இன்ஸ்டகிராமில் 34 வயதுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த 80 வயது முதியவர்!!

2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர்.

படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர், இளைஞர்கள், முதியவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கையடக்க சாதனமாக ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை.

சில சமயங்களில் ஸ்மார்ட்போன் நம்மை உட்கொள்கிறது என்று சொல்லலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பொதுவாக பெரும்பாலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாவை 2K குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதல் காரணமாக நடந்த திருமணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 80 வயது தாத்தா 34 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், அகர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் பலுராம் பக்கிரி. இதேபோல், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஷிலா இங்கிள்.

இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

தற்போது இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த திருமணம் பல இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கித் தவித்த 2 வயதுக் குழந்தை பத்திரமாக மீட்பு!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 15-20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து 18 மணிநேர போராட்டத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று (03) மாலை 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து, சிக்கி தவித்து வந்துள்ளது.

15-20 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

விசாரணையில் ஈடுப்பட்டிருக்கும் பொலிஸார் கூறுகையில், குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதாகவும் இந்த கிணறு குழந்தையின் தந்தையின் சொந்த காணியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவை அதிகாரிகள் உள்ளனர்.

வீடியோ மூலம் குழந்தையை பார்த்த போது, குழந்தையின் கால்கள் அசைந்துள்ளன. எனவே குழந்தைக்கு ஓட்சிசன் வழங்குவதற்காக கிணற்றுக்குள் குழாய்கள் செருகப்பட்டுள்ளதாக பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வீடியோ காட்சியின் மூலம் குழந்தையை கண்காணித்த பொழுது, அக்குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. பின் குழந்தையை மீட்டெடுப்பதற்காக சுமார் 21 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழி அதிகாரிகள் தோண்டியுள்ளனர்.

அருகில் தோண்டி குழியின் ஊடாக மீட்பு படையினர் சென்று குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு மருத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வானில் நிகழவுள்ள அதிசயம்… இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு!!

வானில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வினை பார்வையிடும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அடசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி,12P/Pons-Brooks என்ற விஞ்ஞான பெயர் கொண்ட வால் நட்சத்திரத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிக பட்ச வால் நட்சத்திரத்தை இலங்கை மக்கள் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திகதி அன்று இந்த வால் நட்சத்திரம் பூமியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் 240 மில்லியன் தூரம் பயணிக்கும்.

இந்த மாதத்தின் 3வது வாரத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் மேற்கு வானில் அடிவானத்திற்கு அருகில் இந்த வால் நட்சத்திரத்தை அவதானிக்க முடியும் என பேராசிரியர் ஜானக அதாசூரிய மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாட்டில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக தொடர் அதிகரிப்பை சந்தித்து வருகின்றது.

இதன்படி, இன்றைய தின தங்க நிலவரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 195,100

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,360

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 178,900

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,350

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,750 ஆக பதிவாகியுள்ளது.

தமிழர் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

திருகோணமலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்ய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.

இச்சம்பவம் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு, கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மின்கம்பத்தில் கணவனை கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த மனைவி : தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!!

மாத்தறையில் மது போதையில் வீட்டுக்கு சென்ற கணவரை மனைவி கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் நாளாந்தம் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்று தனது மனைவியை தாக்குவதனை வழக்கமாக கொண்டவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இவர் கடந்த 2 ஆம் திகதி அன்று வழமைபோல குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து இவரது மனைவி மற்றும் சிலர் இணைந்து கணவனை வீட்டிற்கு முன்பாக உள்ள கம்பத்தில் கட்டிவைத்து பலமாக தாக்கியுள்ளனர்.

காயமடைந்த கணவர் மயங்கிய நிலையில் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவரை கட்டி வைத்திருந்த கயிறு கழுத்தில் நெரிக்கப்பட்டதால் இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து சந்தேக நபரான மனைவி வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் : தாயார் எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே நேற்றையதினம் (03.04.2024) வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மகன் உயிரிழந்த தகவலறிந்து அவரது தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபர் யாழை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணொருவருக்கு நடுவீதியில் நேர்ந்த கதி!!

பிரான்ஸில் இலங்கை தமிழரையும் விடுதலை போராட்டத்தையும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி டிக்டொக்கில் வீடியோ வெளியிட்ட தமிழ் பெண்ணை புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில் பெண்ணொருவர் ஈழ தமிழர்களையும், புலிகளின் தலைவரையும், போராட்டத்தில் கலந்துகொண்ட மாவீரர்கள் பற்றியும் தவறாக பேசியதாக தெரியவந்துள்ளது.

இதனையறிந்த அங்கிருந்த இலங்கை தமிழர்கள் பெண்ணிடம் சென்று ஈழத்தை பற்றி பேசக் பேசக்கூடாது என கூறி தாக்கியுள்ளனர். மேலும் கையில் இருந்த உணவை அவர் மீது ஏறிந்துள்ளனர்.

மேலும், குறித்த பெண் ஈழத்தில் உள்ள தாய் மார்களை எல்லாம் வேசி என கூறியுள்ளதாக என கூட்டத்தில் இருந்த ஒருவர் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!!

மன்னாரில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை (03.04) குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்.

 

வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் இன்று (03.04) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

அத்துடன் இதனை கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்றுவிடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.

இதனை ஆட்சேபித்த பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரனைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறை!!

எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றாது சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினால் வாகன போக்குவரத்து குறித்த நிபுணத்துவ பதக்கம் வழங்கப்படும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரயோக ரீதியான பரீட்சைக்கு மட்டும் தோற்றி சித்தி எய்துவதன் மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் மற்றம் பதக்கம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஆரம்பப் பிரிவு முதல் உயர்தர மாணவர்கள் வரையில் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கம் வழங்கப்படும் போது ஆசிரியர்களும் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளை மேற்கெளர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதக்கம் வழங்கும் நடைமுறையின் அதி உச்ச கட்டமாக ஜனாதிபதி பதக்கம் வரையில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பதக்கம் பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியின் போது சலுகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்!!

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனை தொலைநோக்கி உதவியுடன் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்'(12P/Pons-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095 இல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் இளைஞர்களுக்கான சந்தர்ப்பம்!!

ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்நூறு இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், மனிதவளம் மற்றும் பாதுகாப்புத் துறை அதன் ஒருங்கிணைப்பைச் செய்து வருகிறது. அதற்கான செலவை ஜனாதிபதி நிதியம் ஏற்கிறது. இந்தப் பயிற்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை இலக்காகக் கொண்டது.

இலங்கை ஹோட்டல் பயிற்சிக் கல்லூரியின் பாடநெறிகளுக்கு இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள், குறிப்பாக ஹோட்டல்துறையில் வேலைவாய்ப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இளைஞர்கள் நேரடியாக வேலைகளுக்கு வழிவகுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகளுக்கு அனுப்பப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சடலம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஷார்ஜா நகரில் நிலத்தடி மின் அமைப்பு மின்சாரம் கசிந்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, (Kalutara) மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க, என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மத்துகம C.W.W..கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர்தரம் படித்த மாணவியாகும். அவர் தனது சகோதரர் மூலம் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்தார். கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே அமைந்துள்ள கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார்.

அந்த நேரத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால், மின் அமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத சந்தமாலி வெள்ள நீரில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அந்த நேரத்தில், இரண்டு எகிப்தியர்கள், ஒரு பங்களாதேஷ் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் ஆகியோரும் இந்த இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்

தென்னிலங்கையில் இசை நிகழ்ச்சியில் வெடித்த மோதல் : மகனுக்காக பரிதாபமாக உயிரைவிட்ட தந்தை!!

இசை நிகழ்ச்சியின் போது மகனுக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாரம்மல (Naramala) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இல-80, கொங்கஹகொடுவ, களுகமுவ, மேவெவ என்ற முகவரியில் வசிக்கும் பிரதீப் குணதிலக்க (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் மீன் விற்பனையை தொழிலாக செய்து வரும் நிலையில், கடந்த 28 ஆம் திகதி முந்தல் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு மகனுடன் சென்றுள்ளார்.

இதன்போது இரவு இசை நிகழ்ச்சியில் மகனின் நண்பர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்க முற்பட்ட போது, ​​இசை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை நண்பர்கள் குழுவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் இசை நிகழ்ச்சி முடிந்ததும் அதிகாலை 1.45 மணியளவில் தந்தையும் மகனும் வீட்டிற்குச் செல்வதற்காக அரங்கிலிருந்து வெளியே வந்தபோது, ​​​​இருபது பேர் கொண்ட கும்பல் தந்தையையும் மகனையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தந்தையை போத்தலால் தாக்கி, ஹெல்மெட்டால் தலையில் அடித்து காயப்படுத்தி கும்பல் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான நபர் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்த , நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 30ஆம் திகதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றுமுன் தினம் 1ம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.