விடுதலை செய்து வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

குறித்த வழக்கில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட பலர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த 19 வயது இளைஞன்!!

கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என்றும், இவர் கடந்த 6 ஆம் திகதி அன்று ஹெரோயின் போதைப்பொருளுடன் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி, இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் இளைஞரின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் வைத்து திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

எனினும் இளைஞரது மரணம் தொடர்பான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இளம்பெண்ணுடன் பழகியவர்களே கொலை செய்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்னான கவிதா, தன்னுடைய கணவரை இழந்த நிலையில், சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக தங்கியிருந்தார். இவருடைய மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் உசிலம்பட்டியில், தனது வீட்டிற்குள்ளேயே கவிதா கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிலைமான் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கவிதா கொலை செய்யப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்பிலான செயின், மோதிரம், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவையும் திருடப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை நகைக்காக நடந்தது என்பதை உறுதி செய்த போலீசார், மேல் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, கவிதாவின் வீட்டருகே வசிக்கும் சிவானந்தம் என்ற இளைஞரும், கலையரசி என்ற பெண்ணும் திடீரென வெளியூர் கிளம்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவர் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர். அப்போது, கலையரசிக்கும் சிவானந்தத்துக்கும் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

கணவனை இழந்து தனியாக வசித்து வந்த கவிதாவை, கலையரசியும் சிவானந்தமும் அடிக்கடி தனியாக வீட்டில் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள். மேலும், கலையரசி சிவானந்தத்திடம் தனக்கு நகை வேண்டும் என நச்சரித்து வந்திருக்கிறார்.

இதனால் இருவரும் திட்டமிட்டு, கவிதாவை கொன்று விட்டு நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியூருக்குச் சென்றது விசாரணையில் அம்பலமானது. விசாரணைக்குப் பின் கலையரசியையும் சிவானந்தத்தையும் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி : ஏரியில் மூழ்கடித்து கொலை : நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி?

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(50). விவசாயி. இவரது மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இந்த பள்ளி மாணவி சிவா (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் மாணவி சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பாகலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவியின் பெற்றோரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலை தொடர்ந்ததால் ஆத்திரத்தில் மகளை கடுமையாக தாக்கி ஏரியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலமானது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி, உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத்தில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள இலங்கைப் பெண் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்டு தனிமையில் விடப்பட்ட தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மனம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனம்பிட்டிய, மஹாவெவ பிரதேசத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர என்பவரே குவைத்தில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு நிரந்தர வீடு கட்டி, மூன்று குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

குறித்த பெண்ணின் குழந்தைகளை அவரது தாயார் பார்த்துக்கொண்டுள்ளதுடன், கணவன் இரும்பு வாளி உற்பத்தியை பகுதி நேர வேலையாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் பலவிதமான சித்ரவதைகளை எதிர்நோக்கி வருவதனால், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுவெறியர்களினால் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

திருகோணமலை – புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (17) மாலை இடம் பெற்றுள்ளது. இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மதுபோதையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் திருகோணமலை- கோனேஸபுரி ஆறாம் கட்டையைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் 21, 30, 39 வயது உடையவர்களை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண்ணை கொலை செய்த சந்தேகநபருக்கு நேர்ந்த கதி!!

சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பாராசிட்டமோல் மருந்தை அதிகளவு உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாங்கொட, மடங்வல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14ஆம் திகதி சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கண்ணாடி போத்தலினால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கும் கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையிலான தகாத உறவின் போது, ​​குறித்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவத்தை கூறியதுடன் அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, போதியளவு நீரை அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.

இதனால் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பெற்றோர்!!

தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலையின் அதிபரின் செயற்பாட்டினால் இந்த நெகிழ்ச்சியான செயல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரியின் 67 ஆண்டுகால வரலாற்றில் நடைபெறும் முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும். காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலை 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பல குறைபாடுகளுக்கு மத்தியில் இப்பாடசாலை நீண்டகாலமாக மூடப்படும் அபாயத்தில் இருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன் இப் பாடசாலையின் அதிபராக பத்மசிறி பாடசாலைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதற்கமைய, பாடசாலைக்கு குறையாக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பாடசாலை சமூகம் எதிர்கொண்ட மிகக் கடுமையான சவாலாக நிதி காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதான வீதியின் இருபுறங்களிலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கஞ்சி விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலையின் அதிபர் மற்றும் பெற்றோரின் சிறப்பான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.